ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

2

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும். பல்வேறு குலங்களின் தலையாக அமைந்தவன், குலங்களைத் தொகுத்தவன் என்று பொருள். குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்குவதாகவே இருந்தது இந்திய மன்னராட்சி முறை. அதனுடன் முரண்படும்போதே போர்கள் நிகழ்ந்தன.அதற்கு திருமண உறவு ஒரு முக்கியமான வழிமுறை. சங்ககாலப்பாடல்களில் பெருமன்னர்கள் சிறிய மன்னர்களின் வாசலில் பெண்கேட்டு வந்து நிற்கும் காட்சியை மீளமீளக் காண்கிறோம். புறத்துறை ஒன்றே உள்ளது, மகற்கொடை மறுத்தல்

ஐதீகங்கள் மூலமும், குலஆசாரங்கள்மூலமும், அதிகாரம் பங்குவைக்கப்பட்டும் பெரும் முடிமன்னர்களுக்கான பொதுஒப்புதல் உருவாக்கப்பட்டது. அது ஒருவகையான பழையபாணி ஜனநாயகம் எனலாம். மன்னர் முற்றதிகாரம் கொண்டவர்தான், ஆனால் தன் நாட்டினுள் உள்ள சிறுஆட்சியாளர்களின் கூட்டு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவரும் கூட.

‘பொன்னியின் செல்வனை’ மட்டுமே வாசித்துப்பாருங்கள். சோழர்களின் ஆட்சி என்பது சம்புவரையர்கள், பழுவேட்டரையர்கள், மலையமான்கள் என பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சி என்பதை அறிவீர்கள். ராஜராஜன் அவர்கள் அனைவரையும் திறம்பட இணைத்து உறுதியான அரசை உருவாக்கினான். அதற்கு திருமண உறவுகளைப் பயன்படுத்தினான். அவ்வாட்சி கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்தது. அத்தனைகாலம் தமிழ் மண்ணில் உள்நாட்டு அமைதி நீடித்தது. தமிழ் வரலாற்றில் அது ஒருசாதனை. அதற்காகவே அவன் இன்றும் மாமன்னன் என கொண்டாடப்படுகிறான்.

உள்நாட்டு அமைதியை உருவாக்கிய சோழர்கள் சீரான வரிவசூல் முறைமையையும் உருவாக்கினார்கள். ஒரு மையஅரசு வந்ததுமே அதைத்தான் செய்யும். ஏனென்றால் அரசு என்பதே மக்களின் உற்பத்தியில் உள்ள உபரியை வசூல் செய்து மையநிதியை உருவாக்கிக்கொள்வதுதான். வரிவசூலுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் சோழநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றில் அந்த பகுதி மக்களாலேயே தேர்வு செய்யப்படும் நிர்வாக அமைப்புகள் செயல்பட்டன.

சோழர்களின் காலகட்டத்தின் முக்கியமான சாதனையே இந்த வட்டார நிர்வாக அமைப்புகள்தான். இவற்றைக்கொண்டு வட்டார அளவில் நீதி வழங்கப்பட்டது. அந்தந்த பகுதியின் பொதுநிதி மக்களுக்காகச் செலவிடப்பட்டது. ஆனால் சோழர் காலகட்டத்தின் உச்சகட்ட சாதனை என்றால் நீர்ப்பாசனத்துக்காக உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு சபைகள் போன்ற கிராமசபை அமைப்புகள்தான். நீரை சீராக பங்கிடவும் நீர்நிலைகளை உருவாக்கவும் அந்த சபைகள் பெரிதும் பயன்பட்டன

இவை எந்த அளவுக்கு வெற்றிகள் என்பதற்கு ஆதாரம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுக்காலம் கழித்து இன்றும்கூட இந்த அமைப்புகள் [நாட்டார் சபைகள்] தமிழகத்தின் பல பகுதிகளில் நீதி நிர்வாகத்துக்கும் நீர்மேலாண்மைக்குமாகச் செயல்பட்டு வருகின்றன என்பதுதான். குமரிமாவட்டத்தில் இன்றும்கூட சோழர்காலத்து ஏரிநீர் நிர்வாக அமைப்புகள் ஓரளவு செயல்பட்டுவருகின்றன. ஆயிரம் வருடக்காலம் இவை சீரான விவசாயத்தை இங்கே நிலைநாட்டின.

