தினமலர் – 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை

 

Tamil_News_large_1481446

 

பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தோற்றுப்போனவர்கள் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அதற்குத் தலைவணங்குகிறேன்” என்பார்கள். வெற்றி பெற்றவர்கள் “மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள், இனி எங்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டும் செல்லுபடியாகாது” என்பார்கள்.

ஜனநாயகம் உருவானபிறகு மக்கள் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கடவுள் என்ற வார்த்தைக்கு நிகரானதாக மாறிவிட்டது.  ‘மக்களுக்குத்தெரியும்’ , ‘மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படவேண்டும்’ , ‘மக்களுக்கு முன்னால் நின்று பேசுகிறேன்’ , ‘மக்கள் மன்னித்துவிடுவார்கள்’ போன்ற வார்த்தைகளை மேடைகளில் அரசியல்வாதிகள் தொடர்ந்து பயன்படுத்துவதைp பார்க்கிறோம்.

மக்கள் தவறு செய்வார்கள் என்றும், மக்களுக்குp போதிய அறிவில்லாமல் இருக்கலாம் என்றும், மக்கள் நேர்மையை இழந்திருக்கலாம் என்றும் இன்று எவரும் மேடையில் பேசமுடியாது. எந்த அரசியல்வாதியும் எந்த மேடையிலும் மக்களை ஒருசொல் கூட குறை சொல்ல முடியாது.

இரண்டு வகையான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மக்களை ஒரு குழந்தையாக எண்ணி தந்தையின் இடத்திலிருந்து அவர்களிடம் பேசும் அரசியல்வாதிகள். தமிழகத்தில் காமராஜர் அத்தகைய அரசியல்வாதியாக இருந்தார். அவரே அவ்வகையில் இறுதியானவர். கேரளத்தில் இன்றும் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர் அச்சுதானந்தன் அத்தகைய அரசியல்வாதியாக இருக்கிறார். அங்கும் அவரே அவ்வரிசையில் இறுதியானவர்.

அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கு மிகுந்த நேர்மை வேண்டும். எந்த ஒருவரும் தன்னுடைய நேர்மைமேல் எவரும் சிறிய ஒரு குற்றச்சாட்டைக்கூடச் சொல்லிவிடமுடியாது என்ற தன்னம்பிக்கை தேவை. அவ்வாறு ஒரு தந்தையின் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளே மக்களைக் குற்றம் சொல்ல முடியும் அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்கமுடியும். அவர்களை வழிநடத்தவும் முடியும்.

மாறாக, இன்றைய அரசியல்வாதிகள் மக்களுக்கு முன் நிற்கும்போது தங்களைக் குற்றவாளிகளாக உணர்கிறார்கள். குற்றவாளிக்கூண்டில் நின்று நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதியைப்பார்ப்பது போல் அவர்கள் மக்களைப்பார்க்கிறார்கள். ஆகவே தான் நீதிபதியிடம் பேசுவது போல “மிலார்ட்!” என்றும் ”யுவர் ஆனர்!’” என்றும் பேசும் பாவனையில் நம்மிடம்  பேசுகிறார்கள்.

உண்மையில் மக்கள் அந்த அளவுக்கு மதிக்கப்படத்தகுந்தவர்கள் தானா? மக்களாகிய நாம் நம்மைப்பற்றி அறிவோம். தி.மு.க ‘திருமங்கலம் சூத்திர’த்தை அறிமுகம் செய்தபோது அடித்துப்புரண்டு சென்று அவர்களிடம் சென்று பணம் பெற்று கொண்டாடியது நாம் தான். திருமங்கலம் சூத்திரத்தின் வெற்றியைப்பற்றி திமுகவைச் சேர்ந்த ஒருவர் பேசியதை அமெரிக்க தூதர் அமெரிக்க அரசுக்கு எழுதி அனுப்ப அது அமெரிக்க ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. விக்கிலீக்ஸ் அதை வெளிக்கொணர்ந்தபோது உலகமே அதைத் தெரிந்துகொண்டது. அதற்குமேல் நமக்கு என்ன கௌரவம் எஞ்சியிருக்கிறது?

