கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

“ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. ”

தத்துவ, ஆன்மீக நோக்கு எதில் இருந்து மீட்பு அளிக்கிறதோ இல்லையோ… காலம் மற்றும் பிராபல்யம் சார்ந்த ரசனையில் இருந்து மிகப் பெறும் விடுதலை அளிக்கிறது. லியோ டால்ஸ்டாய்- ஐயும் புதுமைப்பித்தனையும் ஜெயமோகனையும், ஒரே நேரத்தில் ரசிக்கும் மனோபாவத்தை அளித்த ஒரே காரணத்திற்காக இந்தப் பாழாய்ப்போன தத்துவத்தையும் ஆன்மீத்தையும் மன்னிக்கலாம்.

அன்புடன்
ரத்தன்

Dear Jeyamohan
Hope all well with you and family.
I am returning tonite to Chennai after a week long trip to Bengal and Jharkhand.
Many new experiences..
Read your write up on Edamaruku.
We both could always agree to disagree in such matters. Ha!
One small correction..
Edamaruku is not a family name.
It is the name of a place near Thodupuzha in Idukki District.
Best
Shaji


www.shaaji.com
www.shajiwriter.blogspot.com
http://musicshaji.blogspot.com

அன்புள்ள ரத்தன்,

தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் முடிவில்லாமல் மன்னித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

ஜெ

வணக்கம் ஜெயமோகன்,
‘வினவு’ பற்றிய பதிவை படித்தேன். சில நாட்களுக்கு முன் உங்களுடைய ஒரு பதிவில், ‘ஏன் இணைய பத்திரிகைகளிலும், அச்சு பத்திரிக்ககைகளிலும் எழுதுவதில்லை?’ என்ற கேள்விக்கு பதில் கூறும் பொழுது ஒரு பகுதியில், உங்களை வசை பாடும் தளங்களுக்கு உங்கள் வழியாகவே ஒரு தளம் அமைத்து கொடுக்க மனமில்லை என்பது போல் குறிப்பிட்டிருந்திர்கள். என்னால் அதன் தர்க்கத்தை ஆமோதிக்க முடிந்தது. அப்படி இருக்கும் போது இந்த ‘வினவு’ என்கிற தளத்தை பலருக்கு அறிமுகப்படுத்தியது தேவையற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. வெறும் வம்பு, காழ்ப்பு காட்டவே அந்த கடிதம் உங்களுக்கு அனுப்பப்பட்டது, அதற்கு பதில் கூறுவதே நேரவிரயம்…இதில் அவர்களுக்கு இலவச விளம்பரம் வேறு கொடுத்துவிட்டிர்கள்.
தவிர்த்திருக்கலாம்!!
நன்றி

முத்துகிருஷ்ணன்.

அன்புள்ள முத்துகிருஷ்ணன்

தமிழகத்தில் உருவாகி வரும் மார்க்ஸிய புரட்சிக்கு என் எளிய பங்களிப்பாகவே அதைச் செய்தேன்

ஜெ

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு !

அண்மையில் தான் உங்கள் வலை தளத்திற்குள் அதிர்ஷ்ட வசமாக புக நேர்ந்தது . தொடர்ந்து வாசித்து வருகின்றேன் . உங்கள் வலை தளத்தில் மூவாயிரம் கட்டுரைகள் இருப்பதாக எங்கோ குறிப்பிட்டு இருந்தீர்கள் . இப்போது தான் ஒரு ஐம்பது அறுபது கட்டுரைகள் வாசித்து முடித்திருப்பேன்.

இருபது வருடங்களுக்கு மேலாக எழுதிவருகின்றீர்கள். சங்க சித்திரம், விஷ்ணுபுரம் காலம் தொட்டு உங்களை மௌனமாக அவதானித்துக்கொண்டு வருகின்றேன். இன்று தான் முதல் முதலாக மின்னஞ்சல் வழி உங்களோடு தொடர்பு கொள்கின்றேன் . மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. விஷ்ணுபுரம் கைவசம் உள்ளது. இரண்டு முறை வாசித்து விட்டேன். அது பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. எதுவும் கூ ற பயம். அபத்தமாய் எதுவும் எழுதி விடுவேனோ என்ற பயம்.

இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்கள் மத்தியில் விஷ்ணு புரம் நூலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடக்கும் போது ஏறு போல் ஒரு பீடு நடை வந்து விடுகின்றது. காதல் முற்றிய நிலையில் காதலன் காதலியைப் பார்த்து கூறுவானல்லவா? “ஒண்ண நாள் முழுசும் பாத்திட்டிருந்தாலே போதும்டி” எனக்கும் அந்த நிலை தான். உங்கள் எழுத்துகளை மௌனமாக வாசி த்துகொண்டிருந்தாலே போதும். எதுவும் சொல்லத்தோன்றுவதில்லை .

