‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22

[ 6 ]

அஸ்தினபுரியின் எல்லைக்குள் கர்ணன் நுழைந்தபோது பொழுது நன்றாகவே விடிந்திருந்தது. ஆனால் கிழக்கை மூடியிருந்த முகில்களில் சூரியன் கலங்கி உருவழிந்து பரந்திருந்தது. குறுங்காட்டின் இலைகளனைத்தும் நீர்சொட்ட அசைந்துகொண்டிருந்தன. இளந்தூறலில் அவன் அதுவரை அறிந்திராத ஒரு சேற்றுவாடை இருந்தது. கைகளில் நீரைப் பிடித்து குவித்து நோக்கியபோது நீர் சற்று வண்ணம் மாறியிருப்பதை கண்டான். மூக்கருகே கொண்டுசென்று அதன் கெடுமணம்தான் என்று உணர்ந்தான். அண்ணாந்தபோது வானமே கரியநிற வண்டல்பரப்பாக தெரிந்தது. அதிலிருந்து புழுக்கள் போல் நெளிந்திறங்கின மழைச்சரடுகள்.

அவன் மையப்பெருஞ்சாலையிலும் கோட்டைமுகப்பிலும் இருந்த செயலின்மையை நோக்கிக்கொண்டே தேரில் சென்றான். அவன் புரவிகளின் குளம்படியோசையை காடு திருப்பியனுப்பிக்கொண்டிருந்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் வீரர்கள் எழவில்லை. ஒரு முரசுமட்டும் ஈரத்தோலின் சோர்வுடன் அதிர்ந்தடங்கியது. அவ்வோசை மழைத்தாரைகளுக்கிடையே மறைந்தது. கோட்டைக்காவலர் அவனை கண்டதாகத் தெரியவில்லை. அவன் தேரை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் நின்றதைக் கண்ட ஒரு முதுகாவலன் கையை ஊன்றி எழுந்து சுவரைப்பற்றியபடி நடந்து அருகே வந்தான். அவனை அடையாளம் கண்டதும் “வணங்குகிறேன் அங்கரே” என்றான்.

“என்ன நிகழ்கிறது இங்கே? கோட்டைக்காவல்நிரைகள் எங்கே?” என்று அவன் கேட்டான். “அனைவரும் இங்குதான் உள்ளனர். இங்கு நோய் பரவியிருக்கிறது அரசே. என்ன நோய் என்று தெரியவில்லை. சிலருக்கு உடல்வெப்பு. சிலருக்கு உடல்குளிர்கிறது. சிலர் நோக்கிழந்தனர். சிலர் சொல்லிழந்துள்ளனர். மூதாதைதெய்வங்களின் பழி என்கிறார்கள்” என்றான். கர்ணன் அப்பால் எட்டிப்பார்த்த படைவீரர்களின் முகங்களை பார்த்தான். அவை வெளிறிப்பழுத்து, சிவந்துகலங்கிய விழிகளும் உலர்ந்த உதடுகளும் உந்திய கன்ன எலும்புகளுமாக தெரிந்தன. மறுசொல்லெடுக்காமல் அவன் புரவியை செலுத்தினான்.

நகர்த்தெருக்களினூடாகச் செல்கையில் அது முற்றிலும் கைவிடப்பட்டிருப்பதை கண்டான். அங்காடிகளில் வணிகர்கள் சொட்டும் சாய்வுக்கூரைகளுக்குக் கீழே சோர்ந்து அமர்ந்து ஒளியற்ற விழிகளால் நோக்கினர். புரவிகள் உடல்சிலிர்த்தபடி மழைத்துளிகள் உருண்டு சொட்டிய உடல்களுடன் நின்றன. அவை ஓடிப்பயின்று நீணாட்களாகிவிட்டன என்பதை அவற்றின் வயிறு பருத்து தொங்கியதிலிருந்து கண்டுகொண்டான். உடல் எடையால் அவற்றின் ஊன்றிய கால்கள் சற்றே விலகி வளைந்திருந்தன. வண்டிகள் சகடங்கள் சேற்றில் புதைந்திருக்க மழைதெறித்த சேறு கொத்துக்கொத்தாக ஆரங்களில் தொங்க அசைவின்மையின் வடிவமென நின்றன.

