தினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்

Tamil_News_large_1481446

 

தேர்தல் போன்ற காலகட்டங்களில் நாம் நமது வாக்குச்சீட்டின் மூலம் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு உண்மைகளை அறிந்திருக்கிறோம் என்பது எப்போதுமே சந்தேகத்துக்குரியது. பெரும்பாலும் செய்தியூடகங்கள் அளிக்கும் தகவல்களை நம்பித்தான் நாம் அரசியலையும் ஆட்சியையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஊடகங்களின்வழியாக இந்திய அளவில் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்கும் முக்கியமான கட்டுரையாசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்களில்தான் எழுதுகிறார்கள். சிறந்த ஆங்கில நடை இருப்பதனால் அவர்கள் எழுத்துக்கு ஒரு  முக்கியத்துவம் வருகிறது. உதாரணமாக ,அருந்ததி ராய்.

அவர்களின் கருத்துக்கள் நேரடியாகச் சென்றுசேர்வது ஆங்கிலம் அறிந்தவர்களிடம்தான். ஆனால்  இவர்களின் கட்டுரைகளை ஒட்டித்தான் இந்தியாவின் வட்டார மொழி நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அந்தக் கட்டுரைகளை ஒட்டித்தான் மேலும் சிறிய இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆங்கில ஊடகங்களில் எழுதும் ஒரு நூறு பேர் இந்தியா எப்படி சிந்திக்கவேண்டும், எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை ஏதோ ஒருவகையில் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்த கட்டுரையாளர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளோ, அடிப்படை நேர்மையோ மிகவும் சந்தேகத்துக்குரியது. நாம் ஒவ்வொரு அரசியல்வாதியையும் கூர்ந்து ஆராய்கிறோம். அவர்களின் தனிப்பட்ட குணங்களை, பின்னணியை விவாதிக்கிறோம். ஆனால் இவர்களைப்பற்றி எங்குமே ஓர் ஆராய்ச்சியோ விவாதமோ நிகழ்வதில்லை. அப்படி ஆராய்ந்தால் இவர்களின் வாழ்க்கையும், இவர்கலின் தொடர்புகளும் நமக்கு பெரும் அதிர்ச்சிகளையே உருவாக்கும்.

இவர்களில் கணிசமானவர்கள் நகர் சார்ந்தவர்கள். மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படித்தவர்கள் வலுவான ஐரோப்பிய தொடர்புகள் உள்ளவர்கள். சர்வதேச அளவில் நிகழும் கருத்தரங்குகள் ,பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்குத் தொடர்ச்சியாகச் சென்று கொண்டிருப்பவர்கள் .அவற்றின் வழியாக இந்தியாவைப்பற்றிய சித்திரத்தை மேலைநாடுகளில் உருவாக்கும் வல்லமைகொண்டவர்கள். உதவித்தொகைகள், ஆய்வு நல்கைகள் வழியாக பெரும்பணத்தை பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.

இரு உதாரணங்களில் சொல்கிறேன். தேசிய அளவில் செய்திகளை தீர்மானிப்பவர்களில் ஒருவராக இருக்கும் பர்கா தத் என்பவர் தனிப்பட்ட முறையில் ஓர் அரசியல் தரகர் என்று நான் ஒருமுறை எழுதினேன். அவரது ரசிகர்கள் பலர் என்னை வசைபாடினர். அந்த வசைபாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அதிகாரத்தரகர் நீரா ராடியா தொழிலதிபர் ரத்தன்  டாட்டாவுடன் பேசிய ஒலிப்பதிவுகள் வெளியாகின. அதில்  பர்கா தத் ஒரு முக்கியமான தொழில்பேரத் தரகராக செயல்பட்டிருக்கும் செய்தி வெளிவந்தது. ஆனால் அந்த செய்தி எவ்வகையிலும் பர்கா தத்தை பாதிக்கவில்லை. இன்றும் அவர் ஒரு முக்கியமாக கருத்து செயல்பாட்டாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆங்கில செய்திச் சிந்தனையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் எழுதும் எவ்விஷயத்திலும் நேரடியாகச் செல்வதில்லை. எப்பகுதிக்கும் நேரடியாகப் பயணம் செய்வதில்லை. தொடர்புள்ள எவரையும் நேரில் சந்தித்து உரையாடுவதும் இல்லை. ஆங்கிலம்பேசிப்புழங்கும் ஓர் உயர்குடித்தளத்தில் சொகுசாக இருந்துகொண்டு, தங்களுக்குச் சௌகரியமான தகவல்களை மட்டும் கொண்டே இந்த ’ஆய்வு’களை எழுதுகிறார்கள்.

