தினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்

 

Tamil_News_large_1481446

ஜனநாயகச் சோதனைச்சாலையில் – 12

பிளஸ் டூ தேர்வுகள் முடிந்த கடைசி நாள் ஒருமுறை நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளிக்கூட மைதானத்திற்குள் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய பாடப்புத்தகங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டிருந்தார்கள். மைதானம் முழுக்க காகிதக் கிழிசல்கள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன. பாடப்புத்தகங்கள் மேல் மாணவர்களுக்கு இருக்கும் இந்த வெறுப்பு அவர்களுக்கு தேசம், தேச தலைவர்கள், அரசியல், ஒழுக்கம், அறம் ஆகியவற்றின்மேல் வந்துவிடுகிறது. இவையெல்லாம் அவர்களின் மேல் திணிக்கப்பட்டதாகவும் அவற்றை அவர்கள் மீறிச்செல்லவேண்டும் என்றும் எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்

எவையெல்லாம் பள்ளிக்கூடப் பாடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டனவோ அதற்கு நேர் எதிரான நிலைபாடு எடுப்பதென்பதே முற்போக்கான விஷயமாக அவர்களால் நினைக்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய அசட்டுத்தனம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. தங்களுடைய சந்தேகங்களையோ, குழப்பங்களையோ தீர்ப்பதற்கு நூல்களை நாடி அவர்கள் படிப்பதும் இல்லை. ஆகவே பள்ளிக்கூடப் பாடநூல்களில் காந்தி ஒரு மகாத்மா என்று கற்பிக்கப்பட்டிருந்தால் காந்தி ஒரு திருடன் என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையுடைய நாடு என்று கற்பிக்கப்பட்டிருந்தால் இந்தியா ஒரு நாடே அல்ல என்று பேச ஆரம்பிப்பார்கள்

இதைப் பேசிப் பேசி, கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகரமாக அவர்களே நம்பி, மூர்க்கமாக வாதிடுவதை பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். பரிதாபத்திற்குரியவர்கள், அவர்களுடையது ஆராய்ச்சி அற்ற நம்பிக்கை என்பதனால் அவர்கள் எதையும் விவாதிக்கவும் முடியாது. ஆனால் இன்று வாக்குரிமை பெற்று நமது அரசாங்கங்களை தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாக இந்த இளைஞர்கள் ஆகி இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் மூன்றில் ஒருபங்கு வாக்கு புதிய, இளம் வாக்காளர்களுடையது என்று சொல்லப்படுகிறது

இளைஞர்களின் இந்த மூடத்தனமான எதிர்ப்பு மனநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில அரசியல்த் தரப்புகளும் இன்று உருவாகி வந்துள்ளன. என்னென்ன அடிப்படையில் இந்த தேசம் உருவாகி இருக்கிறதோ, எந்த வகையில் இந்த தேசம் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ அனைத்தையும் அடித்து நொறுக்க முயல்கிறார்கள் இந்த புதியசக்திகள்.  இளைஞர்கள் இவர்கள் தீவிரமாகப் பேசுவதாகவும், பாடப்புத்தகங்களால் மறைக்கப்பட்ட உண்மையை பேசுவதாகவும் நம்பி இவர்களுக்குச் செவி கொடுக்கிறார்கள். தேர்தல் காலங்களில் இந்த ஆபத்தான எதிர்ப்புக் குரல்களை எங்கும் கேட்க முடிகிறது.

சில நாட்களுக்கு முன் ரயிலில் ஒரு இளைஞன் என்னிடம் இந்தியா ஒரு தேசமே அல்ல என்றான். நான் புன்னகைத்து, ”இந்தியா ஒரு தேசம் என்று எட்டாவது பாடபுத்தகத்தில் இருக்கிறது. நீங்கள் ப்ளஸ்டூ ஜெயித்துவிட்டீர்கள் .ஆகவே தலை கீழாக சொல்கிறீர்கள், அவ்வளவுதான்.இது ஒரு அரசியல் பேச்சே அல்ல” என்று சொன்னேன். அவர் உடனே இங்கு பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் உதிரிவரிகளை சொல்லத் தொடங்கினார். அதாவது, இந்தியா பல்வேறு தேசங்களை ராணுவத்தால் இணைத்து ஒரே தேசமாக்கப்பட்ட ஒரு அமைப்பு, இதை வெள்ளைக்காரன்தான் ஒரு தேசமாக ஆக்கினான், ஆகவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தனிதேசமாக மாறவேண்டும்—இப்படியெல்லாம்.

”சரி, அப்படியென்றால் தமிழ்நாடு மட்டும் எப்படி ஒரு தேசமாக அமைய முடியும்? இது சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தானே இருந்தது? வெள்ளையர்கள்தானே இதை ஒருநிர்வாகப் பகுதியாக மாற்றினார்கள்?” என்றேன். அவர் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் “தமிழகம் சேர, சோழ, பாண்டிய பல்லவ நாடுகளாக பிரியவேண்டும். அந்தபிரிவினைக்குள் குமரிமாவட்டம் திருவிதாங்கூர் என்ற தனி நாடாக பிரியவேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரன் வருவதற்குமுன் திருவிதாங்கூர் தனி நாடாகத்தான் இருந்தது” என்றேன்.