உள்கோட்டையை அணுகும்போதுதான் அவன் காகங்களை கண்டான். மறுகணமே அவற்றை அவன் நகரை நெருங்கும் பாதையிலேயே கண்டிருந்ததை திகைப்புடன் நினைவுகூர்ந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட தேர்ப்புரவிகள் திகைத்து காலுதைத்து நின்றன. அவன் திரும்பித்திரும்பி கண்தொட்ட இடமெல்லாம் கரிய சருகுக்குவைகள் போல உடல்குறுக்கி அமர்ந்திருந்த காகங்களை நோக்கினான். மீண்டும் கடிவாளத்தைச் சுண்டி புரவியை செலுத்தியபோது அவன் பிடரி அச்சத்துடன் சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

அவற்றின் கண்கள் அவனை நோக்கவில்லை என்பதை விழிகள் கண்டன. அவற்றின் நோக்கை உடல் உணர்ந்துகொண்டுமிருந்தது. மிக அருகே அணுகியபின்னரும்கூட சுவரில் அமர்ந்திருந்த பருத்த காகங்கள் அசையாமல் இருந்தன. காற்றில் ஒன்றின் சிறகு சற்றே பிசிறிட்டது. கழுத்தை ஒசித்து அலகால் இறகை நீவியபின் அது கீழிமை மேலேற துயிலில் ஆழ்ந்தது.

அரண்மனையில் அவனை வரவேற்க அமைச்சர்கள் எவரும் இருக்கவில்லை. அமைச்சு மாளிகைக்குச் சென்றபோது கனகர் உள்ளறைக்குள் இருப்பதாக ஏவலன் சொன்னான். அமைச்சு மாளிகையிலும் பணிகள் நிகழ்வதாகத் தெரியவில்லை. சாளரங்களுக்கு அப்பால் மழைத்துளிகள் சொட்டிக்கொண்டே இருந்த ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. கனகர் ஏவலனுடன் உடல்குலுங்க ஓடிவந்தார். “தங்கள் வரவை எதிர்நோக்கியிருந்தோம் அரசே” என்றார். “நேற்றே தாங்கள் வரக்கூடுமென எதிர்நோக்கினோம். அமைச்சர் பின்னிரவு வரை இங்கிருந்தார். இன்றுகாலை அவருக்கும் நோய்கண்டுவிட்டதென்று சொன்னார்கள்.”

அவன் திரும்பி அமைச்சு மாளிகையை நோக்கிவிட்டு “என்ன நோய்?” என்றான். “விரிவாகச் சொல்கிறேன். தாங்கள் உடலை நன்கு கழுவிக்கொண்டாகவேண்டும். இதோ இந்த கரியபாசியால்தான் நோய் பரவுகிறது என்கிறார்கள். உண்மையில் இது என்ன என்றும் எவ்வண்ணம் இங்கு வந்தது என்றும் எவருமறியவில்லை. காகங்களால் கொண்டுவரப்பட்டது என்கிறார்கள்” என்றார் கனகர்.

அப்போதுதான் தன் கைகளும் உடலும் கரிபடிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். “எத்தனை கழுவினாலும் அகல்வதில்லை” என்றபடி கனகர் அவனை நீராட்டறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே கொதிக்கும் நீர் கொண்ட செம்புக்கலங்களில் வேம்பிலையும் எட்டிக்காயும் வில்வமும் வெந்த ஆவி எழுந்தது. “கழுவவேண்டும் என்பது மருத்துவர் வகுத்தது. அதனால் நோயை ஒத்திப்போடவே முடியும். இவ்வரண்மனையில் ஒவ்வொரு கணமும் விழிப்புடனிருந்தவர் விதுரர். அவரே நோய்கொண்டுவிட்டார்.”

கர்ணன் தன் கைகளை சிகைக்காய் பசையிட்டு நுரைக்கச்செய்து கழுவினான். பின்னர் சுண்ணம் கலந்த நீரால் கழுவினான். “நச்சு… ஆனால் அதன் இனிமை சொல்லற்கரியது. அங்கரே, அது உடலில் இருந்து உள்ளத்தை தனியாகப் பிரித்துவிடுகிறது. ஏழுலகங்களிலும் உள்ளம் பறந்தலைகையில் நனைந்த துணிச்சுருளென உடல் இங்கு அமைந்திருக்கிறது. இருள் நிறைந்த உலகங்கள். அங்கே விழிகள் மின்னுகின்றன. நெளிவுகளும் சுழிப்புகளுமென ஏதோ எவரோ நிறைந்துள்ளார்கள். இன்னும் இன்னுமென செல்லச்செல்ல எண்ணி அடுக்குபவை அனைத்தும் கலைகின்றன. உருவங்களே தங்களை முடிவிலாது கலைத்து அருவங்களாகும் ஆடல்…”

“செவிவிடைக்கும் பெருங்கூச்சல்களும் அலறல்களும் அங்கு நிறைந்துள்ளன. உடைவோசைகளும் பிளவோசைகளும் வெடிப்பொலிகளும்தான் எங்கும். ஆனால் சித்தம் அவற்றுடன் மோதி தானும் பேரொலி எழுப்புகையில் நம் உடல் ஒரு பழுத்த கட்டிபோல உடைந்து சலம்தெறிக்கப் பரவுகிறது” என்றார் கனகர். “இந்நகரில் நீங்கள் பார்த்த ஒவ்வொருவரும் உளம் அகன்ற வெறும் உடல்கள் மட்டுமே.”

