இரண்டாம் மொழிபெயர்ப்பு

q

 

அன்பின் ஜெ.எம்,

உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னியுங்கள்.

எனக்குக் கீழ்க்காணும் கடிதமொன்று அண்மையில் பெயரில்லாமல் வந்தது.

அதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை;காரணம் உங்கள் வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட ஆட்கள், தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்..,மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும் தேவையின்றி வம்புக்கிழுப்பார்கள் என்ற அக அமைதி எனக்கு நிறையவே கிட்டியிருக்கிறது.

எனினும் இக் கருத்துத் தொடர்பாக (மூன்றாவது மொழி வழியான மொழிபெயர்ப்புக்கள் பற்றி)-அவையும் நமது சூழலில் ஏற்கப்படக் கூடியனவே என்று ஒரு பதிவை நீங்கள் ஏற்கனவே எழுதியிருப்பதான ஞாபகம் எனக்கிருக்கிறது. தேடிப் பார்த்தால் அதன் சுட்டி கிடைக்கவில்லை. உங்களுக்கு நினைவிருந்தால் தயவு செய்து அதன் சுட்டி இணைப்பை மட்டும் எடுத்து அனுப்ப முடிந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மூலமொழி அறிவு மாத்திரமே ஒரு தகுதியாய்விடுமா.கதையை உள்வாங்கி அதன் ஜீவனைக் கொண்டு வருவதும் முக்கியதானே.பேரா.தர்மராஜன் போன்றோரும்கூட ஓரளவு ரஷிய மொழிப் பரிச்சயமிருந்தபோதும் ஆங்கில வழியில்தான் அன்னாகரீனாவை மொழிபெயர்த்தார் என்பதை அறிந்திருக்கிறேன்.
எனக்கு வந்த கடிதம்.;

உங்களுக்கு ரஷ்யன் மொழி தெரியுமா?! குற்றமும் தண்டனையும் ஆங்கில வழியாக மொழி பெயர்த்திருந்தால் ஆங்கிலம் வழி தமிழில் என்றே புத்தக அட்டையில் இருக்க வேண்டும். தவிர, மூன்றாவது மொழி வழியான மொழிபெயர்ப்புகள் தவிர்க்கப் படவே வேண்டும். ஆங்கிலம், மற்ற உலக மொழிகளில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் நேரடியாக மூல மொழியிலிருந்து செய்யப்படுபவையே.

இப்போதுதான் ‘அசடனை’முடித்து சற்று நிறைவோடு இருந்த எனக்கு…இப்படிப்பட்ட கடிதங்கள் படைப்பாக்க வேகத்தைச் சற்று மட்டுப்படுத்தித்தான் விடுகின்றன.

நன்றி,

எம்.ஏ.சுசீலா,புது தில்லி


(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
http://www.masusila.blogspot.com
http://www.google.com/profiles/susila27

அன்புள்ள சுசீலா,

உங்களுக்கு கடிதம் எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு சிந்தனைத்திறன் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன். வாசிக்கும், தெரிந்துகொள்ளும் விஷயங்களை பொதுவிவேகத்தையும் தர்க்கத்தையும் பயன்படுத்திச் சூழலுடன் பொருத்தி யோசிப்பதே சிந்தனை என்று சொல்லப்படுகிறது. சிந்திக்காமல் சொல்லப்படும் கருத்துக்கள் எவையாயினும் அவை அறிவின்மையையே காட்டுகின்றன.

இந்த கருத்தின் நடைமுறைத்தன்மையை மட்டுமே பார்ப்போம். தமிழ்ச்சூழலில் உலகமொழிகள் தெரிந்த எத்தனைபேர் இருக்கிறார்கள்? தமிழ் ஒரு வட்டாரமொழி. அதற்கு ஆங்கிலமல்லாத உலகநாடுகளுடன் நேரடி உறவு ஏதும் இன்று இல்லை. ஐரோப்பிய மொழிகளிலேயே ஸ்வீடிஷ் ,ஸ்பானிஷ் மொழிகளை அறிந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. அறிந்திருந்தாலும் ஓர் இலக்கிய ஆக்கத்தை மொழிபெயர்க்கும் தகுதி அவர்களுக்கு இருப்பது அனேகமாக சாத்தியமில்லை

ஏன் இந்திய மொழிகளிலேயே மணிப்பூரி, அஸ்சாமி, ஒரியா, காஷ்மீரி ,சிந்தி மொழிகளை அறிந்தவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? அம்மொழிகளில் இருந்து எவர் மொழியாக்கம் செய்வது?

