வாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை

Vishnupuram wrapper(1)விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள மூன்றாம் பதிப்பின் முன்னுரை இது.  ஓவியம் ஷண்முகவேல்

 wpid-imag0727_1

விஷ்ணுபுரம்’ வெளிவந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இப்போது மூன்றாம் பதிப்பு வெளிவருகையில் இதை எழுதிய நாட்களும் பிரசுரிக்க எடுத்துக்கொண்ட பெருமுயற்சியும் நினைவில் கனவுபோல விரிகின்றன. கனவுபோலத்தான். ஏனெனில் இப்போது அவை நம்ப முடியாதவையாக மாறியுள்ளன. 1982 முதல் இந்த நாவலின் கருவை நான் சுமந்து அலைந்தேன். பல கோணங்களில் எழுதி மாற்றி எழுதி அலைபாய்ந்தேன். 1991இல் அருண்மொழி நங்கையை திருமணம் செய்துகொண்டபிறகு அவளுடைய உந்துதலால் ஒரு காலையில் சட்டென்று எழுத ஆரம்பித்தேன். பல படிகளாக எழுதி, திருப்பி எழுதி, மீண்டும் எழுதி, இறுதிப்படி எடுத்து முடித்தது 1996இல். இந்தப் பத்தாண்டுகளில் தமிழ் பிரசுர நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. அன்று அது எளிய செயலாக இருக்கவில்லை. எண்ணூறு பக்கங்கள் கொண்ட ஒரு சிக்கலான நாவலைப் பிரசுரிக்க எந்தப் பிரசுர நிறுவனமும் உதவவில்லை. விமரிசகர் சி.மோகன் மூலம் ‘அகம்’ கதிர் தொடர்பு கிடைத்தது. அவரது ஆலோசனையின்படி முன்விலைத்திட்டம் அறிவித்து நண்பர்களிடம் உதவி கோரினேன். கோவை ஞானி, பாவண்ணன், மகாலிங்கம், சூத்திரதாரி (எம்.கோபாலகிருஷ்ணன்) போல பல நண்பர்கள் முன்விலைத்திட்டத்திற்கு ஆள்சேர்த்து உதவினர். 1997இல் விஷ்ணுபுரம் வெளியாயிற்று. சுந்தர ராமசாமி இதற்கு உதவ முற்றிலும் மறுத்துவிட்டார் என்பதையும் பதிவு செய்யத்தான் வேண்டும்.

கைப் பிரதியாக இந்நூல் இருந்தபோது பெரும் தயக்கம் ஒன்று இருந்தது. இது அறியப்படாத அறிவுத் தளம் ஒன்றைச் சேர்ந்த நாவல். கற்பனையும் உண்மைத்தளமும் நுட்பமாகப் பின்னிப் பிணைந்த படைப்பு. பல்லாயிரக்கணக்கான தகவல்கள் இதில் உள்ளன. குதிரை வளர்ப்பு, சமையல் முதல் உயர் தத்துவம் வரை. அத்தகவல்கள் கற்பனையால் கோக்கப்பட்டுள்ளன. மேலும் மிக விரிவான தத்துவார்த்தப் பரிசீலனை இதில் உள்ளது. இத்தகையதோர் ஆக்கத்திற்கு இங்கு வாசகர்கள் உள்ளனரா என்ற எண்ணமே அந்தத் தயக்கத்திற்கான காரணம். எதிர்பார்த்தது போலவே நூல் வெளிவந்தபோது புரியவில்லை என்ற புகாரும் ‘தத்துவ விவாதம் நாவலில் எதற்கு?’ என்ற வினாவுமே பொதுவாக எழுந்தன. அரசியல்ரீதியாக மிகக் கடுமையான எதிர்ப்பு இந்நாவல் மீது தொடுக்கப்பட்டது. இந்நாவல் குறித்து வெளிவந்தவற்றில் பத்து சதவிகிதம் அளவுக்கே பாராட்டு மதிப்புரைகள் இருந்தன. மீதியெல்லாம் வசைபாடல்கள், அவதூறுகள், எதிர்ப்புகள். அவற்றை எழுதியவர்களே இன்று அவற்றை முன்வைக்கக் கூசக்கூடும். நூலை ஓரளவுக்குக்கூட வாசிக்காமல் எழுதப்பட்டவையே அவற்றில் அதிகம்.

ஆனால் இந்நாவலுக்குக் கிடைத்த மிக விரிவான வாசகவட்டம் எனக்குத் திகைப்பூட்டுவதாக இருந்தது. தனக்குரிய வாசகர்களை இந்நாவல் தானே உருவாக்கிக் கொண்டது. சிற்றிதழ் எல்லையைத் தாண்டிச் சென்று வாசகர்களைப் பெற்றது. சொல்லப் போனால் தமிழில் விஷ்ணுபுரம் ஒன்றே அத்தகைய விரிவான வாசகத்தளத்தை உருவாக்கிய நவீன இலக்கியப் படைப்பு. உலகமெங்கும் பல தளங்களில் செயல்பட்டு வரும் பலவகையான வாசகர்கள் அதற்கு உள்ளனர். என் மின்னஞ்சல் பெட்டியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது ஒரு புது வாசகர் அதைப்பற்றி எழுதிய கடிதம் இருக்கும். ஒரு வாரத்தில் ஒரு கடிதமாவது அதைப்பற்றி வராமல் இருக்காது. அரசியல், ஆன்மிகம், கலை, வாழ்க்கைச் சித்தரிப்பு எனப் பலதளங்களில் அதன் வினாக்கள் விரிவதுதான் அதற்குக் காரணம் என்று ஊகிக்கிறேன். இந்தப் பத்து வருடங்களில் தமிழ் நாவலின் போக்கு பெருமளவு மாறிவிட்டது. நீண்ட காலமாக தமிழ் நாவலில் இருந்து வந்த தேக்கநிலை மாறி வலுவான சித்திரிப்பும் நுண்மையான உள்விரிவும் உடைய நாவல்கள் இன்று வந்தபடி உள்ளன. இப்போக்கின் முன்னோடியாக அமைந்த இந்நாவலே இன்றும் இப்போக்கின் உச்சமாகவும் உள்ளது என்று மீண்டும் மீண்டும் வாசகக் குரல் கூறுகிறது.

2

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. இது எதைக் கூறுகிறது என்ற தேடலுடன் படிப்பவர்கள் எத்திசைக்குத் திரும்பினாலும் தவறான திசைக்கே திரும்பக்கூடும் என்று படுகிறது. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை.

ஜெயமோகன்

மே 15, 2006

முந்தைய கட்டுரைபதினெட்டாவது அட்சக்கோடு
அடுத்த கட்டுரைதினமலர்-36, துலாக்கோலின் முள்