கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3

1

 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு ,

நான் உங்கள் படைப்புகளை படிக்க தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. என்னைப்போன்ற இளம் வாசகர்களுக்கு அதுவும் இந்த குறுகிய காலத்தில் உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு ஊழ் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

நான் கேட்ட சிறு பிள்ளைத்தனமான கேள்விக்களுக்கு கூட உவகையுடன் விடையளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.என் மனதை பலநாள் உறுத்திய சில முக்கியமான கேள்விகளுக்கு விடை கண்ட பொழுது பெரும் நிம்மதியை அடைந்தேன் மற்றும் வரலாற்றின் முக்கியதுவத்தையும், பொது அறிவு ஜீவி என்ற இடத்தில் நான் எங்கு இருக்கிறேன் என்றும் கண்டு கொண்டேன்

உங்களுடன் இரவு அந்த மலையில் இருந்தது சிறு குழந்தையாக உருமாற்றம் அடைந்து கதை கேட்டது ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தது

இந்த சந்திப்பு எனக்கு பல புத்தங்களுக்கு நிகரான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இலக்கியம் விவாதிக்க ஒரு நண்பர் குழு கிடைத்துள்ளது. சந்திப்பு முடிந்து இப்பொழுது வரலாற்றை படித்து மற்றும் பின்ன ஆரம்பித்துள்ளேன். வெகுநாள் மனதை உறுத்திய ஒரு அனுபவத்தை (சுமாரான) சிறுகதையாக எழுதியுள்ளேன்.

சந்திப்பு மற்றும் சிறப்பான முறையில் உணவை ஏற்படுத்தி தந்த கிருஷ்ணன், வாசு, வரதராஜன், அஜிதன் மற்றும் மீனாம்பிகை அவர்களுக்கு நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துகொள்ளவும்

இந்த சந்திப்பு என்னை செப்பனிட உதவியது.அந்த நாள் எப்பொழுதும் என் மனதில் உழன்று கொண்டே இருக்கும். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

இப்படிக்கு

ஜினுராஜ்.

****

அன்புள்ள ஜினுராஜ்

கொல்லிமலைச் சந்திப்பு எனக்கும் நிறைவூட்டுவதாகவே இருந்தது. இச்சந்திப்புகளின் நோக்கம் ஒரு நேரடி அறிமுகம். சிந்திப்பதை தர்க்கபூர்வமாக நிகழ்த்துவதற்கான ஒரு நேரடிப்பயிற்சி. அது ஓர் உரையாடல் வழியாகவே அமையும்

பொதுவாக நான் முன்வைக்கும் கடுமையான கருத்துக்கள் வழியாக நான் கடுமையானவன் என்னும் சித்திரம் இளம்நண்பர்களிடையே இருப்பதை இந்த கடிதங்கள் வழியாக அறியமுடிகிறது. உண்மையில் அவ்வாறு இல்லை எனதை நடைமுறையில் உணர்ந்திருப்பீர்கள்

ஆகவே மன்னிப்பு கோருதல் போன்ற சடங்குகளுக்குத் தேவையே இல்லை. இவை நட்பாக நீடிக்கவேண்டும் என்பதே என் எண்ணம்

ஜெ

 

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கொல்லி மலையில் உங்களை சந்தித்து ஒரு படைப்பாளியின் மனம் எப்படி செயல்படும் என்று நேரில் பார்த்தது வியப்பாகவும் பரவசமாகவும் இருந்தது. கதாபாத்திரங்களில் உள்ள நிஜமனிதர்களின் சாயல்கள் பற்றி விளக்கி எப்படி எழத்தாளனின் அகம் ஒன்றை இன்னொன்றாக மாற்றிகொள்கிறது என்பதையும், பின்பு ஷாகுல் ஹமீது அவர்களின் சிறுகதையைப் படித்து விட்டு நடந்த உரையாடலில் சிறுகதையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியது முன்பே உங்கள் தளத்தில் சிறுகதை பற்றிய விவாதங்களிலும் விமர்சனங்களிலும் இதைப் பற்றி படித்திருந்தாலும் அதை அங்கு ஒரு நிகழ் அனுபவமாக அமைந்ததில் பெரிய திறப்பாக இருந்தது. அதே போல் கவிதைகள் பற்றிய விவாதத்தில் நீங்கள் மிக சரளமாகவும் இயல்பாகவும் மற்ற கவிதைகளை உதாரணம் காட்டி விளக்கியது நிறைய தெளிவும் புதிய கோணங்களையும் எனக்கு அளித்தது.

நான் எட்டு ஆண்டுகளாக இலக்கியம் வாசிக்கிறேன் நான்கு ஆண்டுகளாக உங்களை படிக்கிறேன் என்றாலும் ஒருவரிடமும் விவாதித்ததில்லை, அங்கு நடந்த உரையாடல்களின் போது ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். என்னளவில் இந்த சந்திப்பு என் வாசிப்பை முன் எடுப்பதை பற்றி நிறைய தெளிவை தந்தது, இந்த சந்திப்பு எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் .இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த செந்தில், வாசு, வரதராஜன், மீனாம்பிகை, மகேஷ், கிருஷ்ணன் மற்றும் அஜிதனுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்,

அப்துல் ரகுமான்

***

அன்புள்ள அப்துல் ரகுமான்

பொதுவாக இப்போதெல்லாம் சந்திப்பில் பேசாதவர்களைப் பேசவைக்க முயல்வதில்லை. பேசாமலிருப்பது அவர்களின் சுதந்திரம், அவ்வாறே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறேன். நீங்கள் பேசவில்லை என்பதைக் கவனித்தேன்.

ஆனால் நட்பும் உரையாடலும் உங்களுக்குள் நல்ல பதிவை உருவாக்கியிருக்குமென நினைத்தேன்

நன்றி

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10
அடுத்த கட்டுரைகசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்