அப்படியானால் என்ன செய்வது? மொழியாக்கமே தவிர்க்கப்படவேண்டும் என எளிதில் சொல்லலாம். அதாவது இலக்கியங்கள் வரவேண்டியதில்லை. வந்து என்ன ஆகப்போகிறது என்பது அடுத்த பதில். ஒட்டுமொத்தமாக நோக்கினால் தமிழில் ஓர் அறிவியக்கம் நிகழவேண்டுமென்ற எண்ணமே இல்லாமல், இங்குள்ள அறிவியக்கம் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் சொல்லப்படும் அரைவேக்காட்டுக் கருத்துதான் அது.

உலக மொழிகளில் எங்கும் மூலமொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனை எப்போதும் இருந்ததில்லை. நம் சூழலில் உள்ள சிக்கலே இதுதான். ஒரு கருத்தைச் சொல்லும் முன் அதை ஆதாரபூர்வமாக ஆக்கிக்கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. அதற்காக குறைந்தது விக்கிபீடியாவைக்கூட பார்ப்பதில்லை. தன்னம்பிக்கையுடன் சொல்லிவிடுகிறார்கள். கன்னாபின்னாவென்று சண்டையும் போடுகிறார்கள். நம் கல்வித்துறையின் அரைகுறைத்தனமே இம்மாதிரி மனநிலைகளை உருவாக்குகிறது என்றுதான் நினைக்கிறேன்.

ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் போன்ற காலனியாதிக்கவாதிகளின் மொழிகளுக்கே உலகளாவிய பரவல் சாத்தியமானது. அவர்களே உலகமொழிகளில் இருந்து நேரடிமொழியாக்கம் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்றார்கள். உலகம் முழுக்க உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட பிற மொழிகளில் முழுக்க இரண்டாம்கட்ட மொழியாக்கங்களே நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டுமிருக்கின்றன.அதுதான் சாத்தியம்.

ஆரம்பம் முதலே பார்ப்போம். பைபிள் அராமிக் மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழியாக்கம்செய்யப்பட்டு கிரேக்க மொழியாக்கத்தில் இருந்தே ஆங்கிலத்துக்கும் பிரெஞ்சுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டது. [1995ல் ஐக்கிய சபை வெளியீடாக வந்த பைபிள் முன்னுரையில் இதை காணலாம்] பின்னர் அந்த மொழியாக்கங்கள் மேம்படுத்தப்பட்டன.

தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி முதலியோரின் ஆக்கங்கள் உட்பட பதினெட்டாம்நூற்றாண்டு ருஷ்ய இலக்கியங்கள் பிரெஞ்சு வழியாகவே போர்ச்சுக்கல்,ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளில் ஆரம்பத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற்பாடுதான் அவை மூலத்தில் இருந்து மீண்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. அந்த மொழியாக்கம்கூட மேலும் மேலும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டபடியே வருகிறது.

ஏன் தஸ்தயேவ்ஸ்கியே பிரெஞ்சுமொழி வழியாக ஐரோப்பிய-ஆங்கில இலக்கியங்களை ருஷ்ய மொழிக்கு நிறைய மொழியாக்கம் செய்திருக்கிறார். பிரெஞ்சுதான் அன்று ருஷ்யாவுக்கு உலகப்பலகணியாக இருந்தது, தல்ஸ்தோய்கூட பிரெஞ்சுவழியாகவே உலக இலக்கியங்களை வாசித்தறிந்தார்.

இன்றும் பல ஐரோப்பிய மொழிகள் தொலைதூர இலக்கியங்களை ஆங்கிலம் அல்லது பிரெஞ்சுவழியாகவே மொழியாக்கம் செய்துகொள்கின்றன. கணிசமான இந்திய நவீன இலக்கியங்கள் ஆங்கிலம் வழியாகவே ஐரோப்பிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கின்றன என்பதை கண்டிருக்கிறேன். பல்கலை பாடங்களாகக்கூட இருக்கின்றன. சமீபத்தில் ஒரு டச்சு நண்பரை ரயிலில் உரையாடியபோது இதை அறிந்தேன். அவர் ஆங்கிலம் வழியாகவே இந்திய இலக்கியங்களை வாசித்திருந்தார்.

உலகம்முழுக்க 200 மொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது அராமிக் மூலத்தில் இருந்தா மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது?    ருஷ்ய பேரிலக்கியங்களே உலகமெங்கும் 120 மொழிகளில் கிடைக்கின்றன என போரும் அமைதியும் நூலின் முன்னுரை சொல்கிறது. அவற்றில் ருஷ்யாமொழியில் இருந்து நேரடி மொழியாக்கம் செய்யப்பட்டவை பத்துக்கும் குறைவான மொழிகளிலேயே. இரண்டாம் கட்ட மொழியாக்கம் வழியாகவே அவை உலகசிந்தனையில் பாதிப்பை உருவாக்கின

உலகமெங்கும் பெரும் கருத்தியல் பாதிப்பை உருவாக்கிய மூலநூல்கள் தொண்ணூறு சதவீதம் இரண்டாம்கட்ட மொழிபெயர்ப்பு மூலமே அந்தப்பாதிப்பை உருவாக்கின. உலக மொழிகளில் பிரெஞ்சு பேரிலக்கியங்களும் ஸ்பானிஷ் பேரிலக்கியங்களும் பெரும்பாலும் ஆங்கிலம் வழியாகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மொழியாக்கம் என்பது உண்மையில் ஒரு கருத்தியல் உரையாடல். அது ஒன்றில் இருந்து ஒன்றாக பரவிசெல்லக்கூடியது.

இன்னொன்று, ஆங்கிலத்தில் மொழியாக்கப்படுவனவற்றிலேயே கணிசமானவை மூலமொழிகளில் இருந்து வருவன அல்ல. ருஷ்ய இலக்கியங்களில் பல ஜார்ஜியன் போன்ற ருஷ்ய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டு ருஷ்யமொழிக்கு மொழிமாற்றம்செய்யப்பட்டவை. இன்று வரும் சீன இலக்கியங்களில் பல மாண்டரின் மொழிக்கு மாற்றப்பட்டவை. ஆப்ரிக்க இலக்கியங்களில் பல ஆப்ரிக்க பழங்குடி மொழிகளில் இருந்து மைய ஆப்ரிக்கமொழி ஒன்றின் வழியாகவே ஆங்கிலத்துக்கோ பிரெஞ்சுக்கோ செல்கின்றன.

மொழியாக்கத்தை நம்பகமான இன்னொரு மொழியாக்கம் வழியாகச் செய்வது என்பது மிக இயல்பான ,அவசியமான ஒரு விஷயம். இந்தி அல்லது அஸ்ஸாமி வழியாக அல்லாமல் நாம் இன்று வடகிழக்கு பழங்குடிமக்களின் இலக்கியத்தை அறிய முடியாது. இந்திய மொழிகளில் முழுக்க பெரும்பாலான மொழியாக்கங்கள் அவ்வாறுதான் நிகழ்கின்றன. தமிழிலக்கியம் மணிப்பூரிக்குச் செல்ல இந்திதான் பாதை.

தேவைதான் செயல்பாடுகளை உருவாக்குகிறது. நாம் இன்று இந்திய அளவில் , உலக அளவில் தொடர்புகொள்ள விழைகிறோம். அறியவும் உரையாடவும் விரும்புகிறோம். அதற்கு நமக்கிருக்கும் சாத்தியமான வசதிகளைக்கொண்டு நம்மால் முடிந்தவரை தீவிரமாக முயல்கிறோம். அதற்காகவே நாம் மொழியாக்கம் செய்கிறோம். ஸ்வாஹிலியில் இருந்து நேரடியாகத்தான் மொழியாக்கம் செய்யவேண்டும் என அடம்பிடித்தால் எப்போது நாம் அதை அறிவது?

அறிவியக்கத்தில் அடிப்படைப் பரிச்சயம் உள்ள எவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விஷயம்தான் இது. அமெரிக்காக்காரன் ஆங்கிலத்தில் செய்வது போன்று செய்யவேண்டும், அதுவே சரியானது, முடியாவிட்டால் அறிவியக்கமே தேவையில்லை என்று சொல்லும் மண்ணாந்தைத்தனம் இந்திய தாழ்வுணர்ச்சியில் இருந்து மட்டுமே உருவாகக்கூடிய ஒன்று.

நீங்கள் சொல்வது போல ருஷ்யாவில் இருந்து ராதுகா பதிப்பகம் முன்னேற்ற பதிப்பகம் வெளியீடுகளாக வந்த நூல்களைக்கூட ஆங்கிலம் வழியாகவே மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இதை நா.தர்மராஜன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஒரு பொதுத் தொகுப்பாளர் அவற்றை ருஷ்ய மூலத்துடன் ஒப்பிடுவார் என்பதே வேறுபாடு.

