மார்க்ஸ் கண்ட இந்தியா

அன்புள்ள ஜெமோ

நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன.

அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/?cat=11]


’இங்கிலாந்தின் குற்றங்கள் என்னவாக இருந்தாலும் வரலாற்றின் கையில் உணர்வற்ற கருவியாக (இந்துஸ்தானில்) ஒரு சமுதாயப் புரட்சியைக் கொண்டு வருகிறாள்.’

‘காட்டுமிராண்டித்தனம் கொண்ட இயற்கை வழிபாடு, அதன் சீரழிந்த தன்மை எப்படி வெளிப்படுகிறதென்றால், மனிதன் – இயற்கை அனைத்துக்கும் அரசனான அவன், ஹனுமான் என்கிற குரங்கின் முன்னரும் சபாலா என்கிற பசுவின் முன்னரும் மண்டியிடுவதில்.’

உண்மையிலேயே மார்க்ஸ் சொன்ன கருத்துதானா இது? இல்லாவிட்டால் திரிக்கிறாரா? இல்லை ஒரு பெரிய விவாதத்தின் ஒரு அம்சமாக இதை போகிற போக்கிலே சொன்னாரா?

சத்யநாராயணன், சென்னை

அன்புள்ள சத்யநாராயணன்,

மார்க்ஸின் அந்த மேற்கோள் சரியானதுதான். மிக விரிவாக இன்னமும் தீவிரமாக அவர் சொன்ன விஷயங்களை சரியாக பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வரிகள்தான் அவை.[போகிற போக்கைப்பார்த்தால் மார்க்ஸை மேற்கோள் காட்டினாலே இந்துத்துவா முத்திரை வந்துவிடும்போல படுகிறது!]

மார்க்ஸியம்போன்ற ஒரு தரிசனத்தை நாம் பல கூறுகளாகப் பிரித்து பார்க்கவேண்டும். அதன் மெய்யியல், தத்துவம், சமூகநோக்கு, அழகியல், அரசியல்திட்டம் ஆகியவற்றை அவ்வாறு பிரித்து ஆராய்வோமென்றால் அதன் மெய்யியல் என்பது ஒரு ஆயிரம் வருடம் பழைய செமிட்டிக் மதத்தின் அளவேயானது என்று சொல்ல முடியும். செமிட்டிக் மதங்களின் நான்கு அடிப்படைகள் மார்க்ஸியத்துக்கும் உண்டு.

1. மனிதமையப் பார்வை.
இயற்கை அனைத்துக்கும் அரசன் மனிதன் என்ற மார்க்ஸின் வரி அதையே சுட்டுகிறது. இயற்கையின் பரிணாமத்தின் உச்சம் மனிதனே என்றும் மனிதனை வந்தடையவே இயற்கையில் பரிணாமமே நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் மார்க்ஸியம் நம்புகிறது. அந்த பரிணாமத்தையும் மனித உழைப்பே நிகழ்த்தியது என்று அது வாதிடுகிறது.

இது கடவுள் தன் வடிவில் மனிதனைப்படைத்தான் என்ற செமிட்டிக் மதங்களின் வரியில் இருந்து வேறுபட்டது அல்ல. கீழைமதங்கள் பிரபஞ்ச மைய நோக்கு கொண்டவை. பிரபஞ்சம் என்ற பிரம்மாண முழுமையின் ஒரு துளியே மனிதன் என அவை நினைக்கின்றன

2. இருமைநோக்கு.
அனைத்தையும் கறுப்பு வெளுப்பு என முழுமையாக பிரித்துக்கொள்ளும் பார்வை என அதைச் சொல்லலாம். எல்லா ஆதி நம்பிக்கைகளும் இருமையையே முதலில் கண்டடையும். ஆனால் தத்துவசிந்தனையும் மெய்ஞானமும் அந்த இருமை என்பது தற்காலிகமானது, நம் அறிதல் மற்றும் இருப்பை மட்டுமே சார்ந்தது, மாயையானது என்று அறிந்து மேலே செல்லும். அந்தப் பயணத்தை இந்து,பௌத்த மதங்களில் காணலாம்.

3. ஒற்றை மையம்
நோக்கி செல்லும் நோக்கு. இந்நோக்குதான் ஒரே கடவுள், ஒரே தீர்க்கதரிசனம், ஒரே தீர்வு என்றெல்லாம் வளர்கிறது. ஐரோப்பிய பாகன் மதங்களிலும் கீழைமதங்களிலும் பன்மையை மையமாக்கும்போக்கை காணலாம்.

