தமிழகத்தின் புகழ்மிக்க தொழிலதிபர்களில் ஒருவரான அமரர் சக்தி நா.மகாலிங்கம் அவர்களிடம் எனக்கு பதினைந்து ஆண்டுகள் தொடர்பு இருந்தது. நான், ‘சொல் புதிது’ என்னும் இதழ் நடத்த அவர் உதவி செய்தார். எனது, ‘இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்னும் நுாலை, அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஒருமுறை, உரையாடலில் தன் தொழிற்குழுமத்தில் உள்ள ஒருவரைக் குறிப்பிட்டு, ”அவர் கூறும் எந்தக் கருத்தும் எனக்கு உடன்பாடானது அல்ல,” என்றார்.”அப்படியென்றால் ஏன் அவரை வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ”அவர் என்னை எதிர்ப்பதற்காகத்தான்,” என்று சிரித்தபடி சொன்னார். அவரது பிரம்மாண்டமான தொழிற்குழுமத்தில் ஒவ்வொரு சிறு முடிவும் மிகப்பெரிய எதிர்விளைவுகளை உருவாக்கக்கூடும்.
ஆகவே, அனைத்துக் கோணங்களிலும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு பல்வேறு தரப்புகளில் நின்று பேசக்கூடியவர்கள் அவரை சுற்றி தேவை.அவர்கள், அவரை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவரை கடுமையாக மறுப்பவர்கள் தான் அவருடைய திட்டங்களை மேலும் கூர்மையாக்குகிறார்கள். அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டி, அவருடைய செயலை மேலும் வெற்றிகரமாக ஆக்குகிறார்கள்.
ஒரு தொழிற்குழுமத்திற்கே இத்தகைய மாற்றுக்குரல்கள் உள்ளே இருக்க வேண்டுமென்றால், தமிழகம் போன்ற ஒரு மாபெரும் நிலப்பரப்பை ஆளும் கட்சிக்குள் எப்படி இருக்க வேண்டும். ஒரு மாற்றுக் குரல் கூட எழாது, ஒருவர் இந்த மாநிலத்தை ஆள்வார் என்றால் அது எத்தகைய ஆட்சியாக இருக்கும்?
உண்மையில் காமராஜர் ஆட்சிக்குப்பின் தமிழகத்தை ஆண்ட அனைத்து முதல்வர்களும் சர்வாதிகாரிகளே. காமராஜர் ஆட்சியில், அவருக்கு சமானமான, அவரை மறுக்கக்கூடிய முக்கியமான அமைச்சர்கள் இருந்தனர். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போல.
பிறகு வந்த முதல்வர்கள், மிதமிஞ்சிய வகையில், தங்களை முன் நிறுத்திக் கொள்கிறார்கள். கட்சி, அரசு அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட சொத்து. ஆகவே விசுவாசிகளே கட்சியிலும் அரசிலும் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட மன்னர்கள் என்றால், ராஜராஜ சோழன் மற்றும் திருமலை நாயக்கர். ராஜராஜ சோழனின் அவையில் கடம்பூர் சம்புவரையர், கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர், முத்தரையர் போன்ற பல சிற்றரசர்கள் இருந்தனர். அவர்கள் ராஜராஜனுக்கு பெண் கொடுத்தவர்கள், அவர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள். ஆகவே, அரசனுக்கு நிகரான அதிகாரம், அன்று அவர்களுக்கு இருந்தது.
திருமலைநாயக்கர் அவையில் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள், மன்னனுக்கு ஆலோசனை சொல்லி இடித்துரைக்கும் அந்தஸ்து கொண்டவர்களாக இருந்தார்கள். அவ்வாறு தான் இந்த பெரிய நிலம் வெற்றிகரமாக ஆளப்பட்டது.உண்மையில், அவ்வாறு பலதரப்புகள் சேர்ந்து விவாதித்து, ஆட்சி செய்யும் முறையை, மேலும் அதிகரிக்கும் பொருட்டே இங்கு ஜனநாயகம் கொண்டு வரப்பட்டது.
பல தளங்களை சேர்ந்த நிபுணர்கள் ஓர் அரசில் இடம்பெற வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பல்வேறு இடங்களை சேர்ந்த, பல்வேறு மக்கள் குழுக்களை சேர்ந்த, பல்வேறு தொழில்களை சேர்ந்த அரசியல்வாதிகள் அந்த அரசில் இருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் கூடி விவாதித்து, ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரு குரல் கூட ஒலிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு குரல் மட்டும் ஒலிப்பது என்பது சர்வாதிகாரம் மட்டுமே.
சுதந்திரத்துக்கு பின், இந்தியாவை ஆண்ட நேருவின் அமைச்சரவை ஒரு முன்னுதாரணமான ஜனநாயக தன்மையோடு இருந்தது. நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்று, வென்றவர் நேரு. ஆனால், அவரது அரசில், நேருவுக்கு நிகரான அதிகாரத்துடன் பட்டேல் இருந்தார். நேரு, நகர்மயமாக்கலையும் தொழில் மயமாக்கலையும் ஆதரித்தபோது, கிராம தொழில்களையும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் பட்டேல் முன்நிறுத்தினார்.
நேருவுடன் எப்போதும் முரண்படும், ரஃபீக் அகமது கித்வாய் போன்ற, அமைச்சர்கள் அவரது அமைச்சரவையில் இருந்தார்கள். தனது ஒவ்வொரு திட்டத்தையும், நேரு, அவர்களிடம் பேசி, அவர்களை நிறைவுறச் செய்து, அதன் பின்னரே கொண்டு வரமுடிந்தது.
