இரு ஈழ இளைஞர்கள்

At Singapore Writer's Festival

நேற்றும் முந்தினமுமாக இரு ஈழ இளைஞர்களைச் சந்தித்தேன். மொரட்டுவை பொறியியல் கல்லூரித் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கௌதமன் நேற்று மதியம் என்னைப்பார்க்க வந்திருந்தார். அவரது கல்லூரித்தமிழ்ச்சங்கம் நிகழ்த்தும் இலக்கியப்போட்டிகள், புகைப்படப்போட்டி ஆகியவற்றைப்பற்றிய ஓர் அறிமுகக் காணொளியைக் காட்டினார். என்னைச் சந்தித்தபின் நாஞ்சில்நாடனைச் சந்திக்க கோவை செல்லப்போவதாகச் சொன்னார். முன்னரே அவரை சிங்கப்பூரில் சந்தித்திருக்கிறேன். அங்கே ஒரு பயிற்சிக்காக வந்திருந்தார். அதற்கு முந்தையநாள் கொழும்புவிலிருந்து தொண்ணூறுகளின் இறுதியிலேயே தமிழகம் வந்து இங்கே பொறியியல்கல்லூரி ஒன்றில் பயிலும் இளைஞனைச் சந்தித்தேன்.

 

இருவரும் உணர்ச்சிபூர்வமான இளைஞர்கள். இருவருமே பதின்பருவம் முடிந்த வயதில் வாழ்க்கைக்குள் நுழையவிருப்பவர்கள். இருவருமே ஈழப்போராட்டத்தின்போது பிறந்து அதன் அழிவை நேரில் அறியும் வாய்ப்பு கொண்டவர்கள். ஆனால் இருவருடைய மனநிலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.கௌதமன் இன்னமும் லட்சியவாதத்திலும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவராக, எதிர்காலம் குறித்த வேட்கையும் ஈர்ப்பும் கொண்டவராக இருந்தார்.

 

மாறாக தமிழகத்தில் பயிலும் இளைஞர் அவநம்பிக்கையின் உச்சியில் சோர்வும் தனிமையும் கொண்டவராக இருந்தார்.முதன்மையான காரணம், அவர் தமிழகத்தில் பெறும் கல்வி. முக்கியமான தனியார் பொறியியல்பல்கலைக்கழகம் அது. பெரும்பணத்தையும் அங்கே செலவிட்டிருக்கிறார். ஆனால் அவரது படிப்புக்கு மதிப்பில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கிறார். சினிமாவுக்கு போகலாமா என்று ஆசை. அதேசமயம் சினிமாமீது பெரிய வெறி ஏதும் இல்லை. வாசிக்கிறார், ஆனால் தீவிரமாக அல்ல.

 

அவரது சோர்வுக்கு கல்விநிலையம் அளவுக்கே காரணமானது தமிழக அரசியல் பற்றி அவருக்கிருக்கும் அறிவு. இவர்களெல்லாம் மிகப்போலியானவர்கள், சுயநலவாதிகள் என்று அவர் நினைக்கிறார்.இப்போதைக்கு எப்படியாவது இந்தியாவை விட்டு ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லவேண்டும் என்பதே குறிக்கோள். அனேகமாக அங்கே சென்றபின் அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்து அங்குள்ள சிந்திக்காத நுகர்வியத்தின் துளியாக ஆகிவிடுவார் என நினைக்கிறேன். அவ்வாறு அவரிடம் சொன்னேன்.  ‘ஆமா அதுவும்நடக்கலாம்’ என்றார்.

 

இந்த தோல்வியும் விரக்தியும் அவருடைய உளநிலையை பாதித்துள்ளன. சரியான தூக்கமில்லை. வாசிப்பு மேலும் தூக்கமின்மையை அளிக்கிறது என்றார். அப்படியானால் கொஞ்சநாள் வாசிக்கவேண்டாம் என்றேன்.அவரது சோர்விலிருந்து ஒரு பெரிய மூர்க்கம் அவரிடம் வெளிப்படுவதைக் கண்டேன்.அவர்கள் துயரப்படும்போது இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக எண்ணுகிறார். ஆகவே இங்கே ஓர் கிளர்ச்சியோ அழிவோ வரவேண்டுமென நினைக்கிறார் என்று தோன்றியது.அதற்கான எல்லா ஃபேஸ்புக் சண்டைகளிலும் ஈடுபடுகிறார்.