4. ஒட்டுமொத்தமான இறுதி உண்மை,
இறுதித் திருப்புமுனை பற்றிய நம்பிக்கை. அதாவது ஒரு நியாயத்தீர்ப்பு நாள் வரும் என்ற நம்பிக்கை. ஒரு முழுமையான இறுதி மாற்றம் அதாவது புரட்சி வரும் என்ற மார்க்ஸிய நம்பிக்கை அதில் இருந்து உதித்ததே. தத்துவ அடிப்படை கொண்ட கீழை மதங்கள் அப்படி ஒரு ஒற்றைப்புள்ளி நோக்கி வாழ்க்கையை கொண்டுசெல்ல முயல்வதில்லை. வாழ்க்கையை அவை ஒரு முடிவில்லாத சுழற்சி [பவ சக்கரம்] என்றே உருவகிக்கின்றன.

மார்க்ஸியத்தின் சாரத்தில் மனிதமையவாதமும், எளிமையாகத் திரிக்கப்பட்ட பத்தொன்பதாம்நூற்றாண்டுப் பரிணாமவாதமும், வரலாற்றை விருப்பப்படி கட்டமைத்துக்கொள்ளும் வரலாற்றுவாதமும் உள்ளது. அதில் இருந்தே மார்க்ஸிய நம்பிக்கைகள் பல உருவாகின்றன. சிக்கலாகச் சொல்வதன் வழியாகவே மிக எளிமையான நம்பிக்கைகளுக்கு ஓர் அறிவார்ந்த கனத்தை கொடுப்பதை மார்க்ஸ் பதினெட்டாம்நூற்றாண்டு ஜெர்மனிய தத்துவசிந்தனையாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அதை மார்க்ஸியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த சொற்சிக்கல்களை எளிமையாக்கி புரிந்துகொண்டோமென்றால் மார்க்ஸியம் பலசமயம் பெந்தெகொஸ்தே கிறித்தவம் போல ஒலிக்கும்.

மார்க்ஸியம் மனிதவரலாற்றைப்பற்றிச் சொல்வதை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். மனிதனே இந்த பூமியின் அதிபன். ஏனென்றால் அவன் பரிணாமத்தின் உச்சம். பல லட்சம் வருடங்களாக இயற்கையில் பரிணாமம் நிகழ்ந்து அதன் விளைவாக மனிதன் உருவாகியிருப்பது பரிணாமத்தின் நோக்கமே அவன்ந்தான் என்பதற்கான ஆதாரம். இதுதான் அவர்களின் மனித மையவாதம்.

மனித வரலாற்றிலும் அதே பரிணாமவாதத்தை போட்டுப்பார்க்க முடியும். மனித இனங்கள் படிப்படியாக பண்பாட்டு ரீதியாகவும் பரிணாமம் அடைந்து வருகின்றன. மனிதனின் பிரக்ஞையும் சிந்தனையும் அழகுணர்ச்சியும் எல்லாமே அவ்வாறு பரிணாமம் மூலம் உருவானவைதான். பழங்குடிகள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு பரிணாமம் அடைகிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம். அதில் இருந்து கம்யூனிசம். இந்த பரிணாமகதியில் உருவானவையே இனக்குழுகக்ள், அரசாங்கம், குடும்பம் போன்ற எல்லா அமைப்புகளும். இது மார்க்ஸியத்தின் முதிரா பரிணாமவாதம்.

இந்தப்பரிணாமம் இயற்கைக்கு வெளியே உள்ள எந்த ஆற்றலாலும் நிகழ்த்தப்படுவதில்லை. இயற்கையில் உள்ள பொருண்மையான சக்திகள் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் முரணியக்கம் வழியாக நிகழ்கிறது. வரலாறெங்கும் நிகழ்ந்துள்ள மோதல்கள் எல்லாமே இந்த முரணியக்கத்தையே காட்டுகின்றன. இவ்வாறு வரலாறு முன்னகர்ந்து வளர்ந்து பரிணாமம் அடைவதை வரலாற்றை ஆராய்ந்தால் காணலாம். இவ்வாறு வளர்ந்து செல்லும் வரலாற்றுக்கு ஒரே திசைதான் இருக்க முடியும். இதுவரை வந்த திசையை வைத்து இனிமேல் போகும் திசையை கணிக்கலாம். இனிமேல் அது போகும் திசை கம்யூனிச அமைப்புதான். இது அவர்களின் வரலாற்று வாதம்.

இந்த விளக்கம் இயல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மனிதனின் ’பரிணாமத்தில்’ உச்சத்தில் இருப்பது முதலாளித்துவம் நிகழ்ந்துவிட்ட பகுதியான ஐரோப்பா. ஆகவே ஐரோப்பிய மனிதன் பரிணாமத்தில் முதலாளித்துவம் நிகழாத ஆசியர்களை விட பலபடிகள் மேலே நிற்பவன். ஜெர்மனியரான மார்க்ஸ் ஜெர்மனியே ஐரோப்பாவின் உச்சம் என்றும், அங்கேதான் முதலில் புரட்சி வந்து கம்யூனிசம் வரும் என்றும் நம்பினார். ஆக அவரது நோக்கில் அவர் நின்றது பரிணாமத்தின் உச்சத்தின் உச்சிப்புள்ளியில். நாம் நின்றது பல படிகள் கீழே.

