[ 17 ]
பேரெடை பள்ளம் நோக்கி செல்வதுபோல வேறுவழியில்லாமல் போரை நோக்கி சென்றனர் கிருதியும் தம்பியரும். எங்கோ ஒரு தருணத்தில் அப்போர் வெல்லாதென்பதை அவர்களே நன்கறிந்தனர். ஆனால் அவர்கள் அதுவரை சொன்ன வஞ்சினங்களே அவர்கள் பின்னகர முடியாது தடுத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் பிறரை அதன்பொருட்டு அஞ்சினர். சற்றே பின்னகரும் பொருள்கொண்ட சொல்லை ஒருவன் சொன்னால் இன்னொருவன் உணர்ச்சிப்பெருக்குடன் அதை எதிர்த்தான். “அவ்விழிமகனுடன் ஒத்துப்போய் இவ்வுலகில் வாழ்வதைவிட உயிர்நீப்பதையே நம் மூதாதையர் விரும்புவர்” என்று அவன் கூறும்போது “ஆம், வாள்முனை இறப்பே ஷத்ரியர்களின் முழுமை” என்று அனைவரும் சொல்லியாகவேண்டியிருந்தது.
பத்மர் அவர்களிடம் ஆகக்கூடுவதைச் சொல்லி விளங்கச்செய்ய முயன்றார். ஆனால் அவர் சொல்லச்சொல்ல அவர்கள் மேலும் உணர்வெழுச்சி கொண்டனர். உள்ளூர ஐயம் கொண்டிருக்கையில் உணர்ச்சிகளை மிகையாக்க வேண்டியிருக்கிறது. மிகையான உணர்ச்சிகள் மெல்ல நிலைபெற்று அவற்றை நடிப்பவரே நம்பும்படி ஆகின்றன. ஒரு கட்டத்தில் இளவரசர்கள் உச்சகட்ட உளஎழுச்சியிலேயே இருந்தனர். எதிர்மறை உணர்வுகளுக்கு மட்டுமே உரிய மிகுவிரைவு அவர்களை அடித்துக்கொண்டுசென்றது. அவர்கள் அந்த வெறியுடன் ஷத்ரியப் படைவீரர் முன் பேசியபோது அவர்களும் அவ்வுணர்ச்சிக்கு ஆளாயினர்.
முடிந்தவரை அப்போரை வெல்ல பத்மர் முயன்றார். போருக்கு ஜராசந்தன் சற்றே தயங்குவான் என்றாலும் அதுவே வெற்றி என அவர் எண்ணினார். மகதத்தின் வைதிகரவையின் நூற்றெட்டு வைதிகர்களை அவரது ஒற்றர்கள் சென்று சந்தித்தனர். ஷத்ரியர் குருதியில் கைநனைத்த இழிசினனை வென்றாகவேண்டும் என்று அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி அவர்கள் ஒருநாள் முதற்புலரியில் ராஜகிருஹ நகரின் வாயிலில் மூன்று கற்களை சேர்த்துவைத்து தீச்சொல்லிட்டு நாடுநீங்கி வங்கத்தின் காடுகளில் குடியேறினர். “வேதங்களின் எதிரியான அசுரனைக் கொன்று மூதாதையர் நெறிகளைக் காக்கும் ஷத்ரியர்களை வைதிகர்கள் வாழ்த்துகிறார்கள்” என்னும் செய்தி அவர்களால் வெளியிடப்பட்டது.
வேள்விமிச்சத்துடன் அச்செய்தி குலத்தலைவர்களையும் குடிமூத்தவர்களையும் சென்றடைந்தது. முதல்முறையாக மகதத்தின் குடிகளிடையே பிளவு உருவானது. முன்னரே அசுரப்படைகள் நகரில் ஓங்கியமையால் சினம் கொண்டிருந்த வேளிரும் ஆயரும் அச்சொல்லை ஓர் ஆணையெனக் கொண்டனர். அவர்களிடையே மந்தணச்செய்தி பரவிக்கொண்டிருந்தது. ஒருநாள் வேளிரும் ஆயரும் கொல்லரும் கலந்த ஒரு குழு அரண்மனை முற்றத்தில் கூடி கூச்சலிட்டது. “வைதிகர் தீச்சொல்லிட்ட அரசன் கழுவாய் செய்யவேண்டும்” என்று அதற்குத் தலைமைகொண்டு சென்ற வேளிர்குலத்தலைவர் கூர்மர் கூறினார்.
ஆனால் அரசப்படைகள் அப்போதே அவர்கள் அனைவரையும் வெட்டிக்கொன்று அத்தலைகளைக் கொய்து நகர்த்தெருக்களில் நிரையாக காட்சிக்கு வைத்தனர். திகைத்த விழிகளுடன் வாய்திறந்து அமைந்திருந்த தலைகள் ராஜகிருஹ நகரை அச்சுறுத்தி ஆழ்ந்த அமைதிக்கு தள்ளின. அன்று உச்சிப்பொழுதிலும் சூரியன் எழவில்லை. நகரே இருண்டு குளிர்ந்து கிடந்தது. அதன்பின் எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் நகரைவிட்டு ஓடிவந்து இளவரசர்களின் படையில் சேரும் ஆயர்களும் வேளிர்களும் கூடிவந்தனர்.