 

ஆக்கபூர்வமான ஜனநாயகம் என்றால் என்னவென்றே அவருக்குத்தெரியவில்லை. அதன் நுணுக்கமான செயல்பாடும் சிக்கலான நிதானமான நகர்வும் பிடிகிடைக்கவில்லை. அவரது மனம்  ‘அதிரடி’ அரசியலில் ஈடுபட்டிருக்கிறது. ‘உடன்’ என்ற சொல்லை அவர் வாயில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அடிக்கடி கண்கள் சிவக்க கத்திப்பேசினார்.

 

சில்லறைவன்முறை சார்ந்த அரசியல் அவருடையது. ஆனால் பெரிய வன்முறை பற்றிய பயமும் உள்ளது. தான் வசதியாக ஐரோப்பாவில் ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றும் , அதேசமயம் தமிழகத்தில் ‘எளுச்சி’ ஏற்பட்டு ஏதாவது நடக்கவேண்டும் என்றும் நினைக்கிறார். இலங்கையை வெறுக்கிறார். அதேசமயம்  இலங்கை கிரிக்கெட் அணியை விரும்புகிறார். இந்தியாவை நொறுக்கவேண்டுமென ஆசைப்படுகிறார். இந்தியா ஒரு ‘ரொட்டன் தேசம்’ என நினைக்கிறார். கருணாநிதியை ‘துரோகி’ என்கிறார். அவரது எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆவேசமாக வெறுப்பைக் கக்கத் தொடங்கினார்.மேற்கொண்டு பேசுவதை தவிர்த்து சாப்பிடக்கூட்டிக்கொண்டு போய்விட்டேன்.

 

கௌதமன் இலங்கையில் இன்றிருக்கும் தமிழர்களிடையே பணியாற்றுகிறார். புலிகளின் அரசியல்- ராணுவ –அறப் பிழைகளைப்பற்றி மிகத்தெளிவாகவே அறிந்திருக்கிறார் அவர்களின் கனவுகள் பங்களிப்பு பற்றியும் அறிந்திருக்கிறார்.. அவருக்கு அதில் எந்த மயக்கமும் இல்லை. இன்று செய்வதென்ன என்பதைப்பற்றியே பேசினார். மறுவாழ்வுப்பணிகளில் அவரது நண்பர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். கூடவே தமிழ்ப்பண்பாட்டை அங்கே அழியாது மீட்டெடுப்பதற்கான கவலைகளையும் கொண்டிருக்கிறார்

 

என்னிடம் அவர் சில வினாக்களைக் கேட்டார். ஒன்று, இலங்கையின் இளையதலமுறை இன்று வாழ்க்கையை ‘கொண்டாடுவதில்’ ஈடுபட்டுள்ளது. அது பீர்- சினிமா என்னும் இரு சொற்களில் அடங்கும். பல இடங்களில் மக்கள் தமிழ்க்கல்வியை துறந்துகொண்டிருக்கிறார்கள். மலையக மக்கள் வேலைகிடைக்கும் என்று சிங்களம் படிக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை உதறிச் செல்லவிரும்புகிறார்கள். இதுதான் புலம்பெயர்ந்தவர்களிடமும் நிகழ்கிறது. அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை.

 

ஈழப்போரையும் அதன் வலிகளையும் முழுமையாக மறக்கமுயல்கிறது இளைய தலைமுறை. ‘அதை நான் ஏன் நினைக்கணும்? நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும்?’ என்று கேட்கிறார்கள் இளைஞர்கள். அவர்களிடம் அவ்வரலாற்றைச் சொல்லவே முடியவில்லை. பழைய ஆட்கள்தான் அதை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்படியே வரலாறு மறந்துவிடும் போல உள்ளது. அவ்வளவுதானா வரலாறு?

 

நான் என் மனப்பதிவைச் சொன்னேன். சுவை அறிதல்  என்னும் தலைப்பில் நான் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரையில் அந்தச் சாரம் உள்ளது. ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்குரிய சுவை என ஒன்று உண்டு.அச்சுவை சமையலில், இசையில், நாடகத்தில் ,மதத்தில் இலக்கியத்தில் எல்லாம் பரவியிருக்கும். அதுவே பண்பாட்டின் கனிவு. அச்சுவையை அழியாமல் பாதுகாப்பதே தேவையானது.  ஈழச்சுவை என ஒன்று அனைத்திலும் உள்ளது. அது அழியாமலிருக்கவேண்டும்.