இவ்விஷயங்கள் அன்றைய சூழலை வைத்துப்பார்த்தால் சாதாரண சாதனைகள் அல்ல. இந்த அளவுக்கு சிக்கலற்ற ,சீரான, மக்கள்நலம்நாடும் நிர்வாக அமைப்புகள் பத்தாம் நூற்றாண்டில் உலகின் எந்தெந்த பகுதிகளில் இருந்தன என்று பார்த்தால் நம்மால் அதிகம் கண்டுபிடிக்கமுடியாது. அன்றைய ஐரோப்பா இன்றும்கூட ஐரோப்பிய மனசாட்சியை வேட்டையாடிக்கொண்டிருக்கும் மாபெரும் மத அடக்குமுறைகள், நிலப்பிரபுத்துவ கொடுமைகள் அரங்கேறிய மத்தியகாலகட்டம் வழியாக சென்றுகொண்டிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்த மத்தியகாலகட்டம் அவர்களால் கோதிக் காலகட்டம் என்று இன்றும் இலக்கியங்களில் பீதியுடன் பதிவுசெய்யப்படுகிறது.

அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி.கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார்கள். இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.

படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, தங்களுக்கு கீழே அமையாத மக்கள் வாழும் நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி. நிலம் வழங்குவது என்பது நிலத்திலிருந்துவரும் வரிவசூலை வழங்குவதுதான். அன்று எவருக்கும் நிலத்தின்மேல் முற்றுரிமை என்பது இல்லை.

கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலைஞானமாகவும் அன்றாடவாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.

பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள்கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.

சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.

இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக்கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல.

கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை,[சமரசம் தூது] அவர்களுக்கு நிகராகவே பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். அம்மதங்களுக்கு பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அகிம்சைமதங்கள் பேரரசுகளை உருவாக்க போதுமான அளவுக்கு உதவாதவை என கண்டடையப்பட்டன. அம்மதங்களால் பல்வேறுநாட்டார் வழிபாட்டுமுறைகளை உள்ளிழுக்க முடியவில்லை என்பதும் கண்டடையப்பட்டது. ஆகவே அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள். அவர்கள் அத்தனை இனக்குழுக்களையும் உள்ளிழுத்து சமூகத்தை தொகுத்து பேரரசுகளுக்கு அளித்தனர். அதற்கு புராணமரபும் வழிபாட்டுமரபும் உதவியது.

அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணர்களின் சேவையும் இன்றும்கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே முழுமையாக நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதில் பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மதநம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.

இது சுரண்டலா என்றால் மார்க்ஸிய நோக்கில் ஆம், சுரண்டலேதான். சுரண்டலே உபரியை உருவாக்கி மையத்தில் தொகுக்கிறது. அதுவே பெரியஅரசுகளை உருவாக்குகிறது. பேரரசுகளே மாபெரும் மக்கள்நலத்திட்டங்களை உருவாக்கமுடியும். அவையே உணவுற்பத்தியை பெருக்கமுடியும். வணிகப்பாதைகளை பேணி வணிகத்தை பெருக்கமுடியும். படையெடுப்புகளை தடுத்தும் உள்நாட்டுப்போர்களை நிறுத்தியும் போரும் கொள்ளையும் இல்லாத சமூகத்தை அமைக்க முடியும். இந்த முரண்பாட்டை புரிந்துகொண்டால்தான் அதன் பெயர் மார்க்ஸிய நோக்கு.

