புரட்சி வரவேண்டும்!

1

 

ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை.

நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். அவற்றின் இன்றைய பெறுமதி என்ன என்பதையும் காலப்போக்கில் புரிந்து கொண்டேன்.

புரட்சி என்பது தலைகீழான, ஒட்டு மொத்த மாற்றம் என்பதைக் குறிக்கிறது . உண்மையில் எந்தத் துறையிலாவது அப்படிப்பட்ட மாற்றம் சாத்தியமா? ஆம் சாத்தியம்தான் . நம்மைச்சூழ்ந்து அப்படிப்பட்ட தலைகீழ் மாற்றங்கள் நடந்தபடியேதான் உள்ளன. உதாரணமாக, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அ.மாதவய்யா போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தபோது தமிழகம் முழுக்க அது அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. வீட்டு மிருகங்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் இன்று நமக்கு என்ன அதிர்ச்சி வருமோ அதைப்போன்றது அது. ஆனால் இன்று அந்த வரி ஒரு காலத்தில் சொல்லப்பட்டது என்று ஆச்சரியமூட்டும் அளவுக்கு பெண்கல்வியில் நாம் முன்னால் வந்து கொண்டிருக்கிறோம். இதுதான் தலை கீழான மாற்றம் .இதுதான் புரட்சி.

ஆனால் இந்த மாற்றம் நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலஅளவு வேண்டி இருக்கிறது. ஒரு மரம் வளர்ந்து கனி அளிப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுமோ அவ்வளவு காலம். அது கூடையை கவிழ்த்து எடுத்தால் மாங்காய் மரமாகி கனி தரும் என்பது மோடி மஸ்தானின் வாய்ஜாலமாகவே இருக்க முடியும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு மனநிலையும் பல நூறு ஆண்டுகளாக சிறிது சிறிதாக உருவாகி வந்தவை.  அப்படி இருக்க அவை ஒரேகணத்தில் எப்படி மாற முடியும்? சமூகம் மாறினாலும் மனநிலைகள் மாறவேண்டாமா? அதற்கேற்ப வாழ்க்கையின் போக்கையே மாற்றவேண்டாமா?

அப்படி என்றால் புரட்சி என்ற கருத்து உலகில் எப்படி உருவாயிற்று? பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மன்னராட்சிக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் எதிராக மக்களின் உள்ளம் ஜனநாயகத்தை நோக்கி வந்துவிட்டிருந்தது. ஆனால் பழங்கால ஆசாரங்களின் பலத்திலும், இராணுவ ஆதரவின் அடிப்படையிலும் அங்கே மன்னர்களும் சர்வாதிகாரிகளும் அரசுகளில் நீடித்தனர். மக்கள் எழுச்சி கொண்டு அவ்வரசுகளை தூக்கி வீசி ஜனநாயக அரசுகளை அமைத்தார்கள். இதையே ஒட்டு மொத்த மாற்றம் என்ற அர்த்தத்தில் புரட்சி என்று அழைத்தார்கள்.

பிரான்ஸிலும் ,ரஷ்யாவிலும், இத்தாலியிலும் எல்லாம் நிகழ்ந்தது இத்தகைய புரட்சிகள்தான். ஆகவே இக்காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாற்றம் அல்லது புரட்சி என்ற கருத்தின்மேல் சிந்தனையாளர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உருவானது. உண்மையில்  மன்னராட்சி முடிந்து ஜனநாயக ஆட்சி நிகழும் போது அந்த மாற்றம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தை மட்டும் வைத்து பார்த்தால் ஒட்டு மொத்த சமுதாயமே தலை கீழாக திருப்பப் பட்டு விட்டது போல ஒரு பிரமை நமக்கு ஏற்படும். ஆனால் மக்கள் மன்னராட்சி மனநிலையில் இருந்து விடுபட்டு ஜனநாயக கருத்துகளை ஏற்று கொண்டு அந்த தருணம் வரைக்கும் வந்து சேர்ந்தடைவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து பார்த்தால் அது உடனடியாக நிகழ்ந்த ஒரு மாற்றம் அல்ல என்பது நமக்கு தெரியும்.

துரதிஷ்டவசமாக புரட்சி என்ற கருத்து அன்றைய ஆங்கிலக்கல்வி மூலம்  ஐரோப்பாவிலிருந்து உலகம் முழுக்க சென்று சேர்ந்தது. இளைஞர்கள் அந்த ஒட்டு மொத்த மாற்றத்திற்கான அழைப்பை வெறியுடன் ஏற்று கொண்டனர். அநேகமாக உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அரசுக்கு எதிராக இளைஞர்களின் கிளர்ச்சிகள் நிகழ்ந்தன. ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல புரட்சிகள் நிகழ்ந்தன. ஆசிய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டில் இப்புரட்சி நிகழ்ந்தன.

மக்கள் எந்த வகையிலும் சிந்தனை அளவில் அந்த மாற்றங்களை அடையாதநிலையில் அரசை மாற்றுவதற்காக மக்களின் சார்பில் புரட்சிகளில் ஈடுபட்ட அனைவருமே தோற்கடிக்கப் பட்டனர். சே குவேரா புரட்சியின் பிம்பம். ஆனால் அவர் ஈடுபட்ட புரட்சிகளில் கியூபா என்னும் சிறியநாட்டில் மட்டுமே ஆட்சிமாற்றம் வந்தது. காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளில் அவர் இளைஞர்களின் அழிவுக்கே காரணமாக அமைந்தார். மக்கள் அவரை ஆதரிக்கவில்லை.

