இப்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு காந்தி ஏன் நேருவை முன் நிறுத்தினார். உண்மையில் காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் பட்டேல்தான். நேரு காந்தியின் கிராம சுயராஜ்ய சிந்தனைகளை முழுமையாக நிராகரித்தவர். காந்தியின் எளிமை நேருவைக் கவர்ந்ததில்லை. காந்திக்கும் நேருவுக்கும் இடையே 1947 வாக்கில் சுதந்திரம் கிடைத்தபிறகு எந்த வகையான அரசு இங்கே அமையவேண்டுமென்பதில் கடுமையான கடித வாக்குவாதங்கள் நடந்தன. காந்தியின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு நேரு செவி சாய்க்கவில்லை.
இருந்தும் நேருவையே தனது வாரிசாக காந்தி சுட்டிக் காட்டினார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காந்தியின் வாரிசாக தன்னை முன் நிறுத்திக் கொண்டதனால்தான் வரலாறே வியக்கும்படியாக பெரும்பான்மையைப்பெற்று நேரு ஆட்சி அமைத்தார். இந்தியாவுக்கு வலுவான ஓர் அரசியல் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அளித்தார்.
ஏன் காந்தி நேருவை முன்னிறுத்தினார் என்பதற்கான காரணம் ஒன்றேதான். நேரு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட மதச்சார்பின்மை கொண்டவர். பட்டேல் மீது அந்த நம்பிக்கை இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களுக்கு இருக்கவில்லை. ஒருவகையில் காந்தி அளித்த செய்தியே அதுதான். இந்த தேசம் மதச்சார்பின்மையையே அதன் அடிக்கட்டுமானமாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் என்று பலமதத்தினர் வாழ்கிறார்கள். இது அனைத்து மதத்தினருடைய நாடாக இருக்க வேண்டும் .அப்போது மட்டுமே நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும்
சுதந்திரத்தை ஒட்டி இந்தியா முழுக்க இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரங்களும் அதன் விளைவான கசப்புகளும், அவநம்பிக்கைகளும்தான் காந்தியை பிற அனைத்தையும் விட முதன்மையாக மதச்சார்பின்மை என்ற எண்ணத்தை நோக்கித் தள்ளின. ஐரோப்பாவில் நவீனத் தேசியம் என்பது கத்தோலிக்க மதத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தொடங்கியது. எனவே ஜெர்மனி ,பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய நாடுகள் மதத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டுத் தேசியத்தை அங்கே உருவகித்துக் கொண்டிருந்தன. அதுமொழியைச் சார்ந்திருந்தது
மொழிவழித்தேசியம் அங்கு மொழிச்சிறுபான்மையினரிடத்து அச்சத்தையும் விலக்கத்தையும் ஏற்படுத்தியதனால் அதையும் உதறி எந்தவிதமான பழைமையான பண்பாட்டையும் அடிப்படையாகக்கொள்ளாத நவீனத் தேசியத்தை நோக்கி அவர்கள் வந்தார்கள். ஆனால் நவீனத் தேசியம் என்னும் கருத்து ஐரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு வந்தபோது அனைத்து இடங்களிலுமே மதம் அதில் ஒரு முக்கியமான பங்கு வகித்தது.
ஏனெனில் மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது எளிது. மக்களை ஒன்றாகத் திரட்டும் குறியீடுகளை மதத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே மக்கள் ஒன்றாகத் திரளும் அமைப்புகளும், விழாக்களும் மததில் கொண்டிருக்கும். ஐரோப்பியர்கள் அரேபியாவில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியபோது அரேபியா மத அடிப்படையில்தான் எதிர்த்தது. அங்கிருந்து மத ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் எதிர்ப்பை உருவாக்கும் போக்கு வலுவாக உருவாகியது
இந்தியாவில் நேரடியாக மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கு சுதந்திரப்போராட்டம் தொடங்கியபோதே உருவானது. இந்தியாவின் சுதந்திரப்போராட்டமே இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவற்றின் தொடர்ச்சியாக உருவானதுதான். ஆகவே மதத்தில் இருந்த பல்வேறு குறியீடுகளை எடுத்து பயன்படுத்தினர் .பாரத் மாதா என்ற உருவமும் சரி, வந்தே மாதரம் என்ற கோஷமும் சரி மதத்தில் இருந்துவந்தவை
கிலாபத் இயக்கம் இந்தியாவில் மதத்தில் இருந்து கிளைத்த ஓர் அரசியல் இயக்கம். அதன்பின் 1924-ல் முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்டது அதற்கடுத்த வருடமே நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் மதம்சார்ந்த தேசிய உருவகங்கள் வலுப்பெறத் தொடங்கின. இதே போக்கையே இலங்கையில் நாம் காண்கிறோம். அநகாரிக தம்மபாலா என்பவர் சிங்கள இன பௌத்தத்தை அங்குள்ள தேசியத்தின் அடிப்படையாக முன் வைத்தார். பௌத்ததின் அரசியல் முகம் அப்படித்தான் ஆரம்பமாகியது.
எப்போது மதம் தேசியத்தின் அடிப்படையாக அமைகிறதோ அப்போதே அதற்குள் உள்ள பிற மதங்கள் எதிர்நிலை எடுக்க ஆரம்பிக்கின்றன. அந்தத் தேசியத்தை எதிர்க்கும் அன்னிய சக்திகள் அப்பிரிவினையை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றன. 1918ல் இந்தியாவுக்குத் திரும்பி காங்கிரஸ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காந்தி இங்கிருந்த தேசியப்போராட்டத்தில் இருந்த மத அம்சத்தை கூர்ந்து நோக்கினார். திலகர் போன்றவர்கள் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி உருவாக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் சிறுபான்மையினரை அன்னியப்படுத்திவிடும் என எண்ணினார்
அந்த எல்லையை உடைத்து இந்து முஸ்லிம் இருவரும் இணைந்த ஒரு தேசிய உணர்வு இங்கே பிறக்க வேண்டுமென்று காந்தி விரும்பினார். ஆகவே அவர் இங்கே உருவாகிவந்த முதல் இஸ்லாமிய அரசியலியக்கமான கிஃலாபத் அமைப்பை ஆதரித்தார். இந்து முஸ்லிம் அவநம்பிக்கையை பிரிட்டிஷார் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் எண்ணினார். ஆனால் கிலாஃபத் இயக்கத்திலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய மதவாதம் எழுந்தது. அதற்கு எதிர்வினையாக இந்துதேசியவாதம் எழுந்தது. இஸ்லாமிய தேசியவாதம் பிரிட்டிஷாரால் வளார்க்கப்பட்டு கடைசியில் தேசத்தை உடைத்தது.
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் நமக்கு இருந்தன. நவீன ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசியம். அது எதிர்காலத்தை நோக்கியது. இன்னொன்று மதத்தை நோக்கிய தேசியம். இறந்தகாலத்தை நோக்கியது அது.
சென்ற சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இஸ்லாமியத்தீவிரவாதம் வலுவாக வேரூன்றி வருகிறது. சௌதி அரேபியாவை மையமாகக் கொண்ட வஹாபி,சலாஃபி இயக்கங்கள் இஸ்லாமிய மதத்தை வெறுமொரு அரசியலாகக் குறுக்கி அதைக் கொண்டு உலகத்தை வென்று ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. அவை மனிதாபிமானம் அற்ற தீவிரவாதத்தை தங்கள் வழியாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிராக உலகெங்கும் உருவாகும் கோபத்தை இங்குள்ள இந்து தேசியம் தனக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. விளைவாக அது இங்கு வளர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது
இஸ்லாமியர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் அனைத்துமே இந்த் வஹாபி,சலாஃபி இயக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்பவையாக உள்ளன என்பதே இங்கே இந்துதேசியம் மேலும் மேலும் வளர வழியமைக்கிறது. ஆக, காந்தி எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்தப்போக்கு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.
ஏன் மதம் தேசியத்தின் அடிப்படையாக இருக்கக்கூடாது?. ஒன்று பெரும்பான்மையினரின் மதத்தை சார்ந்து தேசியம் அமைக்கப்படுமென்றால் சிறுபான்மையினர் அதற்குள் இயல்பாக இருக்க முடியாது அவர்கள் அந்நியப்படுவார்கள் மிகச்சிறுபான்மையினர் என்றாலும் அனைவருக்கும் இடமுள்ள ஜனநயகமே நவீன வாழ்க்கைக்கு உரியது. அது பெரும்பான்மையினரின் பெருந்தன்மையாலோ கருணையாலோ அளிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. அது இயல்பான அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும். அப்படி உணரப்படவும் வேண்டும்
அத்துடன் மதத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும்போது அந்த மதத்தின் நிறுவனங்களையும் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துபவர்களின் அதிகாரம் அரசுக்குள் ஊடுருவுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மதத்தின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எப்போதும் பழமையானவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் அமைப்பின் பழமையைக் கட்டிக் காப்பதே அவர்களது பொறுப்பு ஆனால் ஒர் அரசு முற்போக்கானதாகவும் எதிர்காலத்தை நோக்கி செயல்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் பழமைவாதிகளின் செல்வாக்கு இருக்குமென்றால் தேசம் அழியும். அரேபிய தேசங்களில் நாம் பார்ப்பதும் பாகிஸ்தானில் நாம் காண்பதும் மதப் பழமைவாதிகள் அரசைக் கட்டுப்படுத்துவதனால் விளையும் பின்னடைவுகளையே.
இறுதியாக எந்த ஒரு மதமும் தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்தபடியே வரவேண்டும். ஒவ்வொரு மதத்திற்குள்ளும் மதச்சீர்திருத்தவாதிகள் எழுந்து ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் உடைக்க முயலவேண்டும். நாம் இன்று வழிபடும் நாராயணகுரு, வள்ளலார் போன்றவர்கள் பெரும் மதச்சீர்திருத்தவாதிகளே. மதமும் அரசாங்கமும் ஒன்றாக இருக்கும்போது மதப்பழமைவாதிகள் எதிர்க்க முடியாத ஆற்றல் பெறுவார்கள். மதத்துக்குள் புதுச்சீர்திருத்தவாதிகள் எழமுடியாமல் ஆகும். விளைவாக அந்த மதமே தேங்கி நிற்க நேரும். இதுவும் அரேபியநாடுகளில் நாம் காண்பது.
இக்காரணத்தால்தான் எதன் பொருட்டும் மதம் அரசியலாகக் கூடாது. எக்காரணத்தாலும் மதஅடிப்படையிலான தேசியம் அமையக்கூடாது தேசியம் என்பது வளர்ச்சியின் அடிப்படையில், ஒத்துப்போவதின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் .காந்தி இந்தியர்களுக்கு அளித்துச் சென்ற பொறுப்பு அதுதான். வாக்களிக்க கையில் ஓட்டுச்சீட்டை ஏந்தும் ஓர் இந்தியன் காந்திக்கு அந்த வாக்குறுதியை அளித்திருக்கிறான் .