தினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை

 

 

images

ஜெ

இன்றைய தினமலரில் குடிமகனின் சுயமரியாதை என்னும் கட்டுரையை வாசித்தேன்

நான் காமராஜருடன் பழகிய அனுபவம் உள்ளவன். என் தோளில் அவர் தட்டிப்பேசியதை இப்போதும் நினைவு வைத்திருக்கிறேன். அப்போது நான் சாதாரண அரசு கிளார்க். என் பணியிடத்துக்கு வந்த முதல்வர் காமராஜ் என்னிடமே சந்தேகங்களைக் கேட்டு என் தோளைத்தட்டி வரட்டுமா என்று சொல்லிவிட்டுச்சென்றார்

அவர்களைப்போன்றவர்களை நாம் தோற்கடித்தோம். காரணம் நம் அடிமைப்புத்தி

ரா. மூர்த்தி

 

ஜெ,

தினமலர் கட்டுரை படித்தேன். சமூகத்தில் மிகப் பெரும்பாலாலோர் செவி மற்றும் ஊடகங்கள் வழியாகவே அபிப்பிராயங்களை உருவாக்கி கொள்கிறார்கள். அனுபவித்து புரிந்து கொண்டோர் உள்ள எண்ணிக்கை மிக குறைவு. வடக்கு இவர்கள் சொன்னது போல் வளர்ந்து இருந்தால் ஏன் இன்று சின்ன ஊரில் கூட ‘இதர் பானி’ என்ற குரல் முரணாக ஒலிக்கிறது. இங்கு பரபரப்பாக இன்றும்கூட பேசப்படுகிற பகுத்தறிவு மொத்தமாக நிதர்சனத்தில் காலியாக உள்ளது.

அவரவருடைய வசதிக்காக ஏற்பட்டதே நீங்கள் சொல்லும் நாம் – அவர் என்ற வியாபார slogan. உங்களை போன்றவர்களின் எழுத்தும் உண்மையான பகுத்தறிவும் நிச்சயமாக மாற்றத்துக்கான விதையை விதைக்கும்.

நடராஜன்

***

நாம் –அவர் என்னும் கட்டுரையை வாசித்தேன், ஒரு வித்தியாசமான கட்டுரையாக எனக்குப் படுகிறது. வாசிக்கும்பொழுது வேறு ஒரு சிந்தனைக்கு இட்டு சென்றது. என்னுடைய தந்தை ஒரு இராணுவத்தில் பணிபுரிந்தார், நாங்கள் இராஜபாளையத்திலிருந்து ஜம்மு வரை செல்லவேண்டும். அப்பொழுது டிரெயின் கொல்லத்திலிருந்து வரும். இந்த இராஜபாளையத்திலிருந்து ஸ்டேஷனில் பலரும் மலையாளி கொலையாளி என்று பேசுவதை கேட்டிருந்தேன், ஏன்? என்று எனக்கு தெரியாது. நாங்கள் இராணுவ விடுதியில் தங்கியிருந்தபொழுதும் தமிழர்களுடன் சில தயக்கத்திற்கு பிறகு வட நாட்டினர் எளிதாக பழகிவிடுவார்கள் ஆனால் மலையாளிகளிடம் ஒரு வடநாட்டினர் நெருக்கமாக இருக்க தயங்குவார்கள். இது ஏன் எதனால் எற்பட்டது! என்று எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. எனக்கு இன்று மலையாள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், உண்மையில் எனக்கு எந்த ஒரு வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் அன்று ஏற்படுத்திய மலையாளி-கொலையாளி என்ற ஆழ் படிமம் மட்டும் இன்னும் என்னைவிட்டு மறையவில்லை.

இப்படிக்கு

இரா.மீ.தீத்தாரப்பன்.

முந்தைய கட்டுரைகோவை புதியவாசகர் சந்திப்பு
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20