நாம் இன்று பெருமைகொள்ளும் அனைத்தும் இச்சுரண்டலின் விளைவுகளே. கோயில்கள் மட்டும் அல்ல. ஏரிகள், சாலைகள், சந்தைகள், விளைநிலங்கள், நகரங்கள் அனைத்தும். சுரண்டல் இல்லாமல் பண்பாடே இல்லை. அச்சுரண்டல் அடியில் மேலும் அடியில் என மக்களை அமைத்துக்கொண்டே செல்லும். மிக அடியில் அடிமைகள் இருப்பார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் தவிர்க்கமுடியாத பலியாடுகள் அவர்கள். உண்மை, அவர்களின் குருதிதான் இவையனைத்தும்

ஏன் இன்றுமட்டும் நீங்கள் குருதியற்ற தூய சமூகத்திலா அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் இருக்கும் கான்கிரீட் வீடு, அமர்ந்திருக்கும் மேஜை, இதை வாசிக்கும் கணிப்பொறி அனைத்தும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் அடித்தட்டில் உள்ள கூலியடிமைகளின் குருதிதான். ராஜராஜசோழன் சுரண்டல்வாதி என்றால் நீங்களும் நீங்கள் முன்வைக்கும் அத்தனை தலைவர்களும் அப்படித்தான். இதுவும் சுரண்டல் அமைப்புதான்.

ஆம், பிராமணர்களும் கோயில்களும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் அந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாகவேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று. இதே காலகட்டத்தில் உலகின் மற்றபகுதிகளில் ஈவிரக்கமற்ற இனஅழித்தொழிப்பு மூலம் ஆதிக்கம் உருவானது என்பதை இதனுடன் நாம் ஒப்பிடவேண்டும். அங்கே இனக்குழுகக்ள் கொன்றே ஒழிக்கப்பட்டிருக்கின்றன. சுவடின்றி ஆக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய மன்னர்கள் பிராமணர்களையும் பௌத்த சமணத்துறவிகளையும் பயன்படுத்தி நிகழ்த்திய ஆதிக்கம் என்பது ஒப்புநோக்க சாத்வீகமானது. அழிவு அற்றது. வென்று இணைக்கப்பட்ட மக்களின் பண்பாடுகள் கூட அழிக்கப்படவில்லை, அவை மைய பண்பாட்டுச்சரடு ஒன்றால் தொகுக்கப்பட்டன. உள்ளிழுக்கப்பட்டன. அது தேவையில்லை என்றால் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் அடுத்த வழி பரிபூரண அழித்தொழிப்பும் குரூரமான வன்முறையும்தான். இந்த வழியை வன்முறை என்பவர்கள் இதைவிடப் பலமடங்கு வன்முறைமூலம் உருவான ஒருங்கிணைதல்களை நியாயப்படுத்தும் தரப்புகளின் குரலாக ஒலிக்கும் அபத்தத்தையும் நாம் காணலாம்.

உலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் எங்கும் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும். மேலும் ஐநூறாண்டுகள் அது அவ்வண்ணமே நீடித்தது என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்.

சோழர்காலகட்டத்தில் பிராமண ஆதிக்கம் உருவானது பற்றி மேடைகளில் பேசுவோர் அக்காலத்தில்தான் இன்றும் நீடிக்கும் வேளாள ஆதிக்கம் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்றும் அதே ஆய்வாளர்கள் சொல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டுவரும்தோறும் நிலநிர்வாகம்செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்று பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். ஒருகட்டத்தில் தமிழக வேளாண் நிலம் முழுக்கவே வேளாளர் மற்றும் அவர்களின் மத அமைப்பான சைவ மடங்களின் கைகளுக்குச் சென்று அப்படியே பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை நீடித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் வேளாளர் வகித்த அதிகாரத்தின் துளியைக்கூட பிராமணர்கள் ருசிக்க நேர்ந்ததில்லை என்பதே உண்மை.

பிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் அதுவரை அதிகாரத்தைச் சுவைத்த வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.

