வெண்முரசு வாசிப்பது.

43

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி  கொண்ட நாள் முதல் “வெண்முரசு” நாவல் தொடரின் பக்கங்களை மட்டும் படிக்காமல் விட்டுவிடுவேன். நாவலை இடையிலிருந்து படிக்க மனம் வரவில்லை, முதல் பாகம் ‘முதற்கன’ லில் இருந்து படித்து பின்தொடர விருப்பபட்டு படிக்காமலேயே இருந்தேன். அதனால் இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன் போன்ற நாவல்கள் என்கன்முன்னே படிக்காமல் விடப்பட்டன.

ஆனால் முதல் பாகத்திலிருந்து ஆரம்பிப்பது வேலைப்பளுவினால் சாத்தியப்படவில்லை. படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருப்பதால் தற்பொழுது எழுதி வரும் பத்தாவது நாவலான ‘பன்னிரு படைக்களத்தை” படிக்க ஆரம்பித்துவிட்டேன். பாதியில் இருந்து படிக்க ஆர்வமூட்டியதே உங்கள் ‘விஷ்ணுபுரம்’ நாவல் தான்.அந்நாவலின் ஒவ்வொரு பக்கமும் ஏதாவது உளவியல் மற்றும் தத்துவ சிந்தனைகளை கிளறிக்கொண்டே இருக்கும். எனவே கதை தொடர்ச்சி என்பது ஒரு பொருட்டாகவே எனக்கு படவில்லை அதையும் தாண்டி ஒவ்வொரு பக்கமாக அனுபவித்தாலே பேரின்பமாக பட்டது.

அப்பேரின்பத்தை அனுபவிக்க எண்ணியே பன்னிரு படைக்கலத்தை பின்தொடர விளைந்தேன். நீங்கள் என் நம்பிக்கையை சிறிதும் வீணாக்கவில்லை.

மூவுலகை வெல்பவன் தன்னை நோக்கும் விழியற்றிருப்பான்

உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர்.

நீ பெண், நான் அரசன்” என்றான் தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்றாள் அவள்.

ஒளியென்பது  குரல் என ரம்பன் நம்பினான்.  காலென்பது ஓர் எண்ணம் என்று கரம்பன் நினைத்தான்.

ஓருடலுக்குள் ஈருயிராகி நிற்பவரே மண்ணுளோர். ஈருடல் ஓருயிராவது  தெய்வங்களுக்கும் அரிது”

போன்ற வரிகளை முதல் பாகத்தில் படித்ததுமே திக்குமுக்காடி விட்டேன். நாளொன்றுக்கு 30 நிமிடம் வெண்முரசு வாசிக்க மட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

என்னுடைய கேள்வி:

1. இப்படி பாதியில் இருந்து ஒரு நாவலை தொடர்வது சரியா?..

2. இதனால் ஒரு வாசகனாக நான் இழக்கும் முந்தைய நாவல்களை தொட்டு உருவாகும்  இந்நாவலின் நீட்சியை அடைவது சாத்தியமா?

3. வெண்முரசு படிக்க ஆர்வமிருந்தும், முடிந்தும், பாதியில் இருந்து தொடர மனமில்லாமல் இருக்கும் உங்கள் பெருவாரியான வாசகர்களுக்கு உங்கள் பதில் என்ன?

தங்கள் நலம் விரும்பும்

பாண்டியன் சதிஷ்குமார்

தென்கொரியா

Untitled

அன்புள்ள சதீஷ்,

சரியா பிழையா என்று ஏதும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வாசிப்பும் அளிப்பது ஒன்றை என்று மட்டும் சொல்லலாம். பொதுவாக வெண்முரசின் நாவல்களில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், இந்திரநீலம் காண்டீபம் ஆகியவை தனித்தனியான நாவல்களாகவே வாசிக்கத்தக்கவை. அவை அளிக்கும் சித்திரம் அந்நாவலுக்குள் முழுமையானதே. மொத்த நாவல்தொடரையும் வாசிப்பவர்களுக்கு மேலதிக வாசிப்பு நிகழும்.

பிரயாகை, வெண்முகில்நகரம் இரண்டையும் ஒற்றைநாவலாகச் சொல்லலாம். அதன் நீட்சியாக வெய்யோனை. வெய்யோன் தனிநாவலாக கொள்ளலாம் என்றாலும் அதன் குறியீட்டு அடுக்குகள் வண்ணக்கடலிலும் வெண்முகில்நகரத்திலும்  வேர்கொண்டவை.

இந்நாவல்களை முழுமையாக அனைவரும் வாசிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் அது எப்போதும் நிகழுமென நான் எதிர்பார்க்கவில்லை.கிழக்கு இருநூறு பக்கங்களுக்குள் சிறுநாவல்களாகவே சில கதைகளை இதிலிருந்து வெட்டித்தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

எப்போது எப்படி வாசிப்பது என்பது ஆசிரியனால் சொல்லப்படத்தக்கது அல்ல. ஆனால் இப்போது வாசகர்களின் எதிர்வினைகளைப் பார்க்கையில் பலர் பாதியில் தொடங்கி வாசித்திருக்கிறார்கள். எஞ்சியவற்றை பின்னால் சென்றும் வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய இடர் ஏதும் தோன்றியதில்லை.