கிருதி மகிழ்ந்து “அங்கே அச்சத்தால்தான் அமைந்திருக்கிறார்கள் அமைச்சரே. நம் படைகள் ராஜகிருஹ நகரை அணுகுமென்றால் உள்ளிருந்தே அவனுக்கு எதிர்ப்பு எழும்” என்றான். பத்மர் புன்னகையுடன் “இத்தனைக்கும் பிறகு மக்களைப்பற்றி எதைச்சொல்லவும் நான் தகுதியற்றவன்… எதுவும் நிகழலாம் என்பதற்கு அப்பால் எதையும் சொல்லமாட்டேன்” என்றார். மகதம் போருக்கு கிளம்பவில்லை. “நாம் கிளம்பி வரட்டும் என நினைக்கின்றனர். அது நல்ல போர்முறைதான்” என்றார் பத்மர். “நாம் கிளம்பினால் அவர்களுக்கு உகந்த இடத்தில் நம்மை எதிர்கொள்ளமுடியும்.” இளிவரலுடன் இதழ்கோட நகைத்த கிருதி “எங்கு எதிர்கொண்டாலும் நாம் வெல்வோம். நம்மிடம் மூதாதையரின் நற்சொல் உள்ளது” என்றான்.
படைகள் கிளம்பவிருக்கையில் மகதத்திலிருந்து தூது வந்தது. மகதத்திலேயே நின்றுவிட்ட ஷத்ரியப் படைப்பிரிவான கிரௌஞ்சத்தின் தலைவர் சுருதவர்மர் ஜராசந்தனின் செய்தியுடன் பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்தார். அவர் வந்த செய்தியறிந்ததும் “அவனா? அவன் முகத்தை நான் நோக்கமாட்டேன். காட்டிக்கொடுத்தவன். குலப்பகைவன்” என்று கிருதி சினம் கொண்டு கூவினான். பிருகத்புஜன் “சிறியன்… அவனை அனுப்பி நம்மை அச்சுறுத்துகிறானா அரியணை அமர்ந்த இழிசினன்?” என்றான்.
பத்மர் “இளவரசே, நாம் நம்பும் ஒருவரை நம்மிடம் அனுப்ப எண்ணியிருக்கிறார் மகதமன்னர். அது நன்று. தகுதிகொண்ட ஷத்ரியரை அனுப்பியதை நமக்களித்த மதிப்பென்றே கொள்வோம். அவரது படையின் அசுரப்படைத்தலைவர் ஒருவர் வந்திருந்தால் நாம் ஏற்றிருப்போமா?” என்றார். “அவனிடம் நாம் பேச ஏதுமில்லை. அவனுக்கு நான் பீடமும் அளிக்கப்போவதில்லை” என்று கிருதி சொன்னான். “ஆம், அவனை மூத்தவர் சந்திக்கவேயில்லை என்று உலகம் அறியட்டும்” என்றான் ஜயசேனன்.
அவர்கள் நால்வருமே சுருதவர்மரை சந்திக்கவில்லை. பத்மர் அவரை சந்திக்கச் சென்றபோதே சுருதவர்மரின் முகம் மாறியது. பத்மர் பலவகை முகமன்களைச் சொல்லி அத்தருணத்தை எளிதாக்க முயன்றாலும் சுருதவர்மர் மேலும் மேலும் இறுகியபடியே சென்றார். விழிகள் உறைந்திருக்க “அரசர் எச்சரிக்கை அளித்துவரவே என்னை அனுப்பினார். அரசர் இன்னமும் இந்நால்வரையும் தன் இளையவராகவே எண்ணுகிறார். அவர்கள் அதை ஏற்று வந்து அவரை பணிவார்கள் என்றால் அரசில் ஒரு பகுதியை அவர்கள் நால்வரும் சேர்ந்து ஆள்வதற்காக அவர் அளிப்பார். கொடியும் குடையும் முடியும் கோலும் கொண்டு மகதர்களாகவே அவர்கள் அங்கே ஆளமுடியும். எந்த அரசரும் அத்தகைய வாய்ப்பை எதிரே படைகொண்டு நிற்பவர்களுக்கு அளிக்கமாட்டார். அரசர் இதைச் செய்வது அங்கே இருக்கும் இளவரசர்களின் அன்னையருக்காக மட்டுமே” என்றார்.
பத்மர் வியந்து “ஆம், உண்மை. இதைவிட பெரிதை நாங்கள் எதிர்பார்க்கவியலாது” என்றார். “இது ஜராசந்தரின் உறுதி. அவர் சொல் தவறுபவர் அல்ல” என்றார் சுருதவர்மர். “ஆனால் அவரது ஆணையை மீறுபவரை தண்டிப்பதில் அவர் மகிஷாசுரனுக்கும் ரக்தபீஜனுக்கும் நிகரானவர். அன்றாடம் குருதியில் நீராடுபவர் அவர். அவரை வெல்ல இன்று பாரதவர்ஷத்தில் எவருமில்லை.” சிலகணங்களுக்குப்பின் பத்மர் “சுருதவர்மரே, அவர் அசுரர் அல்லவா?” என்றார். சுருதவர்மரின் விழிகள் மாறுபட்டன. “அரசரைப் பழிப்பதை நான் ஒப்பமாட்டேன்” என்றபின் எழுந்துகொண்டார். பின்னர் அவர் விழிகளை நோக்கி “நானும் உங்களுடன் ஒருமுறை ஜராவனத்திற்கு வந்துள்ளேன் அமைச்சரே” என்றார்.
