கோவை சந்திப்பு கடிதங்கள் 3

2

அன்பின் ஜெ,

கடந்த மூன்று நாட்களாக கோவை சந்திப்பு குறித்த நினைவுகள்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. என்னைப் போன்ற புதிய வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் மனதில் நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கக் கூடிய செறிவான அனுபவமாக இருந்தது. முதல்நாள் காலையில் அனைவருக்கும் முன்னரே வந்திருந்த தங்களுடன் கைகுலுக்கியது முதல், இரண்டாம் நாள் மாலை சிறுதுளி அமைப்பாளருடன் உரையாட நீங்கள் கிளம்பியது வரையிலான உங்கள் சித்திரத்தைத்தான் அகத்தில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். வாசிக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்றாலும் இந்த இரண்டு நாள் அனுபவம், இலக்கியத்தின் மீது என் இதுவரையிலான பார்வையை பலவகைகளிலும் கேள்விக்குள்ளாக்கியது. உண்மையில் என் புரிதல்கள் எவ்வளவு தூரம் முதிர்ச்சியற்றவை என்ற திகைப்பு இன்னமும் நீங்கவில்லை.

விவாதத்தின்போது தவறான கலைச் சொற்களை பயன்படுத்துதல், ஒரு படைப்பிலிருந்து மேற்கோள் காட்டும் போது அதை துல்லியமாக நினைவுகூராமலிருத்தல், மேலும் அது சொல்லப்படும் context ஐ தவறாக முன்வைப்பது,. போன்றவை குறித்து நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தாலும், சொல்லிவைத்தாற்போல் நாங்கள் அந்த தவறுகளை வரிசையாக செய்தோம். இம்மாதிரி பிழைகள் ஏற்படுத்தும் சிக்கலை நேரடியாக விவாதத்தின்போதே தெரிந்து கொண்டது பெரிய திறப்பாக இருந்தது.

இரண்டாம்நாள் புதிய வாசகர்களின் படைப்புகளை நீங்கள் வாசித்த வேகத்தை ஒரு நிகழ்த்துக் கலை என்றே சொல்வேன். ஒருவர் அத்தனை விரைவாக ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதேநேரத்தில் அதுகுறித்த விரிவான விமர்சனமும் துல்லியமாக நினைவுகூரவும் முடியும் என்பதை இன்னமும் என் தர்க்கமனம் ஒப்பவில்லை.
ஒரு படைப்பை குறித்த விமர்சனத்திற்குள் இறங்கும் முன் முதலில் அந்த படைப்பு,  அந்த படைப்பு வடிவத்திற்கான சட்டகத்திற்குள் வருகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என சொல்லி கொடுத்த போது குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தேன். இவையெல்லாம் ஒரு வாசகன் கொண்டிருக்கவேண்டிய அடிப்படையான பார்வைகள் இல்லையா?

விக்கி அண்ணாச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது பகடியாகவும், படைப்புகள் குறித்த விவாதத்தின் போது ஆதார விதியாகவும் நீங்கள் முன்வைத்த வரிகள் முக்கியமான பாடம் எனக்கு “முதல்ல அது கவிதையா இல்லையான்னு பாருடா, அப்றமா அதுல நுட்பம் இருக்கானு பாக்கலாம்..”

சந்திப்பின்போது மிகச்சில கேள்விகளே கேட்டேன். அதுவும் கேட்கும்போதே அபத்தமானவை எனத் தோன்றியது. கேட்டு முடித்தபின்னர் அது உறுதியும் ஆனது. முற்றிலும் அபத்தமானவை எனத் தோன்றிய கேள்விகளை மனதிலேயே வடிகட்டிவிட்டதால் பெரும்பாலான கேள்விகளை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் புன்னகையுடன் பொறுமையாக பதில் சொல்லியிருப்பீர்கள் என்றே இப்போது தோன்றுகிறது. தங்களைப் பற்றி கறாரான இலக்கிய விமர்சகர் என்ற பிம்பம் உருவாகியிருந்தாலும் யோசித்து பார்க்கையில் நகைச்சுவை கலக்காமல் நீங்கள் எதுவுமே பேசவில்லை எனத் தெரிகிறது.

நிகழ்வு ஒருணங்கிணைப்பில் கிட்டத்தட்ட எந்த சிக்கலும் ஏற்படாததால் நடைபெற்றது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு என்ற பிரக்ஞையே ஏற்படவில்லை. தொடர்ந்து பல நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதால் கிட்டிய அனுபவமாக இருக்கலாம். அனைவருக்கும் நன்றிகள்.

தான் இல்லாமல் எதுவும் சரியாக நடைபெறாது என்ற எண்ணத்தை உருவாக்குவதே ஒரு சிறந்த காரியதரிசிக்கான அடையாளமாகும். கோவை வீதிகளில் சுற்றிய போது மீனாம்பிகை அக்கா கூட்டத்தை ஒழுங்குபடுத்திய விதம் அவர் ஏன் காரியதரிசியாக இருக்கிறார் என்பதை புரிய வைத்தது.

எழுத்தின் மூலம் எப்போதும் உடனிருப்பவர் என்ற எண்ணம் இருந்தாலும், நேரில் சந்தித்து பேசுவதற்கு எப்போதும் ஒரு திரை தடுத்துவந்திருக்கிறது. அந்த திரையை விலக்கி அனுக்கமாக உணரவைத்தமைக்கு நன்றி.

அன்புடன்,
பாரி.

9

அன்பு  ஜெயமோகன் ,

கோவை சந்திப்பில்  தங்களுடன்  இரு  நாட்கள்  இருக்க  வாய்ப்பு  கிடைத்தது  எனக்கு கிடைத்த  வரம் .தமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல,  சிந்தனாவாதியின் கருத்துக்களை அள்ளி  உள்வாங்க சிரமம்தான் பட்டுப் போனேன்.

மதம், இலக்கியம், அரசியல்,தற்கால தமிழக தேர்தல் , பெண்கள், இன்னும் பலவற்றை பற்றி விளக்கமாக பேசினீர்கள். என்னுடைய  முப்பது வயதில் இந்த சந்திப்பு நடந்திருந்தால் என்ற ஆதங்கம் திரும்பி வரும்போது தோன்றியது

கடந்த  பன்னிரண்டு  ஆண்டுகளாக தங்களின்  வாசகனாக புத்தகம் படித்தும்,தினசரி இணையத்தில் படித்தும் வரும் எனக்கு நீங்கள் அளித்த  தெளிவுகள் ஏராளம் அதற்கு  நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

சீரழித்த திராவிட இயக்கங்களிலிருந்து இன்றைய  இளைஞர்களை மீட்டு எடுப்பது  மட்டுமல்லாமல் சரியான திசை வழி நடத்தும் தங்களின்  பணி

பெரும் பாராட்டுக்கு உரியது .தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு தாங்கள் அறியா என்னைப் போன்ற வாசகர்கள் பலர் தங்களுக்கு உண்டு என்பதனை  மறவாமல் பணி தொடருங்கள்.

வரும் காலத்தில்  புதியதோர் தமிழகத்தை உருவாக்கும் பணியில் நமது பாசறையை சேர்ந்தவர்கள் முன்னணி வகிப்பார்கள் என நம்புகிறேன்

அது இலக்கியம்  மட்டுமல்ல அனைத்து துறைகளிலும்

மாபெரும் சேவையில் பிரதிபலன் பாராது உழைத்து வரும் உங்களுக்கு  என்னுடைய  வாழ்த்துக்களும் அன்பும்

தங்களின் அன்பு வாசகன்

செ. குமாரசாமி

திருசெங்கோடு.

 

Click here to R
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23
அடுத்த கட்டுரைதெய்வ மிருகம்