‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27

[ 6 ]

இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் உண்டு என்னும் செய்தியை இன்று அறிந்துகொண்டேன்” என்றாள் பிந்துமதி. முகம் சிவந்த தேவிகை “நான் எவரிடமும் சொல்லாட வரவில்லை” என்றாள்.

அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த குந்தியின் உடல் நிலைகொள்ளவில்லை. விரைந்து நடந்து மூச்சிரைத்து நின்று மீண்டும் நடந்தாள். அவளுடன் சென்ற சுபத்திரை “கிளர்ந்திருக்கிறீர்கள் அன்னையே” என்றாள். “ஆம், இன்று அவையில் அச்செய்தியை யுதிஷ்டிரன் அறிவித்தபோது என் வாழ்வின் நிறைவு அணுகுகிறது என்றே உணர்ந்தேன்” என்றாள். “அதன்பின் என்னுள் எண்ணங்களே ஓடவில்லை. பொருளற்ற சொற்களாக பெருகிக்கொண்டிருக்கிறது என் உள்ளம். இளையவளே, என் வாழ்க்கையின்  முதன்மைத்தருணங்களில் ஒன்று இது. நான் மீண்டும் மீண்டும் நாடும் ஒன்று” என்றாள். சுபத்திரை வெறுமனே நோக்க “அறியாசிற்றிளமையில் குந்திபோஜருக்கு  மகளாகச்செல்லும் முடிவை நான் எடுத்தேன். அன்று என் உள்ளம் கிளர்ந்து கொந்தளித்ததை எண்ணும்போதெல்லாம் மீண்டும் அவ்வுணர்வை அடைவேன். உண்மையில் அத்தருணத்தை மீளவும் நடிப்பதற்காகவே இவ்வாழ்க்கை முழுக்க முயன்றேன் என்றுகூட எண்ணுவதுண்டு” என்றாள்.

கனவிலென அவள் சொன்னாள் “குடியவை. யாதவர்களின் குடித்தலைவர்கள் என்னை சூழ்ந்திருந்தனர். நானறியாத விழிகளுக்கு நடுவே என் தந்தையின் தளர்ந்த விழிகள். அவை என்னிடம் மன்றாடுவதென்ன என்று நன்கறிந்திருந்தேன். அவர் என் கைகளைப்பற்றி கண்ணீருடன் கோரியபோது நான் பிறிதொன்றையும் எண்ணியிருக்கவுமில்லை. உன் முடிவென்ன பிருதை என்று எவரோ கேட்டனர். மீண்டும் மீண்டும் வெவ்வேறு குரல்களில் அவ்வினா எழுந்தது. என் சித்தம் உறைந்துவிட்டது. அப்போது நான் விழைந்ததெல்லாம் அக்கணத்தை கடப்பதைக்குறித்து மட்டுமே. பதற்றத்துடன் ஆடையை நெருடியபடி வியர்த்த முகத்துடன் சுற்றிலும் விழியோட்டியபோது குந்திபோஜரின் அரசி தேவவதியை கண்டேன். அவள் தலையில் சூடியிருந்த மணிமுடியின் கற்கள் இளவெயிலில் மின்னின. அவள் தலைதிருப்பியபோது அவை இமைத்தன. அவள் அங்கு நிகழ்வதை சற்றும் பொருட்படுத்தாமல் அருகே நின்றிருந்த சேடியிடம் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தாள்.”

“நான் அக்கணம் முடிவெடுத்தேன். குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல விழைவதாக சொன்னேன்” என்றாள் குந்தி. “அக்கணமே என் உள்ளம் கொந்தளித்தெழுந்தது. உடலெங்கும் அனல் நிறைவதுபோல. நரம்புகள் எல்லாம் இறுகி ரீங்கரிப்பதுபோல. அது நான் என்னை உணர்ந்த தருணம். அன்றுவரை நான் என்னை உணர்ந்ததே இல்லை என்றே இன்று எண்ணுகிறேன். ஏனென்றால் நான் மண்ணில் வாழவில்லை. கன்றுமேய்த்தும் ஆபுரந்தும் நெய்சமைத்தும் இல்லத்தில் இருந்தேன். மூத்தவருடன் சொல்லாடியபடி காடுகளில் அலைந்தேன். அவர் தன் கனவுகளை என்னுள் நிறைத்தார். நான் என் கனவுகளை அவற்றிலிருந்து உருவாக்கிக்கொண்டேன். அக்கனவுகளிலேயே வாழ்ந்தேன். அவள் வேறொரு பிருதை. அவளே வாழ்ந்தாள், நானல்ல.”