பத்மர் திடுக்கிட்டார். “அன்று நான் இளைஞன். அரசர் பிருஹத்ரதருடன் வில்லேந்தி அகம்படி சென்றேன்” என்றார் சுருதவர்மர். “நான் இன்று பிழைநிகர் செய்கிறேன்.” அதன்பின் ஒருசொல்லும் சொல்லாமல் அவர் திரும்பிச்சென்றார். நெடுநேரம் பத்மர் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். பின்பு நீள்மூச்சுடன் எழுந்து இளவரசர்களை பார்க்கச்சென்றார்.
தூதுச் சொற்களை கேட்டதும் பிருகத்புஜன் ஓங்கி காறித்துப்பி “நாங்கள் இரவலராக அவன் இல்லத்துக்கு முன் சென்று நின்றோமா? அவன் எங்களை தம்பியராக ஒப்புகிறானா? இழிமகன். காட்டாளன். அவனை நாங்கள் உடன்பிறந்தவனாக ஏற்கவேண்டும் அல்லவா? அவன் மானுடனே அல்ல. குருதியுண்ணும் அசுரன்…” என்றான். கிருதி “அவனை நாங்கள் எவ்வகையிலும் ஏற்கவில்லை அமைச்சரே. தூதனை திருப்பியனுப்பும்” என்றான். “இளவரசே…” என்று பத்மர் சொல்லவர “செல்லுங்கள்” என்று சொல்லி அவன் திரும்பிக்கொண்டான்.
கிருதியின் தலைமையில் பன்னிரு ஷத்ரியப்படைப்பிரிவுகளின் நிரை போருக்கு கிளம்பியது. பௌண்டரவர்த்தனத்திலிருந்து ராஜகிருஹத்திற்குச் செல்லும் பெருஞ்சாலையில் அமைந்த சப்தவனம் என்னும் ஊரில் நிகழ்ந்த போரில் மகதப்படைகள் முன் முதல்நாழிகையிலேயே கிருதியின் படைகள் தோற்றோடின. “வாளை பத்துமடங்கு எடையுள்ள கதாயுதத்தைக்கொண்டு உடைத்து வீசுவதுபோல” என்று அப்போரைப்பற்றி படைத்தலைவன் வஜ்ரபுஜன் சொன்னான். முழுக்கூர்மையுடன் திட்டமிடப்பட்டு விலங்குகளுக்கு நிகரான வெறியுடனும் இரக்கமின்மையுடனும் அப்போர் நடந்தது.
முறைப்படி அணிநிரந்து அந்தக் குறுங்காட்டை கடந்துகொண்டிருந்த கிருதியின் படைகளை புதர்மறைவிலிருந்து திடீரென்று எழுந்து சூழ்ந்துகொண்டன அசுரப்படைகள். அங்கே அவர்கள் ஒருநாளுக்கு முன்னரே வந்து பதுங்கியிருந்தனர் என்பதை பின்னர்தான் பத்மர் அறிந்தார். முதலில் நச்சு அம்புகளும் எரியம்புகளும் எழுந்து படைகள் மேல் பொழிந்தன. அவர்களைச் சூழ்ந்த குறுங்காடு பற்றிக்கொண்டது. அதன் மேல் வந்துவிழுந்த நச்சுவிதைகள் வெடித்து புகை கக்க வீரர்கள் மூச்சுத்திணறி இருமியபடி அலைக்கழிந்தனர். ஈரத்துணியால் முகத்தை மூடியபடி புகைநடுவே வந்து ஷத்ரியர்களை தாக்கியது அசுரப்படை.
அவர்கள் கொலையாட்டில் ஓராண்டுகாலம் பயிற்சி கொண்டிருந்தனர். உடலைவெட்டும் நுட்பம் கைகளிலேயே அமைந்துவிட்டிருந்தது. மிகக்குறுகிய வளைவில் மிகக்குறைந்த விசையில் வந்து விழுந்தன வாள்வீச்சுகள். வெட்டுண்டு உருண்ட தலைகளை அவர்கள் ஏறிட்டும் பார்க்கவில்லை. குருதிமேல் நடந்தபோது தடுமாறவுமில்லை. குற்றுயிர் உடல்கள் துடித்துக்கொண்டிருந்த களத்தில் மகதத்தின் கொடி குருதியில் நனைந்து ஈரத்தின் ஓசையுடன் காற்றில் படபடத்து விரிந்தது. “ஜரைமைந்தர் வாழ்க! வெற்றிகொள் மகதர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. வாள்கள் காற்றிலுயர்ந்து ஆடின. நச்சுநாகங்களின் படங்கள் என. விண்ணுக்கு அறைகூவல் என.
அதன்பின் பாரதவர்ஷத்தின் அனைத்துப் போர்நெறிகளுக்கும் மாறாக புண்பட்டு விழுந்தவர்களை தேடித்தேடி கொன்றனர். நீண்ட ஈட்டிகளுடன் அசுரவீரர்கள் களத்தில் பிணங்களின் மேல் கால் வைத்து தாவித்தாவிச்செல்வதை பத்மர் நோக்கி நின்றார். தலையுடன் கிடந்த அனைத்து உடல்களையும் ஈட்டியால் மெல்ல குத்தினர். அவ்வுடல் வலியில் அதிரக்கண்டால் கழுத்துக்குழியில் ஆழமாக ஒரு குத்து குத்திவிட்டு முன்னால் சென்றனர். காட்டில் கிழங்கு தேடுபவர்களைப்போல அத்தனை இயல்பாக, பேசியபடியும் சிரித்தபடியும் அதை செய்தனர்.
