பகுதி இரண்டு: வைகாசி
[ 1 ]
மகதத்துக்கு கிழக்கே, கங்கையின் கரையில், ஜராவனம் என்னும் காட்டில் வாழ்ந்த தொல்குடியினர் ஜரர்கள் என்றழைக்கப்பட்டனர். எப்போதும் மழைபொழியும் அக்காடு இலையும் கிளையும் செறிந்து செம்போத்துகளும் ஊடுருவிப் பறக்கமுடியாததாக இருந்தது. அதனூடாக குனிந்தும் தவழ்ந்தும் அலைந்தமையால் ஜரர்கள் குறிய உடல்கொண்டனர். சிறுவளைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் உடல்சுருட்டி ஒடுங்கி வாழ்ந்தனர். மழையீரம் ஒழியாத அவர்களின் உடலின் தோல் இளமையிலேயே வரிசெறிந்து வற்றிச் சுருங்கியது. முடிநரைத்து விழிகள் மங்கின. இளமையிலாதவர் எனும்பொருளில் அவர்களை ஜரர் என்றனர் மலைப்பொருள் கொள்ளவந்த வணிகர்.
ஜராவனத்தில் சிறிய அருமணிகள் மண்ணில் கிடைத்தன. அவற்றை ஊனும் நெய்யும் மரவுரியும் உப்பும் கொடுத்து பெற்றுக்கொண்டனர் ஊர்வணிகர். மணிதேடி மண்ணைநோக்கியபடி அலைந்து ஜரர்கள் மேலும் கூன்கொண்டனர். மண்நோக்கி நோக்கி மேலும் முதுமைகொண்டனர். அவர்கள் சந்தைகளுக்கு வருகையில் தொலைவில் முதியோரை சிறுவர் என்றும் அணுக்கத்தில் சிறுவரை முதியோர் என்றும் மயங்கினர் அயலார். வலுவிழந்த உடல்கொண்டிருந்தாலும் பிறர் அறியாத நச்சுக்களைக் கொண்ட ஜராவனத்தை அறிந்தவர்கள் என்பதனால் அவர்களை அஞ்சவும் செய்தனர்.
ஜராவனத்தின் நடுவே இருந்த விருத்தகிரி என்னும் மலையுச்சியில் இருந்தது ஜரையன்னையின் குகையாலயம். குகையின் பாறைச்சுவரில் அறியாதொல்பழங்காலத்தில் கூரிய கல்லால் கீறி வரையப்பட்ட அன்னையின் ஓவியம் அங்கு சென்றதும் உடனே தென்படுவதில்லை. குகைவிரிசல்களிலிருந்து ஊறிவழியும் நீரால் பச்சைப்பாசி படிந்த பாறைப்பரப்பில் மெல்லிய பள்ளமாகவே ஓவியக்கோடுகள் தெரியும். அதன்மேல் விரல்களை ஓட்டியபடி கண்களை மூடிக்கொண்டு அகத்தால்நோக்கினால் அவள் உருவம் மெல்ல எண்ணத்திரையில் புடைத்தெழும். உடனே விழிதிறந்தால் பாறைப்பரப்பிலும் அவளை காணமுடியும்.
அன்னை இடையில் குழந்தையுடன் பெரிய கண்களும் வாயில் நிறைந்த கூரிய பற்களுமாக நின்றிருந்தாள். அவளைச்சூழ்ந்து வானில் பறவைகளும் தரையில் விலங்குகளும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றும் அவற்றின் விரைவு நிலையில் செதுக்கப்பட்டிருந்தமையால் விலங்குகளுக்கு கால்கள் இருக்கவில்லை. பறவைகளுக்கு சிறகுகள் மட்டுமே இருந்தன. அன்னை தன் வலக்கையை வான்நோக்கி நீட்டியிருந்தாள். அவள் எதையோ சொல்வதுபோல தோன்றியது. மீண்டும் ஒருமுறை விழிமூடினால் அவள் குரலை கேட்கமுடியும். அவள் அலறிக்கொண்டிருந்தாள்.
அன்னையின் இடையில் எருதுகொம்புகளுடன் பாதியுடலே அமைந்த ஒரு குழந்தை இருப்பதை மீண்டும் விழிதிறந்தால் காணலாம். அதன் உடல் இடைவரைதான் இருந்தது. பெரியவிழிகளுடன் வலக்கையை தன் வாயில் வைத்து இடக்கையால் அன்னையின் நீண்டு தொங்கிய முலையை பற்றிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வியப்பையும் அச்சத்தையும் நோக்கி சிலகணங்கள் நின்றிருந்தால் அது முன்னரே இறந்துவிட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். அதன் விழிகளில் இருக்கும் திகைப்பு தன் காலமிலா உலகிலிருந்து தன்னை நோக்குபவர்களை அது நோக்குவதனால்தான் என்று தெரியும். ஓவியத்தில் அதன் விழியில் மட்டுமே நேர்நோக்கு இருந்தது.