குந்தி நாணப்புன்னகையுடன் “அக்கனவுகளை மீண்டும் எண்ணும்போதெல்லாம் வியப்பேன். எப்படி அவை என்னிலூறின? அவை மண்ணில் நின்றிருப்பவையே அல்ல. என் தமையன் பாரதவர்ஷத்தை முழுதாள விரும்பினார். நான் என்னுள் எவருமறியாது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக விரும்பினேன். புரவிப்படை நடத்திச்சென்று யவனர்களை வெல்லவும், யானைகளை திரட்டிச்சென்று விந்தியனைக் கடக்கவும்  எண்ணினேன். கங்கையிலும் சிந்துவிலும் அத்தனை கலங்களிலும் என் கொடி பறப்பதை கனவுகண்டேன். ஆனால் அவை கனவுகளென்று என் உள்ளம் அறிந்துமிருந்தது. அன்று, யாதவகுலமன்றில் என் கண்ணெதிரில் அக்கனவுகள் அனைத்தும் ஒருகணம் நனவாகி மறைந்தன. அன்று முதல் இப்புவியில் நான் இருக்கலானேன். ஒவ்வொன்றும் என்னிலிருந்து தொடங்கி வளர்ந்தன” என்றாள். அவள் குரல் பேசப்பேச விரைவுகொண்டபோது முதுமையை உதறி பின்னகர்ந்து இனிமையடைந்தது.

அவள் கண்களில் பேதைமை நிறைந்த சிறுமி ஒருத்தி தோன்றினாள். “அப்போது நான் அடைந்த பேரின்பத்தை மீண்டும் தீண்டியதேயில்லை. அதை எண்ணி எண்ணி என்னுள் ஏங்கிக்கொண்டிருக்கிறது ஆழம். பாண்டுவின் துணைவியாக முடிவெத்தது அத்தகைய ஒரு தருணம். ஊழ் உதவ தேவயானியின் மணிமுடியை சூடியதருணம் பிறிதொன்று. சௌவீரநாட்டின் முடியை சூடியமைந்தபோது மீண்டும் அத்தருணத்தை அடைந்தேன். இந்திரப்பிரஸ்தத்தில் என் மைந்தன் முடிசூடியமர்ந்தபோது இதோ அது என எண்ணி திளைத்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அது ஒரு அணுவிடை குறைவானது என்றும் என் அகம் அறிந்திருந்தது. ஆனால் இன்றறிந்தேன், இதுவே அது. அன்று தொடங்கிய அப்பயணம் இதோ கனிகிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “அதன்பொருட்டு எனக்கு இனியவை என நான் எண்ணிய பலவற்றை இழந்திருக்கிறேன். காதலுள்ள துணைவியென்றோ கனிந்த அன்னையென்றோ நான் என்னை உணர்ந்ததில்லை. இக்களத்தில் ஒவ்வொரு கணமும் என் கருக்களை நகர்த்திக்கொண்டே இருந்தேன்” என்றாள்.

நீள்மூச்சுடன் “இன்று அவையில் ராஜசூயம் என்னும் சொல்லை கேட்டதுமே என் மெய் விதிர்ப்பு கொண்டது. அதன்பின் சொற்களைக்கேட்க என் செவியும் சித்தமும் கூடவில்லை. பெரும்பறையோசையின் முன் வாய்ச்சொற்களென உள்ளப்பெருக்கே மறைந்துவிட்டது. ஆனால் பிறிதொரு வடிவெடுத்து அங்கே அமர்ந்து அனைத்தையும் சொல்தவறாது கேட்டுக்கொண்டுருமிருந்தேன் என இப்பொழுது உணர்கிறேன். அதன்பின் பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என்னை பதற்றம் கொள்ளச்செய்தது. முறைமைகள், திட்டங்கள், அறங்கள். மூடர்கள். அவர்களின் வெற்றுச்சொல்லடுக்குகள். ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல விழைகிறார்கள். தங்கள் குரல்மேல் மானுடருக்குள்ள விருப்பம்போல் வெறுப்புக்குரியது பிறிதொன்றுமில்லை. இன்று ஒரு தருணத்தில் நிலைமீறி எழுந்து பீமனிடம் ‘மைந்தா, நீ காட்டாளனென்றால் அந்த வைதிகனின் தலையை வெட்டி இந்த அவையில் வை’ என்று ஆணையிட்டேன். அவ்வாணையை நானே கேட்டு உடல் விரைத்து அமர்ந்திருந்தேன்” என்றாள்.