களம்நடுவே திகைத்துநின்ற இளவரசர்களை அவர்கள் பற்றி இழுத்து கைபிணைத்தனர். “நான் அவனை பார்க்கவேண்டும். நாங்கள் இளவரசர்கள். அரசமுறைப்படி அவனை நாங்கள் பார்க்கவேண்டும்” என்று கிருதி கூவினான். “போரில் வென்றவர்கள் காட்டும் நெறிமுறை சில உள்ளன… நாங்கள் அரசகுடியினர்” என ஜயசேனன் சொன்னான். அசுரபடைத்தலைவன் தன் ஈட்டியின் முனையால் அவன் தலையை ஓங்கி அறைந்தான். சினந்து திரும்பிய பிருகத்புஜனின் முகத்தில் கொழுத்த எச்சிலை காறி உமிழ்ந்தான். கிருதியின் நீண்டகூந்தலைப்பற்றி இழுத்து குனித்து அவன் பிடரியில் ஓங்கி அறைந்து கீழே விழுந்தவனை கீழ்மைச்சொற்களுடன் காலால் மாறி மாறி மிதித்தான். குழல்சுருளைப்பற்றி இழுத்துக்கொண்டுசென்று தேரிலேற்றினான்.
[ 18 ]
பழைய தேர்த்தட்டின்மேல் தூணில் விலங்குகள் பூட்டப்பட்டு அழைத்துவரப்பட்ட கிருதியையும் இளையோரையும் பத்மர் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவர் விழிகள் அவர்களுக்காக எதிர்நோக்கி இருந்தன. சிறு அசைவைக்கண்டே திடுக்கிட்டன. இறுதியில் அரசப்பெருஞ்சாலையில் அவர்களின் தேர் வருவதைக் கண்டபோது நினைத்திருந்த அளவுக்கு படபடப்பு எழவில்லை. பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டார். மறுகணம் திடுக்கிட்டு மீண்டும் நோக்கினார். நான்கு இளவரசர்களும் உடைகளில்லாமல் இருந்தனர். கிருதியின் தலை தொங்கி ஆடியது. பிருகத்புஜன் பற்களைக் கடித்தபடி தன்னைச்சுற்றி நிறைந்திருந்த முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவருக்கு அருகே ஜராசந்தனுக்கு எதிராக வைதிக அறிவிப்பை வெளியிட்ட நூற்றெட்டு அந்தணர்குடியினரும் ஒருவரோடு ஒருவர் உடல் நெருக்கி ஒற்றைவிலங்குபோல நின்றிருந்தனர். அவர்கள் விழிகளெல்லாம் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல் விதிர்ப்பதும் சிலிர்ப்பதும்கூட ஒன்றாகவே நிகழ்ந்தது. அவர்களை பலமுறை விழிதொட்டார். அவர்கள் அவரை அறிந்திராதவர்கள் போலிருந்தனர். தொலைவில் அரசப்பெருமுரசு விம்மிக்கொண்டிருந்தது. அரண்மனையின் படிகளில் வேல்களுடன் ஜராசந்தனின் மெய்க்காவலர் நின்றிருந்தனர்.
முற்றத்தில் அவர்களைச் சூழ்ந்திருந்த வீரர்கள் வேல்களைத் தூக்கி உரக்க கூச்சலிட்டனர். தேர்களைச்சூழ்ந்து வந்த வீரர்கள் மறுமொழியாகக் கூவினர். அத்தேர்களுக்குப் பின்னால் பெருந்திரளாக மக்களும் கூச்சலிட்டபடி வருவது தெரிந்தது. அவர்கள் தலைப்பாகைகளை தூக்கி வானில் வீசி கையாட்டி கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தனர். பலர் நடனமிட்டனர். அணுகும்தோறும் தெளிவான அவர்களின் முகங்களில் தெரிந்த வெறியை பத்மர் திகைப்புடன் நோக்கினார். தெய்வமெழுந்தவர்கள் போலிருந்தனர். மானுடரை உள்ளிருந்து ஆட்டிவைக்கும் தெய்வங்கள் சிலசமயம் உடலுக்கு வெளியே வந்து நின்றுகொள்கின்றன.
அந்த ஊர்வலம் அரண்மனையின் செண்டுவெளி முற்றத்தை அடைந்தது. தேர் நின்றதும் வீரர்கள் அதன் மேல் ஏறி கட்டுக்களை அவிழ்த்து இளவரசர்களை முடியைப்பிடித்து இழுத்து தரையில் தள்ளினர். ஒரு காவலன் அங்கே நின்று கைதூக்கி கூச்சலிட்ட சிறுவர்களை நோக்கி ஏதோ சொல்ல சிறுவர்கள் கூச்சலிட்டபடி வந்து இளவரசர்களை மிதிக்கத்தொடங்கினர். முதலில் சிரித்துக்கொண்டு விளையாட்டாக மிதித்தவர்கள் மெல்லமெல்ல வெறிகொண்டனர். உறுமியபடி காட்டுவிலங்குகள் போல மிதித்தனர். வீரர்கள் “போதும் போதும்” என்று அவர்களை விலக்கியும் அடங்கவில்லை. இளவரசர்களை இழுத்துக்கொண்டு வந்தபோதுகூட சில சிறுவர்கள் வெறியுடன் கூவியபடி ஓடிவந்து எட்டி உதைத்தனர். கற்களால் அவர்களை அடித்து கைசுருட்டி கூச்சலிட்டனர்.