இந்தியாவில் நக்சலைட் புரட்சி 1960களின் இறுதியில் வெடித்து அரைலட்சம்பேர் இறக்கக் காரணமாக அமைந்தது.  1971ல் இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமுனா என்னும் அமைப்பின் புரட்சியால் ஒருலட்சம்பேர் அரசால் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவில், தாய்லாந்தில் என அண்டை நாடுகளில் எல்லாம் புரட்சியின் பெயரில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து புரட்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதைக் கண்டபின்னர்தான் புரட்சி என்பதன் அடிப்படைகள் என்ன என்று ஆராயவும் மேற்கொள்ளவும் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் தயாராகினர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவரும், முசோலினியின் சிறையில் வாடியவருமான அண்டோனியோ கிராம்ஷி என்பவருடைய சிந்தனைகள் அவர்கள் கவனத்துக்கு வந்தன. அவைகள் மொழிபெயர்க்கபட்டு உலகம் முழுக்க சென்றன.

கிராம்ஷியின் சிந்தனைகளை மிகச்ச்சுருக்கமாக இப்படி சொல்லல்லாம்.ஓர் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் கொன்றுவிட்டால் அந்த அரசாங்கம் மாறுமா? அந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் அனைவரையும் அழித்தால் அந்த அரசாங்கம் மாறுமா? மாறாது. அதேபோன்றவர்கள் திரும்பவும் வருவார்கள்.  அதாவது வேர் உள்ளே இருக்கையில் மேலே தெரியும் முளையை வெட்டுவது போன்றது அது. அந்த வேர் என்ன அது பொதுமக்களிடம் இருக்கும் கருத்துதான் .மக்கள் எந்தவகையான அரசாங்கத்தை விரும்புகிறார்களோ அந்த அரசாங்கம் தான் உருவாகி வரும்.

கிராம்ஷி அந்த அரசாங்கத்தை நடத்தும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக  ‘அரசியல்சமூகம்’ [political society] என்று சொன்னார்.  மக்களை குடிமைச் சமூகம் [civil society] என்றார்.குடிமைச் சமுகத்திலிருந்து அவர்களின் பிரதிநிதியாக சிலர் கிளம்பி வந்துதான் அரசாங்கத்தை அமைக்கிறார்கள்.அதிகாரம் பாலில் நெய் போல குடிமைச் சமூகத்தில் கலந்திருக்கிறது. குடிமைச் சமூகத்தின் எண்ணத்தை மாற்றாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது.ஆகவே புரட்சி என்பது அடிதடிக்கலவரம் அல்ல. மக்களின் கருத்தை மாற்றுவதற்கான நிதானமான போராட்டம்தான்.

அவ்வாறு மக்களை மாற்றுவது என்பது எளிதல்ல. மக்களின் உள்ளமென்பது அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழலில் இருந்து உருவாவது. அதற்கு பல்லாயிரம் ஆண்டு பராம்பரியம் உள்ளது. மதம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என பல தளங்களில் மக்கள் உருவாகி வந்திருக்கிறார்கள் ஆகவே மிகத்தீவிரமான செயல்பாடுகள் மூலம் மிக மெதுவாகவே மக்களிடம் மாற்றத்தை உருவாக்க முடியும்

அரசியலில் மட்டுமல்ல, சிந்தனையின் எந்தத் தளத்திலும் சிறு மாற்றத்தை உருவாக்குவதற்கு நீடித்த நெடுங்கால அர்ப்பணிப்புள்ள உழைப்பு தேவை. மக்களிடையே ஒருகருத்தை கொண்டு சென்று ,அதற்கு மக்கள் அளிக்கும் எதிர்ப்பை புரிந்து கொண்டு , அவர்களின் கருத்தை ஏற்று அக்கருத்தை இன்னும் கூர்மைப்படுத்தி சலிக்காமல் தொடர்ந்து முயலவேண்டும். ஒரு சிறிய வியாபாரத்தைச் செய்தாலே இதைப்புரிந்துகொள்ளமுடியும்.

ஓராண்டுக்குமுன் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்னால் நரிக்குறவர்களின் உரிமைப்பேரணி ஒன்றை பார்த்தேன் கடந்த முன்னுறாண்டுகளாக அவர்கள் இங்கே வாழ்கிறார்கள் .தங்களுக்கென்று அரசியல் உரிமையும் உண்டு என்பதே அவர்களுக்குத் தெரியாது. இன்று அவர்கள் அரசாங்கத்தின் முன்வந்து நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய புரட்சி.

நமக்குப் புரட்சிகள் வேண்டும். ஆனால் அவை சோப்பு நுரை போல ஊதி பெருக்கப்பட்டு காற்றடித்தால் உடைந்து கலைந்து விடக்கூடியவையாக இருக்கக்கூடாது. கல்கட்டிடங்களை போல ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி எழுப்பக்கூடியவையாக இருக்க வேண்டும். வெறுமே வாயால் புரட்சிக் கூச்சலிடுபவர்கள் பயனற்றவர்கள். சீராக தொடர்ச்சியாக மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வருபவர்களே உண்மையான் புரட்சியாளர்கள்.

ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொரு தேர்தலும் மக்களிடம் கருத்துக்களை கொண்டுசெல்லும் வாய்ப்பை அளிக்கிறது. உண்மையான  புரட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. கல்வி, தொழில், மருத்துவம் என பல தளங்களில்  நமக்குத்தேவையான பல புரட்சிகள் இன்றுள்ளன.

 

தினமலர் நாளிதழில் Apr 22, 2016 அன்று வெளியான கட்டுரை மறுபிரசுரம்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு கூட்டம் – அரசன் பதிவு
அடுத்த கட்டுரைகுறளுரை, கடிதங்கள் -8