சுபத்திரை வாய்பொத்தி சிரித்துவிட்டு திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த விஜயையையும் தேவிகையையும் நோக்கினாள். “இறுதியில் தௌம்யரின் சொல் எழுந்து அவைமுடிவும் அறிவிக்கப்பட்டபோதே மெல்ல தளர்ந்து மண்ணுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்திருப்பாய், இன்குளிர்நீர் கொண்டுவரச்சொல்லி அருந்தியபடியே இருந்தேன். என்னுள் எழுந்த அனலை நீர் பெய்து பெய்து அவித்தேன்” என்றாள் குந்தி. “இன்றிரவு நன்கு துயிலுங்கள் அன்னையே” என்றாள் சுபத்திரை. “ஆம், இன்றிரவு நான் துயிலவேண்டும். ஆனால் ஏழுவயதில் நீத்த துயில். அதை மீண்டும் சென்றடைவதெப்படி? துயிலப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.” குந்தி விலகிநடந்து  சாளரம் வழியாக பெருகியோடும் யமுனையை நோக்கினாள். அவள் முகத்தில் ஒளி அலையடித்தது. அரசியர் தயங்கி நிற்க அவர்கள் செல்லலாம் என்று சுபத்திரை கைகாட்டினாள்.

“ஒருவேளை ராஜசூயம் நிறைவுற்றால் நான் அகம் அடங்கி நற்துயில் கொள்ளக்கூடும். ஆனால் அது எளிதல்ல. இன்னும் பல படிகள். அஸ்தினபுரியின் ஒப்புதலின்றி இவ்வேள்வி தொடங்காது. ஜராசந்தனின் குருதிசிந்தாது இது முடியாது” என்றாள் குந்தி. சுபத்திரை “ஆனால் அது உங்களுக்கு உங்கள் மருகன் அளித்த சொல் அல்லவா? அவரால் இயலாதது உண்டா?” என்றாள். குந்தி திகைத்து அவளை நோக்கி “எனக்கா? கிருஷ்ணனா?” என்றாள். “சிலநாட்களுக்கு முன் உங்களிடம் அவர் சொல்லாடிக் கொண்டிருக்கையில் உளம்சோர்ந்து விழிநீர் விட்டீர்கள். ஏன் ஏன் என்று அவர் மீளமீள கேட்டார். அரசுதுறந்து காடேகவிருப்பதாகவும் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்ற காடே உகந்தது என எண்ணுவதாகவும் சொன்னீர்கள்.” குந்தி “ஆம், அப்போது உண்மையிலேயே அப்படி தோன்றியது. இங்கு இனி நான் ஆற்றுவதற்கேதுமில்லை என்று” என்றாள்.

“பேரரசி, விரையும் புரவியில் வால்பற்றாமல் உங்களால் இருக்கமுடியாதென்று அறிந்தவர் உங்கள் மருகர்” என்றாள் சுபத்திரை. குந்தி எண்ணத்திலாழ்ந்து சிலகணங்கள் நின்றபின் “இளையவளே, நீ உன் தமையனின் நிழல். நீ சொல், என் உள்ளம் விழைவதுதான் என்ன?” என்றாள். சுபத்திரை சிரித்தபடி  “அன்னையே, இங்குள்ள ஒவ்வொரு யாதவனுக்குள்ளும் வாழும் கனவுதான். நூற்றாண்டுகளாக புதைத்துவைக்கப்பட்ட விதை நாம். முளைத்துப்பெருகி இப்புவி நிறைக்க விழைகிறோம்” என்றாள். “கார்த்தவீரியன் முதல் நீளும் அப்பெருங்கனவின் இன்றைய வடிவே என் தமையன். நீங்கள் அவருக்கு முன்னால் வந்தவர், அவ்வளவுதான்.” குந்தி “நீ சொல்கையில் அதுவே என்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு முழுமையாக ஏற்கவும் உளம்கூடவில்லை” என்றாள். “உங்களுக்கு முன்னால் சத்யவதிக்கும் அதுவே தோன்றியது” என்றாள் சுபத்திரை. “ஆம்” என்றபின் குந்தி “அப்போதும் என் உள்ளம் அடங்குமா என்று அறியேன். அவிந்து அது அடங்குவதில்லை என்று தோன்றுகிறது. சத்யவதியைப்போல் ஒற்றைக் கணத்தில் உதிர்ந்து மறைந்தாலொழிய இச்சுழலில் இருந்து மீட்பில்லை” என்றாள்.