நால்வரும் கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே இறந்தவர்கள் போலிருந்தனர். கிருதி விழிதூக்கி நோக்கினான். அவன் கண்கள் சிவந்து கலங்கி தெய்வமெழுந்த விழிகள் போலிருந்தன. பிருகத்புஜன் பித்தனைப்போல தலையை அசைத்தபடி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களை விழிஎடுக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார் பத்மர். அவர்கள் விழியில் உயிர்கொண்டு தன்னை நோக்குவார்கள் என்றால் அதை தாளமுடியுமா என எண்ணியபோது நெஞ்சு நடுங்கியது. ஆயினும் விழியகற்ற இயலவில்லை.
முரசுகளும் கொம்புகளும் முழங்கின. அரண்மனைவாயிலில் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கேட்டன. திரும்பிப்பார்க்கலாகாது என பத்மர் தனக்கு ஆணையிட்டுக்கொண்டார். எங்கோ இருந்த இளவரசர்களுக்கும் அது செவியில் விழவில்லை. முன்னால் அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் இரு நிரைகளாக வந்தனர். இசைச்சூதர் தொடர்ந்தனர். பின்னர் வண்ணப்பட்டுப்பாவட்டாக்களும் கின்னரிகளும் ஏந்திய அணிவீரர் வந்தனர். கொடியும் கோலும் ஏந்திய நான்கு ஏவலர் முன்னால் வர அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அகம்படி சேர்க்க வெண்குடைக்குக் கீழே ஜராசந்தன் நடந்துவந்தான்.
ஜராசந்தன் மகதத்தின் மணிமுடியை சூடியிருந்தான். காதுகளில் மணிக்குண்டலங்களும் நெஞ்சில் ஏழு நிரைகளாக மணியாரங்களும் முத்தாரங்களும் பொளியாரங்களும் மின்னின. தோள்வளையும் கைவளையும் கங்கணமும் கணையாழிகளும் அணிந்திருந்தான். பொற்பட்டு ஆடைக்குமேல் எரிவிழி மணிகள் பதித்த சிம்மமுகம் பொறித்த பிடிகொண்ட உடைவாள் செருகப்பட்ட கச்சை. அதற்குமேல் தொடைவரை இறங்கிய மணிகள் மின்னும் சல்லடம். கழல்களில்கூட வைரங்கள் மின்னின. ஓவியத்திலிருந்து இறங்கி வந்தவன் போலிருந்தான். அவன் குறடுகள் அருகே ஒலிப்பதைக் கேட்டபடி பத்மர் கண்களை மூடிக்கொண்டார்.
“வணங்குகிறேன் அமைச்சரே” என்றான் ஜராசந்தன். “நான் சந்திக்க விழைந்த மனிதர் நீங்கள்தான். ஓராண்டுக்கும் மேலாக ஒவ்வொருநாளும் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான். எதிர்பாராதபடி குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “நீங்கள் என் ஆசிரியர் பத்மரே. எளிய மலைமகனாக இங்கே வந்தேன். மொழிகளையே நான் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அரசுமொழி என்பது மீனுக்குள் மீன்போல மொழிக்குள் ஒரு மொழி. செத்தமொழி. அதையும் கற்றேன். அரசு சூழ்தலோ இருபக்கமும் முனைகொண்ட கூர்வாள். அத்துணை கூரிய செயல்பாடுகளை அத்தனை மழுங்கியமொழியில் சொல்வதும் கேட்பதும் தனிப்பயிற்சியால் மட்டுமே வெல்லக்கூடுபவை. வென்றேன். அதற்கு எதிர்முனையில் நீங்கள் இருந்ததுதான் அடிப்படை. ஒவ்வொரு தருணத்திலும் என் நுண்கணிப்பால் உங்களை வென்றேன்.”
பத்மர் அவனையே விழிசலிக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். “உங்கள் குறை என்ன என்று கண்டுகொண்டேன். நீங்கள் அந்தணர். ஓர் எல்லைக்கு அப்பால் குருதியை உங்களால் உளம் கொள்ளமுடியவில்லை. எப்போதும் நீங்கள் எண்ணுவதற்கு ஓர் அடி முன்னால் சென்றால் உங்களை வென்றுவிடலாமென்று கண்டுகொண்டேன்” என்ற ஜராசந்தன் உரக்கநகைத்து “உங்களை வென்றேன். பாரதவர்ஷத்தின் அந்தணர்கள் அனைவரையும் வென்றதற்கு நிகர் அது” என்றான். அவன் இளவரசர்களை திரும்பியே பார்க்கவில்லை. “எனக்கு பல ஐயங்கள் பத்மரே. பலநாட்களாக நான் சொல்சூழ்தலும் அரசநெறியும் காவியமும்தான் கற்றுவருகிறேன். வேதநூலும் ஓதுகிறேன். இவையனைத்தும் முடிந்தபின் ஒரு ராஜசூயம் நிகழ்த்துவதாகவும் உள்ளேன்.”
பத்மர் பெருமூச்சுவிட்டார். அவன் விளையாடுகிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அனைத்தும் விரைந்து முடியவேண்டும் என்று மட்டுமே அவர் உள்ளம் எண்ணிக்கொண்டது. “என் முதல் ஐயம் இது, பத்மரே. கடகவியூகத்தில் எதிரி படையமைக்கையில் நாம் கழுகுப்படை அமைக்கலாமென்கின்றன நூல்கள். ஏன் நரிப்படை அமைக்கக்கூடாது? நரி நண்டுக்கு தன் வாலை அளிக்கும். நண்டு கவ்வியதும் அதை மேலே எடுத்து சுவைத்துண்ணும்.” பத்மர் பேசாமல் நோக்கினார். “சொல்லுங்கள்” என்றான் ஜராசந்தன். “நீங்கள் உரிய முறையில் பேசாவிட்டால் இளவரசர்களில் ஒருவர் கழுவேற நேரும்.”
