காமத்தின் கலை, பரதனின் நினைவில்…

 

 

https://www.youtube.com/watch?v=707eIoFaSxw

 

இன்று நண்பர் சுகா வந்திருந்தார். மதியம் வரை உரையாடிக்கொண்டிருந்தோம். நாங்கள் எப்போது சந்தித்தாலும் பரதனைப்பற்றிப் பேசாமலிருப்பதில்லை. இன்றும் இருவருமே ஒருவகையான உணர்வெழுச்சியுடன் அவர் படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம்.

பரதனின் படங்கள் அனைத்துமே பிறரால் கதை -திரைக்கதை எழுதப்பட்டவை. கணிசமானவை ஜான்பால், பத்மராஜன் எழுதியவை. சில வலுவான படங்களை லோகிததாஸ். பி.ஆர்.நாதன் சில சிறந்தபடங்களுக்கு எழுதியிருக்கிறார். ஆனால் அத்தனை படங்களும் பரதன் படங்கள்தான்.

”பரதன் திரைக்கதையை வாசிக்கமாட்டார், பார்ப்பார். அதன்பின் அதன் மேல் ஒரு பரதன் டச் உருவாகும். அது ஒரு மயிலிறகுத்தொடுகை” என்று ஜான் பால் என்னிடம் சொன்னார். ஜான் பால் பரதனைப்பற்றி நினைவுக்குறிப்புகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். எவரேனும் தமிழாக்கம் செய்யலாம். நுணுக்கமான உற்சாகமான ஆளுமைச்சித்தரிப்பு கொண்ட படைப்பு அது.

 

bharadan

பரதனின் படங்களில் பாடல்கள் அமைந்திருக்கும் விதம் பற்றி சுந்தர ராமசாமியுடன் விவாதித்த நினைவு வருகிறது. அவை நுணுக்கமான காட்சிக்குறியீடுகளால் ஆனவை. ஒருவகையில் கேரளப்பண்பாடு மீதான அவரது எதிரீடுகளும் கூட.  அவற்றை ரசிப்பது குறியீடுக்கண்டுபிடிப்பு என்னும் வெற்று மூளைப்பயிற்சி அல்ல. அது ஒருவகை கலையனுபவம்.

உடனே அவரது பிரபல சினிமாவான ரதிநிர்வேதம் நினைவுக்கு வந்தது. அவரது வணிகப்படம்தான் அது. பரதன் என்றுமே காமம், வன்முறையைச் சித்தரிக்க முயன்றவர். இதுவும் அப்படித்தான். ஆனால் அதற்குள் ஒரு நுணுக்கமான திட்டம், ஒரு கட்டமைப்பு உள்ளது. அது பொதுரசிகர்களுக்குக் கிடைக்காமல்போகலாம். அவர்கள் ரசிக்க காட்சியின் அழகும் காமமும் இசையொருமையும் உள்ளன.

ரதிநிர்வேதம் பத்மராஜன் எழுதிய நாவல். அவரே திரைக்கதை எழுதி பரதனால் இயக்கப்பட்டது. அன்றைய ‘சூப்பர்ஹிட்’ வகை படைப்பு. தமிழகத்திலேயே வெற்றிகரமாக ஓடிய ‘மலையாளப்படம்’. வளரிளம் பருவத்து இளைஞன் தன்னைவிட மூத்த பக்கத்துவீட்டு அழகி மேல் கொள்ளும் காமம்தான் கதை.

அவன் அவள் தொடுகையால் தன் உடலின் ரகசியத்தை முதல்முறையாக உணர்கிறான். இசை கொப்பளிக்கிறது. கூடவே நீரின் கொப்பளிப்பு. ”திருதிருமாரன் காவில் ஆத்ய வசந்தம் கொடியேறி. சமஞ்ஞொருங்ஙி அணிஞ்ஞிறங்ஙி. களமெழுத்து பாட்டின்றே கத துடங்ஙி “ என காவாலம் நாராயணப்பணிக்கரின் வரிகள். ஆனந்தபைரவி ராகம்.வசந்தகால விழாவுக்கான செண்டை மற்றும் இடைக்காவின் தாளம்

வசந்த காலத் திருவிழாவுக்கான கொடி ஏறிவிட்டது. ஆலயம் அணிகொள்கிறது. வண்ணப்பொடிகளால் தெய்வங்களை வரைந்து வழிபடும் களமெழுத்துபாட்டு என்னும் கலை தொடங்குகிறது.மலைக்குளிரில் துயின்ற தெய்வங்கள் விழித்தெழுகின்றன.