நேற்று “ஆடும் கூத்து” படம் பற்றி ஒரு குறிப்பு வாசித்தேன். வாசகர் சரவணன் எழுதியிருந்தார். உங்கள் பதிலும் இருந்தது. உடனேயே அவர் கொடுத்திரு ந்த சுட்டி வழி படத்தை தேடியபோதும் கிடைக்க வில்லை. பின் நேரடியாக கூகுள்…. யூடியூப் என்று போய் படததை பார்க்க முடிந்தது. மிக மிக அற்புதமான திரைக்காவியம். எப்படி இவ்வளவு காலம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்று ஆச்சரியமாய் இருந்தது. வாசகர் சரவணனுக்கும் உங்களுக்கும் நன்றி.

எனக்கு பிடித்த மலையாள இயக்குனர்களில் சந்திரன் சாரும் ஒருவர். அவருடைய பொந்தன் மாட , பாடம் ஒண்ணு-ஒரு விலாபம் , நீங்கள் உங்கள் வலை தளத்தில் ஒரு மலையாளப்பாடல் கொடுத்திருந்தீர்கள்; கண்ணு நட்டு காத்திருந்த்நிட்டும் – அந்த பாடல் உள்ள படம் கதாவஷேஷன் இவையெல்லாம் நான் பார்த்து விட்டேன். 1984 ல் ஹேமாவின் காதலர்கள், 1994 ல் பொந்தன் மாட 2004 ல் பாடம் ஒண்ணு ஒரு விலாபம் , கதாவஷேஷன் 2006 ல் ஆடும் கூத்து. எல்லாம் உன்னதமான திரைப்படங்கள் .

ஆடும் கூத்து படத்தின் இசை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது . ஹைத்ரோஸ் க்கா (ஹனிபாக்கா) படத்தயாரிப்பாளராக வருகிறார். ஜெகதி ஸ்ரீ குமார் டாக்டராக வருகிறார். சொந்தகுரலில் பேசுவதால் நடிப்பு வீணாகவில்லை. இந்திரன்சும் ஒரு காட்சியில் வருகிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நவ்யா நாயர் தான் நிறைந்து நிற்கிறார். என்னுடைய ஆசை , வேண்டு கோள் எல்லாம் நீங்கள் இந்தப்படத்தைப் பார்க்க வேண்டும், வரிக்கு வரி படத்தைப்பற்றி உங்கள் தளத்தில் எழுத வேண்டும். அதை வாசித்து விட்டு மீண்டும் நான் படம் பார்க்கவேண்டும் என்பதே.

நன்றி! அன்புடன் ………………

லிங்கம் ,கனடா.

அன்புள்ள லிங்கம்

டி வி சந்திரன் படத்தை பார்த்துவிட்டு எழுதுகிறேன். நன்றி

ஜெ

இனிய ஜெ..
உங்களது நிகழதல் – அனுபவ குறிப்புகள் என்ற நூலை படிக்கும்போது ,
அன்றாட வாழ்வின் உண்மைகளில் கூட ஆழ்ந்த அர்த்தம் இருக்க முடியும் என
தோன்றியது.. அதை நாம் கவனிப்பதில்லை…
நீங்கள் அன்றாட வாழ்வை கவனிது எழுதும்போது, வாசகனாகிய எனக்கு,
அந்த அனுபவம் கிடைக்கிறது.
எனவே புனைவுடன் சேர்த்து, இது போன்ற கட்டுரைகளும் எழுதுமாறு கேட்டு
கொள்கிறென்
pichaikaaran.blogspot.com

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஞாநி அவர்களின் ஓபக்கங்களில் “வங்காளத்தில் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகளில் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்தான்” என்று இந்திய விஞ்ஞானியும் எழுத்தாளருமான மதுஸ்ரீ முகர்ஜி தன் ‘சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்’ புத்தகத்தில் குற்றம் சாட்டியிருப்பது பற்றிய “சர்ச்சில் இன்னொரு ஹிட்லர்?” கட்டுரை பார்த்தீர்களா. இதை ஒத்த கருத்தை ஒட்டி நீங்கள் முன்னமே எழுதிய “பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?” கட்டுரையை நினைவு கூர்ந்தேன்.

பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

திட்டமிட்டு சுரண்டப்பட்டது மட்டுமின்றி எப்படி நம் வரலாறு திரிக்கவும், மறைக்கவும், பட்டுள்ளது என வருந்துகிறேன்.

அன்புடன் ,
செந்தில் குமார்,தேவன்
University of Wuerzburg, Germany

அன்புள்ள செந்திகுமார்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துப் பஞ்சங்களைப்பற்றியும் அவற்றில் பிரிட்டிஷார் வகித்த பங்கு பற்றியும் சமீபகாலமாகவே ஆய்வுகள் வருகின்றன. நானே என் நண்பரும் ஆசிரியருமான பேரா.எம்.கங்காதரன் வழியாகவே அவற்றை அறிந்தேன். ஆகவே என்னுடைய கட்டுரைகள் வந்தபோது பொதுவாசிப்பு மட்டுமே கொண்ட சிலர் எழுதிய கிண்டலான எதிர்வினைகள் குறித்து கவலைப்படவில்லை. வரும் வருடங்களில் கல்வித்துறையில் இருந்து அவ்வாய்வுகள் பொதுவிவாதங்களுக்குள் வரும் என அறிந்திருந்தேன். ஞாநி எழுதியது அதன் விளைவே

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைதேவதேவன்-கடிதம்