கர்ணன் அவர்களின் விழிகளை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தான். “நோயுறுதல் இத்தனை இன்பமானதாக ஆகமுடியுமா? சோர்வு இத்தனை தித்திக்கலாகுமா? அரிது. அரிது. நான் இதுவரை கண்டதில்லை” என்றார் கனகர். “உடலை அசைக்கவும் உளம்கூடுவதில்லை. அசைவின்மையின் இனிமையையே சுவைத்துக் கொண்டிருப்போம். எங்கிருந்து வந்தோம் என்று எண்ணுகையில் எழும் திகைப்பு எல்லையற்றது. அங்கரே, இத்தனை முடிவிலியுலகுகளால் சூழப்பட்டா இங்கு இத்தனை சிறிய வாழ்க்கையை வாழ்கிறோம்?”

அவன் உடல்தூய்மை செய்து உடைமாற்றியதுமே விதுரரை பார்க்கச் சென்றான். அவரது மாளிகையின் முகப்பில் நின்றிருந்த காவலனும் நோயில் பழுத்திருந்தான். அவன் விழிகள் அனைத்தையும் கடந்து எங்கோ நோக்குபவை போலிருந்தன. உள்ளே மஞ்சத்தறையில் விதுரர் படுத்திருந்தார். மெலிந்த கரிய உடலில் விலா எலும்புகள் மணல் அலைகள் போல தெரிந்தன. உலர்ந்த உதடுகள் ஒட்டியிருக்க முகம் மலர்ந்திருந்தது. விழியுருளைகள் உருண்டுகொண்டிருந்தன.

ஏவலன் மெல்ல “அமைச்சரே” என்றான். மீண்டும் மீண்டும் அவன் அழைக்க மிகத்தொலைவில் எங்கோ அவர் அக்குரலை கேட்டார். “யார்? யாரது?” என்றார். “அங்கன், கர்ணன்” என்றான் கர்ணன். “நீயா?” என்று அவர் சொன்னார். “மத்ரநாட்டிலிருந்து எப்போது வந்தாய்?” கர்ணன் “அமைச்சரே…” என்று உரத்தகுரலில் அழைத்தான். “நான் கர்ணன். அங்கநாட்டரசன்.”

அவர் விழிதிறந்து அவனை பார்த்தார். “ஆம், நீ அங்கன்” என்றார். முகம் அப்போதும் மலர்ந்திருந்தது. “காகி” என்றார். “நான் அன்னையை கண்டேன்.” கர்ணன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் தன் வாயை துடைத்துக்கொண்டு “நான் என்ன சொன்னேன்?” என்றார். “காகியை பார்த்தீர்கள் என்று” என்றான். “ஆம், காகி. கரிய நீள்குழல் எழுந்து கற்றைகளாக பறந்தது. கைவிரல்கள் காகத்தின் அலகுகள் போல…” என்றபின் கையூன்றி எழுந்து அமர்ந்து “கனவு… நகரில் இப்போது ஒவ்வொரு மானுடரும் ஆயிரம்மடங்கு பெரிய கனவுகளின் குவியல்கள்” என்றார்.

கர்ணன் “அரசர் என்ன செய்கிறார்?” என்றான். “அவர் நோயுறவில்லை” என்று விதுரர் சொன்னார். “இந்நகரில் அவரும் கணிகரும் மட்டுமே நலமுடன் இருக்கிறார்கள். பலநாட்களாகவே பேரரசர் நோயில் இருக்கிறார். விழிமூடிப்படுத்து இரவும் பகலும் இசைகேட்டுக்கொண்டிருக்கிறார். பேரரசியும் நோயுற்றிருக்கிறார். அரசியரும் கௌரவர் நூற்றுவரும் அனைவரும் நோயிலேயே இருக்கிறார்கள்.”

“அனைவருமா?” என்றான் கர்ணன். “நோய் என்றால் படுக்கையில் அல்ல. நேற்று துர்முகனை பார்த்தேன். புன்னகைக்கும் முகமும் அலைபாயும் கண்களுமாக கைகளை வீசிக்கொண்டே சென்றான். என்னை அவன் விழிகள் பார்க்கவேயில்லை.” கர்ணன் நீள்மூச்செறிந்தான். “இந்நகர் முற்றிலும் இருளில் மூழ்கிவிடும் என்று தோன்றியது. ஆகவேதான் உங்களை வரச்சொல்லி ஓலை அனுப்பினேன்.”