நூறாண்டுகள் மைந்தரில்லாமல் உளம்வருந்தியவள் அவ்வன்னை என்றன அவர்களின் கதைகள். வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் மகவொன்றுக்காக ஏங்கினாள். அறிந்த தெய்வங்களை எல்லாம் தொழுது நோன்பெடுத்தாள். முதுமகளாகி உடல் நைந்து உயிர்நீங்கும்பொருட்டு மண்ணில் ஒட்டிக்கிடந்தபோது இறுதிமூச்சை எஞ்சவைத்து பற்றிக்கொண்டாள். வ்யாதி, விஸ்மிருதி, நித்ரை என்னும் தோழியருடன் வந்த மிருத்யூதேவி அவள் அருகே அணைந்து புன்னகைத்தபோது முனகலுடன் கண்களை மூடிக்கொண்டாள்.
வ்யாதி மெல்ல அவள் நெற்றியை வருடி பொட்டுப்புள்ளியில் சுட்டுவிரலை வைத்தபோது கைகளால் அதை தள்ளிவிட்டாள். “என்ன செய்கிறாய்? நான் உனக்களித்த துயரையெல்லாம் மீளப்பெற்றுக்கொள்கிறேன். உன் உடலில் நிறைந்திருக்கும் அனைத்து வலிகளும் விலகும். உன் கட்டுகளனைத்தும் அவிழும். இன்று பிறந்த குழந்தையென தூய உடல்கொண்டவள் ஆவாய்” என்றாள் வ்யாதி. “விலகு. நான் வலியை விழைகிறேன். ஒருதுளியையும் விட்டுத்தரமாட்டேன்” என்றாள் ஜரை.
அவள் இமைகள் மேல் மெல்ல முத்தமிட்டாள் விஸ்மிருதி. அவள் இமைகளைத் திறந்து தலையை இருபக்கமும் அசைத்தாள். “அன்னையே கேள்! உன்னில் எடையுடன் அமைந்த நினைவுகள் ஒவ்வொன்றாக விலகச்செய்வேன். துயரங்கள் சிறுமைகள் ஏக்கங்கள் நினைவெச்சங்கள் அனைத்தும் அகலும். எண்ணச்சுழல் ஓயும். வண்ணத்துப்பூச்சியை நோக்கி சிரிக்கும் இளங்குழவியாக ஆவாய்” அன்னை வேண்டாம் என்று தலையை அசைத்துக்கொண்டே இருந்தாள்.
அவள் கூந்தலை வருடி, செவியில் இசையென ஒலித்தாள் நித்ரை. “உடல்முதிர்கையில் நீ இழந்தது இது. ஒவ்வொருநாளும் உன் அகத்தால் அழுத்தப்பட்டு சோர்ந்து மயங்கியதன்றி நீ தெளிதுயிலை அறிந்ததே இல்லை. இன்று உன்னை மெல்ல தூக்கி இளவெம்மை சூழ்ந்த மஞ்சமொன்றில் படுக்கவைப்பேன். இனிய நெஞ்சுத்தாளம் அங்கே ஒலிக்கும். கருவறையில் வாழ்ந்த காலத்துக்குப்பின் நீ அறியும் இனிய துயில் இதுவே. கொள்க!” என்றாள். அவள் உதடுகுவித்து “துயிலமாட்டேன்… ஒருகணமும் என்னை இழக்கமாட்டேன்” என்றாள்.
நூற்றெட்டுநாட்கள் அவளருகே நான்கு தேவியரும் காத்துநின்றனர். ஒவ்வொருவராக விலகிச்சென்றபின்னர் அவள் மட்டும் சருகுமெத்தையில் காட்டுப்புதருக்குள் தன்னந்தனியாகக் கிடந்தாள். அவள் உடலை சிதல்கள் அரிக்கத் தொடங்கின. கூந்தல் மண்ணில் படிந்து பூவேர் போல பரவியது. உடல்துளைத்து உட்புகுந்தன செடிகளின் வேர்கள். அவள் உடல்மேல் காளான்கள் குடைபூத்தெழுந்தன. ஒவ்வொரு கணுவிலும் வலிதுடிக்கையிலும் முழுதுள்ளமும் விழித்திருக்க அவள் அங்கே கிடந்தாள்.
அவள் கிடந்த புதர் அருகே ஓங்கிநின்றிருந்த அத்திமரத்தில் அருகே நின்ற எட்டிமரம் தழுவிச்சுற்றி வளர்ந்திருந்தது. எட்டிமரத்திற்குரிய அருசி என்னும் தேவதை அவளை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் மட்கி உப்பானதும் அவளை வேர்கொண்டு கவ்வி உறிஞ்சி உண்ண அவள் விழைந்தாள். ஜரையின் கொடுந்துயர் கண்டு மெல்ல அவள் உள்ளம் இரங்கியது. முந்நூறாவது நாள் அவள் தன் கூந்தலையே ஆடையாக்கி வெள்ளி நகங்கள் நீண்ட சாம்பல்நிற உடலுடன் மரத்திலிருந்து இறங்கிவந்து தன் குளிர்ந்த கைகளால் ஜரையை தொட்டாள். கண்விழித்த முதுமகளிடம் “சொல்க! நீ உயிர் பற்றி இங்கிருப்பது எதன்பொருட்டு?” என்றாள்.