குந்தியின் மஞ்சத்தறை வரை சுபத்திரை வந்தாள். முதன்மைச்சேடி அவளுக்கு மஞ்சமொருக்கி விலகியதும் குந்தி அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டாள். சுபத்திரை அக்கால்களை மெல்லப்பற்றி அழுத்தியபடி “கதைபயிலும் பெண் நான். என் கால்கள்கூட இத்தனை வலுக்கொண்டவை அல்ல” என்றாள். குந்தி “நான் காடுகளில் அலைந்திருக்கிறேன்” என்றாள். சுபத்திரை “பேரரசி, மண்ணும் கொடியும் முடியும் அன்றி நீங்கள் வென்றெடுப்பதென பிறிதொன்று இல்லையா?” என்றாள். “என்ன?” என்று கோரியபோது குந்தியின் விழிகள் மாறுபட்டிருந்தன. “நான் விழையும் சில உள்ளன. அவற்றை நான் முதிர்ந்து பழுத்தபின் அபிமன்யுவின் மடிசாய்ந்து உயிர்விடுகையில் அவனிடம் சொல்வேன்” என்றாள் சுபத்திரை.

விழிகளை மூடியபடி “ஆம், அவ்வண்ணம் சில அனைவருக்கும் இருக்கும் அல்லவா?” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்?” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்?” என்று குந்தி அவளை செல்லமாக அடிக்க “அப்படியென்றால் சொல்லுங்கள்” என்றாள். குந்தி “சொன்னால் முழுதும் உனக்குப்புரியாது. ஆனால் அவ்வளவுதான் சொல்லமுடியும்” என்றாள்.

“போதும்” என்று சுபத்திரை சொன்னாள். “ராஜசூயம் வேட்டு சத்ராஜித்தாக அமர்ந்திருப்பவன் பிறிதொருவன்” என்றாள் குந்தி. சுபத்திரை விழிகள் விரிய நோக்கி அமர்ந்திருந்தாள். அவள் கைகள் அசைவிழந்திருந்தன. “அவன் முன் பணிந்து நிற்கும் மணிமுடிகளில் ஒன்று ஒருகணம் என் காலடியிலும் வைக்கப்படவேண்டும்.” சுபத்திரையின் புருவங்கள் முடிச்சிட்டன. “அவ்வெற்றி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு அல்ல, என்னுள் வாழும் பெண்ணுக்கு” என்று அவள் சொன்னாள். அவ்வெண்ணம் அளித்த கிளர்ச்சியால் என அவள் முகம் சிவந்தது. கண்கள் நீர்மைகொண்டன. எடைதூக்கி நிற்பவள் போல முகத்தசைகள் இழுபட்டன. பின்பு சிரித்தபடி “பெண்ணென்பவள் எத்தனை சிறுமைகொண்டவள் இல்லையா?” என்றாள். “மானுடரே சிறுமைகொண்டவர்கள்தான். பெண்ணுக்கு அச்சிறுமையை வெளிக்காட்ட தருணங்கள் அமைவதில்லை. ஆகவே அவள் மேலும் சிறுமைகொள்கிறாள்” என்றாள் சுபத்திரை.

 [ 7 ]

இந்திரப்பிரஸ்தநகரில் ஆரியவர்த்தத்தின் முதன்மைராஜசூயம் நிகழவிருப்பதை அறிவிக்கும் அடையாளக்கொடி வளர்பிறை முதல் நாளில் நகரின் முகப்பிலிருந்த காவல் சதுக்கத்தின் நடுவே நடப்பட்ட ஓங்கிய கல்தூண் ஒன்றில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு நாள்குறித்த நிமித்திகர் சிருங்கபேரர் “நான்கு தடைகள் கடந்து இவ்வேள்வி முழுமைபெறும். இதன் அரசன் விண்ணவருக்கு நிகரென இங்கு வைக்கப்படுவான்” என்றார். “இந்நகரம் செல்வமும் புகழும் கொண்டு ஓங்குமா? மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா?” என்று சௌனகர் கேட்டார். “அவை தெய்வங்களின் கைகளில் உள்ளன. நிமித்திகநூல் ஒன்றைப்பற்றி ஒருசரடென ஊழை தொட்டறியும் கலைமட்டுமே” என்று சொல்லி சிருங்கபேரர் தலைவணங்கினார்.