கர்ணன் “நான் மகதத்திற்கு தூது அனுப்பப்பட்டதை அறிந்தேன்” என்றான். “ஆம், மகதத்தின் நட்புத்தூதை மறுத்தோம். அம்முடிவை நான் எடுத்தேன். சகுனித்தேவர் அதற்குரிய ஆணையை இட்டார். பேரரசரிடம் ஒப்புதல் பெறப்பட்டது” என்றார் விதுரர். “நீங்கள் அங்கநாட்டிலிருக்கையிலேயே அதை செய்யவேண்டுமென எண்ணினேன். அச்செய்தியை அறிந்து நீங்கள் சினம்கொண்டதையும் நான் அறிவேன்.”

கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “அங்கரே, நீரே பார்க்கலாம். இந்நகர் எப்படி போரில் இறங்கமுடியும்?” என்றார் விதுரர். “உண்மை. ஆனால் என் தோள்களில் ஜராசந்தரின் தழுவும் கைகளின் எடையும் வெம்மையும் இப்போதுமுள்ளது” என்றான் கர்ணன். “அவர் எளிதில் வெல்லப்படத்தக்கவர் அல்ல. ஒன்றை ஒன்று நோக்கும் இரு ஆடிகளைப்போன்றவர் அவர். முடிவிலாது பெருகுபவர்.” விதுரர் “ஆம், ஆனால் அவன் முன் நின்றிருப்பதும் ஒன்றை ஒன்று பெருக்கும் இணையாடிகளே” என்றார்.

இருவரும் சிலகணங்கள் அமர்ந்திருந்தனர். விதுரர் அவன் கைகளை எட்டிப்பற்றி “நான் சொல்வதற்கொன்றுமில்லை. இந்நகரும் அரசரும் உங்களால் காக்கப்பட வேண்டியவர்கள்” என்றார். “கணிகர் என்ன செய்கிறார்?” என்று அவரை நோக்காமலேயே கர்ணன் கேட்டான். “அவர் உடல் நலமுற்றுவிட்டது. புரவியேறி நகரில் அலைகிறார். காடுகளில் வேட்டையாடுவதுமுண்டு என்கிறார்கள்.” கர்ணன் எழுந்து விதுரரின் கைகளைப் பற்றியபடி “நான் பார்த்துக்கொள்கிறேன் அமைச்சரே” என்றான்.

[ 7 ]

துரியோதனனின் அரண்மனைப்படிக்கட்டில் ஏறும்போதே கர்ணன் ஒரு வேறுபாட்டை உணர்ந்தான். அந்நகரில் அத்தனை சுவர்ப்பரப்புகளும் பொருட்பரப்புகளும் சாம்பல்போன்ற கரும்பாசிப்பொடியால் மூடப்பட்டிருந்தன. துடைத்துத் துடைத்து சலித்து அதை விட்டுவிட்டிருந்தனர். அரண்மனை முகப்பில் பணியாளர்கள் அதை துடைத்துக்கொண்டிருந்தாலும் பாசிப்பரப்பு கூடவே தொடர்ந்து பரவிக்கொண்டிருந்தது.

எங்கும் தொடாமல் சற்று நடந்தால்கூட சிறிதுநேரத்தில் கைகள் கரிபடிந்திருந்தன. நடக்கும்போது கால்களின் கரிய அச்சுத்தடம் படிந்து ஓசையில்லாமல் பின்தொடர்ந்தது. அரண்மனைக்கோட்டையின் விளிம்பிலும் சாளரவிளிம்பிலும்கூட காகங்கள் செறிந்திருந்தன. அரண்மனைக்குள்ளும் அவை உத்தரச்சட்டங்களிலும் உயரமான வளைவுகளிலும் நிரைகட்டியிருந்தன.

ஆனால் துரியோதனனின் அரண்மனையைச்சுற்றி முற்றம் அப்போதுதான் துடைத்துக் கழுவிவைத்தது போலிருந்தது. மரக்கதவுகள் அரக்குமிளிர திறந்திருந்தன. மரத்தரைகளில் புதுமணல்வரி என வைரத்தின் கோடுகள் படிந்திருந்தன . படிகளின் கைப்பிடி புதியபிரம்பு போல ஒளிவிட்டது. அரண்மனைக்குள் ஓசையே இருக்கவில்லை. சாளரத்திரைச்சீலைகள் ஓசையின்றி அசைந்துகொண்டிருந்தன. அவன் தன் காலடிகளைக் கேட்டபடி நடந்தான்.

அவனை எதிர்கொண்ட இளையஅணுக்கன் தலைவணங்கி அரசர் உள்ளே அமர்ந்திருக்கிறார் என்று கைகாட்டினான். கர்ணன் தன்னை தொகுத்துக்கொண்டு துரியோதனனின் அறைக்குள் நுழைந்தான். வெண்ணிறமான திரைச்சீலைகளும் வெண்ணிறப் பீடவிரிப்புகளும் கொண்ட பெரிய அறையில் சாளரத்தின் அருகே துரியோதனன் அமர்ந்திருந்தான். வெண்பட்டாடையை இடையணிந்து வெண்ணிற யவனப் பூந்துகிலை சால்வையெனச் சுற்றியிருந்தான். புகைச்சுருள் போல அவன் மேல்கிடந்தது அது.