“நான் அன்னையாக விழைந்தேன். என் கருவறை மூடிக்கொண்டிருக்கிறது. அன்னையென்றல்லாமல் இவ்வுலகவாழ்க்கையை முடிக்கமாட்டேன்” என்றாள் அன்னை. “முதுமகளே, அன்னைமை என்பது துயரே என நீ ஏன் இன்னும் அறியவில்லை? தெய்வங்கள் மட்டுமே துயரற்ற தாய்மையை அறியமுடியும்” என்றாள் அருசி. “அறிவேன். என்னைச்சூழ்ந்து கண்ணீர் உதிர்க்கும் அன்னையரையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுள்ளும் கண்ணீரே நிறைந்திருக்கிறது. ஒரு மைந்தனுக்காக அதை பொழிக்கவே நான் விழைகிறேன்” என்றாள் ஜரை.
“அறிக, ஊழ்நெறியை அறுத்து ஊடு புகுந்த எவரும் மகிழ்ந்ததில்லை” என்றாள் அருசி. “நான் கோருவது துயரை. நூறு மைந்தரைப்பெற்று நூறாண்டுகாலம் விழிநீர் வார்க்கும் வல்லமை கொண்டிருக்கிறது என் நெஞ்சு. என்னுள் நிறைந்த இம்முலைப்பாலையும் விழிநீரையும் ஒழிக்காமல் நான் விண்ணேற இயலாது” என்றாள் அன்னை. அருசி அவளை நோக்கி கருணை நிறைந்த குரலில் “இப்பிறவியில் நீ கொண்ட ஏக்கமனைத்தும் உன்னைத் தொடரும் முதியவளே. மீளப்பிறந்து நூறு மைந்தரைப் பெற்று விழிதுஞ்சாமலிருப்பாய்” என்றாள். “நான் இப்பிறவியிலேயே அதை விழைகிறேன். வேறெதற்கும் ஒப்பேன்” என்றாள் ஜரை.
பெருமூச்சுவிட்டு அவள் திரும்பி அத்திமரத்தில் வாழ்ந்த தன் துணைவனாகிய ரிஷபன் என்னும் தெய்வத்தை அழைத்தாள். திமில்பெருத்த கரியநிற காளையென ரிஷபன் வந்தான். அவன் தன்னருகே வந்ததுமே என்றோ மறந்த நறுநாற்றமொன்றை உணர்ந்து முகம் மலர்ந்தாள். “தேவா, எனக்கருள்க!” என்றாள். தன் குளிர்ந்த கரியமூக்கால் அவளைத் தொட்டு “நீ விழைவதே ஆகுக!” என்றான் ரிஷபன். அன்னை கைகூப்பி நிறைவுடன் உயிர்த்தாள்.
அவள் மேல் சரிந்திருந்த கனிமரக்கிளை காற்றில் குலுங்க சாறுநிறைந்த பழங்கள் அவள் முகத்தருகே உதிர்ந்தன. அவற்றை கவ்வி உண்டு உயிர்மீட்டாள். மெல்ல கையூன்றி எழுந்து அமர்ந்தாள். கூந்தல் மண்ணில் ஒட்டி பிரிந்து செல்ல மண்டையோடு போன்ற தலையும் எலும்புச்சிறைக்குள் துடிக்கும் நெஞ்சுமாக நடந்து தன் குடியினரை அடைந்தாள்.
இறந்தவள் மீண்டதைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடினர். மைந்தரை அணைத்தபடி அன்னையர் குகைகளுக்குள் பதுங்க கழிகளும் கூரெலும்புகளுமாக ஆண்கள் அவளை தாக்க வந்தனர். “மைந்தரை உண்ணும் கூளி. விலகிச்செல்!” என்று கூவினர். காட்டுவிளிம்பில் அவள் வெறுமை நிறைந்த நோக்குடன் நின்றாள். பின்னர் ஒருசொல் உரைக்காது திரும்பிச்சென்றாள். காட்டை வகுந்தோடிய ஆற்றின் கரையில் அவள் ஒரு சிறு மரப்பொந்தில் வசிப்பதை பின்னர் அவர்கள் கண்டனர்.
காட்டில் பொறுக்கிய கனிகளையும் நாணல்கொண்டு ஆற்றில் பிடித்த மீன்களையும் அவள் உண்டாள். பிறரில்லாத தனிமையில் அங்கே வாழ்ந்தாள். அவளுக்கு கடுங்கசப்பின் தெய்வம் துணையிருப்பதைக் கண்டதாக முதியோர் சொன்னார்கள். அவள் அமர்ந்திருக்கையில் நிழல் எழுந்து குடைபிடித்தது. அவள் நின்ற இடத்தில் நீர் கசந்தது. அவள் உண்டு மிச்சமிட்ட கனிகளை அணில்களும் குரங்குகளும் தொடவில்லை. அவள் வாழ்ந்த ஆற்றங்கரையிலிருந்து பறவைகள் விலகிச்சென்றன. பூச்சிகள் சிறகு பொழிந்து மறைந்தன. அங்கே காற்று கருங்கல்லென ஆனதுபோல் மூச்சடைக்கச்செய்யும் அமைதியே நிறைந்திருந்தது.