வேள்விக்கான அறிவிப்பு மக்கள்மன்றுகளில் அரசறிவிப்பாளர்களால் முழக்கப்பட்டபோது ராஜசூயத்தின் பொருள் பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. “வரிப்பொருள் மிகுவது கண்டபோதே எண்ணினேன். அந்தணர் ஏடுகளை புரட்டத்தொடங்குவர்” என்று கள்ளுண்டு கண்மயங்கி நின்றிருந்த சூதனொருவன் சொன்னான். “இதனால் நமக்கு பன்னிருநாள் இன்னுணவு கிடைக்கும். பிறிதொன்றுமில்லை” என்று ஒரு முதியகுலத்தலைவர் இதழ்வளைத்தார். அரசவையில் அமரும் வழக்கமிருந்த இளங்கவிஞன் ஒருவன் உரக்க “அறியாது பேசுகிறீர். இது நம் அரசரே பாரதர்ஷத்தில் முதல்வர் என்று அறிவிக்கப்படுவது. அவ்வண்ணமென்றால் நாமே இந்நிலத்தின் முதற்குடிமக்கள்” என்றான். களிகொண்டிருந்த சூதன் “ஆம், அதோ நின்றிருக்கும் மன்றுநாய் இப்பாரதவர்ஷத்தின் முதன்மை நாய். ஆனால் பிறநாய்கள் அதை ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை” என்றான். மன்றில் சிரிப்பெழுந்தது.

ஆனால் மறுநாளே நகர்முழுக்க களியாட்டு எழத்தொடங்கியது. சொல்லியும் கேட்டும் அதை மக்கள் வளர்த்துக்கொண்டனர். “பாரதவர்ஷத்தின் எந்தச்சந்தையிலிருந்தும் இந்திரப்பிரஸ்தம் கரவும் வரியும் கொள்ளமுடியும். அரசகருவூலம் நிறையும். நம் களஞ்சியங்கள் ஒழியாது” என்றனர். “கங்கைமேல் செல்லும் கலங்கள் அனைத்திலும் மின்கதிர்கொடி பறக்கும். தெற்கே தாம்ரலிப்தியும் நமதென்றாகும்” என்றனர். வணிகர்கள் மட்டுமே அக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. “எந்த வேந்தன் எவ்வெற்றி அடைந்தாலும் செல்வம் தனக்குரிய வகையிலேயே ஒழுகுகிறது.  நதிமீன்கள் நதியொழுக்கை மாற்றமுடியுமா என்ன?” என்று முதியவணிகர் சொன்னபோது இளையவர்கள் “ஆம், உண்மை” என்றனர். “நாம் செல்வத்தை ஆள்பவர்கள் அல்ல. செல்வத்தில் ஏறி ஒழுகும் கலைகற்றவர்கள்” என்றார் முதுவணிகர்.

முந்தையநாளிரவே இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் நகர்முற்றத்தில் கூடத்தொடங்கிவிட்டனர். முற்றத்தைச் சூழ்ந்து நின்ற தூண்களில் கட்டப்பட்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒவ்வொருவரும் ஒளிவிட்டனர். விடியும்போது தோளோடு தோள்முட்டி மக்கள் நிறைந்துவிட்டிருந்தனர். நூற்றெட்டு வைதிகர்களும் மங்கல இசைச்சூதர்களும் முற்றத்தில் நிரைகொண்டு நின்றனர். முதற்புள் கூவிய முன்புலரியிலேயே அரண்மனையிலிருந்து திரௌபதியுடன் கிளம்பி பொற்பூச்சுத் தேரிலேறி நகர்த்தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று வணங்கியபடி வந்த யுதிஷ்டிரர்  கொடிச்சதுக்கத்தில் இறங்கியதும் அவரை வாழ்த்தி சூழ்ந்திருந்த அனைத்து காவல் மாடங்களிலிருந்தும் பெருமுரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறின. மக்களும் படைவீரர்களும் எழுப்பிய வாழ்த்தொலியில்  காலையொளி அதிர்ந்தது.

தௌம்யரும் சௌனகரும் முன்னால் சென்று தேரிலிருந்து இறங்கிய அரசரையும் அரசியையும் வரவேற்று முற்றத்திற்குக் கொண்டுவந்தனர். அரசத் தேரினைத் தொடர்ந்து தனித்தேரில் பீமனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். இளைய யாதவரும் அர்ஜுனனும் பிறிதொரு தேரில் தொடர்ந்து வந்தனர். பெருங்களிறொன்றின் மீதேறி பலராமர் வந்தார். அவர்களனைவரும் வெண்ணிற ஆடையணிந்து மலர்மாலை சூடியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் எழுந்தன. அரசியருடன் குந்தி பல்லக்கில் வந்திறங்கினாள். குளிர்ந்த காற்று அனைவரையும் தழுவியபடி கடந்துசென்றது. விண்மீன்கள் நிறைந்த வானம் அதிர்ந்தபடி அவர்களுக்குமேல் வளைந்து நின்றது. ஒவ்வொன்றும் தெளிந்து வருவதுபோல தோன்றியபோது காலம் விரைவதாகவும் வானத்து இருள் மாறுபடவே இல்லை என்று தோன்றியபோது காலம் நிலைத்து நிற்பதாகவும் அவர்கள் மயங்கினர். கீழ்வானில் விடிவெள்ளி  அசைவற்றதுபோல மின்னிக்கொண்டிருந்தது.