காலடியோசை கேட்டு அவன் திரும்பி நோக்கினான். “வணங்குகிறேன் கௌரவரே” என்றான் கர்ணன். முகம் மலர்ந்த துரியோதனன் “வருக அங்கரே. தாங்கள் வரும் செய்தியை நான் அறியவில்லை” என்றான். அவன் அமர கைகாட்டியபடி “தங்கள் வரவு இந்நாளை இனிதாக்குகிறது” என்றான். “நான் நேற்று முந்தையநாள்தான் கிளம்ப முடிவு செய்தேன். எதிர்க்காற்று இருந்தமையால் சற்று பிந்தினேன்” என்றபடி கர்ணன் அமர்ந்தான்.

துரியோதனன் பேரழகுகொண்டிருந்தான். உடலின் ஒவ்வொரு உறுப்பும் முழுமைகொண்டிருந்தது. புருவங்களில் மூக்கில் உதடுகளின் வளைவில் முகவாயில் மானுடத்தை மீறிய சிற்பக்கூர்மை. ஆனால் அவன் துரியோதனனாகவும் தெரிந்தான். இந்த உருவம் அந்த உடலுக்குள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மானுடருக்குள்ளும் அந்த தெய்வ உருவம் வாழ்கிறது. நீரடியில் கிடக்கும் அருஞ்சிலை. அதன்மேல் அலையடிக்கும் நீர்வளைவுகளால் அது நெளிந்தும் ஒடுங்கியும் காணக்கிடைக்கிறது போலும்.

துரியோதனன் அவன் மேல் விழிகளை நட்டு இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான். அவ்வினிய தோற்றத்திற்குள் தானறிந்த துரியோதனனைத் தேடி கர்ணனின் உள்ளம் தவித்தது. யார் இவன்? யயாதியா? ஹஸ்தியா? குருவா? பிரதீபனா? மானுடராகத் தோற்றமளிப்பது என்பது மாறாமை ஒன்றின் ஒரு காலத்தோற்றம். மாறாமையென்பது எவர் வடிவம்? யயாதியினூடாக ஹஸ்தியினூடாக குருவினூடாக பிரதீபனினூடாக கடந்துசெல்லும் அது என்ன? வரும்காலத்தில் எங்கோ பல்லாயிரமாண்டுகளுக்குப் பின்னர், பல்லாயிரம் வாழ்வடுக்குகளுக்கு அப்பால் இதே முகம் இங்கே அமர்ந்திருக்கும். இப்புவியில் அழியாமலிருப்பவை முகங்கள் மட்டும்தான்.

அவன் முன் அமர்ந்திருந்த துரியோதனனுடன் பேசுவதற்கேதுமில்லை என்று தோன்றியது. அவன் எதிர்நோக்கி வந்தவன் பிறிதொருவன். விதுரரும் மருத்துவரும் குறிப்பிட்ட துரியோதனன் எரிமீன் என கனன்று கொண்டிருந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்து துரியோதனன் புன்னகைத்தான். “ஆம், நான் தழல்விட்டுக்கொண்டிருந்தேன்” என்றான். “தீப்பற்றிக்கொண்டவன் போல இவ்வரண்மனையில் சுற்றியலைந்தேன். அதை அப்போது நான் உணரவில்லை. இப்போது உணர்கிறேன். இவ்வாறு அடங்கியபின்னர்…”

கர்ணன் “இவ்வகையில் தங்களை பார்ப்பது நிறைவளிக்கிறது அரசே” என்றான். “இங்கிருந்து எழுவதற்கோ இவ்விடம்விட்டு அகல்வதற்கோ தோன்றவில்லை. வெளியே சென்று நான் அறிவதற்கொன்றுமில்லை. விழிமூடி அமர்ந்தால் என்னுள் முடிவிலாது செல்லமுடிகிறது. ஒளிகொண்ட பேருலகங்கள். முழுமையான ஒத்திசைவால் ஆனவை. ஒத்திசைவு கொண்ட ஒலிகள் இசையாகின்றன. பொருட்களின் உள்ளுறை ஓசை என்றால் அங்குள்ளவை இசையாலான பொருட்கள்…”

அவன் விழிகளின் ஒளியை கர்ணன் திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அகிபீனா உண்டவனின் உச்சநிலைவலிப்பில் என அவை விரிந்து விரிந்து சென்றன. “அரசே, இந்நகரம் உங்கள் ஆட்சியிலிருக்கிறது. இது எந்நிலையில் உள்ளது என்று அறிவீர்களா?” துரியோதனன் புன்னகை மாறாமல் “ஆம், நான் இச்சாளரத்தருகே நின்று பார்ப்பதுண்டு. நகரம் பகலில் மெல்லிய பொன்மஞ்சள்நிற ஒளியால் மூடப்பட்டிருப்பதை பார்க்கிறேன். மழைச்சரடுகள் பொன்னூல்களென ஆகி அலைபாய்கின்றன. துளிகள் பொன்னென உதிர்கின்றன. ஓசைகளும் மழைப்பொழிவும் முழுமையாக ஒத்திசைந்துள்ளன” என்றான் துரியோதனன்.