இந்நாவல்கள் எல்லாமே தனித்தனியாக உள்ளன. ஒருநாவலில் இருந்து கதைச்சரடு அடுத்ததற்குச் சென்றாலும்கூட பலநாவல்களின் மொத்தக்கதையமைப்பு தனிநாவலுக்குரிய கட்டமைப்புடனேயே உள்ளது. ஆகவே அவற்றை எப்படித்தொடங்கினாலும் பிரச்சினை இல்லை என்றே நினைக்கிறேன்

முதலில் தொடங்குவதே முக்கியம். இந்நாவலுக்கென்றில்லை, எல்லா பெருநாவல்களையும் வாசிக்கத் தொடங்குமிடமே முக்கியமானது. அதன்பின் அது கொண்டுசெல்லும். அதன் அளவு கண்டு திகைப்பதோ அதன் உலகுக்குள் செல்லுவதற்கான ஆரம்பநிலை தடைகளைக் கண்டு தயங்குவதோதான் பலசமயம் நாவல்களை வாசிக்கமுடியாமல் நம்மை நிறுத்திவிடுகிறது

வெண்முரசு உள்ளிட்ட பெருநாவல்களை வாசிப்பதற்கான வழிமுறைகள் சில உண்டு.

அ. எளிய வாசகனாக , கதைவாசிப்பவனாக, முழுதாக ஒப்புக்கொடுத்து வாசிப்பது. அறிவார்ந்த வினாக்களை எல்லாம் அதன்பின்னரே அமைத்துக்கொள்வது. அது நாவல் நம்மை ஆழ்ந்து ஊடுருவிச்செல்ல அனுமதிப்பது. அதன்பின்னரே அந்த ஊடுருவல் எப்படி நிகழ்ந்தது என்று புறவயமாக ஆராயவேண்டும். ஊடுருவவிடாமல் தடுக்கும் தன்மை தர்க்கபூர்வமான வாசிப்பு, அல்லது எதிர்ப்புவாசிப்புக்கு உண்டு.

ஆ. ஒரு பெரியநாவல் ஒரு புதிய மொழிக்களத்தை, வாழ்வுக்களத்தை முன்வைக்கிறது. அதற்கு நாம் முதலில் நம்மை அளிக்கவேண்டும். ஒருநாவலில் பத்திலொருபங்கை முழுமையாக வாசிப்பேன், அதன்பின்னரே தொடர்வதா வேண்டாமா என முடிவெடுப்பேன் என்ற விதியை நமக்கே விதித்துக்கொள்ளவேண்டும். வெண்முரசைப்பொறுத்தவரை அதன் ஒரு நாவலை வாசித்துமுடிப்பேன் என்ற பிடிவாதம் அதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கும்

இ. எந்த பெருநாவலையும் அதற்கு முன் வாசித்தவற்றின் முன்முடிவுகளோ ஒப்பீடுகளோ இல்லாமல் உள்ளே நுழைந்து வாசிப்பதே நல்லது. ஏனென்றால் அது தனக்கென ஓர் அழகியலை உருவாக்குகிறது. அது புதியது என்றால் அதற்கு முன் நீங்கள் வாசித்தவற்றுக்கு எதிரானதாகவோ மாறானதாகவோ தான் இருக்கும். ஓட்டலில் நுழைந்ததுமே இட்லிக்கு ஆணையிடும் மனநிலை நாவல்வாசிப்புக்கு உரியதல்ல

ஈ. ஒருநாவலை மொத்தமாக நினைவுக்குள் நிறுத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்வி அர்த்தமற்றது. அது உங்களை உங்களையறியாமலேயே உருமாற்றுகிறது. அதில் எது ஆழ்ந்துசென்று நினைவில் நீடிக்கிறதோ அதுவே உங்களைப் பொறுத்தவரை அந்நாவல். வெண்முரசின் வாசகர்களில் பலருக்கு அதன் நிலவர்ணனைகள் ஆழமான பாதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்

உ. நாவலின் செய்திகள், தகவல்கள் சார்ந்த அடிப்படைகளுக்கு தொடக்கத்தில் ஒரு வரைபடத்தை நம் மனதில் அமைத்துக்கொள்ளலாம். குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம். கதாபாத்திரங்கள், இடங்கள், உறவுமுறைகள். நாவல் வளரவளர அவை நம்முள் நிலைகொள்ளும். பிறகு அவை தேவைப்படாது

வெண்முரசு வாசிப்பது ஒரு பெரும்பணி. எழுதுவதைப்போலவே. ஐயமில்லை. வாசிக்காதவர்ளுக்கு என்றாவது நேரமும் உள்ளமும் வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Apr 5, 2016 

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

வெண்முரசு சென்னை விவாதக்குழுமம் இணையதளம்

***

முந்தைய கட்டுரைஇயற்கையும் கலையும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- கடிதம்