துவாரபாலகன்

 

பத்மநாபபுரம் நயினார் நீலகண்டசாமிகோயிலின் வாசலில் ஒருமுறை நின்றிருந்தபோது ஒரு கிழ அய்யர் வந்து கதாயுதத்துடன் வெறித்து நின்ற துவாரபாலகர்களைக் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு அங்கே கிடந்த விபூதியை எடுத்துப்போட்டுக்கொண்டு கிளம்பினார். நடைபூட்டியிருந்தது. நான் அவரிடம் ”என்ன ஸாமி, துவாரபாலகனைக் கும்புடுறீங்க?” என்றேன். ”திங்கக்கெழமைல்லா அவசர ஜோலிகள் உண்டும். நடைதுறக்க நிக்க முடியாது” என்றார். ”அதுக்காக வாசல்காவலனையா கும்பிடுறது?” என்றேன்

”காவலுக்கு நிக்கதும் உள்ள இருக்கவன் தானே?” என்றார் அய்யர். இனிமே ”கோயிலுகளிலே பாரு, உள்ள இருக்கிற சாமிதான் வாசலிலேயும் நின்னுட்டிருக்கும். விஷ்ணுகோயில்னாக்க சங்குசக்கரம் இருக்கும். இங்க மானும் மழுவும் இருக்கு பாத்தியா?” உண்மைதான் என்று ஆச்சரியத்துடன் கண்டுகொண்டேன். கருவறைத்தெய்வமே காவலுக்கும் வந்து நிற்பதில் நினைக்கும்தோறும் மலைக்கச்செய்யும் ஒரு தத்துவம் உள்ளது.

நம்முடைய கோயில்களில் நினைக்கவும் நினைப்பொழியவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆனால் பாதிப்பேர் எடுத்தது கண்டார் இற்றது கண்டார் என்ற வகையில்தான் கோயில்களுக்குச் செல்கிறார்கள். சிறந்த உதாரணம் என் அண்ணா பாலசங்கர் என்கிற ராஜன். நேசமணி போக்குவரத்துக்கழகத்தில் கணிப்பொறி உதவியாளர். அவர் அடிக்கடிச்செல்லும் ஊர்கள் திருச்செந்தூர் பழனி. குடும்பசமேதம் கிளம்பிச் செல்வார். போய் இறங்கியதுமே விடுதியறையில் ஒரு புயல்வேகக் குளியல். அதேவேகத்தில் கோயிலுக்குள் விரைந்து முருகன் சரியாக இவரைப்பார்ப்பதற்குள்ளாகவே ஒரு சல்யூட் அடித்துவிட்டு வெளியே வந்து அடுத்த பஸ்ஸைப் பிடித்துவிடுவார்.

”சாமிகும்பிடப்போனா வேற நெனைப்பு இருக்கக்கூடாது”என்று சாஸ்திரம் சொல்வார். அது அண்ணாவின் சிறப்பியல்பு. பழுத்து கனிந்து கொட்டை மட்டுமாக ஆன லௌகீகவாதம். எது தேவையோ அதை மட்டுமே செய்வது. மனித வாழ்க்கை என்பது உழைத்துப் பணம்சேர்த்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற கோட்பாட்டின் அடிபப்டையில் அமைந்த வாழ்க்கை நோக்கு.

அண்ணா பிறந்ததுமே அப்பாவுக்கு அது தன்னுடைய தொடர்ச்சிதான் என்று தெரிந்துவிட்டது. ஆகவே அவரைப்பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார். பிறகு உயிரோடிருந்த நாள் வரை எனக்காகக் கவலைப்பட்டார். அனேகமாக வாழ்க்கையில் வேறு கவலைகள் ஏதும் இல்லை. உடலும் மனமும் நோய்மண்டிய ஓர் ஆத்மாவாக, வழிதவறிய ஆடாக என்னை அப்பா கண்டார். சாதாரணமாக என்னை ‘வய்யாத்தவன்’ [உடம்புக்கு முடியாதவன்] என்றுதான் சொல்வார். ”மூத்தவன் வீட்டிலே இல்லை. அதனாலே வய்யாத்தவ்னை அனுப்புறேன்” என்று சாதாரணமாகக் கூறுவார்.