எவ்வளவு கீழே? மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை [Asiatic mode of production (AMP)] என ஒன்றைப்பற்றி பேசியிருக்கிறார். இதைப்பற்றி விரிவான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தினரின் குறிப்புகளை அப்படியே நம்பி மார்க்ஸ் இந்தியச்சூழலைப்பற்றிய முடிவுகளுக்கு வந்தார். அதன்படி அவரது கருத்தில் இந்தியாவில் நிலப்பிரபுத்துவமே கூட வரவில்லை. இந்தியா இருந்தது அதற்கும் பிற்பட்ட நிலையில்! இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் பழங்குடிகளாகவே இருந்தனர் என்கிறார் மார்க்ஸ்.

அப்படியானால் எப்படி இந்தியாவில் அரசுகளும் மதங்களும், சிந்தனைகளும், கலைகளும் உருவாயின? அதை விளக்கவெ அவர் ஆசிய உற்பத்தி முறை என்ற கருதுகோளை உருவாக்கினார். அதன்படி பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வரும்போது இங்கே இருந்தவை விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த மக்கள் வாழ்ந்த கிராமங்கள். இங்கே மிகச்சிறிய அளவில் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. கிராமங்கள் வணிகத்தாலும் அரசியல் தொடர்புகளாலும் பிணைக்கப்படவில்லை. ஆகவே அவை தனித்தீவுகள் போல பற்பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியில்லாமல் உறைந்து கிடந்தன்.

இந்த கிராமங்களை சிறிய படைகள் வழியாக கொள்ளையடித்து நிதியை சேர்த்துக்கொள்ளும் சிறிய அதிகாரக்குழுக்கள் இருந்தன. இவர்கள் சிறு நகரங்களை உருவாக்கிக்கொண்டார்கள். இந்நகரங்களிலேயே மதங்களும் கலைகளும் இலக்கியங்களும் உருவாயின. இப்படி தேங்கி கிடந்த இந்தியாவில்தான் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. அவர்கள் இந்திய கிராமங்களை வணிகம் மூலமும் ஆட்சி மூலமும் இணைத்தார்கள். அவர்கள் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை கொண்டுவந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவை முன்னேற்றிய சக்திகள்! – இதுதான் மார்க்ஸ் சொன்னது.

உங்களுக்கு கொஞ்சமாவது தமிழக வரலாறு தெரிந்திருந்தால் ’இது என்ன பேத்தல்!’ என்று கூவிவிடுவீர்கள். இங்கே இருந்த மாபெரும் ஏரிகளையும் பாசனநிர்வாகத்தையும் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பீர்கள். ஆனால் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்து மார்க்ஸ் சொன்னது என்பதனாலேயே முடிவான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஐம்பதாண்டுக்காலம் இந்திய வரலாறும் இந்தியப்பண்பாடும் அதன் அடிப்படையில் நம் மார்க்ஸியர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இன்று நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வந்துவிட்டன. பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள். இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு. அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது. பெரும் பஞ்சங்கள் வந்தன. அந்தப் பஞ்சங்களைப் பயன்படுத்தி இந்திய மக்களை அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று தோட்டத்தொழிலை உருவாக்கினர் பிரிட்டிஷார்.

இங்கிருந்தது மேலை நிலப்பிரபுத்துவம் அல்ல. அந்த நிலப்பிரபுத்துவம் என்பது விவசாயிகளை முழுமையாக அடிமைகளாக வைத்திருந்து நிலப்பிரபுக்கள் மொத்த உபரியையும் சுரண்டி கொழுத்த அமைப்பு. இங்கிருந்தது சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு. இன்றும்கூட அந்த அமைப்புகள் நீடிக்கின்றன -சினிமாவில்கூட கேட்கிறோமே பதினெட்டுபட்டி என்று.