சோழர் காலகட்டத்தில் வரிவசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் நிலையான அரசும் வரிவசூலுக்கான அமைப்புவசதியும் இருந்ததுதான். கொஞ்சம் கொஞ்சமாக வரிவசூல் தமிழ்வரலாற்றிலேயே அதிகமான அளவுக்கு சென்றது. சிலசமயம் தாளமுடியாத அளவு வரிவசூல் சென்றது, அதை எதிர்த்து கலகங்கள் மூண்டன

ஆனால் அதை நாம் அன்றைய சூழலை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இருநூறாண்டுக்காலம் தமிழகநிலத்தில் உள்சண்டைகள் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.. தமிழகத்திற்கு வெளியே பேரரசுகள் எதிர்த்து எழுந்துகொண்டிருந்தன. அதற்காக நாடெங்கும் பிரம்மாண்டமான நிலைபப்டை ஒன்றை சோழர்கள் பேணவேண்டியிருந்தது. அதற்கான விலைதான் அந்த வரிகள். சோழர் அரசு வீழ்ச்சி அடைந்தபின் அந்த மக்கள் அந்த வரிவசூலை விட பலபல மடங்கு செல்வத்தை உதிரி அரசர்கள் மற்றும் ஆக்ரமிப்பாளர்களின்  கொள்ளைக்குக் கொடுக்கவேண்டியிருந்தது என்பதுதான் வரலாறு. சோழர் அரசின் வீழ்சிக்குப்பின் தமிழகம் மீண்டும் தலையெடுக்க இருநூறாண்டுக்காலம் ஆகியது.

இந்த வரிவசூல் நேரடியாகவே கட்டுமானத்திட்டங்களாகவே மாறியது. நிலைப்படை என்பது போரில்லாக் காலங்களில் ஏரிகள் வெட்டவும் கால்வாய்கள் வெட்டவும் பயன்படுத்தப்பட்டது. தமிழக சரித்திரத்திலேயே மிகப்பிரம்மாண்டமான மக்கள்நலத்திட்டங்கள் இருகாலகட்டங்களில்தான் செய்யப்பட்டன. ஒன்று சோழர் காலம். இன்னொன்று நாயக்கர் காலம். இன்று நம் நலம்நாடும் ஜனநாயக அரசுகள்கூட அதற்கிணையான மக்கள்நலத்திட்டங்களை செய்யவில்லை .தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் இவ்விரு காலகட்டங்களில் வெட்டப்பட்டவை. காவேரியின் கிளைகள்கூட அவர்களால் கட்டியமைக்கப்பட்டவை. தமிழகத்தின் பாசன நிலங்களில் பெரும்பகுதி விரிவான வாய்க்கால் அமைப்புகள் மூலம் சோழர்காலகட்டத்தில்தான் விவசாயத்துக்கு வந்தது. ஆயிரம் வருடங்களாக தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல்வயல்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மைய அரசு உருவாகி அதன்மூலம் திரட்டப்பட்ட பெருமூலதனமே அதை சாத்தியமாக்கியது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. சென்ற ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!

குமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள்தான். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.

சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா? ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஜார்ஜ் எல் ஹார்ட் அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.

ஒருநாடுகூட விதிவிலக்கு கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அன்றைய மக்களிடம் அதைப்பற்றிய அறவுணர்ச்சி இல்லை. நமக்கு இன்று மாடுகளை கட்டி வண்டியோட்டுவது பிழை என தோன்றவில்லை அல்லவா? நாளை நம் சந்ததிகள் அதற்காக நம்மை தூற்றுவார்கள். இன்றே உலகின் பல நாடுகளில் விலங்குகளை அடிமையாக வைத்து உழைப்பை சுரண்டுவது தடைசெய்யப்பட்டுள்லது. தத்துவமேதையான பிளேட்டோ கூட அடிமைமுறையை ஆதரிப்பதைக் காணலாம். உலக அளவில் பார்த்தால் இயந்திரங்கள் வந்துதான் அடிமையுழைப்பை மெல்லமெல்ல இல்லாமலாக்கின.