ஆனால் மூலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்படுவதே பொதுவாகச் சிறந்தது. அந்த இலக்கு நமக்கு இருக்கலாம். நாளை நமக்கு உலகளாவிய தொடர்பு உருவாகி மூலமொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட வாய்ப்பு அமையும் என்றால் நம்முடைய மொழியாக்கங்களை மேலும் சிறந்த மொழியாக்கங்கள் வழியாக செம்மை செய்யலாம். ஆங்கிலத்தில் ஒரே நூல் மீண்டும் மீண்டும் செம்மையாக மொழியாக்கம் செய்யப்படுவதைப்போல. அதுவரை நமக்கு வேறுவழி இல்லை.

மொழியாக்கங்களில் எந்த மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது என்பதையும் முதல் மொழியாக்கம் இருக்குமென்றால் அந்த மொழிபெயர்ப்பாளரின் பெயரையும் குறிப்பிடுவது அவசியம்.

அன்புள்ள சுசீலா, தமிழில் இரண்டாம்கட்ட மொழியாக்கங்களே பெரும் சிந்தனைப்பரிமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. க.நா.சு ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்த ஐரோப்பிய இலக்கியங்கள். டி.எஸ்.சொக்கலிங்கம் ஆங்கிலம் வழி மொழியாக்கம் செய்த போரும் அமைதியும் போன்றவை இல்லையேல் நம் நவீனச் சிந்தனையே இல்லை. பிரெஞ்சு, ருஷ்ய அரசியல் சிந்தனைகள், இலக்கியக் கொள்கைகள் ஆங்கிலம் வழியாகவே நம்மை வந்தடைந்தன. இதையெல்லாம் அறியாத பாமரக்கருத்துக்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஆங்கிலம் நம்முடைய உலகப்பலகணி. உலகத்தொடர்பு இல்லாத பழமையான நம் மொழிச்சூழல் அதன் வழியாகவே உலகத்துடன் தொடர்பு கொண்டது. ஆங்கிலம் வழியாக மொழியாக்கங்கள் செய்து நமக்கு நவீன இலக்கியங்களையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்தார்கள் பாரதி மாதவையா தொடங்கி க.நா.சு வரையிலான முன்னோடிகள். இன்றுவரை நாம் அதன் வழியாகவே உலகைப்பார்க்கிறோம். அது வரலாறு நமக்களித்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை இன்று வெற்றிகரமாக பயன்படுத்திக்கொள்வோம்.

அந்த முயற்சியில் முக்கியமான பங்களிப்பை நீங்கள் ஆற்றுகிறீர்கள். மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுடன் [தெரிந்துகொண்டதை வைத்து பார்த்தால் சிங்களமொழியுடன்கூட] நம்மை ஒப்பிடும்போது மிகமிகக் குறைவாகவே இங்கே மொழியாக்கங்கள் நிகழ்கின்றன. காரணம் இன்றும் மொழியாக்கம் பொருளியல் ஆதாயம் இல்லாததாக, தனிமனிதர் தன் இலட்சியவாதத்தால் மட்டுமே உந்தப்பட்டு செய்வதாக, உள்ளது. ஆகவே இன்று தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு மொழியாக்கம் செய்யும் ஒவ்வொருவரும் போற்றக்கத்தக்கவர்களே.

நீங்கள், துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா, சி ஏ பாலன், ரா.பூர்ணையா, நா.தர்மராஜன், த.நா.குமாரசாமி, த,நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், சு.குப்புசாமி, சா.தேவதாஸ் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நம் அறிவூச்சுழலில் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம். குறைகூறவும் ஆலோசனை சொல்லவும் பொதுவாக தமிழர்களுக்கு ஆர்வம் அதிகம்.செயலாற்ற மிகச்சிலரே இருப்பார்கள்.

இவ்வறிவியக்கம் வளர்ந்து அதன் வழியாக நாம் வளர்ந்து நாளை உலகம் முழுக்க பரவுவோம் என்றால் உலக மொழிகளை முழுக்க தொடர்புகொள்வோம். தமிழை உலகுடன் உரையாடச்செய்வோம்.

ஜெ

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் 2010

கண்ணீரைப் பின்தொடர்தல்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21
அடுத்த கட்டுரைதுகள்