ஆனால் அவள் ஒவ்வொருநாளும் இளமைகொள்ளத் தொடங்கினாள். அவள் நகங்கள் உதிர்ந்து முளைத்தன. கரும்பாறையில் புல் எழுந்ததுபோல தலையில் முடி தோன்றியது. தோலில் உயிர்வந்தது. எலும்புகள் மேல் தசை மூடியது. ஆனால் அவள் விழிகள் அப்போதும் முன்னரே இறந்தவள் போலவே இருந்தன. அவள் கருவுற்றதை பிந்தித்தான் குலத்தார் அறிந்தனர். காட்டுஎருது ஒன்றின் குழவி அது என்றனர் குலநிமித்திகர். அவளிருக்கும் காட்டில் திமிலெழுந்த வெள்ளெருது ஒன்றை ஆற்றில் மீன்பிடிக்கச்சென்றவர்கள் கண்டனர். அவளுடன் இணைந்து அது வேர்ப்பற்று இறங்கிய சேற்றுக்கரைவிளிம்பில் குனிந்து நீர் அருந்தியது. “எருதின் மைந்தன்” என்றார் நிமித்திகர். “ஆனால் அவள் மைந்தனைப் பெறுவாளென்று வான்குறியும் மண்குறியும் சொல்லவில்லை.”
வைகாசிமாதம் அவள் மைந்தனை பெற்றெடுத்தாள். விரித்த கால்களின் நடுவே கருக்குழியின் வெந்நீர் ஊற்றுவழியாக வழிந்திறங்கி வந்தான் அவள் மைந்தன். மைந்தன் வருவதை நோக்கவேண்டும் என்று அவள் ஆற்றுவிளிம்பில் படுத்து நீர்ப்பாவையை நோக்கிக்கொண்டிருந்தாள். இரு குளம்புகள் வெளிவருவதைக் கண்டாள். திகைப்புடன் “மைந்தா!” என்று அவள் அழைத்தாள். குருதிநனைந்த உடலுடன் இரு கைகளையும் சுருட்டி நெஞ்சோடணைத்தபடி மைந்தன் நழுவி சலக்குழம்பலில் விழுந்தான். அவன் தலையில் இரு சிறு எருதுக்கொம்புகள் இருந்தன. அவள் திகைத்து “மைந்தா!” என்று மீண்டும் அழைத்தாள்.
அத்தருணம் தன்மேல் பதிந்திருக்கும் நோக்கை அவள் உணர்ந்தாள். அச்சத்துடன் திரும்பிநோக்க இரு விழிகளை சந்தித்தாள். குனிந்து தாமரைக்கொடியுடன் மைந்தனை அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டு எழும்போது குருதிநெடி அறிந்து தேடிவந்து காத்திருந்த சிம்மம் உறுமியபடி அவள் மேல் பாய்ந்தது. அருகே கிடந்த முள்மரத்தடியை எடுத்து அவள் அதை அடித்தாள். அவள் அலறலும் அதன் அமறலும் இணைந்து காட்டில் எதிரொலித்தன. சிம்மம் அவள் கையிலிருந்த குழந்தையின் கீழ்ப்பாதியை கடித்து துண்டாக்கி வாயில் எடுத்தபடி பாய்ந்து புதருக்குள் சென்று வால்சுழல தாவித்தாவி மறைந்தது.
தன் கையிலிருந்து துடித்த குழந்தையுடன் செய்வதறியாது அவள் அலறினாள். கால்களால் நிலத்தை உதைத்தும் கையால் மரங்களை அறைந்தும் கதறினாள். குழந்தையை தலைமேல் தூக்கி வானைநோக்கிக் காட்டி கூச்சலிட்டாள். அதை நீரில் கழுவினால் உயிர்கொண்டுவிடுமென எண்ணியவள் போல ஆற்றில் பாய்ந்தாள். கரையிலேறிவந்து கையில் சிக்கிய பச்சிலைகளை எல்லாம் பிடுங்கிக் கசக்கி அதன் மேல் ஊற்றினாள். விழித்த கண்களில் திகைப்புடன் அது தசைத்துண்டாக ஆகிவிட்டிருந்தது. அதை மறைத்துவைத்து பதைபதைத்துத் தேடி மீண்டும் கண்டடைந்தாள். அங்கும் அது பாதியுடலுடன் இருக்கக் கண்டு நெஞ்சில் அறைந்து அழுதாள்.
அவ்வூன்துண்டை இடையில் வைத்தபடி அவள் காடெங்கும் ஓடினாள். மலையுச்சிகளில் ஏறிநின்று முகில்களை நோக்கி கைசுருட்டி ஓங்கி வெறியோசை எழுப்பினாள். காடு கதறுவதைக் கேட்டு அவள் குடியினர் திகைத்தனர். கொடுஞ்சினத் தெய்வமொன்று கொடைதேடி எழுந்துவிட்டதுபோலும் என்று அஞ்சினர். தயங்கி காலெடுத்துவைத்து காட்டுக்குள் சென்று அவளைக் கண்டபோது வெறியெழுந்த வேட்டையணங்கே அவள் என்று மயங்கினர். “அன்னையே அடங்குக! உனக்குரிய கொடையும் பலியும் அளிக்கிறோம். தணிக உன் அனல்! அணைக உன் சினம்!” என்று மன்றாடினர். அவள் விழிகள் எவரையும் நோக்கவில்லை. அவள் கூவியழைத்தவர்கள் அனைவரும் அவளிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தனர். அங்கே வஞ்சம் மின்னும் விழிகளுடன் புன்னகையுடன் குனிந்து மானுடரை நோக்கிக்கொண்டிருந்தனர்.
