நேற்று [17-4-2016] கொடிக்கால் அப்துல்லா அவர்களைப்பற்றி படைப்பாளிகள் எழுதிய நினைவுகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுதியாகிய ‘படைப்பாளிகளின் பார்வையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா’ என்னும் நூலின் வெளியீட்டுவிழா நாகர்கோயில் கஸ்தூர்பா மாதர்சங்கத்தில் நடைபெற்றது. ஆறுமணிக்கு நான் செல்லும்போதே நல்ல கூட்டம். கணிசமானவர்கள் கொடிக்காலின் நண்பர்கள், அவரிடம் பலவகையில் கடன்பட்டவர்கள்.
ஆனால் நாகர்கோயிலில் அடித்தளமக்களுக்கான பல தொழிற்சங்கங்களை நிறுவியவர் என்றவகையில் அந்தக்கூட்டம் மிகமிகக் குறைவானது. அவர்கள் அவரை அறியவே மாட்டார்கள். ஏனென்றால் அவர் இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் இல்லை. அதேபோல அவரது இஸ்லாமிய நண்பர்களில் கணிசமானவர்கள் இல்லை, ஏனென்றால் இது மதம்சார்ந்த கூட்டம் அல்ல. இது அவரது ஆளுமைக்காக மட்டுமே வந்திருந்த கூட்டம். அவ்வகையில் சரிதான்.
கொடிக்கால் குறித்த இந்நூல் ஒரு நல்ல ஆவணம். அதில் சுந்தர ராமசாமி அவருக்கே உரியமுறையில் கொடிக்காலின் இயல்புகளை தொகுத்துச் சொல்கிறார். அவரது நேர்மை, தன் சொந்தவாழ்க்கையில் அவர்கடைப்பிடித்த அர்ப்பணிப்பு, வாழ்க்கையின் கேள்விகளுக்காக அரசியலை ஒரு சாதனமாகக் கண்ட அவரது பயணம் ஆகியவற்றின் சுருக்கமான சித்திரம் அது. தன் உள்ளார்ந்த தேடல் காரணமாகவே கொடிக்கால் எந்த அமைப்பிலிருந்தாலும் அவ்வமைப்பில் தீவிரமாக இருக்கும்போதே சற்று விலக்கமும் கொண்டிருந்தார் என்கிறார் சுந்தர ராமசாமி.
கம்யூனிஸ்டுக் கட்சியில் இருக்கையில் கொடிக்கால் புதுமைத்தாய் என்னும் சிற்றிதழை நடத்தினார். ஒருகட்டத்தில் செல்வாக்கு மிக்க இதழாக இருந்த அதைப்பற்றி அ.கா.பெருமாள் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அன்றைய குமரிமாவட்டத்தின் முக்கியமான ஆளுமைகள் எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது தீவிரமான இலக்கியங்களைவெளியிடத் தொடங்கியபோது அதற்கு உதவிஆசிரியராக ஓர் இளைஞர் வந்தார்.ராமச்சந்திரன் என்னும் அவ்விளைஞர் அதில் நிறைய எழுதியிருக்கிறார். அவரே பின்னாளில் வண்ணநிலவன் என்று அறியப்பட்டார்.
1972ல் விவேகானந்தா கேந்திரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் காந்தி மேல் கடுமையான விமர்சனங்களை கொடிக்கால் முன்வைத்திருக்கிறார். அதை ஒட்டியே அவர் இஸ்லாமிற்குச் செல்லும் முடிவை எடுத்தார். புறப்படுவோம் இஸ்லாமை நோக்கி என்னும் அவரது நூல் பல்லாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.அதைத்தொடர்ந்தே அவர் தன் சாதியினர் பலருடன் இஸ்லாம் மதத்திற்குச் சென்றார்.
கொடிக்கால் இஸ்லாமை அடித்தள மக்களிடம் கொண்டுசெல்ல போராடியிருக்கிறார். ஆனால் வாழ்க்கையின் இந்த எல்லையில் காந்தி குறித்த அவரது எண்ணங்கள் தலைகீழாக மாறிவிட்டிருக்கின்றன. அதற்கு என்னுடைய இன்றைய காந்தி என்ற நூலும் ஒருகாரணம் என்று கொடிக்கால் பலமுறை சொல்லியிருக்கிறார்.
“காந்தியை மார்க்ஸியர் காட்டிய வழியிலேயே புரிந்துகொண்டதனால் ஏற்பட்ட பிழை அது. காந்தியை சரியான கோணத்தில் இங்கே எவரும் காட்டவில்லை. மார்க்ஸியர்களை விட்டால் பழமைவாதிகளே அவர்களைப்பற்றிப் பேசினர்” என்று கொடிக்கால் சொன்னார். அதை நூலில் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். இன்றையநிலையில் முஸ்லீம்களுக்கும் தலித்துக்களுக்கும் காந்தி முக்கியமான வழிகாட்டி என கொடிக்கால் நினைக்கிறார்.
