அன்பின் ஜெ,
மிக மிக சிறப்பான சந்திப்பாக அமைந்தது நம் கொல்லி மலையின் களம், அன்று நீங்கள் வாசகர்களின் முதல் இலக்கிய பரிட்சயம் (அ) கண்டடைதல் பற்றி வினவினீர்கள், நான் வெண்முரசே எனது முதல் இலக்கிய கண்டடைதல் என்று கூறியிருந்தேன், இன்னும் ஆழ்ந்து கூறுவதானால்,
அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார்.
(மழைப்பாடல்,பகுதி பதிநான்கு : களிற்றுநிரை)
இவ்வரிகள் என் வெண்முரசை அணுகும் முறையயே மாற்றிஅமைத்து. மேலும் சந்திப்பின் நாட்களில் தாங்கள் வழங்கிய தகவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளை அணுகும் முறைகள், விவாதகளங்களை அணுகும் விதம் மற்றும் எடுத்தாளும் தன்மை, கட்டுரைகளை அமைக்கும் முறை (Dialectics Method), நாவல்களை அணுகும் படிநிலை, இவற்றை எல்லாம் தொடர்ந்து என்னுள் பகுத்துக்கொண்டிருக்கிறேன். நேர் உரையாடலில் தெரிந்த மிக முக்கியமான விடயம் வெய்யோனில் வரும் அங்கத நாடகக்கதை சொல்லி தங்களின் பிரதிபலிப்பே, மேலும் நடைமுறை சார்ந்த பொதுவான விடயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது சற்று அயர்வை ஏற்படுத்தியது. அதை தாங்கள் எதிர்கொண்டவிதம், ஆம் ஒரு ஆசிரியர் அவ்வாறுதான் இருக்க இயலும், மேலும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்த வரதராஜன்,வாசு,மீனாம்பிகை,மகேஷ், மற்றும் நல்அமுதளித்த செந்தில் அவர்தம் இல்லாள், உணவை மலை உச்சிக்கே கொண்டுவந்து சேர்த்த அவர் குழுவையும் இந்நிகழ்வுடன் இணைத்து நினைவில் தங்கவைப்பதே அவர்க்கு யாம் செய்யும் நன்றி.
சசிகுமார்
அன்புள்ள ஜெயமோகன்
தங்களது இணைய தளத்தை 2009 முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில மின்னஞ்சல்கள் அனுப்பி பதில் பெற்றுள்ளேன். “மாடன் மோட்சம்” சிறுகதை குறித்த எனது விமர்சனம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பலமுறை வாசகர் சந்திப்புகளுக்கு முயன்றும் உத்தியோக நிமித்தம் (அரசு சார்ந்த நிறுவனத்தில் கிளார்க் அல்லது குமாஸ்தா) பேறு கிட்டவில்லை. கொல்லிமலை சந்திப்பில் பங்குபெற வாய்ப்பு பெற்று தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பங்கேற்பாளர்களில் பெரும்பான்மையோர் இளையோர்.
வாசகர்களின் அறிமுகங்களுக்கு பின் (சார் நான் ஐ.டி-ல தான் வேல பாக்கிறேன்.,.. அது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பில்லையே..) நேரடியாக விவாதம்.
இருநாள் விவாதங்களில் பங்கேற்பாளர்களின் பெரும்பான்மையான கேள்விகள் வெண்முரசு சார்ந்ததாகவே இருந்தது. மேலும் சமகால அரசியல், நித்யசைதன்ய யதி, கல்வெட்டுக்கள், குமரிகண்ட நீட்சி, பரிணாமம், விவாத முறைமை, கவிதை கூறுகள், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், பிரமிள், நாஞ்சில் நாடன், (காட்டு பூனை) யுவன், திஜா, ஜி. நாகராஜன், புதுமைபித்தன், தல்ஸ்தோய் போன்ற இலக்கிய வாதிகளின் சில படைப்புகள் மற்றும் ஆளுமைகள் குறித்தான கேள்விகளுக்கு தங்களது விரிவான கருத்துகளை அறிய முடிந்தது. ஆநவயயீhடிச, நுனபந மற்றும் நம்பூதிரி ஜோக்குகள்.
இரவில் மலையுச்சியில் ஓர் அமர்வு. 25 பேர். மேலே நட்சத்திரங்கள். சரிந்த பாறையில் கருப்பாக நீர் வழிந்த தடம்…
‘தண்ணிர் வார பாதை தான்’ – இருட்டில் யாரோதிடீரென காட்டு வெள்ளம் வந்தால் நேராக மரண யோகம் தான் என்ற நினைப்பினூடே தங்களது வெளியிடப்படவுள்ள யட்சி அல்லது பேய் கதை கேட்டது மறக்க முடியாத அனுபவம்.
புகைப்படத்திற்கும் நேரிலும் வித்தியாசமேதுமில்லை. பெரும்பாலும் வேட்டி, சட்டை, வாராத தலை. புகைப்படங்கள் எடுக்கப்படும் போது மட்டும் விதிவிலக்கு. சோபாவில் சாய்ந்தபடி உரையாடல். மதிய உணவிற்கு பின் பக்கவாட்டில் சரிந்து இடது கையை தலைக்கு முட்டு கொடுத்து கால்களை மடக்கி இருப்பு. மேற்படி உரையாடல்களின்போது மிகவும் இயல்பாக, உற்சாகமாக, உரைந்த சிரிப்புடன் (மேல் உதடு சற்றே உள்ளழுத்தி) காணப்பட்டீர்கள்.
வாசு, வரதராஜனுக்கு நன்றி
சந்தானராஜ்
சென்னை
அன்புள்ள ஜெ,
வாசகர் சந்திப்புகள் வாசகர்களுக்கு எத்தனை திறப்பு என்பது அவர்களின் கடிதங்களே சொல்கின்றது. நியூ ஜெர்சி உங்கள் உரை கேட்டு பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வீட்டில் நடந்த அந்த இரண்டு மணி நேரம் கலந்துரையாடலே எனக்கு பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புகளால் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்று நினைத்து கொண்டேன். அந்த நேரத்தில் வந்த இந்த “சுவையாகி வருவது” பதிவை படித்தேன்.
’கேள் பிட்சுவே, தாயைப் பின் தொடர்கிறது குழந்தையின் ஆத்மா, ஒருபோதும் பிரியாத பிரியத்துடன். ஏனெனில் தாயின் முலைப்பாலின் சுவை அதற்கு அழைப்பாகிறது
கேள் பிட்சுவே, தாய் ஒருபோதும் குழந்தையின் பின்னிருந்து விலகுவதில்லை. ஏனெனில் முலையருந்தும் குழந்தை ஊட்டுகிறது தன் அன்னைக்கு – ஆயிரம் மடங்கு இனிய அமுததை’
எனக்கு பதில் கிடைத்தது. :-)
நன்றி
ரா.ஜெய்சங்கர்