பலமுறை, நேரு கடும் கோபம் கொண்டு, அமைச்சரவையிலிருந்து இறங்கிச் சென்றிருக்கிறார் என்று, பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கூட்டு அமைச்சரவை, ஒரு பதினைந்து ஆண்டு காலத்தில், இந்தியாவுக்கு செய்த பங்களிப்பை, அதன் பிறகு எந்த இந்திய மைய அரசும் செய்யவில்லை.
நேர்மாறாக, இந்திரா காந்தி, அவரது கட்சியையும், அரசையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நெருக்கடி நிலை காலத்தில், ‘இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா’ என்ற கோஷமே, தேவகாந்த் பருவா என்ற அமைச்சரால் முன்வைக்கப்பட்டு, அக்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஆற்றல் இழந்தன.
இந்திராவின் ஆட்சி காலத்தில் தான், இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. ஆலைகள் மூடப்படுவதும் அதற்கிணையாகவே பெருகியது. வேளாண் துறையிலும் பொதுத் துறை உற்பத்தியிலும் பெருவீழ்ச்சி ஏற்பட்டது.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் உருவான நக்சலைட் கிளர்ச்சி, இந்தியாவை உலுக்கியது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களை சுட்டுக் கொன்று, அப்போராட்டத்தை இந்திரா காந்தி நசுக்கினார். காரணம், மாற்றுக்குரலே இல்லாமல் இருந்தமையால் அந்த பிழைகளை எவரும் சுட்டிக் காட்டவில்லை. தொடர்ந்து, நெருக்கடி நிலையை கொண்டு வந்து வீழ்ச்சியடைந்தார் இந்திரா.
இந்திராவை தோற்கடித்து, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயின் அரசில், ஒருபக்கம் இடதுசாரிகளான ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களும், மறுபக்கம் வலதுசாரிகளான அடல் பிகாரி வாஜ்பாய் போன்றவர்களும் இருந்தனர்.
இந்தியாவின் கலப்புப் பொருளியலை, அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். இந்திய ஜனநாயகத்தில், மொரார்ஜியின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம். ஆனால், அவர்களுக்கிடையே நிகழ்ந்த விவாதங்களை, ‘சண்டைகள்’ என்று மக்கள் புரிந்துகொண்டனர். அந்த ஆட்சி கவிழ்ந்தது. போர்க்காலங்களிலும் நெருக்கடி நேரங்களிலும், உறுதியான தலைமைக்கும் ஒற்றைக்கும், ஓர் இடம் உண்டு. ஏனெனில் அங்கு தாமதம் கூடாது.
ஆனால், ஜனநாயகம் தாமதமாக மட்டுமே செயல்பட வேண்டும். எந்த முடிவும் அவசரமாக எடுக்கப்பட்டு, அதன் விளைவாக பெரிய அழிவுகளை உருவாக்கிவிடக் கூடாது. பெரும்பான்மையினருக்கோ வலிமை வாய்ந்தவர்களுக்கோ சாதகமாக எடுக்கப்படும் முடிவால், எங்கோ தங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கும் எளியவர்கள் பாதிப்படையக் கூடாது. உடனடியாக ஒரு தேவைக்காக எடுக்கப்படும் முடிவு, நீண்ட கால அளவில், பின்னடைவை உருவாக்கிவிடக் கூடாது.
இந்த கவனத்துடன் செயல்படும் ஒரு அரசு, அனைத்து துறைகளிலும் இருந்து விவாதங்களை தான் எதிர்கொள்ளும்.இந்தியாவின் சாமான்ய மக்களாகிய நாம், ஜனநாயகத்தின் இந்த விவாத தன்மையை புரிந்து கொள்ளவில்லை. எனவே, யார் மூர்க்கமாகவும் தீவிரமாகவும் பேசுகிறார்களோ, அவர்களே வலிமையான தலைவர் என்று எண்ணுகிறோம்.
எவருக்கு தன் கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் மாற்றுக் குரலே எழவில்லையோ, அவரே அனைத்தையும் சாதிக்கும் திறனுடையவர் என்று எண்ணுகிறோம். இங்கிருந்து தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, ஒப்பு நோக்க, ஜனநாயக குணம் கொண்டவராக இருந்தார். அவரது அரசில், அவருக்கு நிகரான அதிகாரத்துடன், அருண் நேரு, அருண் சிங், வி.பி.சிங் ஆகியோர் இருந்தார்கள். சாம் பிட்ரோடா போன்ற தொழில்நுட்ப நிபுணர்கள் இருந்தனர்.
அவ்வாட்சிக்காலத்தில் தான், இந்திரா காந்தி காலத்தின் தேக்க நிலையிலிருந்து, இந்தியா மீள்வதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. இன்றுள்ள பொருளாதார வளர்ச்சியின் முதல் அசைவு அப்போது தான் தொடங்கியது.
ஆக, இந்திய வரலாறு நமக்கு காட்டுவது இது, எப்போது ஓர் அரசிலும், கட்சியிலும் வலுவான மாற்றுக்குரல்களுக்கு இடமிருக்கிறதோ, தொடர்ந்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ, அப்போது தான் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது.
ஒற்றைக்குரல் என்பது கட்டுப்பாடு அல்ல. அதை உருவாக்குவது நிர்வாகத்திறன் அல்ல. உண்மையில், நிர்வாகத்திறன் இல்லாத ஒருவர், பயந்து போய், தன் எதிரிகளை அடக்கி வைத்திருப்பது தான் அது. ஜனநாயகம் விவாதங்களால் மட்டுமே செயல்பட முடியும்.