நிமித்திகர்கள் விண்ணை நோக்கிக்கொண்டிருந்தனர். மீன் தேர்ந்து பொழுது குறித்ததும்  முதுநிமித்திகர் தன் கையை அசைக்க மங்கல இசை எழுந்தது. வேதம் முழங்க தௌம்யர் தலைமையில் வைதிகர் சென்று நூற்றெட்டுபொற்குடத்து யமுனைநீரை கொடிக்காலில் ஊற்றி அதை வாழ்த்தினர். தௌம்யர் யுதிஷ்டிரரை கைபற்றி அழைத்துச்சென்று கொடிக்கால் அருகே வரையப்பட்ட களத்தில் கிழக்குநோக்கி நிற்கச்செய்தார். வெற்றிலையில் வைக்கப்பட்ட மலரையும் மஞ்சள்கிழங்கையும் பொற்சரடில் கொடிக்காலில் கட்டினர். மஞ்சளரிசியும் மலரும் நீரும் இட்டு மும்முறை அரசரும் அரசியும் கொடிக்கம்பத்தை வணங்கினர். சூழ்ந்திருந்த பெண்கள் குரவையிட்டனர். மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

ராஜசூயத்தின் பொற்கதிர் முத்திரை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடி நகர்நடுவே இருந்த இந்திரன் ஆலயத்தில் பூசனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அது ஆலயபூசகர் எழுவரால் பொற்பேழையில் வைக்கப்பட்டு வெண்ணிற யானை மேல்  நகரத் தெருக்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இருபுறமும் மாளிகை உப்பரிகையில் கூடிய மக்கள் அதன் மேல் மலர் அள்ளிச் சொரிந்தனர். கொடிமரத்தின் பூசனை முடிந்து நிலம் தொட்டு சென்னி சூடி வணங்கி எழுந்து நின்றிருந்த அரசருக்கு முன் வெள்ளையானையிலிருந்து அக்கொடிப்பேழை இறக்கப்பட்டது. ஏழு பூசகர்கள் அதை சுமந்து சென்று  யுதிஷ்டிரர் முன் வைத்தனர்.

தௌம்யர் அப்பேழையைத் திறந்து கொடியை வெளியே எடுத்தார். ஏழாக மடிக்கப்பட்டிருந்த கொடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்து கொடிமரத்தின் அடியில் வைத்தார். அரசரும் அரசியும் அதற்கு மஞ்சள் அரசியும் மலரும் இட்டு வணங்கினர். பாண்டவ இளவரசர்கள் நால்வரும் அக்கொடியை முறைப்படி அரிமலரிட்டு வணங்கி  பூசனை செய்தனர். வைதிகர்  வேதம் முழக்க தௌம்யர் கொடியை விரித்து பட்டுக்கயிற்றில் கட்டினார். படைத்தலைவர் வாளை உருவி ஆட்ட இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைகளிலும் காவல்கோட்டங்களிலும் இருந்த  அனைத்து முரசங்களும் ஒன்றிலிருந்து ஒன்றென ஓசை தொடுத்துக்கொண்டு முழங்கத்தொடங்கின. கொடிச் சதுக்கத்திலும் அப்பால் நகரெங்கிலும் நிறைந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் “ராஜசூயம் வேட்கும் யுதிஷ்டிரர் வாழ்க! குருகுலத்தோன்றல் வாழ்க! இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க! அரசி திரௌபதி வாழ்க! ஐங்குழல் அன்னை வாழ்க!” என்று பெருங்குரலெழுப்பினர்.

கொடிமரத்தின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் உருவிய வாளுடன் நின்றனர்.  இடப்பக்கம் பலராமரும் இளைய யாதவரும் வாளேந்தி நின்றனர். அரசருக்கு இடப்பக்கம் பின்னால் திரௌபதி நின்றாள். தௌம்யர் யுதிஷ்டிரரிடம் “அரசியின் கைபற்றி மும்முறை கொடிக்காலை வலம் வருக!” என்றார்.  அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக!” என்றார் தௌம்யர். “அவ்வண்ணமே” என்று சொல்லி கண்களை மூடி நடுங்கும் கைகளுடன் யுதிஷ்டிரர் பட்டுச்சரடை அவிழ்க்க ராஜசூயத்தை அறிவித்தபடி கொடி மேலெழுந்து சென்றது. யமுனைக்காற்றில் விரிந்து படபடத்தது. கீழே எழுந்த முழக்கத்திற்கு ஏற்ப அது அசைவதாக உளமயக்கு தோன்றியது.