அதில்கூட சோழர்களின் காலகட்டம் அவர்கள் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் இருந்ததை விட மேலான நிலையில் இருந்தது என்பதைக் காணலாம். ஐரோப்பாவில் எல்லா உழைப்பாளிகளும் ஏதோ ஒருவகையில் நிலப்பிரபுக்களின் அடிமைகளாக இருந்த காலம் அது. ஆனால் சோழர்காலத்தில் விவசாயத்தொழிலாளர் மட்டுமே அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிலை கொடுமையானது, ஆனால் கம்மியர், தச்சர் போன்ற பிற உழைப்பாளிகள் சுதந்திரமானவர்களாகவே இருந்தார்கள்.

சரி அனைவருக்கும் சமானமான உரிமையும் உடைமையும் நீதியும் வழங்கப்படும் அமைப்பை ராஜராஜன் உருவாக்கியிருக்க முடியுமா? இங்கு மார்க்ஸியம் வந்து நூறாண்டு தாண்டியும் இப்படிப் பேசவேண்டியிருப்பதே கேவலம். அது நிலப்பிரபுத்துவ காலகட்டம். உலகம் முழுக்க அப்படித்தான். அது மேல் மேலே ஆதிக்க அடுக்குகளை உருவாக்குவதன் மூலமே இயங்கியது. சமத்துவம் என்பது ஒரு நவீனக்கருத்து அப்படி ஒரு சமூகம் இன்றும் கூட எங்கும் இல்லை. அது ஒரு கனவு மட்டுமே

நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் எங்குமுள்ள சுரண்டலும் அடக்குமுறையும் ராஜராஜன் காலத்தில் இருந்தது. ஆனால் உலகமெங்கும் இருந்த அழித்தொழிப்பு அவன் ஆட்சியில் இருக்கவில்லை.

கல்வி எப்படி இருந்தது? அன்று உலகில் எங்கும் சீரான பொதுக்கல்வி இருக்கவில்லை. தேவைக்கேற்பவே கல்வி இருந்தது. ஐரோப்பாவில் பிரபுக்களல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இங்கே கம்மியர், சிற்பிகள் தச்சர்கள் ஆகியோர் தொழில்குழுக்களாக இயங்கினர். அவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே கல்வி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் தமிழும் சிற்பஞானமும் கற்பிக்கப்பட்டது. சோழர்காலத்திலேயே இந்தியாவின் முக்கியமான சிற்பநூல்கள் உருவாயின. சோழர்காலக் கதைகளை வைத்துப் பார்த்தால் பொதுவாக வணிகர்களும், வேளாண்குடிமக்களும் கைவினைஞர்களும் கல்விகற்றதாகவே தெரிகிறது. அவர்கள் கவிஞர்களையும் கலைஞர்களையும் பேணியிருக்கிறார்கள். கவிதைகளை ரசித்திருக்கிறார்கள்.பெரும்பிரப்புகளாக வேளிர்கள் இருந்திருக்கிறார்கள்,சடையப்பரைப்போல.

சோழர்காலகட்டத்தின் தேவரடியார் சமூகம் பற்றி இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. இதுவும் உண்மைநிலை உணராத பேச்சே. ராஜராஜசோழன் வடக்கே வெங்கி, கலிங்கநாடுகளில் இருந்து தேவரடியார்களைக் கொண்டுவந்து குடியேற்றினான். அன்றைய கோயில் அமைப்பின் ஒரு பகுதி அவர்கள். அன்றைய ஆதிக்கக் கருத்தியலை நிலைநாட்டும் கலைகளை அவர்கள் பேணினர்

அன்று ஊர்கள் விரிந்துஆலயங்கள் பெருகியபடியே சென்றமையால் மேலும் மேலும் தேவரடியார் தேவைப்பட்டார்கள். அதற்காகவே பொட்டுகட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் உருவகிக்கும் சமூகக்கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழை. பொட்டுகட்டுதல் ஓரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. ஆகவேதான் அது நீடித்தது. வெறும் ஏமாற்று மூலமோ வன்முறை மூலமோ அந்த முறை தக்கவைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமேதும் இல்லை. அது சாத்தியமும் இல்லை.

தேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும்தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை. தமிழகத்தின் மாமன்னர்கள் தேவரடியார் பெண்களை மணந்து பட்டத்தரசிகளாக ஆக்கியிருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டத்தரசி தேவரடியார்தான். திருவிதாங்கூரின் மன்னர் ராஜா ராமவர்மாவின் பட்டத்தரசி அபிராமி தேவரடியார்தான்.

பின்னாளில் போர்கள் மற்றும் பஞ்சங்கள் வழியாக மெல்லமெல்ல தேவரடியார் நிலை தாழ்ந்தனர். அவர்கள் ஒரு சமூகத்தின் உபரியில் வாழ்பவர்கள். உற்பத்தியுடன் தொடர்பற்றவர்கள். ஆகவே பொருளியல் வீழ்ச்சியால் அவர்களை புரக்கும் அமைப்புகள் சரிந்தபோது அவர்களும் தாசிகளாக ஆனார்கள். சோழப்பேரரசின் காலகட்டத்தில் அன்றைய பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக சிறப்புடன் அவர்கள் விளங்கினார்கள்.

ஆனால் சோழர்காலத்தில் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் நிலை தாழ்வாகவே இருந்தது. நில உடைமை முழுக்க முழுக்க ஆண்களின் கைக்குச் சென்றமையால் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களுக்கு கல்வி இல்லை. ஒப்புநோக்க நல்ல கல்வி தேவரடியார்களுக்கு மட்டுமே கிடைத்தது.

சோழப்பேரரசின் வீழ்ச்சிக்காலகட்டத்தில் பல சிக்கல்கள் உருவாயின. அவற்றை கெ.கெ.பிள்ளை விரிவாக எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க பேரரசுகளுக்கு உள்ள சிக்கல் ஒன்றுதான். அது விரிந்து விரிந்து சென்று ஒரு கட்டத்தில் அந்த விரிவாலேயே அழிய ஆரம்பிக்கும். சோழப்பேரரசு ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியாமல் ஆனது. அதற்கான ராணுவ நடவடிக்கைகளே அதன் நிதியாதாரத்தை அழித்தன.

ராணுவம் பெருகப்பெருக வரிவசூல் கொடுமையானதாக மாறியது. பெரும் கோயில்களை நிர்வாகம்செய்ய உருவாக்கப்பட்ட அமைப்புகள் மையக்கண்காணிப்பை இழந்து ஊழல்மிக்கவையாக ஆயின. பல ராணுவ தளபதிகள் தன்னிச்சையாக வரிவசூல் செய்தார்கள். குறுநில மன்னர்கள் எதிர்கால கலகங்களுக்காக நிதி சேர்க்க ஆரம்பித்தனர். ஆகவே மக்கள் பொறுமை இழந்து கலகம் செய்தனர்.

சோழர்காலத்தில் ஏதோ ஒருகட்டத்தில் நிர்வாக வசதிக்காக சாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டன. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க சோழர்கள் மாபெரும் தேர்விழாக்களை ஏற்பாடு செய்தனர். தேர்வடத்தில் வலது வடத்தை பிடிப்பவர்கள் இடது வடத்தை பிடிப்பவர்கள் என ஒரு பிரிவினை உருவாக்கப்பட்டு அதுவே மெல்லமெல்ல பெரிய பேதமாக ஆகியது. உண்மையில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக தெரியவில்லை. ஒரேசாதியில் கூட வலங்கை இடங்கைப் பிரிவினை இருந்தது.

ஏதோ ஒரு கட்டத்தில் வரிவசூல்சாதிகள் வரிகொடுக்கும் சாதிகள் நடுவே பூசல்கள் வெடித்து அது வலங்கை இடங்கை போராக ஆகியிருக்கலாம். இரண்டாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே பூசல்கள் மூலம் சோழ நிர்வாகமே ஸ்தம்பித்தது. அச்சிக்கல்களை தீர்க்கவே முடியவில்லை. சோழர்காலத்தில் ஆரம்பித்த வலங்கை இடங்கை போர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை நீடித்தது. சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலெயே அந்தப்போர் நடந்தது. தொடர்ந்து அரியணையில் திறனற்ற மன்னர்கள் வந்தார்கள். சோழ அரசு மெல்ல சரிந்து மறைந்தது. அது அழிந்தபின்னர்தான் அது இருந்தபோது அது மக்களுக்கு அளித்தது என்ன என்பது தெரிந்தது. அதன்பின் நாம் காண்பது சூறையாடல்களின், அழிவின் காலகட்டங்களை.