அவள் கையிலிருந்த அக்குழவியுடல் அழுகியது. அதில் புழுக்கள் நெளிந்து அசைவுவந்தபோது பெருங்களிப்புடன் அவள் அதை முத்தமிட்டு நெஞ்சோடணைத்து ஆடலிட்டாள். மெல்ல அது தசையுதிர்ந்து வெள்ளெலும்பானபோதும் இடையிலேயே வைத்திருந்தாள். நாளடைவில் அவள் குரல் நாகடக்காமல் உள்ளேயே நின்றது. விழிநீர் மட்டும் வழிந்துகொண்டிருந்தது. துயிலிலும் அவள் கண்களிலிருந்து ஊற்று நிலைக்கவில்லை. தனித்திருந்து அவள் அழுகையில் காற்றுபட்ட சுனைபோல உடல் மெய்ப்புகொண்டு சிலிர்த்துக்கொண்டே இருந்தது.
அவள் இடையில் எலும்புகள் உதிர்ந்து அந்த சிறிய வெண்மண்டை ஓடும் முதுகெலும்புச்சரடும் மட்டும் எஞ்சியது. அவள் கண்ணீர்பெருக அதை மாறி மாறி முத்தமிட்டு கொஞ்சினாள். முலைகளுடன் அணைத்து பாலூட்டினாள். அதன் மண்டையை வருடி சொல்லில்லாது அரற்றி அழுதாள். அதை அணைத்தபடி படுத்து வண்டுமுரள்வதுபோல தாலாட்டு பாடினாள். கனியும் மீனும் கொண்டு உணவூட்டினாள். ஆற்றில் நீராட்டி மலர்பறித்துச் சூட்டினாள். இலை கொய்து ஆடையணிவித்தாள். அப்போதும் அவளுள் அமைந்த தெய்வமொன்று கலுழ்ந்துகொண்டே இருந்தது. கண்ணீர்த்துளிகள் வழிந்து மார்பிலும் வயிற்றிலும் சொட்டிக்கொண்டே இருந்தன.
முழுநிலவுநாட்களில் அவள் அமைதி கலைந்தது. வெறிகொண்டு காடெல்லாம் ஓடி மலையுச்சிமேல் ஏறிநின்று வெறியோசையிட்டாள். நெஞ்சில் அறைந்தறைந்து உடைக்க முயல்வதுபோல் சன்னதம் கொண்டாள். தளர்ந்து விழுந்து தன் அடியில் அக்கூடை வைத்துக்கொண்டு ஐயமும் அச்சமும்கொண்டு வானை நோக்கினாள். அங்கே எழுந்த அறியாத்தெய்வங்களை நோக்கி பல்காட்டி சீறினாள். மண்ணையும் கல்லையும் அள்ளி வீசினாள். பன்னிரு ஆண்டுகாலம் அன்னை அவ்வாறு ஒவ்வொரு நாளும் கணமும் கண்ணீர்வடித்தாள்.
பன்னிரண்டு ஆண்டுகாலம் அவள் முலைகளிலிருந்து வெண்குருதி வழிந்தபடியே இருந்தது. பின்பொருநாள் அவள் தன் சிறுகூட்டுப்பாவையை நெஞ்சோடணைத்தபடி அடர்காட்டைக் கடந்து மலைமேல் ஏறி இருண்ட குகைக்குள் சென்று மறைந்தாள். கல்மணிபொறுக்கிய குடியினர் அவள் செல்வதை கண்டனர். அவள் மீண்டுவருவாள் என நோக்கி அங்கே அமர்ந்திருந்தனர். இரவும் பகலும் அவளைக்காத்து அங்கே காவலிருந்தனர். பன்னிரு நாட்களுக்குப்பின் அங்கே ஒரு குடிலமைத்து காவலமர்த்தினர். அவள் கதைகளைப் பாடியபடி அங்கே காத்திருந்தனர்.
ஓராண்டு கடந்தும் அன்னை மீளாமை கண்டு அவள் உள்புகுந்த வைகாசிமாதம் முதல்விடியல் நேரத்தில் ஏழு மூத்தோர் கூடி குகைக்குள் சென்று நோக்கினர். முடிவில்லாது இருண்டு வளைந்திறங்கிச்சென்றது அக்குகை. முதல் வளைவில் குடிமூத்தார் ஒருவர் நின்றார். இரண்டாம் வளைவில் பிறிதொருவர் நின்றார். ஏழாம் குடிமூத்தார் மட்டும் இருளுக்குள் சென்று மறைந்தார். அவர்கள் கூப்பிய கைகளுடன் அங்கே காத்துநின்றனர்.
மூன்றாம் நாள் உள்ளிருந்து கண்களில் நீர்வழிய கைகூப்பியவராக ஏழாம் மூத்தார் திரும்பிவந்தார். “நான் அவளை கண்டேன். அங்கு அழியா இளமைகொண்ட அழகிய மைந்தனுடன் அவள் நின்றிருந்தாள். அவள் கண்களும் இதழ்களும் புன்னகையால் நிறைந்திருந்தன. அவள் முலைகளில் வெண்ணிற அமுது சுரந்து வழிந்தது. அவள் நோக்கு என்னை அறியவில்லை. நான் அவள் அடிதொட்டு வணங்கி மீண்டேன்” என்றார்.
அவர் அக்குகைவிட்டு வர ஒப்பவில்லை. அவரை அங்கேயே விட்டுவிட்டு எஞ்சியோர் மீண்டனர். அவர் கனியும் சிற்றூனும் உண்டு அங்கேயே இருந்தார். அவர் கையில் வெறியாடி எழுந்த அன்னை தன்னை அக்குகைச்சுவரில் வரைந்துகொண்டாள். வைகாசிமாதம் இடபநாளில் குகையமர்ந்த அன்னைக்கு உணவும் நீரும் மலர்களும் கொண்டு சென்று படையலிட்டனர் ஜரகுடியினர். அவள் முன் தங்கள் மைந்தரை படுக்கவைத்து வணங்கி அருள்வேட்டனர். அக்குகையிலோடிய ஓடையின் நீரை அவள் முலையமுதென்று அள்ளி அம்மைந்தருக்கு ஊட்டினர்.
மூதன்னை ஜரை கருவுற்ற பெண்களுக்குக் காவல் என்று எண்ணி வேண்டி அருள் பெற்றனர். முலையருந்தும் மைந்தரின் மென்தலைமயிரை காற்றென வந்து அவள் தழுவிச்செல்கிறாள் என்றும் அவர்களின் செம்மொட்டு இதழ்களை சுட்டுவிரலால் தொட்டு தலையெழச்செய்கிறாள் என்றும் அவர்களின் துயிலில் முலைப்பால் சொட்டி சப்புகொட்டச்செய்கிறாள் என்றும் அன்னையர் சொன்னார்கள். மைந்தர் இமைக்குள் அவளைக் கண்டே துயிலில் புன்னகைக்கின்றனர் என்றனர். மைந்தரற்ற மகளிர் அன்னை ஜரையை வணங்கி முலையூட்டும் அருள்பெற்றனர். அவளை அக்குலம் வரமாதா என்றழைத்தது.
[ 2 ]
விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்து அத்ரியெனும் பிரஜாபதியை படைத்தான். அவரிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன். புதனிலிருந்து புரூரவஸ். அவன் குலநிரை ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என நீண்டது. குருவின் மைந்தன் சுதன்வா. சியவனன் அவன் குருதியில் பிறந்தான். அவனிடமிருந்து கிருதியும் உபரிசிரவசுவும் பிறந்தனர்.
புரு வம்சத்து உபரிசிரவசுவின் மைந்தன் விருஹத்ரதன் தன் குலமூதாதைபெயர் கொண்டிருந்தமையால் அவனை குடிகளும் புலவரும் சார்வன் என்றும் ஊர்ஜன் என்றும் ஜது என்றும் அழைத்தனர். அவன் மைந்தன் பிருஹத்ரதன் குடிமூதாதை பிருஹத்ஷத்ரரின் முகம் கொண்டிருந்ததாகக் கூறினர் நிமித்திகர். எனவே அவனை சாம்ஃபவன் என்றழைத்தனர் புலவர்.
மூத்தோரின் போர்த்திறம் முழுதமைந்த பிருஹத்ரதன் பாரதவர்ஷத்தை வென்று செல்லும் கனவுகொண்டிருந்தான். மாறுதோற்றத்தில் பாரதவர்ஷத்தின் நகர்கள்தோறும் சென்று படைவலிவும் வழித்தெளிவும் அறிந்துவந்தான். பொன்சேர்க்கும் கருமியென ஒவ்வொரு ஊரிலிருந்தும் வீரர்களைச் சேர்த்து பெரும்படையை உருவாக்கினான். அவர்களுக்கு பீதர்நாட்டு எரிபடைகளையும் யவனநாட்டு பொறிபடைகளையும் தென்னாட்டு எறிபடைகளையும் ஒருக்கினான். அவன் வல்லமை கண்டு அணுக்கநாடுகள் அனைத்தும் அவனுக்கு அடிமை சொல்லின. அவர்கள் அளித்த திறைவந்து சேரச்சேர மகதம் மேலும் வல்லமை கொண்டது. பாரதவர்ஷத்தின் தலைநிகர்நாடு என்று அதை சூதர்கள் பாடத்தொடங்கினர்.
காசிமன்னன் பீமதேவன் வங்க மன்னன் நரகசேனன் மகளை மணந்து பெற்ற இரு மகள்களை பிருஹத்ரதன் மணந்தான். படைப்பெருமையும் நகர்ப்பெருமையும் கொண்ட மகதம் அதனூடாக குலப்பெருமையையும் பெற்றது. அணிகை, அன்னதை என்னும் அவ்விரு இளவரசிகளும் இரட்டையர். ஆடிப்பாவைபோல் அமைந்த அழகியர் இருவரை மணந்த பிருஹத்ரதன் மகதத்தை பாரதவர்ஷத்தின் கொடியென விண்ணிலேற்றும் மைந்தரைப் பெறுவான் என்று வாழ்த்தினர் மூத்தோர். ஆனால் நிமித்திகரோ “தெய்வங்களின் விருப்பம் ஏதென்றும் களம் அமைந்த சோழிகள் சொல்லவில்லை அரசே. அவை செவியும்சொல்லும் இழந்தவைபோல் எதையும் கேளாது அமர்ந்திருக்கின்றன” என்றார்கள்.