அது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை விட பல மடங்கு பண்பட்டது. சீரான உபரிசேமிப்பு முறை கொண்டது. ஆகவே மேலான பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்தியது. நாமே கண்கூடாக பார்க்கக் கூடிய விஷயம், ஒரு சராசரி இந்தியக் கிராமம் என்பது வெறும் அடிமைகளின் தேங்கிப்போன முகாம் அல்ல. அதில் கல்விக்கு, கலைகளுக்கு, மதத்துக்கு, பொதுக்கொண்டாட்டங்களுக்கு எல்லாம் இடமிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிராம அமைப்பு நொறுங்கும் வரை இலக்கியம், கலைகள், மருத்துவம், கைத்தொழில்கள், கோயில்சடங்குகள் அனைத்தையுமே கிராமசமூகம் மிக வெற்றிகரமாகப் பேணி வந்தது. இன்று பல்லாயிரம் ஆவணங்கள் மூலம் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக, மார்க்ஸ் கண்ட இந்தியா அவர் கற்பனைசெய்துகொண்ட ஒன்று. அவரது சொந்த சமூகப்பரிணாமவியலின்படி அவரும் அவரது சமூகமும் வளர்ந்து பரிணாமத்தின் உச்சியில் நின்றார்கள். மேலே செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள். கீழே குனிந்து நம்மை பார்த்தார் மார்க்ஸ். அவரது காலகட்டத்தில் கணிசமான ஐரோப்பிய சிந்தனையாளர்களிடம் இந்த ஐரோப்பியமைய நோக்கு இருந்தது. இப்போதும்கூட ஏராளமான சிந்தனையாளர்களிடம் அது இருக்கிறது. ஐரோப்பாவே உலகை வழிநடத்தும் என்ற எண்ணம்.

என்ன சிக்கல் என்றால் நாம் அதை அப்படியே நம்பி நம் விசுவாசத்தைக் கொடுப்பதே. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே மார்க்ஸ் மேற்கோள்தான் காட்டப்ப்பட்டிருக்கிறார்– ஆராயப்படவில்லை. விதிவிலக்காக மிகமிகச் சிலரையே நம்மால் சுட்டிக்காட்ட முடியும். ஓர் இஸ்லாமியர் குரானையும் கிறித்தவர் பைபிளையும் கொள்வது போலவே நம் மார்க்ஸியர் மூலதனத்தை கொள்கிறார்கள். சராசரி மார்க்ஸியர்க்ளுக்கும் வகாபிகளுக்கும் நம்பிக்கையைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடேதும் நம்மால் பார்க்கமுடிவதில்லை.

ஒரு நிகழ்ச்சி. மார்க்ஸியத்தை நித்ய சைதன்ய யதியிடம் நடராஜ குரு விவாதிக்கிறார். மனிதனின் கையை ஒரு முக்கியமான குறியீடாக மார்க்ஸ் முன்வைக்கிறார். செயல் மூலம், உழைப்புமூலம் அவனுடைய கை உருவானது என்றும் அதுவே மானுடவரலாறு என்றும் சொல்கிறார். நடராஜகுரு சொல்கிறார் ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கையை முன்வைக்கையில் ஒரு புதிய மதத்தை நிறுவும் உற்சாகம் தெரிகிறது. ஏன் கண்ணை எடுத்துக்கொண்டு அதன் பரிணாமமாக வரலாற்றைப் பார்ப்பதுதானே?’ [குருவும் சீடனும். எனி இண்டியன் வெளியீடு. ப.சாந்தி மொழியாக்கம்]

ஆனால் அரவிந்தன் நீலகண்டனைப்போல நான் மார்க்சை முழுமையாக நிராகரிக்க மாட்டேன். மார்க்ஸை பத்தொன்பதாம்நூற்றாண்டு சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவராகவே எண்ணுகிறேன். வரலாற்றை பொருளியல் அடிப்படையில் நோக்கும் பார்வையை அவர் உலகுக்கு அளித்தார். அந்த பார்வை முழுமையானது அல்ல. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள உதவிகரமான கருவி அது. சமூகப்பரிணாமவியலை ஆராய்வதற்கு மார்க்ஸின் வாதங்களை இன்றைய புரிதல்களையும் கணக்கெடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம்

மார்க்ஸுக்கு அவரது காலகட்டம் சார்ந்தும், அவரது ஐரோப்பியமைய நோக்கு சார்ந்தும், அவரது யூதமதப்பின்னணி சார்ந்தும், அவரது சொந்த காட்சிப்பிழைகள் மற்றும் முன்முடிவுகள் சார்ந்தும் பல எல்லைகள் இருந்தன. அவர் தீர்க்கதரிசியோ ஞானியோ அல்ல. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான சிந்தனையாளர் மட்டுமே. அந்த குறைபாடுகளை முழுமைசெய்துகொண்டு மார்க்ஸிய சிந்தனைகளை நாம் வரலாற்றையும் சமூகத்தையும் ஆராய பயன்படுத்தலாம். அவரது சிந்தனைகளை நவீன சிந்தனைகளின் ஒட்டுமொத்தப் பரப்பில் வைத்து ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முதலில் அவரை மார்க்ஸியர்களிடமிருந்து மீட்டாக வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசகர்ளுடனான சந்திப்பு