ராஜராஜன் காலத்திலேயே பல பகுதிகளில் மக்கள் கடுமையான வரிவசூலுக்கு எதிராக முறையிட்டும் சிறு கலவரங்களில் ஈடுபட்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ராஜராஜனுக்கு கனவுகள் இருந்தன. வரண்ட வடதமிழகப்பகுதிகளுக்கு காவேரி நீரைக் கொண்டுசென்று ஏரிகளை அமைத்து வேளாண்நிலங்களை உருவாக்க முனைந்திருந்தான். சந்தைகளும், சாலைகளும், சாலையோரம் கோயில்களும், கோயில்களை சுற்றி ஊர்களும், நகரங்களும் உருவாக்க்கிக் கொண்டிருந்தன. நாம் இன்றும் பயன்படுத்தும் பல சாலைகள் அப்போது உருவானவை. தமிழ்மன்னர்களில் நிலைப்படை [நிரந்தர ராணுவம்] வைத்துக்கொண்ட மன்னன் ராஜராஜனே. அதன் முன்பு மன்னர்கள் போர்த்தேவைக்கே ராணுவத்தை திரட்டினர்.

ராஜராஜன் கடற்படையை நிறுவி தொலைதூர தீவுகளான சாவகம் கடாரத்தை வெல்வதில் கவனம்செலுத்தியதும் வரிச்சுமையை அதிகரித்தது. ஆனால் அது தேவையாக இருந்தது. அந்த படையெடுப்புகள் நாடுபிடிப்பதற்கானவையாக தெரியவில்லை. சோழநாடு உற்பத்தியை அதிகரித்தபோது வணிகம் இன்றியமையாததாக ஆகியது. வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் வணிகவழிகள் மேல் கட்டுப்பாடு தேவை. ராஜராஜன் வெங்கி கலிங்கம் வரை படைகொண்டு சென்றது வணிகவழிகளுக்காகவே. கடாரம் சாவகம் போன்ற இடங்களின் வழியாக சோழநாட்டுடன் வணிகம்செய்த சீனவணிகர்களை கட்டுக்குள் கொணரவே அப்படையெடுப்பு நிகழ்ந்திருக்கலாம். அடுத்த இருநூறு வருடம் சோழநாட்டை சிக்கலில்லாமல் அயல்வணிகத்தில் ஈடுபடச்செய்தவை அந்த படையெடுப்புகளே

ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, ஜெங்கிஸ்கானைப்போல், நெப்போலியனைப்போல, தைமூரைப்போல, அஹமதுஷா அப்தாலியைப்போல், அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.

அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசஅரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது.  ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள்.

ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி இங்குள்ள இடதுசாரிகளுக்கு எந்தப் புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை

அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே

ஆனால் அதையும் வரலாற்றில் வைத்தே செய்யவேண்டும். ராஜராஜன் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் நிலஅடிமைமுறை உறுதியாக வேரோடி பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்தது. அவரது காலகட்டத்தில்தான் பெண்ணை குடும்பத்தின் அடிமையாக ஆக்கும் நில உரிமைச்சட்டங்கள் உருவாகி வந்தன. அந்தக் காலகட்டத்தில் நீதி குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும். வலியோரை எளியோர் பணிந்து நடந்திருப்பார்கள். மனித உரிமைகள் இருந்திருக்காது.வன்முறைமூலம் வரிவசூல் செய்யப்பட்டிருக்கும். அவையெல்லாம் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். அந்த காலகட்டத்தை உடைந்த்து தாண்டித்தான் நாம் நவீன காலகட்டத்துக்குள் புக முடிந்தது

அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல.

ஜெ

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Oct 19, 2010

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62