தொடர்ச்சியாக களத்திலிருந்த போராளி அவர். அறுபதுகளில் ஒரு பெண்ணை ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து காசநோய்க்காக நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அன்றைய கம்யூனிஸ்டுக்கட்சியின் மாவட்டப்பொறுப்பிலிருந்த கொடிக்கால் அந்த ஏழைப்பெண்ணை பொறுப்பேற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் மறுநாளே அவர் இறந்துவிட்டார். பிணத்தை தூக்க எவரும் முன்வராதநிலையில் கொடிக்காலும் இன்னொரு கம்யூனிஸ்டுத் தோழரும் தாங்களே சுமந்து சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றனர்
ஆனால் அத்தனை சுடுகாடுகளும் தனிப்பட்ட சாதிக்குரியவை. சாதி என்னவென்றறியாத சடலத்துக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். சரி ,ஆற்றின் கரைதானே உங்களுக்குச் சொந்தம், ஆற்றின் சரிவில் புதைக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஆற்றுக்கரையின் சரிவில் பக்கவாட்டில் துளைபோட்டு சடலத்தை அதில் செருகி வைத்தார்கள். மண்போட்டு மூடிவிட்டு நாய்நரி அதை எடுக்காமல் மாறிமாறி பார்த்துக்கொண்டார்கள். கொடிக்காலின் அந்த அனுபவத்தை பலர் அங்கே குறிப்பிட்டனர்.
என் ‘அறம்’ கதைகளில் வரும் நாயகர்களைப்பற்றி பொதுவாகவே அன்றாட லௌகீகம் காய்ச்சிகளுக்கு சந்தேகம் உண்டு. நாம் நம் சிறுமையால் அவர்களைப் பார்க்க மறுக்கிறோம். நம்மைச்சூழ்ந்து அவர்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். கொடிக்கால் அத்தகையவர்களில் ஒருவர்.
இளமையிலேயே ஏதிலியாக ஆன கொடிக்கால் அப்துல்லா அவர்கள் ஏழாம் வகுப்புவரை படித்தவர். அவர் கற்றுக்கொண்டதெல்லாமே சிறைகளில்தான். தமிழிலும் மலையாளத்திலும் மிகச்சிறந்த இலக்கியவாசகராக உருவாகிவந்தார். பல இதழ்களை நடத்தினார். இரு கல்விநிலையங்களை உருவாக்கினார்.
அவரது வாழ்க்கை தொடர்ச்சியான ஒரு போராட்டம். அது அவருக்கான போராட்டம் அல்ல, பிறருக்கானது. பல ஆண்டுக்காலம் அவரது இல்லத்தில் வருபவர்கள் கொண்டுவரும் , வந்தபின் வாங்கிப்போடும் உணவு மற்றும் மளிகைப்பொருட்களே சமையலுக்கிருந்தன என்று ஒரு குறிப்பை வாசித்தேன். தான் பிறருக்காக வாழ்ந்தமையால் முற்றிலும் பிறரை நம்பி தன்னை அமைத்துக்கொண்டவரும்கூட
நமக்கு அப்படி ஒரு காலம் இருந்தது. உயர்ந்த இலட்சியங்களால் ஆன காலகட்டம். அதைத்தான் நான் உரையில் குறிப்பிட்டேன். 1930இல் காந்தி ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தபோது பல்லாயிரம் இளைஞர்கள் ஹரிஜனசேவைக்காக சேரிகளுக்குக் கிளம்பிச்சென்றனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக சமூகத்தின் அடித்தளத்தை நோக்கி சமூகத்தின் உச்சி வளைந்தது அப்போதுதான். பாபு ராமானந்த தாஸ் என்பவர் காசியிலிருந்து கிளம்பி வந்து பத்மநாபபுரத்தில் இருந்த கொடிக்காலின் சிறிய இல்லத்தில் தங்கியிருந்து சேவைசெய்தார். அவர் அந்தணர். அசைவம் உண்ணமாட்டார். ஆனால் அவர்கள் சமைத்த எளிய கஞ்சியும் கிழங்கும் சாப்பிட்டு அவர்களுடன் வாழ்ந்தார்.
வைணவர் ஆகையால் நெற்றியில் பெரிய வடக்கத்தில் நாமம் அணிந்திருப்பார். ஆகவே ஊரில் அவர் கொண்டிச்சாமி [கொக்கிச்சாமி] என அழைக்கப்பட்டார். நாளும் தலித் மக்களின் இடங்களுக்குச் சென்று கைமணி ஒன்றை ஒலிக்கவைத்து காந்தியைப்பற்றியும் தேசத்தைப்பற்றியும் அடித்தள மக்களின் உரிமைகளைப்பற்றியும் பேசுவார். அந்தச்சேரியில் அவர் ஒரு இரவுப்பள்ளிக்கூடம் தொடங்கினார். முதல்முறையாக சேரிக்குக் கல்வி அவ்வாறுதான் வந்தது. கொடிக்காலின் அரசியல், அறிவு வாழ்க்கையின் தொடக்கமும் அதுவே. அவர் நினைவாகவே தன் மகனுக்குப் பாபு என்று பெயர் சூட்டினார்
ஆனால் கொண்டிச்சாமி குறித்து ஒருவரி குறிப்புகூட எங்குமில்லை. அப்படி பல்லாயிரம் மகத்தான சேவையாளர்கள் நம் நினைவில்கூட இல்லாது மறைந்தனர். அவர்களை அங்கே அனுப்பிய காந்தி தலித் விரோதி என முத்திரையடிக்கப்பட்டார். கொடிக்காலின் சொற்களில் கொண்டிச்சாமி வாழ்கிறார். நம் உதாசீனத்திற்கு அடியில் பேரறமும் பெருங்கருணையும் செய்வதென்ன என்று அறியாமல் திகைத்து நிற்கும் காலம் இது
கொடிக்கால் அக்காலகட்டத்தின் வாழும் அடையாளம். நம் உலகியல்புத்தியின் அற்பத்தனத்துக்கும் மறதிக்கும் எதிராக நகர்ந்து அவரை வணங்குவதற்காக முன்னெழுகிறோம். அது நமக்கு ஒரு சந்தர்ப்பம்.