அப்பா என்னை சைக்கிள் படிக்க அனுமதிக்கவில்லை. பெரிய எடைகளைத் தூக்க விடமாட்டார். ‘போய் பிடிடா…”என்று கூடவே இருப்பவர்களிடம் எரிந்து விழுவார். இன்றும் எனக்கு எந்த வண்டியும் ஓட்டத்தெரியாது. பள்ளிக்குச் செல்லும்போது அண்ணா என் கையை இறுகப்பிடித்துக் கொள்வார். அந்தப்பிடிக்குள் நின்றபடி நான் என்னவேண்டுமானாலும் செய்யலாம். பரசிவன் கழுத்து பாம்பென நான் பெரிய பையன்களை வம்புக்கு இழுப்பேன். முப்பது நாற்பது வருடங்கள் கழித்து இன்றும், எங்கள் தலைமுடி நரைத்தபின்னரும்,  நாங்கள் பேசியபடி சாலையில் நடக்கும்போது எதிரே வண்டிகள் வந்தால் அண்ணா ‘மேலே ஏறுடா’ என்று என்னை தள்ளுவார்.

அப்பா அண்ணாவை ஒரு சமவயதினரைப்போல நடத்தினார். மிகவும் முக்கியமான விஷயங்களை அண்ணவிடம் விவாதிப்பார். பெரும்பாலான விஷயங்களை அண்ணாவின் பொறுப்பிலேயே விட்டுவிடுவார். அண்ணா வயலுக்குப் போய்வருவார். அரசு அலுவலகங்களுக்குச் செல்வார். அப்பாவின் நண்பர்களைச் சந்தித்து அப்பாவின் செய்திகளைச் சொல்லி வருவார். என்னிடம் பொதுவாக சாணி அள்ளிப்போடுவது கன்றுக்குட்டியை குளிப்பாட்டுவது போன்ற பொறுப்பில்லாத பணிகள் மட்டுமே ஒப்படைக்கப்படும்.

அப்பாவின் பல இயல்புகள் அண்ணாவுக்கும் உண்டு. கூடுமான வரை பேசாமலிருப்பது. நண்பர்களிடம் மட்டுமே அளவளாவுவது. அப்பா மிக மிக நகைச்சுவை நிறைந்தவர் என்று அவரது நண்பர்கள் சொல்வார்கள். அண்ணாவைப்பற்றியும் அந்த சித்திரம் உண்டு. அப்பாவிடம் ஒரு அச்சமூட்டும் நேர்மை இருக்கும். எல்லாமே வெளிப்படைதான்.  அவருக்கு சாதிநோக்கு வலுவாக உண்டு. அது சாதி ஏற்றத்தாழ்வு அல்ல, அனைவரையும் சாதிசார்ந்து அடையாளம் வைத்துக்கொள்வது அது. அப்பாவின் நண்பர்களில் எல்லா சாதியினரும் உண்டு. சாதாரண நட்புகள் அல்ல அவை. ஐம்பதுவருடங்கள் வரையெல்லாம்கூட நீண்ட காவியச்சாயல் கொண்ட நட்புகள். சுகதுக்கங்கள் மட்டுமல்ல பணம் கூட அவர்களிடையே பொதுதான்.

அண்ணாவும் எப்போதும் நட்புவளையத்தால் இறுக்கப்பட்டவர்.  நண்பர்கள் பேசிக்கொண்டே இருக்க அண்ணா கேட்டுக்கொண்டே இருப்பார். நடுவே மெல்லிய குரலில் ஏதாவது சொல்ல ஒட்டுமொத்த நண்பர்குழாமே விழுந்து விழுந்து சிரிக்கும். நான் காஸர்கோட்டிலிருந்து வந்தபோது அண்ணா தங்கியிருந்த விடுதி அறையில் ஒரு நண்பர் இருந்தார். ”இது க்ளீட்டஸ் , என் ·ப்ரண்டு. ஆளு முக்குவனாக்கும்” என்றார் அண்ணா. நான் அதிர்ச்சி அடைந்து கிளீட்டஸைப் பார்த்தேன். அவர் சாதாரணமாக ”காஸர்கோடு மங்களூருக்கு பக்கத்திலயாக்கும் இல்லியா?” என்றார். அந்த கிளீட்டஸ்தான் மூன்று வருடம் கழித்து நான் திடீர் திருமணம் செய்துகொண்டபோது மொத்த பணத்தையும் ஏற்பாடுசெய்தார். கடைசி நிமிடச் சிக்கலில் தன் செயினை கழற்றி அடமானம் வைத்தார். அவருக்கு அண்ணாவிடம் இருக்கும் நெருக்கம் ஒரு கட்டத்தில் எனக்குப் பொறாமையைக்கூட உருவாக்கியதுண்டு.