“தெய்வங்களுக்குரியதை அளிப்போம். நம் கருவூலம்தான் நிறைந்திருக்கிறதே. வேள்விகள் தொடங்கட்டும்” என்றான் பிருஹத்ரதன். மணநிகழ்வை ஒட்டியே புத்ரகாமேஷ்டி வேள்வி தொடங்கியது. நூற்றெட்டு நாட்கள் நடந்த அவ்வேள்வியின் இறுதியில் வேள்விக்களத்தில் தெய்வங்கள் எவையும் வந்தமரவில்லை. அதன்பின் ஒவ்வொரு நாளுமென அவர்கள் மைந்தருக்காக காத்திருந்தனர். அரசியர் சந்தானகோபால யக்ஞங்களை செய்தனர். நோன்புகள் கொண்டனர். ஆலயங்களில் அமர்ந்து பூசனை மேற்கொண்டனர். அரசனின் அவியை வாங்க விண்ணில் தெய்வங்கள் எழவேயில்லை.
அரசனையும் அரசியரையும் முதுமை வந்தணைந்தது. அரண்மனை மருத்துவர் சூத்ரகர் “மைந்தரைப்பெறும் அகவையை தாங்கள் கடந்துவிட்டீர்கள் அரசே. அரசியரும் அவ்வெல்லையை கடந்துவிட்டனர்” என்று அறிவித்தார். அன்றிரவு பிருஹத்ரதன் அரசியர் மாளிகையில் துணைவியருடன் இருக்கையில் துயர்தாளாது கண்ணீர்விட்டார். “வாழ்நாளெல்லாம் கடலோடி ஈட்டிய செல்வமனைத்தையும் கலமுடைந்து நீரில் விட்ட வணிகன் போலிருக்கிறேன். செல்வமென்பது இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்பின் நல்லூழையும் பெற்றுத்தரக்கூடியதென்று இளமையில் கற்றேன். என் கருவூலச்செல்வமனைத்தையும் வேள்வியறங்களுக்கு அளித்துவிட்டேன். வெறுங்கையுடன் விண்செல்லப்போகிறேன். புத் என்னும் இழியுலகுக்குச் சென்று இருளில் அமைவேன்” என்றார்.
அவரைத் தேற்றுவதெப்படி என்று அறியாமல் அரசியரும் விழிநீர் சொரிந்தனர். மூத்தவளான அணிகை “அரசே, உங்களுக்கு இவ்விழிவு சூழ நாங்களே வழிவகுத்தோம். இது எங்கள் குலம் மீது விழுந்த தீயூழ். எங்கள் தந்தை தன் முதலரசி புராவதியின் முதல்மகள் அம்பையை ஈவிரக்கமின்றி கையொழிந்தார். அவள் நெஞ்சுருகி விழுந்த பழி எங்களையும் தொடர்கிறது” என்றாள். “இனி நாங்கள் செய்யக்கூடுவதொன்றே. எரிவளர்த்து அதிலிறங்கி எங்கள் பழிதீர்க்கிறோம். புகழ்கொண்ட காசியின் கொடிச்சரடு எங்களுடன் அறுபடட்டும்” என்றாள் இளையவள் அன்னதை.
“எரியேறுவதனால் பழி அழிவதில்லை” என்றார் பிருஹத்ரதன். “நீங்கள் இங்கிருங்கள். நான் முடிதுறந்து காடுசெல்கிறேன். அரசன் என சேர்த்த பொருளனைத்தையும் கொண்டு அறம்செய்துவிட்டேன். அரசனென அமர்வதனால் சேரும் பழி ஒன்றே இனி எஞ்சுகிறது. காட்டில் ஓர் எளிய வேடனாக வாழ்கிறேன். மண்குடிலில் படுக்கிறேன். மழையிலும் வெயிலிலும் அலைகிறேன். இப்பிறவியில் எஞ்சும் வினையையும் அறுத்தபின் அங்கே உயிர்துறக்கிறேன். நான் நீத்த செய்தி வந்ததும் நீங்களும் நெருப்புசூழலாம்.”
மறுநாள் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு பிருஹத்ரதன் நகர்நீங்கினார். அவரை காட்டின் எல்லைக்குக் கொண்டுசென்று விட்டுவிட்டு திரும்பியது அரசமணித்தேர். கண்ணீருடன் நோக்கி நின்று மீண்ட ஏவலன் அரசர் கூடுதிறந்துவிடப்பட்ட வேங்கை என காடுநோக்கிச் சென்றார் என்று சொன்னான். அமைச்சரும் குடிமூத்தவரும் கண்கரைந்தனர். அரசியர் தங்கள் மாளிகைக்குள் பட்டாடை களைந்து மரவுரி அணிந்து, புல்லுணவு உண்டு, வெறுந்தரையில் துயின்று நோன்புகொண்டனர்.
ஏழுபெருங்காடுகள் வழியாகச் சென்று ஜரவனத்தை அடைந்தார் பிருஹத்ரதன். அங்கே தன் கையால் வெட்டிய மூங்கில்கொண்டு ஏறுமாடம் அமைத்து அதில் கனியும் மீனும் உண்டு முழுத்தனிமையில் வாழ்ந்தார். சொல்லப்படாததனால் மொழியை நாக்கு இழந்தது. நாவிழந்த மொழி சித்தத்தில் நெருக்கியடித்தது. பெருங்கூச்சலென்றாகியது அவர் அகம். பின் அந்திப்பறவைகள் என அவை ஒவ்வொன்றாக அமைய அவருள் அமைதி நிறைந்தது.