கைகூப்பி மேலே நோக்கி நின்ற யுதிஷ்டிரர் உளம்பொங்கி விழிநிறைந்தார். உதடுகளை அழுத்தியபடி திரும்பி தௌம்யரையும் பிற வைதிகர்களையும் கால்தொட்டு வணங்கி அவர்களிடம் மலரும் நீரும் வாழ்த்தும் பெற்றார். அவருக்குப்பின் பாண்டவர் நால்வரும் கொடிக்காலை சுற்றிவந்து வணங்கி வைதிகர்களிடம் வாழ்த்து பெற்றனர். யுதிஷ்டிரர் வேள்விச்சாலை அமைப்பதற்கான  ஆணையை விஸ்வகர்ம மரபைச்சார்ந்த சிற்பியாகிய தேவதத்தருக்கு அளித்தார். பொற்தாலத்தில் நாணயங்களுடனும் மலருடனும் வைக்கப்பட்ட ஓலையை வாங்கி சென்னி சூடி  ”இன்றே நன்னாள். என் பணி தொடங்கிவிடுகிறேன் அரசே” என்றார் தேவதத்தர். “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரர்.

“அன்னையிடம் நற்சொல் பெறுக!” என்று தௌம்யர் சொன்னார்.  யுதிஷ்டிரர் திரௌபதி தொடர கைகூப்பியபடி நடந்துசென்று அரசியர் பகுதியை அடைந்து அங்கே கைகூப்பி நின்ற குந்தியின் முன் குனிந்து கால்களைத் தொட்டு சென்னி சூடினார். அவள் “வெற்றியே சூழ்க!” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றாள். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக!” என்று சொல்லி அரிமலர் அள்ளி இருவர் மேலும் தூவி வாழ்த்தினாள்.

பொழுது எழுந்து அத்தனை உலோகப்பரப்புகளிலும் ஒளி விரிந்தது. இலைகள் பளபளக்கத் தொடங்கின. “மங்கலம் நிறைந்த நன்னாள்!” என்று சொல்லி நிமித்திகர் கைகூப்ப முரசொலிகள் முழங்கி அந்நிகழ்வு முடிந்ததை அறிவித்தன. அரசகுலத்தவர் செல்வதற்காக மக்கள் காத்திருந்தனர். வாழ்த்தொலிகள் நடுவே சுபத்திரையின் கைகளைப்பற்றியபடி குந்தி நடந்தாள். கால்தளர அவளால் பல்லக்குவரை செல்லமுடியவில்லை. “பேரரசி, தாங்கள் மெல்லவே செல்லலாம்” என்றாள் சுபத்திரை. மேலும் சற்று நடந்தபின் மூச்சுவாங்க அவள் நின்றாள். பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு முன்னால் சென்றாள்.  பல்லக்கில் ஏறியதும் கைகளில் முகம் புதைத்து சிலகணங்கள் குனிந்து அமர்ந்திருந்தாள்.  ”அத்தை” என்று அருகே அமர்ந்த சுபத்திரை அவள் தோளை தொட்டாள். அவள் அதை மெல்ல தட்டிவிட்டாள்.

[ 8 ]

தௌம்யரின் வழிகாட்டலில் தேவதத்தரின் தலைமையில் இந்திரப்பிரஸ்தத்தின் செண்டுவெளியில் பன்னிரண்டாயிரம் தூண்கள் நாட்டப்பட்டு அவற்றின்மேல் மென்மரப்பட்டைகளால் கூரை வேயப்பட்ட வேள்விக்கூடம் அமைந்தது. நடுவே ஆறு எரிகுளங்கள் கட்டப்பட்டன. சுற்றிலும் ஹோதாக்கள் அமரும் மண்பீடங்களும் அவிப்பொருட்கள் குவிக்கும் களங்களும் நெய்க்கலங்கள் கொண்டுவரப்படும் வழியும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. வலப்பக்கம் வேள்விக்காவலனாகிய இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரும் அவர் அரசி திரௌபதியும் அமரும் மேடை எழுந்தது. அவருக்கு முன்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அமர இடம் ஒருக்கப்பட்டது வைதிகரும் படிவரும் உள்ளே வரவும் அமர்ந்து வேதம் ஓதவும் தனி வழியும் இடமும் சித்தமாக்கப்பட்டன.

