அன்புள்ள ஜெ
திண்ணைபேரத்தின் தேவை கட்டுரை வாசித்தேன். இன்றைய சூழலில் பலராலும் தவறாகப்புரிந்துகொள்ள வாய்ப்புள்ள கட்டுரை அது. அது ஒருவகை ஊழலாகவே பலர் நினைப்பார்கள். சொந்தமாகத் தொழில் செய்வதே பூர்ஷுவாத்தனம் என்று சொல்லப்படும் ஒரு ஸூடோ லெஃப்டிஸ்ட் சூழல் இங்கே இருக்கிறது. ஆனால் எவரும் இடதுசாரிகளும் இல்லை. தேவை என்றால் வலதுசாரிகள்தான்
வலதுசாரிப்பொருளாதாரத்தில் திண்ணைபேரம் என்பது இயல்பான ஒரு அரசியல் மற்றும் பொருளியல்செயல்பாடு என்று நானும் நினைக்கிறேன். நன்றி
நாகராஜன்
***
அன்புள்ள ஜெயமோகன்
இன்றைய கட்டுரை நான் ஒவ்வொருநாளும் நினைக்கும் ஒரு விஷயத்தை துணிச்சலாக நேரடியாகச் சொல்கிறது. பலவகையிலும் தொழில்கூட்டமைப்புக்கள் வரவேண்டிய நேரம். பேரத்துக்கு மட்டும் அல்ல கண்ட கண்ட அரசியல்வாதிகளும் வந்து காசுகேட்பதைத்தடுப்பதற்காகவும்தான்
செல்லா
***
ஒரு நாளில் மாற்றம் வந்து விடாது என்று மிக உறுதியாக நம்புகிறேன் நானும். அதற்கான காரணங்கள், சாத்தியக் கூறுகளை நீங்கள் விளக்கும் விதம் அழகு.
முதல்வன் பார்த்து விட்டு ஏதாவது பண்ணி நம்ம நாட்டை சரி பண்ணணும் என்று நினைத்த ஒருவன் தான்.ஆனால் இன்று நிறைய புரிகிறது. மாற்றம் சாத்தியம் தான். அதற்குண்டான சூழல் உருவானால் போதும். நமக்கு வேண்டியது கொஞ்சம் திரியும் எண்ணெயும். பின் ஜோதி தானாகவே சுடர் விடும்.
நடராஜன்
***
வணக்கம்,
மாமூத்யானையின் ஜனநாயக நடை ஏழைக் குடிமகனை துரத்திப்பிடித்து கொன்றுவிடும் என்பது புரிந்துவிட்டது. ஜனநாயகம் நிதானமாக நடைபயிலட்டும். ஆட்சியாளான் அதிகாரியுடன் சமரசம் செய்து கொள்ளட்டும். ஏழைகள் ஒருநாள் முதல்வனை பார்த்து பரமதிருப்தி அடையட்டும். இதற்குத்தான் முன்னூறு ஆண்டுகள் போராடி சுதந்திரம் பெற்றதா? அவசரமாக எதையும் சரிபார்க்காமல் அதிகாரிகள் தவறுசெய்யலாம், ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் சட்டத்தை மதிப்பதற்கு மட்டும் நிதானம்,…,… சந்தையை வைத்து காதில் பூ சுற்றிவிட்டீர். ஆக்க்கா..
ஏழையின்எழுத்து ஏட்டில் ஏறாதுஎன்பதும் புரிந்துவிட்டது.நன்றி.
மங்கள நாதன்
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்