இவர்களில் கணிசமானவர்களுக்கு இந்தியாவின் சிக்கலான வரலாறு தெரியாது. இந்தியாவின் கிராமிய யதார்த்தம் பற்றி எந்தப்பார்வையும் இவர்களிடம் இல்லை.  இவர்கள் முன்வைக்கும் கருத்துகள் அனைத்துமே இரண்டு வகையில் உருவாகுபவை .ஒன்று, இந்தக் காலகட்டத்துக்கு எது முற்போக்கு என்றும் எது இந்தியாவின் படித்த உயர்குடியால் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பார்த்து, அதை வித்தாரமாக முன்வைப்பது. இன்னொன்று இவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் சக்திகளால் இவர்களுக்கு அளிக்கப்படும் கருத்துத்தரப்பு

அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் செய்திகளை நானே நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆகவே செய்திகளின் உண்மையை அறிய இந்தியாவின் நிலப்பகுதிகளில் அனைத்திற்கும் நானே நேரடியாக நண்பர்களுடன் பயணம் செய்வதுண்டு. வடகிழக்கிலும், காஷ்மீரிலும் எல்லைப்புறங்களுக்குச் சென்றிருக்கிறேன். மாவோயிஸ்ட் தீவிரவாதம் கொண்ட சட்டீஸ்கர் பகுதிகளின் உள் கிராமங்களுக்கெல்லாம் பயணம் செய்திருக்கிறேன். பயணங்களில் நான் நேரில் கண்டவற்றை ஒவ்வொருநாளும் பதிவு செய்திருக்கிறேன்

எப்போதெல்லாம் நேரில் சென்று பார்க்கிறேனோ அப்போதெல்லாம் இந்தச் செய்தியாளர் அளிக்கும் சித்திரத்திற்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். ஓர் உதாரணம், சமீபத்தில் காஷ்மீர் சென்றது. பாரமுல்லா, பத்தான்  உட்பட பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதம் உச்சகட்டத்தில் இருக்கும் சிற்றூர்கள் அனைத்திற்கும் சென்று பார்த்தேன்.

இங்கே நமக்கு என்ன சொல்லப்படுகிறது? காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் பகுதி அல்ல, இந்தியா சட்ட விரோதமாக அதை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது, அங்கே இந்திய ராணுவம் கொடிய அடக்குமுறைகளை செய்து கொண்டிருக்கிறது, காஷ்மீர் தலைநகரில் மக்கள் பெரும்பான்மையோர் தாங்கள் தனிநாடாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் – என்றெல்லாம்தானே? சுற்றி வளைத்து தேசிய ஊடகங்களில் எழுதுபவர்கள் இதைத்தானே இந்தியாவில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

காஷ்மீர் மாநிலம் என்பது மூன்று பகுதிகள் அடங்கியது. ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். ஜம்மு பகுதி பாரதிய ஜனதா பெரும்பான்மை பலம் பெறும் அளவுக்கு இந்துக்கள் வாழும் பகுதி. லடாக் பகுதியில் மிகப்பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தை சார்ந்த மக்கள். அவர்கள் இந்தியாவின் தீவிர ஆதரவாளர்கள். தீவிரவாதம் இருப்பது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் மட்டும்தான். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் கூட ஸுன்னி முஸ்லிம்கள் மட்டுமே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிதிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பாலும் காங்கிரஸ் ஆதரவாளர்களாகவும், இந்திய ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயணம் செய்யும் எவருமே ஷியாக்களின் இல்லங்களில் காங்கிரஸ் கொடியும் ஈரானிய கமெனியின் படமும் இருப்பதைக் பார்க்கலாம். நாங்கள் முதலில் ஈரானிய அதிபரின் படத்தை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, அவர்களிடமே விசாரித்துத் தெரிந்துகொண்டோம். ஷியா கிராமங்களைச் சுற்றி ஸுன்னிகள் ஐஎஸ்எஸ் இயக்கம் ஷியாக்களின் தலையை வெட்டி பரப்பி வைத்திருக்கும் படத்தை பேனர்களாக வைத்து ஷியாக்களை அச்சுறுத்துவதைக் கண்டோம். எந்த ஊடகத்திலாவது இதையெல்லாம் வாசித்திருக்கிறீர்களா?

