அன்புள்ள ஜெயமோகன் கட்டுரையாளர் அவர்களுக்கு
ஆசிரியர்களைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். நானும் ஆசிரியராக இருந்தவன். ஆசிரியர் கூட்டணியுடனும் தொடர்பு இருந்தது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. எந்தச்சூழலிலும் ஆசிரியர்களுக்குத் தேர்தலில் ஒரு பங்கு உண்டு. ஆனால் அதைவைத்து மட்டும் எந்தக்கட்சியும் ஜெயிக்க முடியாது. ஆனால் அது ஒரு அம்சம்.
என்ன காரணம் என்றால் ஒரு 5 சதவீத பூத்துக்களில் பெரும்பாலும் ஓட்டே போலிங் ஆவது கிடையாது. அந்த பூத்துக்கள் அரசூழியர்களால்தான் கையாளப்படுகின்றன. இப்போதுகூட ஓரளவு அது நிகழ்கிறது. இது உண்மை
மற்றபடி பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தேர்தல்பணி என்பது பெரும் கொடுமை. எப்படியாவது தப்பித்துவிடத்தான் முயற்சி செய்வார்கள்
ஜெயராமன்
***
அன்புள்ள ஜெயமோகன்
ஆசிரியர்களைப்பற்றி நீங்கள் சொன்னது ஓரளவு உண்மை. கடுமையாக மறுப்புதெரிவிக்க வந்த அ.வெண்ணிலாகூட அதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலான அரசூழியர்களின் வாழ்க்கை இரண்டுவகையானது. முக்கால்வாசிப்பேர் கடுமையாக உழைத்து நோய்வந்து வாழ்கிறார்கள். மிச்சபேர் எல்லாவகையான ஊழல்களையும் செய்கிறார்கள். உழைப்பவர்களுக்கும் சேர்த்து கெட்டபெயர் அமைகிறது
செல்வராஜ்
***
அன்புள்ள ஜெயமோகன்
பிகாரில் அந்த 30000 ஆசிரியர்களையும் வேலைநீக்கம் செய்யவேண்டும், அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவரி எழுதியபின் அ.வெண்ணிலா மறுப்பை எழுதியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்
சாதாரணன் சுந்தரம்
***
அன்புள்ள ஜெயமோகன்
அரசு ஊழியர்களைப்பற்றியும் இதழளர்களைப் பற்றியும் தொலைக்காட்சியைப் பற்றியும் அப்பட்டமாக நீங்கள் எழுதியதை ரசித்தேன். இன்றைக்கு இம்மாதிரி வெளிப்படையாக எழுதுவதற்கு வாய்ப்பே இல்லை. நன்றி
மு.புண்ணியகோடி