அவர் ”தமிழகம் தமிழ்மொழியல் ஒன்றாகிறது” என்றார். நான் “இந்தியா இந்துமதத்தால் ஒருதேசம் என்பதற்கும் அதற்கும் என்ன வேறுபாடு?” என்றேன். “இந்துமதமே இந்தியா என்றால் பிறமதத்தினர் அன்னியர்களாக ஆகிறார்கள்.  அது ஜனநாயக விரோதமானது. அதேபோலத்தான் மொழியும். தமிழகத்தின்ம் மக்களின் ஏறத்தாழ 30% பேருக்கு தாய்மொழி தமிழ் அல்ல. அவர்கள் மொழி அடிப்படையிலான நாட்டில் அன்னியர்களாக இருப்பார்கள் என்றால் அது என்ன ஜனநாயகம்?” என்றேன்.

அவர் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் சினந்து பல வார்த்தைகளை சொல்லிவிட்டு என்னிடம் பேச்சை முறித்துக் கொண்டார்.

மதமோ, இனமோ, மொழியோ எதன் அடிப்படையில் ஒரு தேசம் கட்டமைக்கப்பட்டாலும் அந்த மத இன மொழியைச் சாராதவர்கள் அதற்குள்  ஒடுக்கப்பட்டுதான் இருப்பார்கள். ஆகவே ஒரு நவீனதேசம் என்பது மதம் ,இனம் ,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையக்கூடாது. நிலப்பரப்பின் அடிப்படையில் மட்டும் தான் அமைய முடியும். பொதுவான வாழ்க்கைபற்றியக் கனவுகளின் அடிப்படையில்தான் அமையமுடியும். அதாவது இறந்தகாலத்தின் அடிப்படையில் அல்ல எதிர்காலத்தின் அடிப்படையில் தேசம் கட்டமைக்கப்படவேண்டும்

அப்படி இயல்பாக அமைந்த ஒரு நவீனத் தேசியம்தான் இந்தியா .ஏன் இந்தியா ஒற்றைத்தேசமாக இருக்கவேண்டும்? ஏனென்றால் , கடந்த  ஆயிரம் வருடங்களாக இந்த தேசத்தில் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், உருது பேசுபவர்கள் ஏராளம். கர்நாடகத்தில் துளு, கொங்கணி, மராத்தி பேசுபவர்கள் கணிசமானவர்கள். ஆந்திரத்தில் உருது பேசும் மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இப்படி எங்கும் பல்வேறு வகையான மொழிபேசும் மக்கள் கலந்து தான் வாழ்கிறார்கள் . இதையே மதம், இனம் ஆகியவற்றுக்கும் சொல்லலாம்

இந்தியா இப்படி ஒற்றைத்தேசமாக இருக்கும்போது மட்டும்தான் பிளவுகள் இல்லாமல், பூசல்கள் இல்லாமல் முன்னேறமுடியும். இதன் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக உடையுமென்றால் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். இந்தியா பாகிஸ்தான் என்ற இருநாடுகள் பிரிந்த போது ஏறத்தாழ ஒரு கோடி பேர் அகதிகளானார்கள். முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் அது ஒரே ஒரு பிரிவினை. இவர்கள் பேசும் இருபத்தைந்து பிரிவினைகள் நடக்குமென்றால் எத்தனை மடங்கு அழிவு நிகழும்.

இதையெல்லாம் தெரிந்துதான் இவர்கள் பேசுகிறார்களா? அந்தப் பேரழிவுக்கு இப்படிப்பேசுபவர்கள் பொறுப்பேற்பார்களா? இன்று இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்களும், பிற பிரச்னைகளும் இவர்கள் சொல்லுவது போல மாநிலங்கள் தனித்தனி நாடாக மாறினால் இல்லாமலாகிவிடுமா? ஒவ்வொரு மாநில அரசுகளிலும் இதே ஊழலும் பொறுப்பின்மையும்தானே இருந்து கொண்டிருக்கிறது? ஊழலையும் பொறுப்பின்மையையும் உருவாக்குவது அவற்றை ஆதரிக்கும் மக்களின் மனநிலையே ஒழிய இந்திய தேசியம் அல்ல. சொல்லப்போனால் பல மாநிலங்களில் குடும்பஆட்சியும் ,கட்டுக்கடங்காத ஊழலும் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பதே மத்திய அரசுதான்

அப்படி என்றால் எதற்காக இந்த பிரிவினைவாதம் பேசப்படுகிறது? ஒன்று இப்பிரிவினைவாதம் அனைத்துக்கும் எங்கிருந்தோ பணம் வருகிறது. தேசியவாதம் பேசுபவர்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள் பிரிவினைவாதம் பேசுபவர்கள் சொந்தமாக வாகனங்களும் அலுவலகங்களும் வைத்துக் கொண்டு பணத்தில் புரள்கிறார்கள். பாடப்புத்தகத்தில் எது கற்பிக்கப்படுகிறதோ அதற்கு எதிரான நிலைபாடை எடுப்பதுதான் தன்னை புரட்சியாளனாகவும் ,சிந்தனையாளனாகவும் காட்டும் என்று எண்ணக்கூடிய சிறுவர்கள் தான் இந்த பிரிவினைவாதிகளின் இலக்கு.

இந்தத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு வரும் இளைஞர்களின் பொறுப்பு ஒன்றே. அவர்களின் அறியாமையை, முதிர்ச்சியின்மையை பயன்படுத்திக்கொள்பவர்களை அடையாளம் காண்பது. ’எனக்கு வயதுவந்துவிட்டது’ என்று அந்த தேசப்பிரிவினை சக்திகளின் கண்களை நோக்கிச் சொல்வது. சேர்ந்துவாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை, பிரிவுநோக்கு முழுமையான அழிவே என எனக்குத்தெரியும் என்று அவர்களிடம் கூறுவது

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7