மொழி 6,கலைச்சொற்கள் பற்றி…

ஜெ,

தொன்மம், படிமம், விழுமியம் ஆகிய சொற்கள் தொடர்ந்து உங்கள் கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. இவற்றின் பொருளென்ன என்று புதிய வாசிப்பாளர்கள் தெரியாமலும் தொடர்ந்து வாசிப்பவர்கள் கூட தங்களுக்கென ஒரு புரிதலோடு உள்ளார்கள் என நினைக்கிறேன். இக்கலைச்சொற்களை ஓரிடத்தில் தொகுக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா சரியான இடமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அங்கு விவாதித்து எழுதுபவர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்களை போடலாம். மேலும் தேடு பொறிகள் அவற்றை முதலில் சுட்டும்.

கூகுளில் தொன்மம் எனத் தேடியபோது, தமிழ் விர்ச்சுவல் யூனிவர்சிட்டியின் இப்பக்கம் கிடைத்தது.

ராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது.

சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது. வெறும் வருணனை கூடப் படிமம்தான். ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம் அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும் சொல் ஓவியம் சிறந்த படிமமாகும்.

இவையெல்லாம் சரியா?

உங்கள் கட்டுரையை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தபோது ‘விழுமியம்’ என்றால் என்ன என்ற கேள்வி வந்தது. அதற்கு நான் எனக்கு அச்சொல் ஏற்படுத்தும் உணர்வினால் எனக்குத்தோன்றிய பொருளை இவ்வாறு சொன்னேன்.
‘விழுமியம்’ என்பது ஒரு செயல்பாட்டில் இறுதியில் நிலைக்கும் பொருள். output. உதாரணமாக, நமது விருந்தோம்பல் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பேசி, விவாதித்து செயல்படுத்தி சில நூற்றாண்டுகள் கழித்து அ) யார் குடிக்க நீர் கேட்டாலும் தர வேண்டும் ஆ) திண்ணையில் இரவு தங்க அனுமதிக்க வேண்டும் போன்ற பொதுவான எழுதப்படாத சட்டங்கள் உருவாகின்றன அல்லவா அவற்றை விழுமியங்கள் எனலாம். மூலப் பழக்கம் மறைந்தாலும் மறையாமல் எஞ்சி நிற்பவை.

இது சரியா?

நன்றி,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com/

அன்புள்ள சாணக்கியன்,

இலக்கியவிவாதங்கள் தமிழில் நிகழ ஆரம்பித்தபோது ஏராளமான கருதுகோள்கள் உலக இலக்கியசிந்தனைகளில் இருந்து பெறப்பட்டன. ஆரம்பத்தில் அச்சொற்கள் அப்படியே ஆங்கிலமாக பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் அப்படியே பயன்படுத்தப்பட்டால் அது காலப்போக்கில் மொழியை அழிக்குமென உணரப்பட்டு அவை தமிழாக்கம் செய்யப்பட்டன. பல சொற்கள் மரபில் இருந்து எடுக்கப்பட்டு மறு அர்த்தம் அளிக்கப்பட்டன. பலசொற்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.

இச்சொற்கள் முத்ன்முதலாகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பதாண்டுக்காலம் தாண்டிவிட்டிருக்கிறது. இவை தொடர்ச்சியாக அறிவார்ந்த விவாதங்களின் கையாளப்படுகின்றன. சட்டென்று உள்ளே நுழையும் ஒருவருக்கு இச்சொற்கள் புரிதல் சிக்கல்களை உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆனால் சிறிது கவனித்தால், கொஞ்சம் தேடினால் இவற்றின் பொருள் எளிதாகவே கிடைக்கும்.

ஆனால் நம்மில் பலர் முயல்வதில்லை. எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு கலைச்சொற்கள் கையாளப்பட்டிருப்பதைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள். இது ஏதோ மோசடி அல்லது பம்மாத்து என்று முடிவுசெய்து வைய ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் தொழில் அல்லது வணிகம் சார்ந்து சில பட்டங்கள் பெற்றதனாலேயே அறிவுஜீவிகளாக ஆகிவிட்டதாக ஒரு போலிப்பெருமிதம் உள்ளது. இச்சொற்கள் அந்த பெருமிதத்தை அபத்தமானதாக காட்டுகின்றன. மேலும் சிலர் இவை நம்முடைய தளமே அல்ல என்று சொல்லி விலகிவிடுகிறார்கள்.