பல்லாயிரம் பணியாட்கள் இரவு பகலென உழைத்து அவ்வேள்விக்கூடத்தை அமைத்தனர். ஒவ்வொரு நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் மக்கள் வந்து அவ்வேள்விக்கூடம் அமைவதை நோக்கி சென்றனர்.  அதன் ஒவ்வொரு காலிலும் ஒவ்வொரு தேவர் காவலிருப்பதாக சூதர்கள் பாடினர். அவ்வெரிகுளங்களை காவல் காக்கும் திசைத்தேவர்கள் வருகை குறித்து சூதனொருவன் பாடிய நீள்பாடலை அங்காடி முற்றத்தில் கூடிய நகர்மக்கள் உவகையுடன் நின்று கேட்டனர். “திசைகள் காவலின்றி கிடக்கின்றன. ஏனென்றால் இந்திரப்பிரஸ்தம் இருக்கும்வரை தெய்வங்களும் ஆணைமீற எண்ணாது” என்று அவன் பாடியபோது அவர்கள் உரத்த குரலெடுத்து சிரித்தனர். வேள்விக்கூடம் அமைந்த முதல்நாளில் மாலையில் பெய்த இளமழையை “வானத்தின் வெண்சாமரம்” என்றுபாடிய சூதனுக்கு வேளிர் ஒருவர் தன் கணையாழியை உருவி அணிவித்தார்.

நகரெங்கும் அவ்வேள்வியைக் குறித்த கதைகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று கலந்து அனைவரையும் அணைத்துக்கொண்டு ஒற்றைப்படலமாக மாறின. அது ஒவ்வொருவரையும் மீறி வளர்ந்த பின்னர் அதைக் குறித்த எள்ளல்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். அவ்வெள்ளல்கள் வழியாக அதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியை ஈட்டிக்கொண்டனர். வேள்விக்கூடத்தை பகடியாடும் கதைகளைப்பாடிய சூதர்களுக்கு முன் மேலும் மக்கள் கூடி நின்று நகைத்தனர். அவிக்கலத்தில் நெய்பெறும்பொருட்டு இந்திரன் தன் துணைவியர் அனைவரையும் கூட்டி வந்த கதையைப் பாடிய இந்திரமத்தவிலாசம் என்னும் நகைநாடகத்தை தெருவிலேயே எட்டு பாடினியரும் அவர்களின் துணைவர்களாகிய நான்கு சூதர்களும் நடித்தனர். முன்பு பாற்கடல் கடைந்தபோது அமுதத்தைக் கொண்டு ஒளித்து வைத்து உண்ட இந்திரன் இம்முறை தருமன் அளவின்றி பெய்யும் நெய்யை வைக்க இடமில்லாது முகில் கூட்டங்களிடையே தவிப்பதை சூதனொருவன் நடித்துக்காட்ட அவர்கள் அவன்மேல் மலர்களையும் ஆடைகளையும் வீசி எறிந்து கூவி சிரித்தனர்.

வேள்விக்கூடம் எழுந்த ஏழுநாட்களும் குந்தி அரசமாளிகையின் உப்பரிகையில் நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தாள். இரவிலும் அவள் அங்கேயே நின்று நோக்கிக்கொண்டிருப்பதை சுபத்திரை பலமுறை வந்து பார்த்தாள். ஆனால் அவள் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லவில்லை. அங்கிலாதவள் போல் ஆகியிருந்தாள். ஒருநாள் விடியலில் கொற்றவை ஆலயத்தில் தொழுது திரும்புகையில் அவள் “வேள்விக்கூடத்திற்கு செல்க!” என்றாள்.

வேள்விக்கூடத்தில் அந்த இருள்காலையிலும் சிற்பிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவளைக் கண்டதும் அவர்கள் உளிகளுடனும் கோல்களுடனும்  எழுந்து நின்று தலைவணங்கினர். அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த  தலைமைச்சிற்பி தேவதத்தர் எழுந்து ஓடி அணுகி கைகூப்பி நின்றார். குந்தி எவரையும் நோக்கவில்லை. கைகளைக் கூப்பியபடி வேள்விச்சாலையில் சுற்றிவந்தாள். ஒரு சொல்லும் உரைக்காது மீண்டும் வந்து பல்லக்கில் ஏறியபோது அவள் கைகளைப் பற்றி மேலேற உதவிய சுபத்திரை அவள் காய்ச்சல்கண்டவள் போல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

முந்தைய கட்டுரைதினமலர் கட்டுரை – கடிதம்
அடுத்த கட்டுரைஅறம் – கதையும் புராணமும்