அரசியல்வாதிகள் பல்லாயிரம்கோடி ரூபாய் ஊழல் செய்யும் போது அதில் எந்த அளவுக்கு பணத்தை நமக்கு அவர்கள் வாக்களிக்க லஞ்சமாக அளிப்பார்கள் என்று தான் சராசரி மக்களின் மனம் கணக்குபோடுகிறது. அந்த ஊழல் செய்த அதிகாரி அல்லது அரசியல்வாதியின் நேர்மையை விட சற்றும்  மேம்பட்ட நேர்மை கொண்டவர்கள் அல்ல நமது மக்கள். எனது வாக்குரிமைக்காக நான் ஏன் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்கும் துணிவு நமது மக்களிடம் இல்லை.

ஆகவே நாம் நாம் நம்மைப்போன்ற அயோக்கியத் தகுதி கொண்டவர்களைத்தான் அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கிறோம். அதைச் சமாளிக்க “யார் சார் யோக்கியன்?” என்றும் “எல்லாருமே திருடனுங்கதான்சார்” என்றும் பேசுகிறோம். தேர்தல் பேச்சுக்களில் அப்படி ஒரு குரலை ஒருவர் எழுப்பினால் அவரிடம் ஐம்பது ரூபாய்க்குமேல் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர் நம்பத்தகுந்தவரே அல்ல. தன் அயோக்கியத்தனத்துக்கு அவர் சப்பைக் காரணம் கண்டுபிடிக்கிறார் அவ்வளவுதான்.

எவ்வளவு சிறந்த அரசியல்வாதியாக இருந்தாலும், நமக்கு எவ்வளவு சேவை செய்திருந்தாலும், நமது சாதியைச் சேர்ந்தவருக்கு மட்டுமே நாம் வாக்களிக்கிறோம். எவ்வளவு பெரிய அரசியல் பிரச்னை இருந்தாலும், உடனடியாக நம் கண்ணுக்குத் தெரியும் ஒரு உணர்ச்சிகரமான பிரச்னையை நம்பி அதற்கு வாக்களிக்கிறோம். ஒருபோதும் ஒன்றையும் நாம் பகிர்ந்துகொள்வதில்லை.

ஆம், மக்கள் என்பது ஒரு புனிதமான வார்த்தையே அல்ல. ஜனநாயகத்தில் மக்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களுக்கு சேவை செய்தாகவேண்டிய நிலையில் தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் எது செய்தாலும் அது சரிதான் என்று அதற்கு பொருள் அல்ல.

உலகம் முழுக்க மக்களின் மனநிலை இவ்வாறுதான் உள்ளது. ஹிட்லர் பெரும் கொடூரர்களை வாக்களித்து மக்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு பெரும் படுகொலைகளை நிகழ்த்தும்போது அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டு, அதற்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அந்தக் குற்றங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மக்கள்தீர்ப்பு புனிதமானது என்று சொல்வதைப்போல வரலாற்றுப்பொய் ஒன்றுமில்லை. யேசுவை சிலுவையில் அறைய சொன்னது மக்கள் தான். எத்தனையோ புனிதர்களை கல்லெறிந்து கொன்றதும் மக்கள் தான்

ஆகவே மக்களின் குரலாக ஒலிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, மக்களைக் கவரும் அரசியல்வாதிகள் அல்ல, மக்களை நோக்கிப்பேசக்கூடிய அரசியல்வாதிகள், மக்களைக் கண்டிக்கும் தார்மீகத்தகுதிகொண்ட அரசியல்வாதிகள் தான் நமக்குத்தேவை.

இந்தியாவுக்கு வந்த என் ஆங்கிலேய நண்பர் கேட்டதை நினைவுகூர்கிறேன். அவர் நூற்றபது நாடுகளுக்கு பயணம் செய்த எழுத்தாளர். “உலகம் முழுக்க அறைகளில் மலம் கழிப்பார்கள். பொது இடங்களில் சாப்பிடுவார்கள். இந்தியர்கள் தலைகீழாக அதைச் செய்கிறார்கள்”

உலக நாடுகளிலேயே பொது இடங்களில் மலம் கிடக்கும் ஒரே தேசம் இந்தியாதான். நானும் பலநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், ஆப்ரிக்கநாடுகளுக்குக் கூட. எங்குமே சாலைகளில் மலம் கண்டதில்லை. படித்தவர்கள், வசதியான வீடு உடையவர்கள் கூட பொது இடங்களில் மலம் கழித்துவிட்டு கூசாமல் எழுந்து செல்வதும், பிறர்பார்க்க சாலை ஓரங்களில் மலம் கழிக்க அமர்ந்திருப்பதும் மிக சாதாரணம் இங்கே.