 

போர் நினைவுகளை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும், தவறுகளை அலசிக்கொண்டிருப்பதும் பயனற்றவை. ஏனென்றால் மானுடம் முன்னேறவே விரும்பும். இன்பங்களையே இளமை மனம் நாடும். சோர்வுறும் விஷயங்களைத் தவிர்க்கும். ஆகவே அது கேளிக்கையை நாடுவதில் பிழையில்லை. ஆனால் அந்த மண்ணின் சுவை அழியுமென்றால் மீட்க முடியாது. ஒரு சமூகமாக ஈழத்தவருக்குள்ள திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கலைகள், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக முன்னெடுத்துச்செல்வதே ஒரே வழி என்றேன். வாழ்க்கையின் இனிமைகள் வழியாக வந்தடையும் பண்பாடே நீடிப்பது. ஏனென்றால் பண்பாட்டின் நோக்கமே வாழ்க்கையை செழுமைப்படுத்துவதுதான்.

 

ஒரு சமூகத்திற்கு மூன்று தளங்கள் இருக்கும். இன அடையாளம், நிலம்சார் அடையாளம், பண்பாட்டு அடையாளம். ஈழத்தவரே பலவகை மணவுறவுகள் மூலம் பரந்துகொண்டிருக்கையில் இனத்தூய்மை எல்லாம் சாத்தியமில்லை. வரும்காலத்தில் இனத்தூய்மை ஒரு அபத்தமான எண்ணமாகவே இருக்கும். நிலம் சார்ந்த ஒருங்கிணைவு இனிமேல் முக்கியமில்லை. தமிழ்மக்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆகவே பண்பாடு சார்ந்தே இனி ஒரு ஒற்றுமை சாத்தியம்.

 

உதாரணமாக, பிரெஞ்சுப் பண்பாடு இனம் சார்ந்தது அல்ல. பிரான்ஸ் சார்ந்ததும் அல்ல. அது பிரெஞ்சுப் பண்பாடு சார்ந்தது. பிரெஞ்சு  ‘சுவை’ சார்ந்தது. அதைப்போல உலகப்பண்பாட்டின் ஓர் உயரிய பங்களிப்பாக தமிழ்ப்பண்பாடு செயல்பட முடியும் என்றேன்.  அது வெகுஜன அரசியல் மூலம் அல்ல, நீடித்த சலியாத பண்பாட்டுச்செயல்பாடு வழியாகவே நிகழமுடியும் என்றேன்.

 

அது பழமைவாதத்துக்கு இட்டுச்செல்லாதா என்றார். பழமையின் ஓர் அம்சம் இல்லாமல் பண்பாடு எஞ்சாது. அது முதலில் நீடிக்கட்டும். அதன்பின் அதன் மேல் விமர்சன அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வோம் என்பதே என் பதிலாக இருந்தது. உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனங்களும் சேர்ந்ததே பண்பாடு என்பது. யாழ்ப்பாண சைவமதம் என்பது தனித்தன்மை கொண்ட் ஒன்று. ஓர் ஈழச்சுவை அது. அதன்மீதான கடும் விமர்சனங்களை இன்னொரு ஈழச்சுவை என்று கொள்ளவேண்டியதுதான்.

 

எதிர்மறை மனநிலை கொண்ட பண்பாட்டுச்செயல்பாடு என்பது காலப்போக்கில் சோர்வையும் கசப்பையும்தான் நிறைக்கும். நீடித்த பணி என்பது அதனால் சாத்தியமாகாது. எதிர்மறைச்செயல்பாடு கொண்டவர்கள் ஒருகட்டத்தில் வீண்சண்டைக்காரர்களாக மாறுவதே நாம் காண்பது. ஆக்கபூர்வமான பணியில் சோர்வுக்காலங்கள் உண்டு. பலன் கண்ணுக்குத்தெரியவில்லை என்னும் சலிப்பு. ஆனால் ஆக்கபூர்வமான பணி என்பது நம்மை அறியாமலேயே பண்பாடு என்னும் இந்த பேரியக்கத்தில் எங்கோ சென்று சேர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்க்கையில் காணமுடியும்

 

நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கனிவும் கொண்ட கௌதமின் முகம் நினைவில் நிற்கிறது. பேசும்போது அவரது கண்கள் கசிந்தன. தொண்டை அடைத்தது. உற்சாகமான தருணங்களில் கண்கள் விரிந்தன. என்றும் பிரியத்திற்குரிய, என் இளமைமுதல் ஒரு கனவாகவே இருந்துவரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய முகம் அவர்தான்.

 

இணைப்பு

 

காணொளி கௌதமன்

 

சுவை அறிதல்

முந்தைய கட்டுரைகொற்றவை ஒரு மீள் வாசிப்பு
அடுத்த கட்டுரைதினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு