அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது என்று நம்புகிறேன். இருப்பினும் என் எழுத்தாற்றல் குறைவினால் நான் சரியாக என் கருத்துக்களைக் கூறாமல் விட்டுவிட்டேனோ என்ற சஞ்சலம் காரணமாக மீண்டும் சில விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
நான் எத்தகைய தவறான புரிதலை பரப்பியம் என்ற வார்த்தை மக்களிடையே ஏற்படுத்தும் என அஞ்சுகிறேனோ அத்தகைய தவறான புரிதலையே தன்னுடைய கருத்தியல் அடிப்படையாக அ.ராமசாமி வெளிப்படுத்தியுள்ளது கவனத்திற்குரியது. அவரைப் பொறுத்தவரை அவர் வெகுஜன கலாசாரம் என்பது பரப்பப்படுவது என்றே புரிந்துகொள்கிறார். அதுமட்டுமன்றி அது மக்களை வசப்படுத்துவது அவர்களுக்கிடையேயுள்ள பன்மைத்தன்மையை குறைப்பது போன்ற “நோக்கங்களைக்” கொண்டது என்றும் பார்க்கிறார். உதாரணமாக அவர் வரி: “பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்துவத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை.”
ஜெயமோகன், இத்தகையதொரு ஒருதலைப்பட்சமான புரிதலுக்கு எதிராகவே ஸ்டூவர்ட் ஹால் உள்ளிட்ட பர்மிங்க்ஹாம் பள்ளியைச்சேர்ந்தவர்களும், வால்டர் பெஞ்சமின், க்ரகெளர் போன்ற ஃபிராங்க்பர்ட் சிந்தனையாளர்களை பின்பற்றிச் சிந்திப்பவர்களும், பொதுவாகவே கிராம்சி, பக்தின் போன்ற மக்களின் செயலூக்கத்தை முக்கியப்படுத்தும் சிந்தனையாளர்களின் மரபில் வந்தவர்களும் கடந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மேற்குலகில் போராடி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அ.ராமசாமியும் அறிந்திருப்பார் என்றுதான் நம்புகிறேன்.
அ.ராமசாமியின் எழுத்துக்களை சந்தர்ப்பம் அமையாததால் நான் இன்னம் முழுமையாகப் படிக்கவில்லை. அவரே கொடுத்துள்ள மேற்கோளின்படி அவருடைய குழப்பம் ரஜினிகாந்த் படத்தைப்பார்ப்பதில் என்ன செயலூக்கம் இருக்க முடியும் என்பதுதான் எனத் தோன்றுகிறது. அதை நாம் பல்வேறு தளங்களில் விளக்க முடியும். ஒன்று அத்திரைப்படத்தின் கதையாடல் அம்சங்கள் வெகுஜன மனோவியலிலிருந்து உருவாகுபவை (People are both producers and consumers). இரண்டு, வெகுஜன ரசனை என்பது தன்னெழுச்சியாகத்தான் இயங்கும் (ரஜினிகாந்தின் “பாபா” திரைப்படம் மிகுந்த விளம்பரங்களுக்குப் பிறகும் தோல்வியடைகிறது.) மூன்று, எத்தகைய திரைப்படத்தினுடனும் மக்கள் பேர வாசிப்பில்தான் (negotiated reading) ஈடுபடுகின்றனரேயன்றி அதன் கருத்துக்களை அப்படியே ஏற்பதில்லை.
ஆனால் அ.ராமசாமி ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன் போன்ற படங்களை மக்களை வசப்படுத்துவது, திரட்டுவது போன்ற வலியோர் யுக்தியாகக் (manipulative designs of the dominant) காண்கிறார். அடுத்து அரசியல் பற்றிப் பேசும்போது இன்னமும் தெளிவாகவே அதைக்கூறுகிறார்: “வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும்.”
இவ்விதமான சிந்தனைக்கு மாற்றாகத்தான் நான் Ernesto Laclau-வின் Populist Reason என்ற நூலை சுட்டி உங்களுக்கு எழுதியிருந்தேன். கிராம்சியின் வழிவந்த லக்லாவின் சிந்தனை எத்தகையது என்றால், மக்கள் தொகுதிகளின் வெவ்வேறு விதமான அரசியல் விழைவுகள் ஒரு சில பொதுவான குறிகளை ஏற்றுக்கொண்டு/ஏற்படுத்திக்கொண்டு ஒன்று திரள்கின்றன என்பதேயாகும். அதன் வழி நின்றே இந்திய தேசிய காங்கிரஸ், தி.மு.க, பாரதீய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகளின் செயல்பாடுகளையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் ஏதோ வஞ்சகமும் ஆற்றலும் கொண்ட சிலர் மக்களை தூண்டி அவர்களை விருப்பம்போல கையாள்வதாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட புரிதல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது.
அதன்பிறகு அவர் மேல்தட்டு ரசனை மறுப்பு anti-elitism என்பதுடன் மார்க்ஸீயத்தை தொடர்புபடுத்திக் கூறுவது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. இது தொடர்பாக எவ்வளவோ செரிவான விவாதங்கள் உலக சிந்தனையில் நிகழ்ந்துள்ளன (உதாரணமாக வால்டர் பெஞ்சமின்). அ.ராமசாமி சுட்டுவதுபோல் வெகுஜனவிய வெளிப்பாடுகளை புரிந்துணர்வுடன் ஆய்வது என்பது அதற்கு வெளியிலான அழகியல் போக்குகளுடன் முரணுவதன்று. தெளிவான தத்துவ அடிப்படையில் தன் ஆய்வுச்சட்டகத்தை அமைத்துக்கொள்ளும் யாரும் சிறுபான்மை குழுக்களின் படைப்பாக்க/ ரசனை வெளிப்பாடு, வெகுஜன படைப்பாக்க/ ரசனை வெளிப்பாடு இரண்டையும் நுட்பமாக ஆயவும் விமர்சிக்கவும் செய்யலாம். நீங்கள் சமீப காலத்தில் இதை வலியுறுத்தி உங்கள் வாசகர்களுக்குத் தொடர்ந்து விளக்கமளிப்பதை மகிழ்வுடன் கவனித்து வருகிறேன். வெகுஜன கலைகள் என்பவை இட ரீதியான உருவகத்தில் (spatial metaphor) பரவலானவை எனலாம். ஆனால் அவை வெறுமனே பரப்பப்பட்டவை அல்ல.
இறுதியாக மீண்டும் ஒருமுறை மிக்க பணிவுடன் சுட்டுகிறேன். “பரப்பு” என்ற வேர்ச்சொல் ஒரு புள்ளியிலிருந்து பரவ வைக்கப்படுவதை குறிக்கும். Propagation, propaganda போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானவை. பரப்பியல் வாதமோ, பரப்பியமோ இரண்டுமே பாபுலர், பாபுலிஸம் போன்றவற்றிற்கு இன்றைய சிந்தனைகளின் வெளிச்சத்தில் நியாயம் செய்பவை அல்ல.
பரப்பியம் – பரப்பப்பட்ட சித்தாந்தம் அல்லது குறிகள் என்றே பொருள்படும்
பரப்பிசை – பரப்பப்பட்ட இசை என்றே பொருள்படும்
பரப்பு கலைகள் – பரப்பப்பட்ட கலைகள் என்றே பொருள்படும்
இவையனைத்துமே மக்களின் செயலூக்கத்தையும், பங்கையும் மறுத்து ஒரு சில சமூக சக்திகளின், வலியோரின் யுக்திகளையே முன்னிறுத்துகின்றன. பேராசிரியர் அ.ராமசாமி அந்த அடிப்படையில்தான் எழுதுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் கொஞ்சம் நுட்பமாக பரப்பிசையின் வேர்கள் பல இடங்களிலிருப்பது போன்றவற்றை கூறியதால், உங்களிடம் இன்னமும் தெளிவான தேர்வை எதிர் நோக்கலாம் என்ற எண்ணமிருக்கிறது. என்னுடைய பரிந்துரைகள்
வெகுஜனவியம் / வெகுமக்களியம் – மக்களிடமிருந்து திரண்டெழும் பொதுமைப்பட்ட சித்தாந்தம், குறிகள்
வெகுஜன இசை – மக்கள் தொகுதிகளில் வேர்கொண்டுள்ள இசைவடிவங்களின் தொகுதி
வெகுஜன கலை வடிவங்கள் – மக்கள் மனோவியல் கூறுகளை உள்ளடக்கிய கதையாடல்கள்
இதற்குமேலும் இந்த விஷயத்தை வலியுறுத்துவது தமிழ்ச்சிந்தனையின் மேலான அக்கறையாகவன்றி, என் சுயமுக்கியத்துவ வெளிப்பாடாக புரிந்துகொள்ளப்பட்டுவிடலாம் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். எதிர்காலத்தில் என் எழுத்தில் இவ்விவாதம் தொடர்பான தத்துவ அடிப்படைகளை விரிவாகப் பேச நிறையவே சந்தர்ப்பமிருக்கும்.
அன்புடன்
ராஜன் குறை
அன்புள்ள ராஜன்குறை
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில்தான் நான் அண்டோனியோ கிராம்ஷியின் சிறைக்குறிப்புகளையும் சோவியத் ருஷ்ய வெளியீடுகளான பாப்புலிசம் குறித்த நூல்களையும் வாசித்தேன். இரண்டும் முற்றிலும் முரண்படும் இரு கோணங்களை முன்வைத்தன. [இந்தக் கடிதத்தில் ஆங்கிலச் சொல்லுக்கே திரும்பிவிடுகிறேன். நீங்கள் என்னை குழப்பிவிட்டுவிட்டீர்கள்]
பாப்புலிசம் சார்ந்த சிந்தனைகள் இங்கே சோவியத் ஆய்வாளர்கள் மற்றும் மார்க்ஸியர்கள் வழியாகவே வந்துசேர்ந்தன. சோவியத் ருஷ்ய ஆய்வாளார்களின் தரப்பில் பாப்புலிசம் என்பது கீழ்க்கண்ட இயல்புகளைக் கொண்டது
1. அது முதலாளித்துவ சுரண்டல் சக்திகளால் அவர்களுக்குச் சாதகமான கருத்தியல்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்காகவே உருவாக்கப்படும் கலை. சுரண்டலை நியாயப்படுத்தவும் அதற்கான அமைப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் தேவையான கருத்தியல் உள்ளடக்கத்தையே அது கொண்டிருக்கும்.
2. எல்லாநிலையிலும் பெரும் முதலீடு கொண்டதாகவே அது இருக்கும். ஆகவே அது ஒருபோதும் மக்கள்கலையாக இருக்க முடியாது. அதாவது ஒருவகையில் அது ஆதிக்கவர்க்கத்தின் வேசி. [ ஞாபகத்திலிருக்கும் சொல்லாட்சி Bewitching force ]
3. தன் நோக்கத்துக்காக அது மக்கள் ரசனையை வென்றெடுக்க முயலும். இதற்காக அது மக்களிடம் உரையாடும். ஒரு எதிர்வினை ஆராய்ச்சி நோக்கை கொண்டிருக்கும். அந்த எதிர்வினைகளுக்கேற்ப தன்னை தகவமைப்பதன் வழியாக அது ’கிட்டத்தட்ட’ மக்கள்கலையாகவே தோற்றம் அளிக்கும்.
4. ஆனால் பாப்புலிஸ்ட் கலை மக்கள்கலை அல்ல. அது மக்களின் இயல்பான வெளிப்பாடு அல்ல. அது மக்களால் உருவாக்கப்படுவதில்லை. அதன் உருவாக்கத்தில் மக்களுக்கு எவ்வகையான நேரடிப்பங்களிப்பும் இல்லை. அது அவர்கள் மீது சுமத்தப்பட்டு பிரச்சாரம் மூலம் அவர்களால் ஏற்கப்படுவதே.
5 நாட்டார் [Folk] கலைகளே உண்மையில் மக்கள்கலைகள். அவை மக்களால் தங்கள் ரசனைக்காக இயல்பாக உருவாக்கப்படுபவை. ஆகவே அவை மக்களை பிரதிநிதித்துவம் செய்பவை. மக்கள்கலைகளான நாட்டார்கலைகளை எவரும் பரப்புவதில்லை. ஆனால் பாப்புலிஸ்ட் கலைகள் பெரும்பொருட்செலவில் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன
5 ஆகவே மக்கள் கலைகளையும் பாப்புலிஸ்ட் கலைகளையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. [பாப்புலிசம் என்ற சொல்லாட்சியே இதன் பொருட்டுதான் சோவியத் சமூக ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டது.]
6 முதலாளித்துவத்தின் கருவியாகிய பாப்புலிஸ்ட் கலை என்பது ஒரு எதிர்மறைச் சக்தி. நசிவுப்பண்பாட்டுக்கூறு. அது எப்போதுமே மக்களின் பலவீனங்களை கண்டடைந்து அதை பயன்படுத்திக்கொள்ளும். அவர்களை போலியான கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்கும். அவர்களுக்கு பொய்யான இலட்சியவாதங்களையும் போலியான ஆத்ர்ச பிம்பங்களையும் உருவாக்கி அளிக்கும்
7. பாப்புலிஸ்ட் கலையை எதிர்த்து அதன் மாயையில் இருந்து மக்களை மீட்காத வரை அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையைப்பற்றியும் அதன் அடிப்படைகளைப்பற்றியும் கற்பிக்க இயலாது.
என் அறிதலில் நம்முடைய மார்க்ஸிய சிந்தனையாளர்கள் அனைவருமே இந்நிலைபாட்டையே கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸிய ஆய்வாளர்களான நா.வானமாமலை, கோவை ஞானி போன்றவர்கள் இந்த கருத்துக்களை பதிவுசெய்திருக்கிறார்கள். இ.எம்.எஸ் கடைசிவரை இந்த உறுதியான நிலைபாட்டையை கொண்டிருந்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கே சினிமா என்ற பாப்புலிஸ்ட் கலையானது அரசியலுடன் நேரடி உறவு கொண்டிருந்தமையாலும், அந்த உறவு இங்கிருந்த இடதுசாரிகளை முற்றாகத் தோற்கடித்தமையாலும் இவர்கள் ஏற்கனவே பாப்புலிச வெறுப்பு மனநிலையில் தான் இருந்தார்கள். எம்.ஜி.ஆரைப்பற்றி தமிழக மார்க்ஸியர்கள் உருவாக்கிய கருத்துக்களை பார்த்தால் இந்த வெறுப்பின் உக்கிரத்தை நாம் காணலாம்.
மார்க்ஸியத்துக்கு நேர் எதிராகச் செயல்பட்ட தமிழக நவீனத்துவ சிந்தனையாளர்கள்கூட இதே மனநிலையையே பங்கிட்டார்கள். க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி ஆகியோரின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் இந்த பார்வையே நமக்குக் கிடைக்கிறது. நவீனத்துவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டார்கலைகளையும் கூட நவீனகலைகளுக்கு எதிரான, கொச்சையான வடிவமாகப் பார்த்தார்கள். வெங்கட் சாமிநாதன் விதிவிலக்கு.
ஆச்சரியம் என்னவென்றால், தமிழகத்தில் பாப்புலிச கலைகளை, அதாவது சினிமா மேடையுரை ஆகியவற்றை, வெற்றிகரமாகப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்த திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களே எம்.ஜி.ஆரின் வெற்றிக்குப் பின் பாப்புலிசக் கலையை இழிவாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். ‘சினிமா மாயை’ ‘அட்டைக்கத்திப்போர்’ போன்ற சொல்லாட்சிகள் அவர்கள் உருவாக்கிய்வை.
திராவிட இயக்கத்தவர் பின்னர் தங்களை சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், குறள் , தொல்காப்பியம் போன்ற செவ்வியலின் தரப்பாகவும் எம்.ஜி.,ஆரை சினிமா என்ற ’இழிகலை’யின் தரப்பாகவும் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். மேலே சொன்னதுபோல பாப்புலிஸ்ட் கலை என்பது மக்களை மயக்கி அதிகாரத்தை திணிக்கும்பொருட்டு பரப்பப் படுவது என்னும் அதே நிலைபாட்டை நாம் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எம் ஜி ஆர் பற்றிய The image Trap நூலில் காணலாம். தலைப்பே அதன் கோணத்தைச் சொல்லிவிடுகிறது.
இந்நிலையில்தான் தமிழகத்தில் அண்டோனியோ கிராம்ஷி அறிமுகமாகிறார். ஆனால் கிராம்ஷியை முன்வைத்து தொடர்ச்சியாகப் பேசிவந்த கோவை ஞானி போன்றவர்கள்கூட அவர் பாப்புலிஸ்ட் கலைகளைப்பற்றியும் இலக்கியம் பற்றியும் செய்த ஆய்வுகளை பொருட்படுத்தவில்லை. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கெ.சச்சிதானந்தன் மலையாளத்தில் கிராம்ஷி வணிகக்கலைகளைப் பற்றி சொன்னவற்றை ஒட்டி ஒரு விவாதத்தை ஆரம்பிக்க அதை மார்க்ஸியர் அடித்து நொறுக்கி உட்காரச் செய்தனர்.
அதன்பின்னர் தமிழகத்தில் பின்நவீனத்துவச் சிந்தனைகள் பேசப்பட்டன. அவையும் இங்குள்ள அறிவுஜீவி வட்டத்துக்குள்தான் நிகழ்ந்தன. அவர்களும் மௌனி புதுமைப்பித்தன் பற்றியே எழுதினார்கள். கல்கி பற்றியோ அல்லது நாகேஷ் பற்றியோ எந்த விவாதமும் நிகழவில்லை. நாகேஷ் பற்றி நாகார்ஜுனன் என்ன சொல்வார் என்பது சுந்தர ராமசாமி என்ன சொல்வார் என்பதை ஒட்டியே அமைந்திருக்கும். இன்றும் மார்க்ஸியர்கள் நடுவே சோவியத் தரப்புதான் வலுவான கொள்கையாக உள்ளது.
எண்பதுகளின் இறுதியில் பாப்புலிஸ்ட் கலைகளைப்பற்றி சிலர் எழுத ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் தரவுகளைச் சேர்த்து வைப்பது என்ற அளவிலேயெ அக்கட்டுரைகள் அமைந்திருந்தன. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் மதுரையில் இருந்து வந்த சிற்றிதழ் ஒன்றில் [ அகரம் மீரா நடத்தியது] பாப்புலிஸ்ட் இலக்கியத்தை ஒருவகை மக்கள்வெளிப்பாடாகக் கண்டு ஆராயவேண்டும் என்று சொல்லி கல்கி, சாண்டில்யன் குறித்து விவாதித்திருந்தேன். அண்டோனியோ கிராம்ஷியை மேற்கோள்காட்டி அவரது கோணத்தை அடிப்படையாக கொண்டிருந்தேன்.
பின்னர் ’நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ எழுதும்போது பாப்புலிஸ்ட் இலக்கியத்தையும் ஒரு முக்கியமான அறிவுலகநிகழ்வாக எடுத்துக்கொண்டு அதன் பங்களிப்பை பதிவுசெய்து ஒரு வரலாற்று முன்வரைவையும் அளித்திருந்தேன். தமிழ் வணிக எழுத்துக்கு ஒரு வரலாற்றுச்சுருக்கம் எழுதப்படுவது அதுவே முதல்முறையாகும்.
ஏறத்தாழ இக்காலகட்டத்தில்தான் தமிழகத்தில் ஊடகவியல் ஆய்வுகள் பரவலாக வர ஆரம்பித்தன. அ.ராமசாமியும் நீங்களுமெல்லாம் எழுத வந்தீர்கள். நீங்கள் அதிகமும் சினிமா என்ற பெருந்திரள்கலையையே முக்கியப்படுத்தினீர்கள். பல கொள்கைகளை அறிமுகம்செய்தீர்கள். இன்றுள்ள விவாதம் இப்பின்னணியில் உருவானதாகும்.
பாப்புலிசம் பற்றிய இன்றைய சிந்தனைகளை இப்படி சுருக்கலாம் – மரபான மார்க்ஸிய நோக்கு என்பது மக்களை வெறுமே ஏற்பவர்களாக, நுகர்பவர்களாக் மட்டுமே பார்க்கிறது. அவர்கள் சுரண்டலுக்கு சம்மதிப்பவர்களாகவும் ஏமாறக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள்மேல் பாப்புலிஸ்ட் கலைகளும் கருத்துக்களும் சுமத்தப்படுகின்றன. இந்நோக்குக்கு எதிரானது இன்றைய நோக்கு.
ஒட்டுமொத்தமாகவே மார்க்ஸிய நோக்குகளில் மக்களை ஏமாளிகளாக பார்க்கும் பார்வை உண்டு. எம்.ஜி.ஆர் பற்றிய விவாதங்கள் முதல் இன்று ரஜினி பற்றிய விவாதங்கள் வரை மக்களை எளிதில் ஏமாற்றப்படும் குரலில்லாத, கருத்தில்லாத, மொத்தையான மனத்திரளாக காணும் நோக்கே உள்ளது. படிமப்பொறி என்ற தலைப்பையே பாருங்கள். மக்களிடம் உண்மையைச் சொல்லி அவர்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பவராக தன்னைக் கருதிக்கொள்ளும் Saviour complex மார்க்ஸியர்களை இயக்கும் விசை. தமிழ்சினிமாவைப்பற்றி இந்த ரட்சகமனநிலை இல்லாமல் பேசும் அறிவுஜீவிகள் குறைவு.
நீங்கள் குறிப்பிடும் பாப்புலிச ஆய்வுகளின் தரப்பு என்பது சென்ற ஐம்பதாண்டுகளாக படிப்படியாக உருவாகி வந்தது. கலைகளையும் இலக்கியங்களையும் படைப்பவர் தரப்பில் நின்று நோக்கிவதில் இருந்து ரசிப்பவர் தரப்பின் நின்று ஆராயும்போக்கு படிப்படியாக கலை இலக்கிய விமர்சனங்களில் உருவாகி வந்திருக்கிறது. அதன் விளைவே இப்பார்வை. இங்கே ரசிகர்கள் அல்லது வாசகர்கள் ஏமாறும் தரப்பு அல்ல. அவர்கள் இக்கலைகளை மறைமுகமாக தீர்மானிக்கிறார்கள்.
இந்த தரப்பை நான் இவ்வாறு சுருக்கிக் கொள்வேன்
1. பாப்புலிஸ்ட் கலை என்பது சுரண்டலுக்காக சுரண்டுபவர்களால் ஒருதலைபட்சமாக உருவாக்கப்படுவது அல்ல. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதுவும் ஒரு சமூக மக்களின் ஒட்டுமொத்த மனத்தின் தன்னிச்சையான வெளிப்பாடுதான்.
2 திரளாக ஆவது என்பது பொதுமக்களின் சமூகச் செயல்பாட்டுக்கான ஒரு வழிமுறை. அதற்காக அவர்கள் பொதுக்குறியீடுகளையும், பொது உணர்ச்சிகளையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த திரளடையாளங்களை மக்களின் கருவிகளாகவே கருதவேண்டும். அவற்றுக்கு தெளிவான நோக்கமும் வரலாற்றுப்பாத்திரமும் இருக்கும்
3 அவ்வாறு திரள்வதற்காக அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் கலைகள்தான் பாப்புலிஸ்ட் கலைகள். அவை அவர்களின் திரளடையாளங்களை பிரபலப்படுத்தும். அவற்றின் அடிப்படையில் அவர்களின் உணர்ச்சிகளை திரட்டும். அது நேர்நிலைப்பண்புள்ளவையும் ஆகலாம் ஃபாசிசம் போல எதிர்மறைப்பண்புள்ளவையும் ஆகலாம்
4. மேலோட்டமான நோக்கில் பரப்புக்கலைகள் முதலீட்டாளர்களாலும் அவர்களால் அமர்த்தப்படும் கலைஞர்களாலும் உருவாக்கப்படுகின்றன என்று தோன்றினாலும் உண்மையில் அவற்றை நுகர்பவர்களே அவற்றை முதல்போட்டு உருவாக்குகிறார்கள். ஆகவே அவை மக்கள்கலைகளே.
5 நாட்டார்கலைகள் , பாப்புலிஸ்ட் கலைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மக்களின் கலைகளாகவே காணாவேண்டும்
6 அக்கலைகளை ரசிக்கவோ புறக்கணிக்கவோ சொல்லிக்கொடுப்பதல்ல, மாறாக அவற்றை ஆராய்ந்து அவற்றினூடாக சமூக இயக்கத்தின் உட்கிடக்கைகளைபுரிந்துகொள்ளவே ஆய்வாளன் முயலவேண்டும்
கிட்டத்தட்ட இந்த தரப்பையே நீங்கள் உங்கள் கடிதங்களில் சொல்கிறீர்கள். அ.ராமசாமி தெளிவாகவே முதலில் சொன்ன தரப்பைச் சொல்கிறார். அ.ராமசாமி சொல்வதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் பாப்புலிசம் என்ற சொல்லானது அவர் சொன்ன அதே அர்த்தத்தில்தான் உருவாக்கப்பட்டது என்பதே. ஐரோப்பிய ஊடக ஆய்வுச்சூழலில் கண்ணோட்டங்கள் மாறியபின் அச்சொல் வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு பரபரப்பு எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்று கேரளத்து பரபரப்பு இதழில் வெளிவந்தது. அதில் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பற்றி வழக்கமான பாமரத்தனத்துடன் எழுதியிருந்தார். கல்வியறிவும் பண்பாடும் இல்லாத ஆந்திர மக்கள் சினிமாவைக்கண்டு பேதலித்துப்போய் சிரஞ்சீவியை அரசியல் சக்தியாக ஆக்குகிறார்கள் என்று சொல்லியிருந்தார். கூடவே விஜயகாந்தை அரசியல் சக்தியாக ஆக்கிய அறிவில்லாத தமிழர்களுக்கும் வசை. நடிகர்களை அரசியலுக்கு கொண்டுவராத கேரள மக்களின் விழிப்புணர்வைப்பற்றிய பாராட்டும் சேர்ந்துகொண்டபோது சராசரி கேரள அரசியல் வாசகனுக்கு உவப்பான கட்டுரையாக அது ஆகியது
என்னிடம் ஓர் ஆய்வரங்கத்தில் இதைப்பற்றி கேட்டார்கள். நான் வேறு ஒரு கோணத்தில் அதைப்பார்க்கும்படிச் சொன்னேன். ஆந்திர அரசியலின் எப்போதுமே கம்மா சாதியினர்தான் வலுவானவர்கள். காப்புக்களுக்கு பணபலமிருந்தாலும் எண்ணிக்கை இல்லை. ஆகவே அரசியல் நோக்கங்கள் நிறைவேறவில்லை. இதேநிலைதான் தலித்துக்களுக்கு. அவர்களுக்கும் எண்ணிக்கைபலம் இல்லை. பொது ஆதரவுபெற்ற எவரும் இல்லை. இந்நிலையில் பலபடங்களில் தலித்துக்களின் மனம் கவர்ந்த சேரிக்காரராக நடித்த ஒரு காப்புசாதிக்காரரான சிரஞ்சீவி அரசியலுக்கு வருகிறார். இயல்பாக காப்பு+தலித் என ஒரு கூட்டு உருவாகிறது.
அது அரசியல் அறியாமை அல்ல. மக்களுக்கு அவர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு பொதுப்படிமம், ஒரு குறியீடு தேவை. சிரஞ்சீவி அப்படிப்பட்ட ஒரு பிரபலமான பொது அடையாளம். அந்த மக்களின் அரசியல்குரலாக அவர் நீடிப்பார் என்றேன். அதுவே விஜயகாந்துக்குமான விளக்கம் என்றேன். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எம்.ஜி.ஆர் பற்றி சொல்வதற்கும் இந்த பரபரப்பு எழுத்தாளரின் கூற்றுக்கும் உள்ள ஒப்புமையைக் கவனிக்கவும்.
மக்களை மூடர்கள்,ஏமாளிகள் என நினைக்கும்போது நாம் நம்மை அன்னியப்படுத்திக்கொள்கிறோம். அதன் வழியாக நாம் அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வழிகளை மூடிக்கொள்கிறோம். மக்கள் செயல் என்பது வரலாறு. அதை நாம் அவர்களின் நடத்தை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள் மூலம் அறிய முயல்கிறோம்.
இந்தவகை ஆய்வே இன்றைய ஆய்வுமுறைகளின் வழியாகும். மக்களின் அறியாமை, ரசனையின்மை போன்றவற்றை குறைசொல்லி அறிவுத்தளத்தில் நின்று கொண்டுபேசும் பார்வை பல சமூகவிசைகளை தவறவிட்டுவிடுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய ஊடக ஆய்வில் இன்று புதிதாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உங்களைப்போன்ற பலரும் இந்த வகையான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூடியவர்களே. ஆனால் பொதுவாக பத்திகளை எழுதக்கூடியவர்கள் பொதுப்புத்தியில் உறைந்த மனநிலைகளையே வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் அ.ராமசாமி கூறும் தரப்பை நீங்கள் எளிதில் புறந்தள்ளுவதும் முடியாதென்றே நினைக்கிறேன். நான் சொன்னதுபோல அதற்கு தமிழில் நீண்ட வரலாறு உண்டு- நா.வானமாமலை காலம்முதல். அவர்கள் மக்களை இழிவுபடுத்துவதில்லை. மக்களில் உள்ள விழிப்புள்ள ஒரு தரப்பாக தங்களை உருவகித்துக்கொள்கிறார்கள். பலகோடிச்செலவில் ஒரு விஷயம் பரப்படுமென்றால் அதன் அதிகார- கருத்தியல் உள்ளடக்கம் கண்காணிக்கப்படவேண்டும் என நினைக்கிறார்கள்.
அதாவது அவர்களின் விமர்சனம் ஆய்வாளனின் கோணத்தில் நின்றுகொண்டல்ல, செயல்வீரர்களின் தளத்தில் நின்றுகொண்டு. அது ஊடக ஆய்வல்ல, ஊடகக் கண்காணிப்பு. நம்முடைய ஊடகங்களில் உறைந்திருக்கும் ஆதிக்கக் கருத்தியல்களைக் கண்டறியவும் சுட்டிக்காட்டவும் அந்த ஆய்வுமுறைகளால் முடிந்திருக்கிறது. அது எளிய விஷயம் அல்ல. நம் சூழலில் மாற்றுப்பார்வைகளையும் மாற்று அரசியலையும் உருவாக்க அது வழிவகுத்திருக்கிறது. சிறந்த உதாரணங்கள் என தலித் அரசியலையும் பெண்ணிய அரசியலையும் சொல்லலாம்.
நீங்கள் சொல்லும் கோணத்தில் பார்த்தால்கூட அ.ராமசாமி வரை வந்திருக்கும் இந்த ஆய்வுமுறையானது தமிழ்ச்சூழலில் இங்குள்ள தேவைக்கேற்ப உருவாகி வந்திருக்கும் ஒரு கருத்தியல்கருவியாகும். அதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பு உள்ளது. நம்முடைய ஊடகங்களில் ஊடாடியிருக்கும் பல்வேறு கருத்தியல்பிரச்சாரங்களை இழைபிரிக்க அது இன்றியமையாததே.
நீங்கள் ஒரு மாற்று வழியுடன் வந்திருக்கிறீர்கள். மேலைநாட்டுச் சூழலில் உங்கள் ஆய்வுமுறை தர்க்கபூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது என்பதனாலோ, அங்கே பாப்புலிஸத்தை முதலாளித்துவத்தின் கருவியாக அணுகுவதை பலரும் நிராகரித்திருக்கிறார்கள் என்பதனாலோ உங்கள் வழி இங்கே நியாயப்படுத்தப்படாது. நீங்கள் பிரதிநிதித்துவம்செய்யும் பின்நவீனத்துவ ஊடக ஆய்வுமுறைப்படி எந்த கருத்தும் உலகளாவிய தன்மை கொண்டது அல்ல. இங்கே தமிழ்ச்சூழலில் அ.ராமசாமியின் வழிமுறை இன்னமும் பொருத்தமானதாக ஆகக்கூடும் இல்லையா?.அப்படியானால் இங்குள்ள சரி இதுவே.
