கேள்வி பதில் – 27, 28

பொழுதுபோக்கிற்காக இல்லாமல் ஓரு உன்னத அனுபவத்துக்காகப் படிக்க நான் தயார். ஆனால் இலக்கியத்தரத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இலக்கணச் சுத்தத்திற்கும் ஓரளவாவது கொடுக்கிறீர்களா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

உன்னத அனுபவம் இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற உங்கள் எண்ணம் அதை அடையும்போது மாறலாம். இப்போது உங்கள் கேள்வியே இலக்கண சுத்தமாக இல்லை ‘ஓர் உன்னத’ என்றிருக்கவேண்டும். ‘இலக்கணச்’ என்று ஒற்றுமிகாது. இலக்கணமும் சுத்தமும் ஒரே சொல்லாகப் புணராதவை. ‘பொழுதுபோக்கிற்காக அல்லாமல்’ என்பதே சரி.

மன்னிக்கவும் உங்களை மட்டம் தட்டவில்லை. வேடிக்கைக்காக. இணையத்திலிருந்து மேலை இலக்கியத்தின் ஒரு நல்ல ஆக்கத்தை எடுத்து மைக்ரோ சாஃப்ட் வேர்ட் பாட்- இல் ஒட்டிப் பாருங்கள். ஏராளமான சொற்கள் சிவப்பால் பச்சையால் அடிக்கோடிடப்பட்டிருக்கும். ஜேம்ஸ் ஜாய்ஸ், வெர்ஜீனியா உல்ப், ஃபாக்னர் நூல்கள் என்றால் சிவப்போ பச்சையோ இல்லாத சொற்றொடர்களே குறைவாக இருக்கும்.

ஏனெனில் இலக்கணம் என்பது சராசரிப் பொதுமொழியின் விதிகளால் ஆனது. தொடர்புறுத்தலை புறவயமாக ஆக்கும் நோக்கம் கொண்டது. இலக்கியம் அந்த சராசரிப்பொதுமொழியைத் தாண்டி தொடர்புறுத்த முயல்வது. ஆகவே என்றுமே அது இலக்கணத்தின் எல்லைகளை மீறிச்செல்லும் துடிப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு மீறாத இலக்கியம் உயிரற்றது. ‘இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்று வகுத்துக் கூறிய ஒரு மொழியில்தான் இந்த குரல் எப்போதும் எழுகிறது என்பது ஒரு முரண்நகை.

மொழியின் எல்லைகளை அதற்குள் புழங்குகையில் மீற, விரிவாக்க இயலாது. மொழியின் வளர்ச்சி என்பது குழந்தைகள், கவிஞர்கள் [அதாவது படைப்பூக்கம் கொண்ட செயல்பாடுகள்] மூலமே நிகழ்கிறது என்பது நாம் சாம்ஸ்கி போன்ற மொழியியலாளர் கணிப்பு. குழந்தை, இலக்கணத்தை அறியாத நிலையில் மொழியின் புதிய கூறுகளை சாதாரணமாக உண்டு பண்ணுகிறது. பிறகு அதை நாம் இலக்கணத்துக்குள் கட்டிப்போடுகிறோம். கட்டுக்குள் நிற்க மறுக்கும் அடங்காத குழந்தைகள் இலக்கியவாதிகள்.

எல்லாப் பெரும்படைப்புகளும் தன் காலகட்டத்து இலக்கணஎல்லைகளை மீறியவையே. கம்பனுக்குச் சமகாலப் பாடல்களை ஒப்பிட்டாய்ந்தால் கம்பனின் மீறல்கள் வியப்பூட்டும். ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ என்ற பாரதியின் வரியை வாசித்து ஒரு பெருந்தமிழ்ப் பண்டிதர் தலையில் அடித்துக் கொண்டார் என்று வாசித்திருக்கிறேன்.

-*-

ஒரு தேடலோடு உங்களைப் படிக்க வேண்டும்” என்று சொன்னபோது, ‘தேடாமலே கிடைக்கும் சந்திப்பிழைகள் உனக்கு போனஸ்!” என்று வந்த உடனடிக் கருத்து எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது. நேரடியாகவே கேட்கிறேன், வெறும் ஐந்தாறு மாதங்களாக மட்டுமே இணையத்தில் தமிழை மும்முரமாகப் படிக்கும் எனக்கே என்னையறியாமல் பல பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கமுடியும்? ஏன் இந்த விஷயத்தில் சமரசம்? நட்பாக ஒரு கேள்வி-மீறிவரும் பிழைகளை உங்களுக்குத் திரும்பிப்பார்க்க நேரமில்லாவிட்டாலும், இந்தக் கணினி யுகத்தில் ஒரு ஆர்வமுள்ள ரசிகர் உங்களுக்காகச் செய்யமாட்டாரா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

சரித்திரப்பிழைகளை உபரிஈட்டலாகப் பெற்று ஷேக்ஸ்ஃபியரை வாசிக்கலாமென்றால் சந்திப்பிழையைப் பெற்று என்னையும் வாசிக்கலாம்.