கலைச்சொற்கள் என்பவை வெறுமே சொற்கள் அல்ல. அவை கருத்துருக்கள். அதாவது. உலகளாவிய சூழலில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் அறிவியக்கம் மூலம் உருவாக்கப்படுபவை அவை. அதன் இயக்கமுறை இவ்வாறு. ஒரு புதிய கருத்து முதலில் சூழலில் முன்வைக்கப்படுகிறது.அதன் மீதான தொடர் விவாதம் மூலம் அது இன்னது என்பது அனைவருக்கும் பொதுவாக விளக்கப்படுகிறது. பொதுவாக ஏற்கப்படுகிறது. அதைச்சுட்ட ஒரு சொல் நிலைபெறுகிறது. அதன் பின்னர் அந்த கருத்துருவை பயன்படுத்த அச்சொல்லை மட்டுமே பயன்படுத்தினால் போதும். அதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது என்பது சிந்தனைச்சூழலில் புரிந்துகொள்ளப்படும்.

இவ்வாறு கலைச்சொற்களை போடாமல் பேசினோமென்றால் ஒவ்வொரு முறையும் அச்சொற்களின் இடத்தில் ஒரு நீளமான விளக்கத்தையே அளிக்கவேண்டியிருக்கும். அப்போது விவாதம் மேலே நகர முடியாது. ஒவ்வொருமுறையும் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். இது உலகமெங்கும் உள்ள எல்லா மொழிச்சூழலுக்கும் பொதுவான விதியே. பெரிதாக எதையும் கவனிக்காதவர்கள் கூட பொதுவான மொழிப்புழக்கம் மூலம் புதிய கலைச்சொற்களை அடைந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அன்றாடம் ஓர் இளைஞன் பேசும் பல விஷயங்களை 70 வயது கிராமத்துத் தாத்தா புரிந்துகொள்ளாமல் போவது இதனால்தான்.

உதாரணம், ஜனநாயகம். இந்தக்கலைச்சொல் எவ்வளவு சாதாரணமாக நம்மிடம் இன்று புழங்குகிறது. ஆனால் இந்த கலைச்சொல்லால் சுட்டப்படும் கருத்துருவுக்கு நூறு வருடம் முன்பு தமிழ் மனதிலும் தமிழக வாழ்க்கையிலும் ஆகவே தமிழ் மொழியிலும் இடமில்லை. நாநூறு வருடம் முன்பு ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் அச்சொல் கிரேக்க பாரம்பரியத்தில் இருந்து கண்டடையப்பட்டது. திருச்சபையின் ஆட்சி, மன்னராட்சி, ஏதேச்சாதிகார ஆட்சி ஆகிய வடிவங்களை உதறி மக்கள் தங்களுக்கான அரசை தாங்களே உருவாக்கிக்கொள்ள முனைந்த போது அக்ககருத்துருவைக் கண்டடைந்து மீட்டெடுத்தார்கள்.

பண்டைய கிரேக்க நகர அரசுகளில் அடிமைகள், பெண்கள், அன்னியர், வரிகொடுக்காதோர் தவிர பிறர் பொதுமக்கள் எனப்பட்டார்கள். அவர்கள் கூடி தேர்வுசெய்யு குழு ஆட்சி அளித்தது. இந்த முறையை அவர்கள் dēmokratiā என்றார்கள். Demos என்றால் மக்கள். Kratos என்றால் அதிகாரம். மக்களின் அதிகாரமே அவ்வாறு அழைக்கப்பட்டது. அச்சொல்லில் இருந்து democracy என்ற சொல் உருவானது.

அச்சொல் மூலம் சுட்டப்பட்ட அந்தக் கருத்துரு, அதாவது மக்கள் தங்கள் அரசை தாங்களே தேர்வுசெய்துகொள்வது என்ற எண்ணம், இருநூறாண்டுக்காலம் மேலைச்சிந்தனையில் விவாதிக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட மக்களாட்சி, பொதுமக்களாட்சி என பல வடிவங்கள் சோதிக்கப்பட்டன. மெதுவாக அந்த கருத்துரு அனைவராலும் பொதுவாக புரிந்துகொள்ளப்பட்டது. அப்புரிதலைச் சுட்ட அச்சொல் கையாளப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அது சிந்தனையின் பகுதியாக உள்ளது

