கடிதங்கள்

அய்யா,

31.3.2016 தினமலர் தேர்தல் களம் இணைப்பில் தங்களது புதிய வாக்காள இளைஞர்களின் பொதுமனப்பான்மை பற்றிய கூர்மையான கவனிப்பு அவ்விளைஞர்கள்மீதும் நாட்டின் எதிர்காலம் மீதும் அச்சம் கொள்ள வைக்கிறது. தவறான ஆனால் அலங்காரமான சொல்லாடல்களால் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவது உடன் தவிர்க்கப்படவேண்டியது. பள்ளிப்பாடங்களுக்கு எதிர்ப்பு என்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ளதால்,பள்ளிக்கல்வி முறையிலேயே மாற்றம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை தங்கள் கட்டுரை தெரிவிக்கிறது. இது நீண்டகால நடவடிக்கை. உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் தேச ஒருமைப்பாட்டு உணர்வை கலைந்துபோகாமல் பாதுகாப்பதும் அவசியம். தங்கள் கட்டுரையில் தெரிவித்துள்ளவாறே ரயில் பயணங்கள்,பேருந்து பயணங்கள்,தேநீர் திண்ணைப் பேச்சுக்கள் வழியாக அரட்டையின் மூலமாக சில தீவிரமான கருத்துக்கள்,ஆராய்ச்சி மனப்பான்மை சாதாரணமாக வாய்க்காத என் போன்ற பல உணர்ச்சிபூர்வ நடவடிக்கையாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவான வாழ்க்கை பற்றிய கனவுகளின் அடிப்படையில்தான் நவீனதேசம் என்பது அமையவேண்டும் என்ற அவா,பொதுவான வாழ்க்கைக்களத்தில் போட்டிகள் நிரம்பிய தைசத்தில் தற்காப்பு கருதி வலு இழந்து போகலாம். மதத்தால்,சித்தாந்தத்தால்,இனத்தால்,மொழியால் என எந்த காரணம் கொண்டும் பிரிவினையோ,ஒற்றுமையையோ ஏற்படுத்துதல் ஒட்டுமொத்த மக்கள் முன்னேற்றத்திற்குத் தீர்வாகாது என்பதை தீவிரமாக புரியவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து கவலையுள்ளோர் இணைந்து இளைஞர்களிடையே,ஏன் முதிராத முதியவர்களிடமும் தக்க உணர்ச்சிமாற்றம் கொண்டுவர வேண்டும்;ஏனெனில் இவர்கள் சிந்தனாபூர்வமாக இயங்கவில்லை.

அன்புடன்,
கிரிதரன் பிரான்
மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை,
சென்னை.91.

முந்தைய கட்டுரைஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75