எதற்கெடுத்தாலும் பாய்ந்து அடிக்க ஆரம்பிப்பது அப்பாவைப்போலவே அண்ணாவுக்கும் பழக்கமாக இருந்தது. சாதாரண பள்ளிச் சண்டைகளிலேயே கிளைமாக்ஸில் பொங்கி எழும் விஜய்காந்த் போல சீறி வருவார். அண்ணாவுக்குப் பிடித்த நடிகர் அவர்தான். துறை அதிகாரியை சுத்தியலால் அடித்து வேலைநீக்கம் செய்யப்பட்டு அல்லாடியபின் அது அவ்வளவு சிறந்த வழி இல்லையோ என்ற ஐயம் அண்ணாவுக்கு ஏற்பட்டது. இப்போது வீட்டுப்பொருட்களை தூக்கி போட்டு உடைப்பதுதான் முக்கியமான பொழுதுபோக்கு. டிவி, மிக்ஸி எல்லாவற்றையும் தூக்கிபோட்டு உடைத்திருக்கிறார். ·ப்ரிட்ஜைத் தூக்க முயன்றதாக ஒரு பேச்சு உண்டு.

அப்பாவின் முரட்டுக்குணத்தால் அம்மா மிகவும் வதைபட்டாள். அப்பாவைவிட முரட்டுத்தனமான பிடிவாதம் அம்மாவுக்கு இருந்தது. தீயில் பெட்ரோல் போல அவர்களின் உறவு. அப்பாவின் கோபம் அம்மாவிடம் பிடிவாதத்தை உருவாக்கும். அம்மாவின் பிடிவாதம் அப்பாவை வெறிகொள்ளச் செய்யும். நல்ல வேளையாக அண்ணி வேறு ரகம். அசாதாரணமான நகைச்சுவை உணர்ச்சியும் நிதானமும் உடையவர்கள். எதைப்பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. அண்ணா டிவியை தூக்கிப்போட்டு உடைக்க தூக்கும்போதே சாதாரணமாகச் சென்று உடைசல்களை அள்ளுவதற்கு துடைப்பத்தை எடுப்பார்கள். அண்ணா கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது அதை காதில் வாங்காமல் உள்ளே அவர்கள் பாட்டுக்கு சமையல்செய்துகொண்டிருப்பார்கள். தீயில் தண்ணீர்போல.

அண்ணாவுக்கு அப்பா போட்ட கட்டளை ஒன்றுண்டு. எந்நிலையிலும் சின்னவனைப் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றபடி அவர் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எனக்கு நான் மீறவே கூடாத மூன்று கட்டளைகளை அப்பா போட்டிருந்தார். அதில் முக்கியமானது சொந்தமாக பணவிஷயங்கள் எதிலும் முடிவெடுக்கக் கூடாது என்பது. அதையும் இதுநாள்வரையிலும் கடைப்பிடித்து வருகிறேன். என்னுடைய பலவிஷயங்களை அண்ணாதான் முடிவுசெய்வார். அதைப்பற்றி என்னிடம் பேசி என்னைக்குழப்பக்கூடாது என்ற தெளிவு உண்டு.

அண்ணாவின் கடிதங்கள் ரத்தினச்சுருக்கமானவை. அன்புள்ள , இப்படிக்கு, வேணும் சுகம் எதுவுமே கிடையாது. நேராக விஷயம். எனக்கொரு கடிதம் வந்தது ‘நீ அருணாவின் நகைகளை எடுத்துக்கொண்டு திங்கள் கிழமை காலை நாகர்கோயில் வா’ அவ்வளவுதான். கையெழுத்தை வைத்து அது அண்ணா என்று அறிந்தேன். எதற்காக? ஆனால் என்னால் அவரை எதிர்த்து ஏதும்பேசமுடியாது. நானும் அருண்மொழியும் தர்மபுரியில் இருந்து கிளம்பினோம்.