அச்சொல்லை மிக ஆரம்பகாலத்தில் தமிழாக்கம் செய்தார்கள். அப்போது வடமொழி சார்ந்து மொழியாக்கம் செய்வது வழக்கம் என்பதனால் ஜனநாயகம் என்று மொழியாக்கம் செய்தார்கள். அது துல்லியமான மொழியாக்கம் அல்ல. ’ஜன’ சரி. ’நாயகம்’ என்பதில் ஆட்சி என்ற சுட்டு இல்லை. மலையாளத்தில் ஜனாதிபத்யம் என்று சரியாக மொழியாக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் அச்சொல் ஏற்கப்பட்டு பழக்கத்துக்கு வந்தது. பின்னர் அச்சொல் மக்களாட்சி என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. அது இன்னமும் துல்லியமான தூயதமிழ்ச் சொல். இன்று இச்சொற்கள் கலைச்சொற்களாகவே கருதப்படுவதில்லை. அந்த கருத்துரு அனைவருக்கும் தெரிந்தது என்பதனால். ஆனால் 1910 ல் அச்சொல் மொழியாக்கம் செய்யப்பட்டபோது எத்தனைபேருக்கு அந்தக் கருத்துரு புரிந்திருக்கும்? அன்று ஒருவர் எதற்கு இப்படி ஆங்கிலச் சொற்களை தமிழாக்கம் செய்யவேண்டும், உள்ள சொல் போதாதா என்றாரென்றால் அவரை என்னவென்று எடுத்துக்கொள்வோம் இன்று?

அதேபோல பல சொற்கள் வந்தபடியே இருக்கின்றன. நூற்றுக்கணக்கான கலைச்சொற்கள் என் கண்ணெதிரே அன்றாட வழக்குக்கு வந்துகொண்டிருப்பதைக் காண்கிறேன். புரட்சி என்ற சொல் உதாரணம். அதை பாரதி உருவாக்கினார். revolution என்ற சொல்லுக்கு நிகராக. உறுப்பினர் என்ற சொல்லை மொழியாக்கம் செய்ய பட்ட பாட்டைப்பற்றி அவரே எழுதியிருக்கிறார்.

நேற்று வந்த சொற்களை ஏற்ற நாம் ஏன் இன்று வரும் சொற்கள்மேல் மனக்கசப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்? பாமரர்கள் சொற்களும் அவை சுட்டும் கருத்துக்களும் பரவலாக ஆகி பொதுமொழியில் வந்து சேரும்வரை காத்திருக்கட்டும். ஆனால் சிந்திக்கக்கூடியவர்கள் புதிய கருத்துக்களை அவற்றுக்கான புதிய சொற்களை அறிந்துகொண்டே ஆகவேண்டும்.

ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்கும் ஒருவர்கூட அன்றாடம் புதிய கலைச்சொற்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். கல்வித்துறையில் புதிதாக உருவாகும் கலைச்சொற்கள் மிகச்சில வருடங்களிலேயே செய்தித்தாள்களில் வந்துவிடுகின்றன. decolonization என்ற சொல்லை சாதாரணமாக இந்து நாளிதழில் வாசிக்கலாம். அது கல்விப்புலத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். அம்மாதிரி சொற்களை ஆங்கிலத்தில் வாசிக்கையில் அகராதிகளை பயன்படுத்திக்கொண்டு, விவாதித்து தெளிவுகொள்கிறோம். அந்த முயற்சியை தமிழிலும் செய்தால் போதுமானது.

இனி நீங்கள் சொல்லிய சொற்கள். தொன்மம் என்றால் Myth என்ற சொல்லுக்கான கலைச்சொல். விழுமியம் என்றால் values. படிமம் என்றால் image . இந்தச் சொற்களின் மூலச்சொற்கள் அவை உருவான மொழிச்சூழலில் புதிய கருத்துருக்களாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பொதுவாக புரிந்துகொள்ளப்பட்டவை. அந்த கருத்துருக்களை இங்கே பேசியவர்கள் அச்சொற்களை தமிழாக்கம் செய்தார்கள். இன்று அச்சொற்களைக் கொண்டே அந்த கருத்துக்களை பேசமுடியும்.

மேலே சொன்ன சொற்களுக்கான பொருள் என்னும்போது அந்த கருத்துருவை விளக்கவே முடியும். அதைத்தான் நீங்கள் சுட்டிய அகராதிகளில் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு தெளிவாக அல்ல. அது எளிதும் அல்ல. ஏனென்றால் அக்கருத்துக்களுக்கு ஒரு வரலாறு உள்ளது. ஒரு விவாதச்சூழல் உள்ளது. அவ்வரலாற்றையும் சூழலையும் சொல்லிச் சொன்னால்தான் அக்கருத்துரு முழுக்கத் தெளிவாகும்.

மேலே சொன்ன சொற்களுக்கு ஒரு பொது அம்சம் உள்ளது. அவை உலகம் முழுக்க உள்ள ஒருசில பண்பாட்டுக்கூறுகளை பொதுமைப்படுத்தி, சாராம்சம் கண்டறிந்து, அந்த சாராம்சத்தை விவாதிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட கருத்துருக்கள். அக்கருத்துருக்கள் வழியாக பல்வேறு பண்பாட்டு கூறுகளை உலகப்பொதுவாக வைத்து விவாதிக்க முடிகிறது.