இந்திய ராணுவம் கஷ்மீரில் செயல்படுவதே ஷியா முஸ்லிம்களை நம்பித்தான். ஸுன்னி முஸ்லிம்களிலேயே கூட நேரடியாக வணிகம் போன்றவற்றில் ஈடுபடாத, மேய்ச்சல்வாழ்க்கைப் பின்னணி கொண்ட ஜாதியினர்தான் அதிகமும் பாகிஸ்தானிய ஆதரவாளர்களாகவும், தீவிரவாதநோக்கு கொண்டவர்ளர்களாகவும் இருக்கிறார்கள். மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட பாகிஸ்தானிய ஆதரவு தீவிரவாத அமைப்புகளால் காஷ்மீர் மக்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இந்த எதார்த்தத்தை எந்த செய்திகளிலாவது கண்டிருக்கிறோமா? எவராவது எழுதியிருக்கிறார்களா? காஷ்மீரை தனிநாடாக கொடுப்பதென்றால் ஸுன்னிகளின் ஆதிக்கத்திற்கு பௌத்தர்களையும், இந்துக்களையும், ஷியாக்களையும் விட்டுவிடுவதா என்ற எளிமையான கேள்விக்கு கூட இந்தத் தேசிய ஊடகங்களின் கட்டுரையாளார்கள் பதில் சொல்வதில்லை. இவர்களை நம்பித்தான் நாம் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் தேசிய ஊடகங்களில் எழுதும் உள்நோக்கம் கொண்ட கட்டுரையாளர்களுக்கு தங்கள் உயர்குடிநலன் அன்றி வேறு அக்கறைகள் இல்லை. இந்திய மக்கள் மேல் எந்த அனுதாபமும் இல்லை. அந்த போலி அறிவு ஜீவிகளை நிராகரித்து உண்மையான செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இங்கிருந்து செல்லும் பெரும்பாலான செய்தியாளர்கள் ஸ்ரீநகருக்குச் சென்று அங்குள்ள  தீவிரவாதிகளை மட்டும் கண்டு பேட்டி எடுத்து செய்தி வெளியிடுவதுதான் வழக்கம். உண்மையில் மக்களைச் சென்று கண்டு அவர்களிடமிருந்து செய்திகளைப்பெற்று எழுதும்போது நாம் அடையும் சித்திரமே வேறாக இருக்கும் நம்முடைய அரசியல் பிரக்ஞையை அது வேறொன்றாக மாற்றி அமைக்கும்.

பாரமுல்லா பகுதிகளில் நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த முதல் தமிழ்ப் பயணக்குழு என்று எங்களை அங்குள்ள ராணுவத்தினரும் இஸ்லாமியரும் சொன்னார்கள். அனைத்து இடங்களிலும் எளிய இஸ்லாமியர், ஸுன்னி முஸ்லீம்கள்கூட, எங்களை வரவேற்று, அங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று எழுதும்படிக் கோரினர். ஏனென்றால் அவர்கள் வணிகர்கள். பயணிகளே அவர்களுக்கு வருமானம் அளிப்பவர்கள்.

நாங்கள் அங்கே தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களைத் தேடிச்சென்றோம். அனைத்து இடங்களுக்கும் அழைத்துச்சென்று காட்டியவர்கள் இஸ்லாமியர்களே. மக்கள் இணைந்து வாழ விரும்புகிறார்கள். பிரிவினைகளை, கசப்புகளை அறிவுஜீவிகள் உருவாக்குகிறார்கள். அவர்கள் அதைவைத்தே வாழ்கிறார்கள்.

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுற்றத்தின் விலை