அவர் விழிகள் தெளிந்தன. உடலெங்கும் இனிய ஒழுங்கு கூடி அசைவுகள் விரைவழிந்தன. அங்குள மரங்களின் அசைவுகளிலிருந்து அவர் அசைவு மாறுபடவில்லை. அங்கே வந்த மானும் முயலும் கூட அவரைக் கண்டு அஞ்சவில்லை. அவர் கங்கையில் இறங்கியபோது நீர் நலுங்கவில்லை. எண்ணமற்றிருப்பவனை மானுடர் காண்பதில்லை, தெய்வங்கள் அறிகின்றன. அவரைக் கடந்து சென்ற ஜரர் அங்கொருவர் வாழ்வதையே அறியவில்லை. தன் குடிலைச்சூழ்ந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் கந்தர்வர்களும் யட்சர்களுமென்று அவரும் அறிந்திருக்கவில்லை.
ஒருநாள் நள்ளிரவில் அவரை வண்டுகள் தங்கள் இசையால் எழுப்பின. அவர் சருகுப்படுக்கையில் எழுந்தமர்ந்தபோது ஒளிரும் சிறகுகளுடன் மின்மினிகள் அவரைச் சூழ்ந்து பறந்தன. அவை தன்னிடம் பேசவிழைவதை அவர் புரிந்துகொண்டார். அவர் எழுந்து நின்றபோது அவை அவருக்கு வழிகாட்டியபடி பறந்தன. அவர் காட்டுக்குள் இருளில் ஊடுருவிச்சென்றார். தொலைவில் எழுந்த மலைக்குமேல் பந்தங்களின் ஒளியை கண்டார். அங்கே முழவுகளின் ஒலியும் மானுடக்குரல்கள் கரைந்த முழக்கமும் கேட்டுக்கொண்டிருந்தது. அத்திசைநோக்கிச் சென்று மலையேறி ஜரையின் குகைவாயிலை அடைந்தார்.
குகைச்சுவரில் ஓவியமென எழுந்த அன்னை ஜரை அக்காட்டைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு ஊர்களின் மக்களால் வரமாதா என்று வழிபடப்பட்டாள். வைகாசிமாதம் இடபநாளில் அவளுக்கு உப்பில்லாது சுட்ட அப்பமும் இன்கள்ளும் மலர்களும் கொண்டுவந்து படைத்து வணங்கினர். அவர்களில் முதியோரும் மூதன்னையரும் மைந்தரும் மிகுந்திருப்பதை பிருஹத்ரதன் கண்டார். மைந்தரை மண்ணில் நிரையென படுக்கச்செய்து அவர்களுக்குமேல் மலரும் நீரும் தெளித்து அன்னைக்கு படையலாக்கினர். வேலேந்தி வெறியாட்டுகொண்ட பூசகன் அவர்கள்மேல் கால்பறக்க பாய்ந்து மும்முறை கடந்தான். வேல்நுனியால் அவர்களின் தலைகளைத் தொட்டு “முழுவாழ்வு அமைக! அன்னை வாழ்த்துகிறேன்! நலம் சிறக்க!” என்றான்.
குகைவிளிம்பில் இருளில் கைகட்டி நின்றிருந்த பிருஹத்ரதனை நோக்கி பூசகனின் வெறிவிழிகள் திரும்பின. “மைந்தனுக்காக ஏங்கி நின்றிருக்கிறாய்! வருக! பாரதவர்ஷம் என்றும் பாடும் பெருவீரனை மைந்தனாகப் பெறுவாய்! அவன் தந்தையென்றே அறியப்படுவாய்! நலம்சூழ்க!” என்று நற்குறியுரைத்து நீர்மலர் அள்ளி அவர் தலைமேல் வீசியபின் மல்லாந்து மண்ணில் விழுந்தான். மெய்விதிர்த்த பிருஹத்ரதன் கூப்பியகைகளுடன் கண்ணீர் வழிய நின்றார்.
அங்கிருந்த முதியோர் பிருஹத்ரதனை நோக்கித் திரும்பி “அன்னை அருட்சொல் பிழைத்ததில்லை. அவள் முதியோருக்கு மைந்தரை அருளும் தேவி. எனவே வரமாதா என்று வணங்கப்படுகிறாள். இவ்வூர்களில் எங்கும் அவள் உருவத்தையே வைத்து வழிபடுகிறோம். நல்லூழ் கொண்டீர்” என்றார்கள். கைகூப்பி தலைவணங்கி “நன்று நிகழட்டும்” என்றார் பிருஹத்ரதன்.
பிருஹத்ரதன் வரமாதாவின் உருவம் மீது களிமண்ணைப் பரப்பி ஒற்றி எடுக்கப்பட்ட புடைப்போவியத்தை கொண்டுசென்று தன் அரண்மனையில் அமைந்த ஆலயத்தில் அமைத்தார். ஒவ்வொரு நாளும் தன் துணைவியருடன் சென்று அன்னையை வழிபட்டார். ஆலயச்சுவரில் எவரையும் நோக்காத துயர்விழிகளுடன் அன்னை நின்றாள். கைகூப்பி வணங்குபவரை நோக்கி திகைத்து அமைந்திருந்தான் அவள் இடையமைந்த மைந்தன்.