உலகம் முழுக்க எல்லா சமூகங்களிலும் மக்கள் தங்கள் வாழ்க்கை மூலம் அடைந்த அறிதல்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் விதத்தில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை தகவல்களாக அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது ஒன்று. இன்னொன்று அவற்றை நம்பிக்கைகள், சடங்குகள், ஆசாரங்கள்,கதைகள் வடிவில் அளிப்பது. இவை தகவல்கள் அல்ல. புனைவுமூலம் அவற்றில் பல உணர்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நெறிமுறைகள் இணைந்துள்ளன. இது மக்களின் மனமும் கலந்த தகவல்குவியல். இந்த இரண்டாவது வழிமுறையை ஒட்டுமொத்தமாக எப்படிச் சொல்வது? அதற்காகவே தொன்மம் என்ற கருதுகோள் உருவாக்கப்பட்டது.

அதேபோல உலகம் முழுக்க அறநெறிகள் பல உள்ளன. நீதிகள் உள்ளன. ஆசாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சுட்டக்கூடிய சொல்லே விழுமியம். அவை மக்கள் வாழ்ந்து அறிந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்செல்லும் நெறிகள் குறித்த நம்பிக்கை மற்றும் மனக்கட்டுமானமே விழுமியம் என்பது

அதேபோல படிமம். மொழி நேரடியாக சுட்டுவதன் மூலம் பொருள் அளிக்கிறது. பலசமயம் அந்த முறை போதாமலாகும்போது இன்னும் குறியீட்டுத்தன்மை தேவையாகிறது. இதற்காக மக்கள் பல வழிகளை கண்டடைகிறார்கள். அவை இலக்கிய வடிவம் கொள்கின்றன. உவமை, உருவகம், வர்ணனைகள் என இவை பலவகைப்படும். மொழியின் நேரடிச்சுட்டுத்தன்மை கூடக்கூட இவை குறையும். பழங்குடிமொழிகளில் இவை மிக அதிகம். தமிழில் இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக அணிகள் என்கிறோம்

அணிகள் உலகமெங்கும் பலவகை. அனைத்தையும் ஒன்றாகச் சுட்டும் ஒரு கருத்துருதான் படிமம் என்பது. உவமை உருவகம் எல்லாமே ஒட்டுமொத்தமாக கவித்துவப் படிமங்களே. ஒன்றைச்சொல்லி அது உணர்த்தும் பொருளை கேட்பவன் கற்பனைக்கே விட்டுவிடுவதே படிமம் என்பது. வயித்திலே பால வார்த்தான் என்பது ஒரு படிமம்

படிமம் என்ற கருத்துரு மேலும் வளர்ந்தது. அந்த விவாதங்களுக்குள் இப்போது போக விரும்பவில்லை. கவிதையியலில் படிமம் என்பது கறாரான பொருள் கொண்டது. உணர்த்தப்படும் பொருளை முழுக்க முழுக்க வாசகனின் கற்பனைக்கே விட்டு விடுவது அது. பொதுப்பேச்சில் படிமம் என்பது ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றி பொதுவாக ஏற்படும் மனச்சித்திரம்.

கலைச்சொற்களை கற்றுக்கொள்ளும்போது நாம் கருத்துருக்களை கற்றுக்கொள்கிறோம். அந்த விழிப்புணர்வுடன் அவற்றை அணுகினால் நம் சிந்தனையின் வளர்ச்சிக்கு அவை உதவும்.

ஜெ

1 . என் இணையதள முகப்பில் கலைச்சொற்கள் என்ற பிரிவில் நான் அதிகமாகப் பயன்படுத்தும் கலைச்சொற்களுக்கு அகராதி இணைத்துள்ளேன்

2 . என் ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் முக்கியமான கலைச்சொற்களுக்கான அகராதி உள்ளது

3 இம்மாதிரி விவாதங்களில் கலைச்சொற்கள் என இட்டு என் இணையத்தில் தளத்தில் தேட என்ற இடத்தில் தேடுவது நல்லது. இவை சார்ந்த பல கட்டுரைகள் முன்னரே உள்ளன. மீண்டும் மீண்டும் நாம் ஒரே விஷயத்தை விவாதிப்பதை தவிர்க்கலாம்

http://www.jeyamohan.in/?p=211 கலைச்சொற்கள்
http://www.jeyamohan.in/?p=182இலக்கியக் கலைச்சொற்கள் |
http://www.jeyamohan.in/?p=553 தமிழ் கலைச்சொற்கள் |
http://www.jeyamohan.in/?p=2467 வாசிப்பில் நுழைதல்
http://www.jeyamohan.in/?p=130 தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா?

முந்தைய கட்டுரைமொழி 5,கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கு