அன்பு ஜெ.எம்,
.
என் சிறிய ஐயத்திற்கு மிக நீண்ட அற்புதமான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.நான் தங்களை நாடியது அதன்பொருட்டுத்தானே.வேறு எவரிடமும் இத்தனை சிறப்பான விரிவான பன்முக விளக்கம் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
முதலில் நானும் அதை வெறும் பரபரப்பு நூலென்றே நினைத்திருந்தேன். அதற்கு மேலும் அந்த நூலாசிரியருக்கு இன்னும் ஒரு பரிமாணம் இருப்பதைச் சுட்டியதற்கு நன்றி.
கிறிஸ்துவும் கிருஷ்ணனும் போல அவரது பிற நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவா.முடிந்தால் சொல்லுங்கள்.
நன்றியுடன்,
எம் ஏ சுசீலா
அன்புள்ள சுசீலா
இடமறுகுவின் பிற நூல்கள் தமிழில் வரவில்லை என்றே அறிகிறேன்
ஜெ
நன்றி.
மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியும், கட்டுரைகளும் படித்தேன். இங்கு அமரிக்காவில் இந்தியாவை போல பல மடங்கு வியாதிகளையும், மருத்துவத்தையும் ஊதி பெருக்குவார்கள்.
CNN வலைதளத்தில் இன்று வெளிவந்த ஒரு கட்டுரை.
http://www.cnn.com/2010/OPINION/10/11/elliott.branding.disease/index.html?hpt=C2
முத்துக்கிருஷ்ணன்.
அன்புள்ள முத்த்கிருஷ்ணன்
அமெரிக்காவில் மருத்துவம்- காப்பீடு- மருந்து உற்பத்தி ஆகிய மூன்று துறைகளும் ஒரே ஏகபோக அமைப்புகள் கீழே வந்துவிட்டதன் சீரழிவுகளைப்பற்றி நிறையவே அறிகிறேன். சில குறிப்புகளை ஏற்கனவே எழுதியுமிருக்கிறேன்
ஜெ
தங்களின் வலைதளத்தில் உள்ள எல்லா கட்டுரைகளையும் படித்துள்ளேன் (இந்த தலைப்பை ஒட்டி). முடிந்தால் food.inc என்ற டாக்குமெண்டரியை பார்க்கவும். எப்படி உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் இங்கே ஒரு சில கம்பெனிகளின் எகோபத்தியத்தின் கீழ் உள்ளது என்பதை மிக மிக நிதானத்துடன் சொல்லும் படம்.
Monsanta என்ற ராட்சசன் ஆளும் நாடு இது. மரபணு மூலம் விதைகளை தயாரிக்கும் இவர்கள் இவர்களிடம் விதை வாங்காமல் இயற்கை விதைகளை உபயோகிக்கும் விவசாயிகளை எப்படி நீதிமன்றத்திற்கு இழுத்து சீரழிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும் (காற்றால் தூவப்பட்டு உன் நிலத்தில் விழுந்த அடுத்த நிலத்தில் உருவான, என் மரபணு விதை முளைத்ததால், ராயல்டி கொடுக்காத குற்றத்திற்காக உன் மேல் கேஸ்…போன்ற அட்டூழியங்கள்…). இதற்கு நீதிமன்றம், சட்டம், அமைச்சர்கள் எல்லாம் கூட்டு.
எப்படியோ கத்திரிக்காய் விஷயத்தில் இன்னும் இந்தியாவில் பருப்பு வேகவில்லை..எத்தனை நாட்களுக்கோ? இதே கம்பெனியின் பருத்தி விதைகளால் குஜராத்தில் குழ்ந்தை தொழிலாளிகளும், தோட்டங்களில் அவர்களின் மரணங்களும் பற்றிய தெஹெல்கா கட்டுரை படிக்க நேர்ந்தது. இவர்களின் முக்கியமான ‘கொக்கி’ என்னவென்றால், விளையும் செடியில் உள்ள விதைகளை விவசாயிகள் மறு பயிரிட்டால் செய்யலாகாது. அப்பெடிஎன்றால் அவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் விதை வாங்க வேண்டும். அவைகளுக்கென்று உருவாக்கப்பட்ட பூச்சி கொல்லிகளை வாங்க வேண்டும் (அதுவும் மொன்சாடா தான்). நிலா உடமையாளர்கள் செலவை குறைக்க குசந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள்.
போன பிஜேபி அரசு இந்த விதிகளுக்கு அங்கஈகாரமளித்தது…
வேறொன்றுமில்லை.
‘லங்கா தகனம்’ மனதிலேயே நிற்கிறது..மிகவும் விவரிப்புகளோடு மனதில் விரிந்த கதை.
முத்துகிருஷ்ணன்.
அன்பு ஜெமோ,
ஆடும் கூத்து திரைப்படம் ஒருமுறை திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதாக நினைவு, வேறு படங்களோடு ( வெளியில் சாதாரணமாக காணக்கிடைக்காத) ஆர்வம் கொண்டிருந்ததால் பார்க்க முயலவில்லை.
தெய்வ். பஹ்ரைன்.
அன்புள்ளதெய்வு
ஆடும்கூத்து வெளியானதே தெரியவில்லை. அதை போதிய அளவுக்கு முன்னிறுத்தவில்லை போல
ஜெ
திரு ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மனிதாபிமானமும் தத்துவமும் [http://www.jeyamohan.in/?p=7615]
இத்தனை நாட்கள் என்னை குழப்பிய ஏதோ ஒன்று கொஞ்சம் (a minuscule) புரிவதுபோல் இருக்கிறது, ஜன்னல் வழியே வரும் வெளிச்ச கற்றை போல். வேறு கேள்விகள் கேட்கும் முன், கட்டுரையை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும்.
நன்றி
மங்கையர்க்கரசி
அன்புள்ள ஜெ,
தங்களின் ‘டார்த்தீனியம்’ என் பல நாள் தூக்கத்தை கெடுத்தது. ஒரு வேளை பல வருடங்கள் முன் நிகழ்ந்த என் அப்பாவின் தற்கொலை கூட காரணமாயிருக்கலாம். அதிலிருந்தே உங்கள் எழுத்தை படிப்பதில் எனக்கு ஒரு வித பயமே இருந்தது. அதன் வீரியமும் ,உண்மையும் என் முகத்தில் அறைகிறது. இரண்டு மாதம் முன் தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்தேன். என்ன நான் சொல்ல ?? குய்யன் சாப்பாட்டுக்கு அழும் காட்சியில் எனக்கு அழுகை வந்து விட்டது. இனி பழனி சென்றால் அடிவாரத்தில் நிறைய நேரம் செலவிடுவேன் என நினைக்கிறேன்.
http://sivarajkamaraj.blogspot.com/2010/08/blog-post_17.html
இவண்
சிவன்
அன்புள்ள சிவன்
தங்கள் கடிதம் மகிழ்வளித்தது. நல்ல படைப்பு நிம்மதியின்மையை உருவாக்குவதே முறை. அது நம் நம்பிக்கைகளை உடைத்து நம் பார்வையை வேறுவகையில் அமைக்கக் கட்டாயப் படுத்துகிறது. அதன் வழியாகவே நம் சிந்தனை உயிர்ச் சலனம் கொண்டதாக ஆகிறது இல்லையா
ஜெ