கோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்

9

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கோவையில் நடந்த வாசகர் சந்திப்பு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வாசிப்பு என்பது நமது தனிப்பட்ட உலகம் என்று இருந்த எனக்கு இலக்கிய வாசிப்பில் இருக்கவேண்டிய முக்கியமான தெளிவையும் அடையாளம் காணப்பட வேண்டிய மன எழுச்சியையும் மிக தெளிவாக சுட்டிக்காட்டி வாசிப்பனுபவத்தை மாற்றி அமைத்து கொடுத்துள்ளீர்கள்.

“நீலம்” நாவல் உள்ளே நுழைய சிரமமாக உள்ளது என்று சந்திப்பின்போது கூறியிருந்தேன். அதற்கு உங்களிடம் நேரடியான பதிலை எதிபார்த்திருந்தேன். ஆனால் சந்திப்பு முடியும்போது அந்த தெளிவு இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது. நீலத்தின் வாசல் இப்போது திறந்துவிட்டது. திருப்பல்லாண்டில் பறவைகள் எழுப்பும் ஒலிகளுக்கிடையில்  ஸ்ரீதரா மாதவா என்று வேறொரு பறவையின் ஒலியையும் இப்போது என்னால் கேட்க முடிகிறது.

அச்சு மற்றும் ஒளி ஊடகம் தொடர்பான குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் யாரையும் நான் நேரில் சந்தித்து உரையாடியதில்லை. அவர்கள் படைப்பு மூலம் நாம் அவர்களைபற்றி உருவாக்கும் பிம்பத்தை சந்திப்பு ஒன்றே முழுமை செய்கிறது என்று உணர்கிறேன்.

இலக்கியப்படைப்பில் மிக அதிக உயரத்தில் இருக்கும் நீங்கள்  அடிப்படைப்புரிதல் கூட இல்லாத வாசகர்களின் அறியாமையை தங்கள் பொறுப்பென எடுத்துக்கொண்டு பொறுமையாக விளக்கி தெளிய வைத்ததற்கு நன்றி.

செறிவான சிந்தனைகளையும் புதிய திறப்புகளையம் சாமானியர்களுக்கு வழங்கி அவர்களை கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சியாக தினமலரில் நீங்கள் கட்டுரைகள் எழுதுவதும்  மகிழ்ச்சியாக உள்ளது.

இடையறாத பணிகளுக்கிடையில் என்ற சொற்றொடர் அரசியலில் பொருத்தமில்லாமல் இடையறாது கூறப்படுகிறது. ஆனால் அது தங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்  என்று கருதுகிறேன். வாசகர்களின் சந்திப்புக்காக இவ்வளவு நேரத்தை ஒதுக்கி அதை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றி அமைத்ததற்கு நன்றிகள் பல.

கேசவமூர்த்தி

கோவை.

 

மதிப்புக்குரிய ஜெயமோகன்,

கோவையில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பேருந்தில் பெங்களூருக்கு திரும்பும் பொழுதும் இன்றும் விவாதங்கள் மனதில் மறுஓட்டம் ஒடிய வண்ணமே இருக்கின்றன.

நண்பர்களின் (அரங்கசாமி, கிருஷ்ணன், சுரேஷ், மீனா, விஜயசூரியன், அஜிதன், சீனு, ராஜமாணிக்கம்) சிரிப்பையும் அன்பையும் மறக்க இயலாது. ஓர் இனிய நிகழ்வு.

சந்திப்பில் என்னுள் ஏற்பட்ட தனிப்பட்ட தாக்கங்கள்:

1} நாம் விவாதித்த IIM பட்டதாரிகளில் நானும் ஒருவன். நீங்கள் நேற்று குறிப்பிட்ட venture capital-ஐ சார்ந்த துறையில் தான் வேலை. வாழ்க்கையில் என் இடம் என்னவென்று யோசிப்பதற்குள் CA, IIM இரண்டையும் எந்த ஈடுபாடும் இல்லாமல் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டேன். 2017-இலிருந்து, செய்யும் தொழிலை விட்டுவிட்டு (சேமிப்பின் துணையில்) பயணங்களிலும் கலையிலும்  ஈடுபட நினைத்துள்ளேன். அந்த திட்டம் நிறைவேறும் வரை அவ்வப்பொழுது சோர்வும் பயமும் என்னை ஆட்கொள்கின்றன. வேலையின் பளுவால் உத்வேகமும் இல்லாத நிலையில் இருக்கும் எனக்கு, வாழ்க்கையை ஒவ்வொரு தருணத்திலும் முழுதாய் வாழும் உங்களை சந்தித்ததில் ஒரு மெல்லிய நம்பிக்கை கைகூடி உள்ளது.

2) சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் பள்ளியில் பெரும்பாலும் ஆங்கிலமும் ஹிந்தியும் தான் கற்றேன். தமிழை மூன்றாம் மொழியாக மூன்று வருடங்கள் மட்டுமே படித்தேன். அதற்குப்பிறகு, சுமார் 4 வருடங்களுக்கு முன்னால் என் அடையாளத்தை பற்றிய கேள்விகள் என்னுள் எழுந்தபோதுதான் தமிழை படிக்கத்துவங்கினேன்.  நான் ஆங்கிலத்தில் யோசிப்பவன். அதனால் தமிழில் சரளமாய் பேசுவது, குறிப்பாக நுண்ணிய அவதானிப்புகளையும் கேள்விகளையும் முன்வைப்பது, இன்னும் எனக்கு சிக்கல் தான். சந்திப்பில் எல்லோரும் பேசிய தமிழ் இனிமையாய் இருந்த அதே அளவுக்கு intimidating-ஆகவும் இருந்தது. அதனாலேயே நான் அவ்வளவு பேசவில்லை.

3) நேற்று நீங்கள் விரிவாய் விளக்கிய sentiment vs melodrama vs emotion வேறுபாடு- மிகவும் முக்கியமான ஒன்றென்று நினைக்கிறேன். எந்தக் கலையை அணுகும் எவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இப்பொழுது யோசித்தால் என்னையும் அறியாமல் இந்த வேறுபாடை வைத்துத்தான் நான் ஆங்கில இலக்கியத்தையும், சினிமாவையும் மதிப்பிட்டிருக்கிறேன் என்று படுகிறது.

4) நண்பர்களின் சிறுகதைகளை நீங்கள் விவாதித்த விதம் மிகவும் கறாராகவும், துல்லியமாகவும் இருந்தது. நான் எழுதிய கதையை நேற்று உங்களுக்கு காட்ட முடியவில்லை என்று மிகவும் வருத்தம்

நன்றி,

விஜய், பெங்களூரு

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20
அடுத்த கட்டுரைபூதம்