தொடர்ந்து பாடல்காட்சி காடும் அதன் நீர்ப்பிம்பமுமாக பிரிகிறது. அதன்பின் பாடல் இரு தளங்களில் நிகழ்கிறது. இளைஞனின் பரவசம், நிலைகொள்ளாமை. ஏக்கம், துள்ளல் என ஒரு தளம். நிழல்பிம்பம் போல ஒருதளம். களமெழுத்துபாட்டில் வரையப்படும் யக்‌ஷியாக அவள் அவன் ஆழத்துக் கனவில், நீர்ப்பிம்பங்களின் உலகில், ஆடுகிறாள்.

kalamezhuthu_9

அந்த ஆடல் மோகினியாட்டத்தின் முத்திரைகள் கொண்டது. முதல் கட்டத்தில் கைமுத்திரைகளால் அவள் காட்டுவது வசந்தம் எழுந்த காட்டை.  இரண்டாவது கட்டத்தில் மலர்கள் மலர்வதை, ஒளி பரவுவதை, அவள் அங்கே பறந்தலைவதை காட்டுகிறாள். மூன்றாம் கட்டத்தில் அவள் காமம் கொள்கிறாள். அணிகொள்கிறாள். பறந்து தவித்தலைகிறாள்.

நான்காம் கட்டத்தில் அவன் அக்கனவுக்குள் நுழைந்துவிடுகிறான். ‘களம் வரைச்ச வர்ணங்ஙள் இடகலர்ந்நு” என்று பாடல் சொல்கிறது. களமெழுத்துபாட்டு நிறைவடையும்போது யக்‌ஷி பூசாரியில் ஆவேசித்து துள்ளியாடி கமுகப்பூக்குலையால் களத்தில் வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட ஓவியத்தை அழித்துக் கலைப்பாள். அதுதான் உச்சம். நிழலும் நிஜமும் கலக்கின்றன

அவள் குருதி உண்ணும் முத்துரைகளைக் காட்டி வெறிவிழிகளுடன் ஆடுகிறாள். ரத்தபான முத்திரை.  அவன் அவள் அருகே சென்று சேர்கிறான். அவர்கள் இணைகிறார்கள். குருதிச்செம்மையுடன் பொழுது விடிகிறது.

ஒரு வணிகப்படத்தின் பாடலுக்கு இத்தனை நுணுக்கமான ஒரு காட்சித்திட்டம் தேவையில்லை.அரங்கிலிருப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவர் கூட இதை அறியப்போவது இல்லை. அப்படியென்றால் எதைநம்பி இதை பரதன் அமைத்தார்? தனக்காகத்தான். தன்னுடன் உரையாடும் ரசிகர்களுக்காகத்தான். அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. மலையாளத்தின் பெரும் கலைப்பட இயக்குநர்கள் பலர் பழையவர்களாகிவிட்டார்கள். பரதன் இன்றும் வாழும் கலைஞர்.

பரதனைச் சந்தித்த நினைவுகள் நெஞ்சை நிறைக்கின்றன. பீடியை ஆழ இழுத்து கீழே போட்டு மிதித்தபடி “மிருகங்களுக்கில்லாத எந்த தத்துவச்சிக்கலும் மனிதர்களுக்கு இருக்கமுடியாது” என்று என்னிடம் சொன்னார். திகைப்பாக இருந்தது. நான் வாதிடவில்லை. இன்று அவ்வரிகள் கூரிய முள் போல முன்னால் நின்றிருக்கின்றன

முந்தைய கட்டுரைரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்
அடுத்த கட்டுரைதினமலர் – 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை