தினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது

17g

 

அன்புள்ள ஜெயமோகன்

குருதியோட்டத்தில் இணைவது ஆழமான கட்டுரை. கிளர்ச்சிதரும் அரசியல் என்பது எப்படி மெதுவாக அழிவின் அரசியல் ஆகிவிடுகிறது என்பதைச் சொல்கிறது. நான் எட்டுவருடம் மேகாலயாவில் வேலைபார்த்தேன். நீங்கள் சொல்லும் விஷயங்களை பலவகையிலும் உணர்ந்திருக்கிறேன்

ராமச்சந்திரன்

 

தினமலர் 25, ‘குடிமகனின் சுயமரியாதை’ வாசித்தேன். என் தந்தையார் எங்கள் சிறுவயதில் அரசியல் குறித்துப் பேசும்போது பெரும்பாலும் காமராஜர் புராணம்தான் பாடுவார். காமராஜரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தெளிவாக, காரண காரியங்களுடன், ஒரு பேச்சாளர் பாணியில் எடுத்துரைப்பார். வளர்ந்தபிறகு ஒருநாள் அவரிடம் கேட்டேன், “அப்பா, காமராஜர் பிற அரசியலாளர்களைவிட ஏன் சிறந்தவர் என்பதை ஒருவரியில் சொல்லமுடியுமா?” அவர் சொன்ன விடை இதுதான்: “பொதுமக்களில் எவரும் அணுகிப் பேசக்கூடிய நிலையில் இருந்தவர் அவர்மட்டுமே”.

காமராஜர் தன் அரசுப்பணிகளுக்காகப் பயணம் செய்யும்போதுகூட‌ வழியில் இறங்கி அங்கிருக்கும் மக்களோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் வாழ்ந்த கிராமத்தில் (லால்குடி அருகே பூவாளூர்) அவ்வாறு ஒருமுறை காமராஜர் இறங்கியதைத் தான் பார்த்ததாகத் தந்தையார் சொன்னார். அங்கு நடவு செய்துகொண்டிருந்தவர்களிடம் “ரேஷனில் அரிசி ஒழுங்காக விற்கிறார்களா? பாசனவசதிகள் இங்கு முறையாக செய்துதரப்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டாராம். வேறொருமுறை பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒருபக்கம் பயிர்கள் செழிப்பாகவும் மற்றொரு பக்கம் காய்ந்தும் கிடப்பதைக் கண்டாராம். அதிகாரியை அழைத்து “ஏன் இப்படி இருக்கிறது?” என்று கேட்க, “முன்னது மாநில அரசின் பாசனவசதித் திட்டத்தின்கீழ் உள்ளது. பின்னது மத்திய அரசின்கீழ் உள்ளது. மத்திய அரசின் கையெழுத்திட்ட ஆணை இன்னும் வந்துசேரவில்லை” என்று பதில் வந்ததாம். “அட, பயிர் வளர்வது முக்கியமா? ஆணை முக்கியமா? கையெழுத்தெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். தண்ணீரைத் திறந்துவிடு” என்றாராம் காமராஜர்.

உண்மையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தன் தொகுதியிலுள்ள‌ நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை ஒரு சிறிய பயணத்தில் தீர்த்துவிடமுடியும். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள். ஜெவின் வார்த்தைகளில் சொல்வதானால் மக்கள்முன் குற்றவாளிகளாக உணர்கிறார்கள் (தினமலர் 19 கட்டுரை). இப்போது தேர்தல் காலத்தில்கூட இதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. வீடுவீடாக வாக்கு சேகரிக்க வருபவர்கள் தங்களைச் சுற்றி மக்கள்கூட்டம் கூடிவிடுமோ, எங்கே நம்மைச் சுற்றிவளைத்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். அப்பாவைப் போலவே நானும் காமராஜர் காலத்தை நினைத்து ஏங்கவேண்டியதுதான் போல

 

திருமூலநாதன்

முந்தைய கட்டுரைகொடிக்கால் அப்துல்லா – என் உரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24