பூசகர்களுக்குரிய மென்மையான உச்சரிப்பில் “இரவில் மென்பச்சை நிறமாக ஒளிவிடுகிறது நகரம். சுவர்ப்பரப்புகள் மேல் பல்லாயிரம்கோடி மின்மினிகள் உடலொட்டிச் செறிந்திருப்பதுபோல. சிலசமயம் நீலம் என்றும் சிலசமயம் சிவப்பு என்றும் மயங்கச்செய்யும் ஒளி. இரவொளியில் நகரம் நிழல்களே இல்லாமல் பெருகியிருப்பதை நோக்கியபடி நான் நிற்பதுண்டு. விண்ணிலிருந்து நோக்கினால் ஒரு மீன் என இந்நகர் தெரியக்கூடும். அங்கே விண்மீன்களெனத் தெரிபவையும் இதேபோன்ற நகரங்கள்தானா என வியப்பேன்” என்றான்.

கர்ணன் அவனை நோக்கியபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான். ஒரு மெல்லிய தடை. பின்னோக்கித் தள்ளிச்செல்லும் பெருக்கு. அங்கிருந்து எழுந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அதை உந்தி முன்னகர்ந்து “அரசே, ஜராசந்தருக்கு நம் அரசு நட்பு மறுத்துள்ளது. அறிவீர்களா?” என்றான். துரியோதனன் அதே புன்னகையுடன் “அறிவேன்” என்றான். “விதுரர் சொன்னார். அதுவே உரியதென்றும் பட்டது. இந்த ஒத்திசைவிலிருந்து உதிர்ந்து எழ என்னால் இயலாது. இத்தருணத்தில் ஒரு போரை நான் விழையவில்லை.”

கர்ணன் எண்ணியிராதபடி சினம் கொண்டெழுந்தான். “அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் நீங்கள் அவள் காலடியில் விழுந்து கிடந்தீர்கள். அப்போது நமக்காகக் கனிந்த விழிகள் மகதருடையவை மட்டுமே” என்றான். துரியோதனன் கண்கள் விரிந்த மையங்களுடன் நோக்கி அசைவிழந்தன. “அவர்கள் அவரை கொல்லக்கூடும். அவர்களிருவரும் இணைந்தார்கள் என்றால் வெல்வது உறுதி.” துரியோதனன் புன்னகையுடன் “காலடியில் கிடந்தேன் அல்லவா?” என்றான். கர்ணன் வியப்புடன் நோக்கினான்.

“அக்காலடிகளை நான் கண்டேன்” என்றான் துரியோதனன். மேலும் மேலுமென அவன் விழிகள் விரிந்தபடியே சென்றன. “அக்காலடிகள். அவற்றின் ஒளிதான் அனைத்தும். ஆதித்யர்கள் அவ்வொளியை அள்ளிப்பருகும் விழிகள் மட்டுமே. நான் கண்டேன். மிகத்தொலைவில். முகில்களுக்கு அப்பால்.” அவன் திரும்பி “காலடியில் விழுந்துகிடந்தேன் அல்லவா? நீரும் அதைப்பார்த்தீரா?” என்றான். கர்ணன் மெல்லிய மூச்சுத்திணறலை அடைந்தான். “என்ன சொல்கிறீர்கள் அரசே?” என்றான். “காலடியில் விழுந்து கிடந்தேனா?” என்று மிக அணுக்கமான மந்தணம் ஒன்றை கேட்டறிவதுபோல துரியோதனன் கேட்டான்.

கர்ணன் எழுந்துகொண்டு “நான் சென்று படைகளை நோக்குகிறேன். நகரமே நோயில் மூழ்கியிருக்கிறது அரசே. படைகள் சிதைந்து கிடக்கின்றன. இந்நகரம் சேற்றில் யானையென மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது” என்றான். துரியோதனன் “எந்நகரம்?” என்றான். கர்ணன் சிலகணங்கள் நோக்கி நின்றபின் தலைவணங்கி திரும்பி நடந்தான்.
தன் மாளிகைக்குத் திரும்பும்போதே நோயுற்றிருப்பதை கர்ணன் உணரத்தொடங்கினான். தேரிலேறும்போது மெல்லிய நிலையிழப்பு ஒன்றை உடலில் அறிந்தான். ஆடைதான் காலைத்தடுக்குகிறதோ என தோன்றியது. தேரிலேறி அமர்ந்து புரவிகள் கிளம்பியதும் அவன் உடல் எடையிழந்து பின்னோக்கிப் பறப்பதுபோல தோன்றியது. சாலையோரக்காட்சிகள் ஒன்றுடன் ஒன்று உருகிக்கலந்து வண்ணத்தீற்றல்களாக ஆயின.

கடையாணி உரசும் ஒலி போல ஒன்று தலைக்குப்பின்னால் கேட்கத்தொடங்கியது. அவன் தலையை கையால் தட்டிக்கொண்டே இருந்தான். மாளிகையில் சென்றிறங்கி படிகளில் ஏறும்போதும் அவ்வோசை நீடித்தது. கண்களை மூடி அதை கேட்டபோது அது சிவந்த குமிழிகளாக மாறி இமைக்குள் திளைக்கத் தொடங்கியது. படிகளில் ஏறும்போது உடல் எடைமிகுந்தபடியே வருவதை அறிந்தான். இறுதிப்படியில் மூச்சுவாங்க நின்றான். உடல் வியர்வையில் குளிர்ந்திருந்தது.

சுவர்களைப் பற்றியபடி தன் அறைக்குள் நுழைந்தான். ஏவலன் ஓடிவந்து அவனை பிடிக்கலாமா கூடாதா என்று தயங்கி நின்றான். மஞ்சத்தில் கையூன்றி அமர்ந்து ஏவலனை விழிதூக்கி நோக்கியபோது நீர்ப்பாவை என கலங்கி அசையும் உருவம் தெரிந்தது. “சூடான இன்னீர்…” என்றான். அவன் “யவன மதுவா?” என்றான். “இல்லை, இன்னீர்.” அவன் “அரசே, தாங்கள் நோய் கொண்டுவிட்டீர்கள்… மருத்துவரை அழைத்துவரச்சொல்கிறேன்” என்றான்.

“வேண்டியதில்லை. களைப்புதான்.” அதைச்சொல்லவே அவன் இதழ்கள் சலிப்புற்றன. இறுதி உச்சரிப்பு வெளிவரவே இல்லை. கண்களை மூடியபடி அவன் விழத்தொடங்கினான். இறகுச்சேக்கை மெல்ல மணல் என அவனை பெற்றுக்கொண்டது. நுரை என நெகிழ்ந்து இழுத்தது. புகை என மாறி உள்ளே விழச்செய்தது. ஒலிகள் எங்கோ கேட்டுக்கொண்டிருந்தன. மழைத்துளிகள் நிறைந்த இலைகளும் முட்களும் கொண்ட காடு அரையிருளில் நீர் ஒலிக்க நின்றிருந்தது. துளிஒளிகளுடன் விழிமணிகளும் கலந்திருந்தன காகங்கள். அவன் “காகங்கள்” என்றான். அவ்வொலியை அவனே எவருடையதோ என்று கேட்டான்.

உடல் உருகிப்பரவியது. கைகளும் கால்களும் தனித்தனியாக விலகின. அவன் சித்தம் மட்டும் மெல்லிய ஒளியுடன் ரசம் போல சேக்கைமேல் பரவிக்கிடந்தது. அறைக்குள் சுவர்கள் ஒளிகொண்டன. பச்சை ஒளி. நீலமோ என ஐயுறச்செய்யும் ஒளி. அனைத்து ஒலிகளும் இசைவுகொண்டன. அவன் துரியோதனனிடம் “ஆம், இசைவு” என்று சொன்னான். “இவை முற்றிலும் இசைவுகொண்டவை. அனைத்திலுமோடும் இசைவு என்பது ஒரு பெரும் மாயவலை. அந்தச் சிலந்தி நஞ்சுநிறைந்தது.” துரியோதனன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனுக்குமேல் இளநீல ஒளிகொண்ட மேகம் ஒன்று நின்றிருந்தது.

அவன் அவளை கண்டான். விழிநிறைத்து குருடாக்கிய பொன்னிறப் பேரொளி. அதை நோக்கி செல்லலாகாது என்று அவனிடம் எவரோ சொன்னார்கள். மேலும் மேலும் ஆழ்ந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அச்சொல்லே அவனை அங்கே உந்தியது. அங்கு நின்றிருந்தவள் அவன் நன்கறிந்தவள். வட்டக்கரியமுகத்தில் ஒளிமிக்க கண்களும் இனிய புன்னகையும் கொண்டிருந்தாள். அவன் அவளை அணுகிச் செல்லச்செல்ல இனிய பெண்ணுருவாக சிறுத்து அங்கே நின்றாள்.