நான் ஏற்கனவே சொன்னதைப்போல என்னுடைய அணுகுமுறை உங்கள் அணுகுமுறைக்கு சமானமானது. நான் பாப்புலிஸ்ட் கலைகளை சமூக உட்கிடக்கைகளின் வெளிப்பாடாகவே எண்ணுகிறேன். ஒரு படத்தில் தாலி செண்டிமெண்ட் இருந்தால் அது அந்த நுகர்வொரின் பொதுக்கருத்தியலின் சிருஷ்டி என்றே நினைப்பேன், அந்த கலைஞனின் சுரண்டல் உத்தி என்றல்ல. வெகுஜனக்கலை சுரண்டலின் கருவி அல்ல. கிராம்ஷிய நோக்கில் அரசாங்கமே கூட சுரண்டல் சக்திகளுக்கும் சுரண்டப்படும் சக்திகளுக்கும் நடுவேயான சமரசப்புள்ளிதான். பாப்புலிச கலைகள் நீங்கள் சொல்வதைப்போல ஒரு பேரத்தின் விளைவுகள்.
ஆனால் நீங்கள் சொல்லும் தரப்பு இங்கே ஏற்கனவே தீவிரமாக இருக்கும் தரப்பைவிட மேலும் பயனுள்ளது , மேலும் நுட்பமானது என்பதை நீங்கள் எழுதித்தான் நிரூபிக்கவேண்டும். தமிழவன் பாணியில் ‘இதெல்லாம் எப்பவோ காலாவதியாச்சே’ என்ற வரி உதவாது. இங்குள்ள யதார்த்ததை, எம்.ஜி.ஆரை ரஜினிகாந்தை திண்டுக்கல் லியோனியை மெகாசீரியல்களை உங்கள் கருத்துக்கருவிகளுடன் ஆராய்ந்து இதுவரை வெளிப்படாத உட்கூறுகளை வெளிக்கொணர வேண்டும். அதன் வழியாக நம் பார்வைகளில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அந்த கோணம் தன்னை நிறுவிக்கொள்ளும்
மிகச்சிறிய வட்டமாக இருந்தாலும் ஒரு புதிய கருத்தை ஒரு புதிய கோணத்தை கொண்டுவந்து நிறுவி பாதிப்புகளை உருவாக்குவதற்கு பெரும் உழைப்பும் சலிக்காத விவாதத்தன்மையும் தேவைப்படும். அந்த அறைகூவலை நீங்கள் ஏற்கலாமென்றே நான் சொன்னேன்
என்னைப்பொறுத்தவரை நான் ஊடக ஆய்வாளன் அல்ல. நீங்கள் இருதரப்பும் எழுதி விவாதிக்கையில் எனக்கு என் சூழலை அறிய என்ன கிடைக்கிறது என்று மட்டுமே பார்க்கக்கூடியவன்.
இங்கே பிரச்சினை சொல் அல்ல என்பதை இந்த விவாதம் மூலம் உணர்ந்திருப்ப்பீர்கள். பாப்புலிசம் என்று அவர்கள் சொல்வதை அல்ல நீங்கள் உத்தேசிப்பது. அதாவது பரப்பியம் என அவர்கள் சொல்வது வெகுஜனவாதத்தை அல்ல. ஆகவே வெவ்வேறு கலைச்சொற்களை பயன்படுத்துவதே உசிதமானது என நான் நினைக்கிறேன்.
நான் பரப்பு [ விரிவு ஒட்டுமொத்தம்] என்ற பொருளில் தான் அச்சொல்லை கையாள்கிறேன். பரப்பப்படுவது என்ற பொருளில் அல்ல. பரப்பப்படுவது என்னும் அர்த்தம் வந்தால் சோவியத் செவ்வியல் மார்க்ஸிய நோக்கு அதில் வந்துவிடுகிறது என்கிறீர்கள். எனக்கு இப்போது அச்சொல்லை ஓர் எல்லைக்குள் நின்று கையாளலாம் என்றே தோன்றுகிறது.
ஆனால் வெகுஜன என்பது சரியானதாக இல்லை. அது இந்த குறிப்பிட்ட கருத்துருவகத்தை மட்டும் சுட்டும் கலைச்சொல்லாக இல்லை. பொதுவான ஒரு சொல்லாக உள்ளது.
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 13, 2010