தினமலரில் வெளிவந்த ‘மதமும் தேசியமும்’ மிக முக்கியமான கட்டுரை.
மதம் சார்ந்த அரசியல் இருக்கக்கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இன்று இந்திய அரசியலை கவனித்தால், பல இடங்களில் மதச்சார்பின்மை என்ற பெயரில் நமக்கு முன்வைக்கப்படுவது மதச்சார்பின்மை என்னும் போர்வை போர்த்திய பண்பாட்டு மறுப்பும், போலிப் பகுத்தறிவு வாதங்களுமே. இன்னொருபக்கம் மதம் சார்ந்த அரசியல்வாதிகள் தங்களை இந்தியப் பண்பாட்டின் அறங்காவலர்களாக வியாபித்துக் கொண்டு, நவீன ஜனநாயகத்துக்கு ஒவ்வாத பழமைவாதத்தை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்விரு விளிம்புகளில் இருந்து மீண்டு, தனக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கிக்கொள்ள நினைப்பவனின் நிலை அந்தோ பரிதாபம் !
உங்கள் கட்டுரைகள் அச்சிக்கல்களை தாண்டி செல்வதற்கான சிந்தனையை வித்திடுகின்றன. அதற்கு நன்றி.
 கிஷோர்

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இக்காரணத்தால்தான் எதன் பொருட்டும் மதம் அரசியலாகக் கூடாது. எக்காரணத்தாலும் மதஅடிப்படையிலான தேசியம் அமையக்கூடாது தேசியம் என்பது வளர்ச்சியின் அடிப்படையில், ஒத்துப்போவதின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் .காந்தி இந்தியர்களுக்கு அளித்துச் சென்ற பொறுப்பு அதுதான்.
இந்த நேர்மையான எல்லோராலும் கண்டிப்பாக  ஏற்கப்படவேண்டிய கருத்தை இன்று எந்த அரசியல் கட்சி அது காங்கிரசோ,பி.ஜே.பி.யோ,

கம்யூனிஸ்டுகளோ, திராவிட கட்சிகளோ அல்லது மதசார்பற்ற கட்சிகள் என்று வெறும் வாய்வார்த்தையாக கூறிக்  கொள்ளும் கட்சிகளோ ஒழுங்காக கடைப்பிடிக்கின்றன?.ஓன்று கண்ணை மூடிக்கொண்டு பெரும்பான்மை மதத்தை தூக்கிப்  பிடிக்கின்றன அல்லது சிறுபான்மை மதத்தை அநியாயமாக ஓட்டுக்காக தாஜா செய்கின்றன.இதுதானே பல வருடங்களாக நாம் “ஆண்டு அனுபவித்து” வருவது.

அன்புடன்,

அ .சேஷகிரி.