பேருந்து நிலையத்துக்கு அண்ணா வந்திருந்தார். நேராக ஒரு நகைக்கடை முன் ஆட்டோசென்று நின்றது. நகையைக் கொண்டா என்றுகேட்டுவாங்கி கொண்டுபோய் மொத்தத்தையும் விற்று பணத்துடன் வந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டதும் நேராக சார்பதிவாளர் அலுவலகம். பதிவு முடிந்ததும் அண்ணா என்னிடம் ஒரே சொற்றொடரில் விளக்கினார் ”நீ வீடுகட்ட ஒரு எடம் வாங்கியிருக்கேன்”. மொத்தம் அறுபதாயிரம். நகை விற்றதுபோக மிச்சம் இருபதாயிரத்தை அவரே போட்டிருக்கக் கூடுமென ஊகித்தேன்.

எல்லாமுடிந்து டீ குடிக்க செல்லும்போது அருண்மொழி என்னை கிள்ளி ”பிளாட்டைப்பாக்கணும்னு சொல்லு’ என்றாள். ‘நான் சொல்லும் வழக்கமே எங்கள் குடும்பத்தில் கிடையாது. நீ சொல்லு’ என்றேன். தைரியமாக முன்னால் சென்று ‘அந்த பிளாட்டைப் பாத்தா தேவலை’ என்றாள். அண்ணாவுக்கு அப்போதுதான் அப்படி ஒரு விஷயம் இருக்கும் எண்ணமே உதித்தது. ”ஓ!”என்றார். சரி வா என்று ஆட்டோவில் சென்றோம்.

பார்வதிபுரம் தாண்டி வயலுக்குள் ஆட்டோ சென்று ஒரு வயல்வெளிமுன் நின்றது. சேற்றுக்குழம்பல். அங்கிருந்து ஒரு நடைவரம்பு சென்றது. ”அதோ அந்த வயல்தாண்டா உன் பிளாட்” என்றார் அண்ணா. எனக்கு பக்கென்றது. அருண்மொழி என்னைப்பார்ப்பதைத் தவிர்த்தேன். ”அங்க போக முடியாது. முட்டளவுக்குச் சேறாக்கும்…இது படுவப்பத்துல்லா?” அருண்மொழி ”இது நாகர்கோயிலா?”என்றாள்.”இல்லை, இது கணியாகுளம் கிராமம்” என்றார் அண்ணா எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

திரும்பும்போது அருண்மொழி பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள். ஒன்றுமே சொல்லவில்லை. பஸ் ஏறியதுமே ஆரம்பித்துவிட்டாள். ”என்ன ஜெயன், என்ன வாழைநடப்போறியா? இந்த துண்டு வயலுக்கு அறுபதாயிரம் ரூபாயா? அதுவும் குக்கிராமத்திலே?” நான் ”எனக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. அண்ணாவுக்கு என்ன செய்றதுண்ணு தெரியும்…”என்றேன். ”நீ ஒரு கைக்குழந்தை இல்லாட்டி அடிமை”என்றாள்

ஆனால் இரண்டு வருடம் கழித்து வந்தபோது அப்பகுதியெங்கும் வீடுகள். சாலை உருவாகிவிட்டிருந்தது. அப்போது அந்த பிளாட் மூன்று லட்சம் ரூபாய்க்கு போகும் என்றார்கள். மேலும் நான்கு வருடம்கழித்து நான் அதில் வீடுகட்ட ஆரம்பிக்கும்போது பக்கத்துநிலத்தை ஒருவர் ஆறு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். இப்போது தொட்டு கீழே உள்ள நிலம் பன்னிரண்டுலட்சம் ரூபாய்க்குப் போகிறது. நாகர்கோயிலின் மிக முக்கியமான குடியிருப்புப்பகுதி அது.

அண்ணா அதே இடத்தில் அவரும் ஒரு நிலம் வாங்கினார். விலை ஏறியதும் அதைவிற்று திருவட்டாறில் வில்லங்க நிலம் ஒன்றை வாங்கினார். அந்தநிலம் நடுவே ஒரு சிறிய சுடலைகோயில். அது எட்டு குடும்பங்களுக்குச் சொந்தம்.அவர்கள் விற்க மறுத்தார்கள். அண்ணாவின் செந்தமிழ் தேன்மொழி வல்லமையால் ஒரே வருடத்தில் அலறியடித்து விற்றார்கள். அந்தநிலம் மும்மடங்கு விலையேறியது. அதில் அண்ணா இரண்டாயிரம் சதுர அடியில் ஒரு வீட்டைக் கட்டினார். அதில் மூன்று அறைகளில் அவர் தங்கியபின் மிச்சத்தை வாடகைக்கு விட்டார். கடன் வாங்கி மேலே மேலும் இரண்டாயிரம் அடி கட்டி இரு குடித்தனங்களாக வாடகைக்கு விட்டார். அண்ணாவைப்பொறுத்தவரை வீடு என்பது வாடகைக்கு விடவேண்டிய சொத்து மட்டுமே.