ஆவணக் காப்பகங்களில் சேமிக்கபட்டுள்ள பெரும்படைப்பாளிகளின் கைப்பிரதிகளைப் பார்த்துள்ளேன். அவை ஒருபோதும் நேர்த்தியானவையோ பிழையற்றவையோ அல்ல. படைப்புமனத்துக்கும் மொழியின் இயந்திரஅமைப்புக்கும் இடையே ஓர் முரண்பாடு இருந்தபடியே இருக்கும். அதற்குப் பல காரணங்கள். முக்கியமான காரணம் படைப்பாளியின் மனம் மொழியின் நுட்பங்களில் ஓடும்போது இப்பிழைகள் அவன் கண்ணில்படுவதே இல்லை என்பதுதான்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்துக்கு இருநாட்கள் முன் பேராசிரியர்களுக்கு மறுபயிற்சி வகுப்பு எடுக்கச் சென்றிருந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சு.வேணுகோபாலின் ஆசிரியராக இருந்தவரும் நல்ல இலக்கிய வாசகரும் என் நண்பருமான பேரா.பா.அ.ம.மணிமாறன் பயிற்சிக்கு வந்திருந்தார். சு.வேணுகோபால் இப்போது அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியர். அவர் அங்கேபடித்தபோது இலக்கணத்தில் மிகப்பலவீனமாக இருந்தமையாலும் கையெழுத்துப்பிழைகளை தவிர்க்க இயலாததனாலும் மேற்படிப்புக்கு அங்கே இடம் மறுக்கப்பட்டது என்றார். இப்போது அவர் தமிழின் முக்கியப் படைப்பாளியாகத் தன்னை நிறுவிக் கொண்டு விட்டதனால் அவர் அங்கே அங்கீகாரம் பெற்று ஆசிரியரானார் என்றார் அப்போதே அவரது பலத்தை அடையாளம்கண்டுகொண்டவரான மணிமாறன். எங்கும் இதே நிலைதான்.

என் கைப்பிரதியில் சந்திப்பிழைகள் ஓரளவு உண்டு, ஆனால் அது மலிந்து கிடக்காது என நானறிவேன். அதற்குக் காரணம் நாங்கள் குமரியில் பேசும் மொழி அழுத்தம் குறைவான மலையாள உச்சரிப்பு கொண்டது என்பதும், உச்சரிப்பிலிருந்து விலகி மொழியைப் பார்க்க என்னால் முடியவில்லை என்பதும்தான். மலையாளத்தில் ஒற்று என்ற எழுத்தே இல்லை. குமரிமாவட்டத்துத் தமிழாசிரியர்கள் ஒற்றை மண்டைகளில் புகுத்த அக்காலத்திலேயே பிரம்பைத் தாராளமாக பயன்படுத்துவார்கள். சுந்தர ராமசாமிக்கு இப்பிரச்சினை இருந்து அவர் பலகாலம் பயிற்சி எடுத்து அதை வென்றதாகச் சொல்லியிருக்கிறார். அது எல்லாருக்கும் இயல்வதல்ல. என்னால் கைப்பிரதிகளில் எழுத்துப்பிழைகளைத் திருத்தமுடியாது. அதற்காக என் கவனம் நிற்காது. ஒவ்வொரு முறையும் நடையின் கச்சிதத்திலேயே கவனம் போகும். விஷ்ணுபுரம் பதினைந்துமுறைக்கும் மேலாக என்னால் செப்பனிடப்பட்டது. ஆனால் எளிய எழுத்துப் பிழைகள் கூட என் கவனத்துக்கு வரவில்லை. சொல்லப்படும் பொருளே மனதை நிரப்பியிருக்கும். அதன் ஒலி, மொழி நேர்த்தியே முடிவற்ற சவாலாக இருக்கும்.

என் நூல்கள் எம்.எஸ், வசந்தகுமார் ஆகியோரால் செப்பனிடப்பட்டுத்தான் வருகின்றன. அவற்றில் சந்திப்பிழைகள் அதிகம் என்று சொல்பவர்களின் தமிழாசிரியர்களின் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும். ஆனால் மறுபதிப்பு நூல்கள் வரும்போது மீண்டும் அச்சுகோர்ப்பாளர் விடும் பிழைகள் வந்துவிடுகின்றன. அதற்கு இப்போது ஒன்றும் செய்வதற்கு இல்லை. இணையத்தில் நான் எழுதுபவை அவசரமாக எழுதப்படுகின்றன. அவற்றை மெய்ப்புநோக்க இணைய இதழ்களுக்கு வசதியில்லை. என்னை விட அதிகமான பிழைகளுடந்தான் மற்றவர்கள் எழுதுகிறார்கள் என சமாதானம் செய்யவேண்டியதுதான்.

கணினி யுகத்தில் படிக்காமல் வசைபாடுவதிலும் விஷயம் தெரியாமல் நக்கல்செய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் ஒப்புநோக்க பெருகியுள்ளனர் என்பதே இணையம் மூலம் நானறிந்ததது.

மேலும் ஒன்று, சந்திஒற்றுகள் சார்ந்து இருபது வருடம் முன்பு இருந்த விதிகளல்ல இப்போதுள்ளவை. அவை நடைமுறையில் மாறிவிட்டன. மாறுவது இயல்பும் தொல்காப்பியரால் அங்கீகரிக்கப்பட்டதுமாகும். ‘அவனுக்குக் கொடுத்தான்’ அல்ல இப்போது, ‘அவனுக்கு கொடுத்தான்’ தான். இதையறியாத சிலர் ஒற்றுப்பிழை பொறுக்குவதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன். இலக்கணம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட விதி மட்டுமே.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 26
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 29, 30, 31, 32