இப்படி ஒரு பெரிய பண்பாட்டுப் பிரச்னை இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை அடையாளம் கண்டுகொண்டு, இதை மாற்றி அமைக்க முயற்சி செய்த கடைசி அரசியல்வாதி காந்திதான். இந்தியர்களின் கழிவறை பழக்கங்களை மாற்றுவதை தன்னுடைய அரசியல்கடமைகளில் ஒன்றாக அவர் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். தன் கழிவறைகளை தானே சுத்தப்படுத்தவேண்டும் என்றும், பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் அவர் பிரச்சாரம் செய்தார்.

காந்தி இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கான மிகப்பெரிய திட்டங்களைச் சொன்னார். கிராமிய பொருளாதாரம் சார்ந்த மிகப்பெரிய கனவுகளை அவர் வைத்திருந்தார். கூடவே இதையும் சலிக்காமல் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப்பின் எந்த அரசியல்வாதியும் இதைச் சொல்லவில்லை.

1918ல் முதல்முறையாக தென்னாப்ரிக்காவிலிருந்து காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்து உரையாற்றிய காந்தி அந்த மாநாட்டின் கழிவறைகளைத் தூய்மைசெய்வதைத்தான் முதலில் தன் கடமையாக எண்ணினார். காந்தியம் தொடங்குவதே அங்குதான். காந்தி ஓர் ஊருக்குச் செல்லும்போது அவர் மலம் கழிக்கும் மரத்தாலான கழிப்பறையையும் சுமந்துசெல்வார். அவருடைய அடையாளக்கொடி போல அது செல்லும் என்று ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்னும் நூலை எழுதிய டொமினிக் லாப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் சொல்கிறார்கள். அது இந்தியாவுக்கு அவர் அளித்த ஒரு செய்தி.நாம் அதைக் கேட்கவேயில்லை.

இதே நிலைமை சிங்கப்பூரில் இருந்திருக்கிறது. லீ க்வான் யூ ஆறே மாதத்தில் இப்பழக்கத்திற்கு முடிவுகட்டினார். ஆங்கிலேய எழுத்தாளர்  “ஒரு சிறிய சட்டம் மூலம் இதை தடுத்துவிடலாமே” என்றார். நான் சொன்னேன்,“தடுத்துவிடலாம் ஆனால் மக்கள் ஆதரவை இழக்க வைக்க வேண்டியிருக்கும். மக்கள் ஆதரவை இழந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு ஒரு நன்மையை நான் செய்யவேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் நம்மிடம் இல்லை”

அதற்கு நம் மனநிலையிலும் மாற்றம் தேவை. இன்று அத்தகைய ஓர் அரசியல்வாதி இருந்தால் நாம் அவரை எப்படி நினைப்போம்? கோமாளியாகத்தன், இல்லையா? நமக்கு ஊழல்பேர்வழிகள், அடிதடிப்பெயர்களை அடைமொழியாகக்கொண்ட குற்றவாளிகள்கூட வாக்களிக்கத்தக்க அரசியல்வாதிகள் என்று தோன்றுகிறார்கள். நம்மை கண்டிக்கும் ஒருவரை எதிரியாக எண்ண ஆரம்பிக்கிறோம். நாம் உதவாக்கரை மாணவர்களாக ஆகிவிட்டோம். இன்று நமக்குத்தேவை கையில் கம்புடன் வகுப்புக்கு வரும் ஆசிரியர்.

 

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

18 நடிகர் நாடாளும்போது

17 வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்

16 நாளைய ஊடகம்

15 திண்ணைபேரத்தின் தேவை

14 யானைநடை

13-அரசியலின் இளிப்பு

12-வாக்காளராக வயதுக்கு வருதல்

11-உறிஞ்சும் பூச்சிப்படை

10-நமது செவியின்மை

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

 

முந்தைய கட்டுரைகாமத்தின் கலை, பரதனின் நினைவில்…
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14