அவனைக் கண்டதும் நாணம் கொண்டு விழிப்பீலிகளை சரித்தாள். கன்னங்களில் சிவந்த கனிவுகள் தோன்றித்தோன்றி மறைந்தன. அவன் காலடிகளே மெல்லிய அசைவாக அவள் உடலில் தெரிந்தன. அவன் அணுகியபோது அவள் விழிதூக்கி அவனை நோக்கினாள். அவன் நடுங்கும் கைகளால் அவள் இடையை தொட்டான். அவள் முகம் தூக்க கூந்தல் சரிந்து சுருள்களாக இறங்கியது. சுரிகுழல்கற்றைகள் முகத்தைச்சூழ்ந்து அசைந்தன. கரும்பளிங்கின் ஒளிவரிகள் படர்ந்த தோள்கள் மூச்சில் எழுந்தமைந்தன. அவன் அவள் அணிந்த பொற்கவசத்தை நோக்கினான்.

அவன் நோக்கை உணர்ந்து “என்னை சகஸ்ரகவசி என்கிறார்கள்” என்றாள். “ஆயிரம் கவசங்களா?” என்றான். “ஆம், ஆயிரம் வாயில்களுக்கு உள்ளே.” அவன் அக்கவசத்தை தொட்டான். அது அனலால் ஆனதென்று உணர்ந்தான். அவன் கை வெம்மையில் உருகத்தொடங்கியது. உடலெங்கும் வலியில் நரம்புகள் தளிர்க்கொடிகள் போல பொசுங்கிச்சுருண்டன. அவன் அக்கவசத்தை நீக்கி உள்ளமைந்த அடுத்த கவசத்தை கண்டான். “ஒன்றென ஆகுக!” என்றாள். அவள் விழிகள் அறியாத்தொலைவில் மின்னும் விண்மீன்கள். “இருமையழிக!” என்று எங்கோ வானம் சொன்னது. “யார்?” என்று அவன் கேட்டான். “இரண்டென இருத்தலின் பெருந்துயர்” என்று அவனே சொல்லிக்கொண்டதுபோல பிறிதொரு ஓசையை கேட்டான்.

திகைப்புடன் “யார்?” என்று அவன் கேட்டான். அவள் விழிகள் கருமைகொண்டு அகன்றன. இளம் எருமையின் கண்கள் அவை என அவன் எண்ணியபோதே அவள் எருமைமுகம் கொண்டிருந்தாள். நீண்டு வளைந்த கொம்புகளும் தொங்கும் வாழைப்பூமடல் காதுகளும் கரியநுங்கு மூக்கும் நீலநாக்கு அமைந்த வெள்ளாரங்கல் பல்நிரையும் என அவன் முன் நின்றாள். அவள் எழுப்பிய உறுமலை கேட்டான். சூழவிரிந்திருந்த முகில்கள் அனைத்தும் ஒளியணைந்து கருமைகொண்டன. இறுதி ஒளியும் அணைந்தபின் அவள் விழிகளே எஞ்சியிருந்தன. அவை நெடுந்தொலைவில் விண்மீன்கள் என தெரிந்தன.

மிக அருகே எருமைத்தோலின் வெம்மை. எருமைத்தோலின் இளஞ்சேற்றுமணம். அதன் குளம்படிகளால் அவன் அறை அதிர்ந்துகொண்டிருந்தது. எருமையின் முக்காரியை மிக அணுக்கமாக கேட்டான். கையை ஓங்கி சேக்கைமேல் அறைந்து அவ்விசையாலேயே விழித்துக்கொண்டான். உடலுக்குள் அவன் வந்து அமைய மேலும் கணங்கள் தேவைப்பட்டன. அதுவரை இருளுக்குள் நின்று ததும்பி தவித்தான். எழுந்தோடி வாயிலை அடைந்து “கனகரை வரச்சொல்லுங்கள். அத்தனை அமைச்சர்களும் இப்போதே இங்கு வந்தாகவேண்டும்…” என்று ஆணையிட்டான்.

கனகர் வருவதற்குள் அவன் மூன்றுமுறை யவன மதுவை குடித்திருந்தான். கனகர் கம்பிளியைப் போர்த்தி உடல்குறுக்கி நடுங்கிக்கொண்டிருந்தார். “நம் தூதுப்பறவைகள் பாரதமெங்கும் செல்லட்டும். அனைத்து மருத்துவநிலைகளுக்கும் அனைத்து தவச்சாலைகளுக்கும் செய்தி சென்றாகவேண்டும். இந்நோயை அறிவித்து மருத்துவர்களை தேர்க!” கனகர் “பிறர் இச்செய்தியை அறியவேண்டியதில்லை என இதுகாறும் மந்தணமாகவே வைக்கப்பட்டிருந்தது” என்றார். “இனி பொறுப்பதில் பொருளில்லை. இன்றே செய்திகள் எழுக!” என்றான் கர்ணன்.

முந்தைய கட்டுரைதினமலர் 26, நீர்ப்பாசி
அடுத்த கட்டுரைஅர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்