பத்மர் நடுங்கி “ஆம், அவ்வாறு அமைக்கலாம்” என்றார். ஜராசந்தன் உரக்க நகைத்து “பிழை… என்னை மகிழ்விக்க அதை சொல்கிறீர்கள். நண்டுக்கு முன் வாலை விட்டுக்கொடுப்பதைப்போல அறியாமை வேறில்லை. ஏனென்றால் வளையிலிருப்பது நண்டா தேளா என எப்படி அறிவது?” என்றான். கைகளால் தாளமிட்டபடி “பிழை சொல்லிவிட்டீரே பத்மரே! இவ்வறியாச்சிறுவனை கழுவேற்றிவிட்டீரே! இந்தப் பழியை உங்கள் குலமூத்தார் எப்படி தாங்குவார்கள்?” என்றபடி திரும்பி நோக்காமலேயே கையசைத்தான்.
மரப்பீடம் ஒன்று இழுத்துவரப்பட்டது. அதன்நடுவே ஒரு பிரம்பு நடப்பட்டிருந்தது. வெண்ணைபூசப்பட்டு மழுங்க மென்மையாக்கப்பட்டிருந்த அது ஒரு தசைநீட்சி என்றே தோன்றியது. ஜயசேனனை நான்கு வீரர்கள் பிடித்து தூக்கினர். அவன் கைகளை பின்னால் இழுத்துக்கட்டினர். அவன் “மூத்தவரே, மூத்தவரே” என்று கூவினான். “நான் உங்கள் இளையோன். நான் உங்கள் குருதி. வேண்டாம்… வேண்டாம்…” என்று கண்ணீருடன் கதறினான்.
அவனைத் தூக்கி அந்தப்பிரம்பின் மேல் அமரச்செய்தனர். இரு கழுமருத்துவர்கள் அவன் வயிற்றை மெல்ல பலவகையாக அழுத்திப்பிசைந்து குடல்சுருளை நீட்டி அதற்குள் அந்தப்பிரம்பு குத்தாமல் மெல்ல வழுக்கி உள்ளே செல்லும்படி செய்தனர். அவனுக்கு வலியிருக்கவில்லை. ஆனால் அச்சத்துடன் “மூத்தவரே… இரங்குங்கள். நான் உங்கள் இளையோன்… வேண்டாம்” என்று கூவிக்கொண்டிருந்தான். முழுக் கழுவும் உள்ளே சென்றதும் அவனை அப்படியே விட்டுவிட்டனர். இயல்பாக பீடத்தில் அமர்வதுபோல அவன் அங்கிருந்தான்.
பிருகத்புஜனும் பிருகத்சீர்ஷனும் கால்வழியாக சிறுநீர் கழித்தனர். அவர்களின் கண்களிலிருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. கிருதி பற்களால் இதழ்களை இறுகக்கடித்து கழுத்துத்தசைகள் துடிக்க நின்றான். “மூத்தவரே… மூத்தவரே…” என அழைத்துக்கொண்டிருந்த ஜயசேனன் அமைதியடைந்து மெல்ல விம்மத் தொடங்கினான்.
ஜராசந்தன் திரும்பி பத்மரிடம் “நாம் அடுத்த வினாவுக்கு செல்வோம் பத்மரே. இது அரசு சூழ்தலின் நெறி. மலர்களில் தேனெடுப்பதுபோல வணிகர்களிடம் வரிகொள்ளவேண்டும் அரசன். அதற்கு நிகராக வணிகர்களுக்கு அவன் அளிக்கவேண்டியது என்ன?” என்றான். பத்மர் கண்களில் கண்ணீர் வழிய பேசாமல் நின்றார். “சொல்லுங்கள் பத்மரே. உங்கள் அமைதியால் மூன்றாமவன் கழுவேறினால் நீங்கள் வருந்துவீர்கள் அல்லவா?”
பத்மர் அடைத்த குரலில் “அரசன் தோட்டக்காரனாக மாறி அச்செடிகளுக்கு நீரூற்றவேண்டும்” என்றார். “கேட்கவில்லை” என்று அவன் செவிகளை அருகே கொண்டுவந்தான். அவர் தொண்டையை காறிவிட்டு மீண்டும் சொன்னார். “ஆ! மீண்டும் பிழை! என்ன இது பத்மரே? எளிய காட்டாளனிடம் தோற்கலாமா?” என்றான். “காட்டுப்பூக்களிலும் தேனீ மதுகொள்கிறதே? அக்காட்டை எவர் பேணமுடியும்?” அவன் சிரித்துக்கொண்டு அவர் முகமருகே முகம் வைத்து “அரசன் அம்மலர்களின் மகரந்தப்பொடியை பரப்பினாலே போதும்…” என்றான்.