அண்ணா இருபத்துநான்கு மணிநேரமும் பொருளாதாரப் படிகளில் ஏறிக்கொண்டே இருப்பவர். தொடர்ச்சியாக ஏணியில் ஏறும் இன்பத்தை அனுபவிப்பதற்காக தண்டவாளத்தில் வாக்கிங் போவார் என்று ஒரு வதந்தி. நான் பண விஷயத்தில் அப்பாவி என அவர் எண்ணினாலும் அருண்மொழியிடம் அவருக்கு நம்பிக்கை உண்டு. என் வீடுகட்டும் பொறுப்பையும் அவர்தான் ஏற்று நடத்தினார். வீடுகட்டுவதில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்தமையால் ஒவ்வொன்றிலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்து அவருக்கென்று கோட்பாடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று கொத்தனார்களை சாயங்காலம் வசைபாடி அவர்கள் எகிறியதும் கொஞ்சுவது.

என் வாழ்க்கையின் முக்கியமான ஆனந்தங்களில் ஒன்று அண்ணாவின் மகன் சரத். அப்படியே சிறுவயதில் அண்ணா எப்படி இருந்தாரோ அப்படி இருப்பவன். அதேபோன சிரிப்பு அதேபோன்ற பாவனைகள். திடீரென அண்ணாவுக்கு ஒரு கையடக்கச் சுருக்கப்பதிப்பு பிரசுரித்ததுபோல. அவனைப் பார்த்தால் என்னால் கண்களை விலக்கவே முடியாது. அண்ணாவின் அதே நகைச்சுவையும் உண்டு. அண்ணி குழந்தைகளை கொஞ்சுவதென்பது உணவூட்டுவதன்மூலமே சாத்தியமென நம்புகிறவர் ஆதலினால் அவன் நல்ல குண்டு. ஒருமுறை சேர்ந்து எங்கோபோனபோது அஜிதன் எடை இயந்திரத்தில் ஏறி நின்று இறங்கினான் இருபத்தாறு கிலோ. அதன்பின் சரத் ஏறி நின்றான் முப்பத்தெட்டு கிலோ. ”பாத்தியாடா?”என்றார் அண்ணா ஆனந்தப்பெருமிதத்துடன். ”மத்தியான்னம் சாப்பிட்டுவிட்டு ஏறினா அஞ்சுகிலோ கூட்டிக்காண்பிப்பேன்”என்றான் சரத்.

திடீரென்று அண்ணா கூப்பிட்டார். ”டேய், உனக்கு ரெண்டுலட்சம் பணம் கிடைத்திருக்கிறதென்று பேப்பரிலே போட்டிருக்கிறதாமே?”‘ இவர் எங்கே பேப்பர் படித்தார் என்று எண்ணி நான் ”யார் சொன்னது?”என்றேன் ”கிளீட்டஸ் சொன்னான். பணத்தை காமாசோமாவென்று செலவு செய்யக்கூடாது…நான் உடனே வாறேன்…” அது ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்த செய்தி. ”அண்ணா, அது நான் இல்லை , ஜெயகாந்தன்.” அண்ணா ஏமாற்றம் அடைந்து ”ஆரு அவன்?” என்றார். ”ரொம்பப் பெரிய எழுத்தாளர்…” அண்ணா கோபமாக ”அதெல்லாம் ஒன்றும் இல்லை. சிபாரிசு பிடித்து பரிசு வாங்கியிருப்பான்”என்றபின் ·போனை வைத்தார். அவரைப்பொறுத்தவரை உலகிலேயே ஒரு சிறந்த எழுத்தாளர்தான். பிறருக்கு வாய்ப்பே கிடையாது. அண்ணாவுக்கு ஆரம்பநாட்களில் நான் என்னுடைய நூல்களில் ஒரு பிரதிகொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர் ஒன்றைக்கூட புரட்டிப்பார்த்ததில்லை.

துவாரபாலகனாக வந்த தெய்வம் கருவறை தெய்வத்தைவிட மேலானதுதான். அத்தனைப் பெருங்கருணையால் அல்லவா அது வாசலுக்கே வந்திருக்கிறது

 

சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்

முந்தைய கட்டுரைகளம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகும்பமேளா – 8