திரும்பாமலேயே அவன் கைகாட்ட வீரர்கள் பிருகத்சீர்ஷனை தூக்கினர். அவன் விலங்குபோல அலறி திமிறித்துள்ள அழுத்திப்பற்றி இழுத்துச்சென்று கழுமேல் வைத்தனர். “மூத்தவரே! மூத்தவரே! நான் உங்கள் அடிமை. நான் ஏதும் செய்யவில்லை. இம்மூவரும் என்னை இழுத்துச்சென்றார்கள்” என்றான். கழுவிலமர்ந்திருந்த ஜயசேனன் “மூத்தவரே, அவன்தான் அனைத்தையும் செய்தான். அவர்கள் மூவரும்தான். நான் அறியாதவன். இளையோன்” என்று கூவினான்.
ஜராசந்தன் அவர்களை நோக்கவேயில்லை. புன்னகையுடன் “அடுத்த வினா காவியத்திலிருந்து. பத்மரே, தடாகங்களால் பூமி சூரியனை நோக்கி புன்னகை செய்கிறது. அவ்வாறென்றால் இரவில் நிலவை அத்தடாகங்கள் என்ன செய்கின்றன?” பத்மர் மிகத்தாழ்ந்த குரலில் “அஸ்வபாதரின் காவியமீமாம்சமாலிகையில் உள்ள வரி அது. இரவில் அவை நிலவொளியில் கனவுகாண்கின்றன” என்றார்.
“அடடா! பிழை! கருநிலவுநாளில் அவை எப்படி கனவுகாணமுடியும்? உவமை என்றால் அது முற்றிலும் பொருந்தவேண்டாமா? பத்மரே, இரவில் அவை அவ்வாறு புன்னகைபுரிந்தமைக்காக வஞ்சம் கொள்கின்றன. முழுநிலவில் வஞ்சத்தை புன்னகையால் மறைக்கின்றன, அவ்வளவுதான்.” அவன் திரும்பி பிருகத்புஜனை நோக்கி “இளையோனே, காவியத்தின்பொருட்டு கழுவேறுவதென்பது பெரும் நல்லூழ். உன்னை காவியதேவதை விண்ணுக்குக் கொண்டுசெல்லும்” என்றான்.
“மூத்தவரே, மூத்தவரே, மூத்தவரே” என்று அவன் தொண்டை நரம்புகள் புடைக்க கதறினான். அவனை அவர்கள் கழுவிலமரச்செய்தபோது ஜராசந்தன் பரிவு தெரிந்த முகத்துடன் “மெல்ல மெல்ல…” என்றான். பின்னர் திரும்பி “இறுதியாக, மெய்யியல். பத்மரே, உயிருள்ள பசு ஏன் இறந்த கன்றை ஈன்றது?” என்றான். பத்மர் கண்களை மூடிக்கொண்டார். “அல்லது பசு இறந்தது என்றால் கன்று எப்படி பிறந்தது?” பத்மர் உதடுகளை அழுத்தி பேசாமல் நின்றார். “சொல்லமாட்டீரா?” என்றான் ஜராசந்தன். “சொல்லும் பத்மரே, நம் சொல்லாடலில் நான்குநிலையிலும் நானே வென்றேன் என்று நான் ஒரு கல்வெட்டை இங்கே அமைக்கவேண்டும் அல்லவா?”
பத்மர் பெருமூச்சுவிட்டார். “நீங்கள் அமைதியாக நின்றாலும் நானே வென்றேன்” என்று சொல்லி திரும்பிய ஜராசந்தன் “ஆகவே என் முதல் உடன்பிறந்தானாகிய கிருதியையும் நான் கழுவிலேற்றுகிறேன்” என்றான். கிருதி தருக்குடன் தலைதூக்கி “நான் ஷத்ரியன். என்னை கழுவிலேற்றினால் பழிசூழும். இருள்தெய்வமாக வந்து உன் குடியை சூறையாடுவேன்” என்றான்.
“நன்று நன்று… தெய்வங்களுடன் போரிடுவதும் உவகைக்குரியதே” என்றான் ஜராசந்தன் சிறுவனைப்போல நகைத்தபடி. “கேட்டீர்களா, பத்மரே? என்னுடன் அடுத்த களத்தை குறித்துவிட்டார். அக்களத்திலும் நீங்கள் வருவீர்களா? வருவீர்களா பத்மரே?” என்றான். அருகே வந்து தன் மூக்கால் அவர் மூக்கை உரசி “வரமாட்டீர்களா?” என்றான். அவர்கள் கிருதியை கழுவமர்த்துவதை பத்மர் உள்நடுக்கத்துடன் நோக்கிநின்றார். அவன் பற்களை இறுகக்கடித்து தலையை அசைத்துக்கொண்டிருந்தான்.
“அவ்வண்ணமென்றால் நமது போர் முடிந்தது” என்று ஜராசந்தன் கைகளை தட்டினான். “நீங்கள் அந்தணர். ஆகவே கொல்லப்போவதில்லை. ஆனால் நான் அரசன். பிழைசெய்தவர்களை தண்டித்தாகவேண்டும். நாரதஸ்மிருதியில் அரசவஞ்சம் செய்த அந்தணனை நாவறுத்து நாடுகடத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. யமஸ்மிருதி அவன் தலையை மொட்டையடித்து நெற்றியில் இழிமங்கலக்குறி வரையலாம் என்கிறது. கார்த்தவீரியஸ்மிருதி அவனுக்கு மிலேச்சர் வெட்டிய அன்னைப்பசுவின் ஊனை அளித்து குலம்அழித்து இழிசினனாக ஆக்கலாம் என்கிறது. அவன் கண்களைப்பிடுங்கவும் ஒரு ஸ்மிருதி சொல்கிறது. ஸ்வாகைதேவியின் உத்தரஸ்மிருதி. என்ன செய்வது? ஒரே குழப்பம். ஆகவே இவையனைத்தையும் செய்யலாம் என முடிவெடுத்தேன்.”
பத்மர் பெருமூச்சுவிட்டார். “ஆனால் இப்போதல்ல. நாளை. இன்று இவர்கள் கழுவில் அமர்ந்திருப்பதை நோக்கவேண்டும் அல்லவா?” அவன் வைதிகர்களை நோக்கி திரும்ப முதியவைதிகர்தலைவர் “இழிசினனே, உன்னை முறைமீறி விலக்கு செய்தோமா என்ற சிறு ஐயம் எங்களுக்கு இருந்தது. அது இன்றோடு முற்றழிந்தது. நிறைவுடன் வாழ்வை முடிக்கிறோம். நீ எங்களுக்கு என்ன தண்டம் அளித்தாலும் வேதம் சொல்லி நீர் அள்ளி இந்நகர்மேல் வீசி பழிச்சொல்லிட்டுவிட்டு நாடு நீங்குவோம். எதிர்வரும் முதல் ஆற்றங்கரையில் சிதையமைத்து அதிலேறி இறப்போம். எங்கள் நாவில் வாழும் வேதம் மீதும் வேதமுனிவர் மீதும் அவியுண்ணும் அத்தனை தேவர்மீதும் ஆணை” என்றார்.
ஜராசந்தன் நகைத்தபடி “ஆம், இதையே நான் எதிர்பார்த்தேன். நான் வேதஎதிரியாகவேண்டும். அசுரர்களைத் திரட்டும் வழி அது ஒன்றே. நன்று நன்று” என்றான். முதியவைதிகரின் சொற்கள் வைதிகர்களை இறுக்கமழியச்செய்தன. பெருமூச்சுகள் தொடர்ந்து எழுந்தன. அவர்கள் மெல்ல இயல்பாயினர். உடல்முடிச்சுகள் அவிழ்ந்தன. முகங்கள் மலரத்தொடங்கின.
பீடமொன்றை போட்டு ஜராசந்தன் அவர்களருகே அமர்ந்துகொண்டான். “நான் இதுவரை கழுவேற்றலை முழுமையாக நோக்கியதில்லை அமைச்சரே” என்றான். “தந்தையையும் அன்னையரையும் அழைத்தேன். அவர்கள் வர விரும்பவில்லை. இது ஓர் இனியநினைவாக எஞ்சுமென எண்ணுகிறேன்.”
ஜயசேனன் முதலில் அலறத்தொடங்கினான். அவன் உடலுக்குள் குடல்கள் சுருளவிழத்தொடங்கின. அவை கழுவை முட்டி பிழித்து இழுத்தன. வலி கூடிக்கூடி வர அவன் வெறிகொண்டவன் போல துள்ளி கழுவிலேயே சுழன்றான். “மூத்தவரே! மூத்தவரே” என்று கதறினான். பின்னர் “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று கூச்சலிட்டான். சற்றுநேரத்தில் பிறரும் அலறத்தொடங்கினர்.
இசைகேட்கும் முகத்துடன் கைகால்களை நீட்டிக்கொண்ட ஜராசந்தன் “குருதிப்பெருக்கு இருக்காது. உள்ளே சீழ்கட்டும் புண்ணும் அமையாது. எனவே இவர்கள் பன்னிருநாட்கள் வரை முழுநினைவுடன் உயிருடன் இருந்து முழுக்கழுவின்பத்தையும் நுகர்வார்கள் என்கிறார்கள். அது உண்மையா என்று பார்க்கப்போகிறேன். பன்னிருநாட்களும் நான் இங்கேயே இருப்பேன். உணவும் ஓய்வும் இங்குதான். நீங்களும் இங்குதான் இருப்பீர்கள்” என்றான். திரும்பி வைதிகர்களிடம் “நீங்களும் இங்கிருப்பீர்கள் உத்தமரே” என்றான்.
“கீழ்மகனே, இப்புவியே ஒரு கழுமேடை. உயிர்கள் துடித்திறக்கின்றன. அதை நாளும் பார்ப்பவர்கள் நாங்கள். மூடா, இது உனக்குமட்டுமே இன்பம்” என்றார் முதியவைதிகர் அமைதியான குரலில். “தெய்வங்களே தெய்வங்களே” என்று கதறிக்கதறி மெல்ல தொண்டை அடைக்க ஓசையின்றி உடல்குலுங்கினர் இளவரசர்கள். “நீர் கொடுங்கள்… இன்னீர் கொடுங்கள்” என்று ஜராசந்தன் ஆணையிட்டான்.
அவர்களுக்கு வெல்லம்கலந்த நீர் அளிக்கப்பட்டது. அதை குழவிகள் பாலருந்துவதுபோல பாய்ந்து நா நீட்டி அருந்தினர். நீர் உள்ளே சென்றதும் வலி மேலும் பெருக, தொண்டை திறக்க, மீண்டும் கூச்சலிட்டு சுற்றிவந்தனர். “பாடலுக்கேற்ற ஆடல்” என்று ஜராசந்தன் தொடைதட்டி நகைத்தான். “பன்னிருநாட்கள்… மகதத்தினர் அனைவரும் இங்கு வந்து பார்க்கவேண்டும் என்று அரசாணை” என்று தன் அமைச்சரை நோக்கி சொன்னான்.
வெண்முரசு சென்னை விவாதக்குழுமம் இணையதளம்