‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7

[ 8 ]

நூறாயிரம்கோடிமுறை தன்னுள் பெருகிக்கொண்டிருந்தான் ரக்தபீஜன். தன்னுள் செறிந்த தான்களின் எடைதாளாது கால்கள் தெறிக்க உடல் அலைபாய நடந்தான். “நான்!” என அவன் சொல்லும்போது ஒரு பெருந்திரளையே எண்ணினான். “இங்கே” என்று சொல்லும்போது அவ்விடத்தை மையம்கொண்டு விரிந்த வெளியையே சுட்டினான். அவன் நெஞ்சில் கைவைத்தபோது உள்ளே செறிந்த நுண்ணுருவ ரக்தபீஜர்கள் “நான்! நான்!” என பொங்கி எழுந்து அவன் கைகளை முட்டினர். அவன்  கண்களை மூடினால் இமைகளுக்குள் செந்நிறக்குமிழிகளாக அவர்கள் மிதந்தனர். சற்றே சித்தம் மயங்கும்போது அவர்கள் “நாங்கள் நாங்கள்” என முந்தி எழும் குரல்கள் காதில் விழுந்து பதறி எழச்செய்தன.

அவன் அரண்மனையில் எங்கும் ஒன்றையொன்று நோக்கிப் பெருக்கும் ஆடிகள் பொருத்தப்பட்டன. ஒன்றிலிருந்து ஒன்று துளிகுறையாமல் மொண்டு பெருகிச்சூழ்ந்த முடிவிலா பாவையுருவங்கள் நடுவேதான் எப்போதும் அவனிருந்தான். அவனுடன் பேசும் அமைச்சரும் பணியாட்களும் அவ்வாடிகளுக்கு அப்பால் அவற்றால் நோக்கப்படாமல் நின்றனர். அவர்களின் சொற்களை பல்லாயிரம் செவிகள்  கேட்டன.  அவர்களை நோக்கி பல்லாயிரம் ரக்தபீஜர்களின் முகங்கள் விழிகூர்ந்தன. பல்லாயிரம் உதடுகள் ஒற்றைச் சொல்லை எடுத்தன. ஒரே ஆணை முடிவிலாது  எழுந்துகொண்டே இருந்தது.

நாளடைவில் அசுரகுலத்தவர் அவன் ஒருவன் என்பதையே உளம்மறந்தனர். அரண்மனையில் புளித்த கள் கலவிளிம்பு ததும்பி நுரைமறிய எழுந்ததுபோல ரக்தபீஜன் நிறைந்திருப்பதாக எண்ணத்தலைப்பட்டனர். முடிவிலா கைப்பெருக்கில் கொல்படைக்கலங்கள் கொண்டு பெருகியெழுந்த அசுரமூதாதையரின் படையே அவன் என்றனர் அக்குலக் கவிஞர். “இங்குள்ள நாமனைவரும் இன்று அவனே ஆனோம். அங்கு அரண்மனை நிறைத்துப் பெருகியிருப்பது நம் உடல்வெளியே” என்றனர். “எண்ணுக அவனை! அவனாகுக! அதுவே இறப்பறுத்து சிறப்புறும் பெருநிலை.”

அந்நம்பிக்கை காலப்போக்கில் அசுரர்களிடையே பரவியது. அசுரர்  எண்ணி எண்ணி அவனாயினர். சொல்லிச்சொல்லி பெருகினர். பலமுகம் கொண்டு நகரெங்கும் அவன் நிறைந்தான். ஏர்தொட்டு மண் உழுதான். வடம்பற்றி  புரவி புரந்தான். கூடம் எடுத்து இரும்பு அடித்தான். கோல்கொண்டு காவல் நின்றான். மொழியறிந்து நூல் பயின்றான். நெஞ்சுகனிந்து இசை மீட்டினான். நாடென்றும் நகரென்றும் அவையென்றும் அரசனென்றும் அவனே அமர்ந்திருந்தான்.

அவன் உடல் ஒரு ஆழ்கோட்டையின் வாயில் என்றனர் ஒற்றர். ஈசல் எழும் புற்றுவாய். அதிலிருந்து முடிவிலாது ஊறிப்பெருகி அவன் ஒருவனே  படையாகி வருவான் என்று அயலார் நம்பினர். அவன் தலைமை கொண்டு எழுந்துவந்த அசுரப்படையை அவன் உடலே என்று அவ்வச்சம் கொண்ட விழிகள் மயங்கின. ரக்தபீஜன் நகரங்களைச் சூழ்ந்து வளைத்து இறுக்கினான். மலைத்தொடர்களை அணைத்து வழிந்தோடி கடந்தான். சமவெளிகளில் பரவினான். விண்முகில்களில் படர்ந்து ஏறிச்சென்றான். நீர்ப்பரப்புகளிலும் பனிமணிகளிலும் விழியொளிகளிலும் அவன் பெருகுகிறான் என்றனர்.

“அவன் பெயரை சொல்லாதீர், அவன் ஊரையும் குலத்தையும் உரைக்காதீர், சொல்லாச்சொல் இல்லாதொழியும்” என்றனர் அறிஞர். சொல்லப்படாதபோது அவன் விழிகளில் மின்னும் எண்ணமென்றானான். விழிகளிலிருந்து விழிகளுக்கு சென்றான். “அச்சமே அவனை பெருக்குகிறது, அவனை ஒன்றென எண்ணுங்கள். அவ்வெண்ணத்தைக் கடக்க அவனால் இயலாது” என்றனர் மூத்தோர். “எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்” என்றனர் இளையோர். “போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி?” என குமைந்தனர்.

அனைத்துலகங்களிலும் அவனே எண்ணமென எஞ்சினான். எண்ணத்துடன் எண்ணம் பொருத பெருகிச்சூழ்ந்தான். படைகொண்டு எழுந்து தேவருலகை அவன் அடைந்தபோது முகில்கள் அனைத்தும் அவன் குரலை எதிரொலித்தன. அமராவதிநகரின் தெருக்களில் பொற்புழுதிகள் அதிர்ந்தமைந்தன. தன் மாளிகை உப்பரிகையில் இந்திராணியுடன் அமர்ந்து கந்தர்வர்களையும் யட்சர்களையும் கருக்களென அமைத்து நாற்களம் ஆடிக்கொண்டிருந்த இந்திரன் அவ்வோசை பெருகி அணுகுவதைக் கண்டு அஞ்சி எழுந்தான். “அது என்ன? வானத்து ஆழியா? இருளின் அறைகூவலா?” என்று அமைச்சரிடம் கேட்டான்.

“அரசே, வெல்லற்கரியவன், ரக்தபீஜன் என்னும் அசுரன்” என்றார் அமைச்சர். தேவதேவன் தோள்தட்டி “எழுக படைகள்! எங்கே என் மின்படை?” என்று கூவினான். “பொறுங்கள் அரசே! அவன் முக்கண்ணனிடம் சொற்கொடை பெற்றவன். அவன் உடல் உதிர்க்கும் ஒவ்வொரு துளியும் விதையென்றாகி அவனென எழும். தன்னை பெருக்கிக்கொண்டு தேவருலகை நிறைக்க அவனால் இயலும்” என்றார் அமைச்சர். “எங்கனம் அது?” என்றான் இந்திரன். “அரசே, குருதியின் அணு ஒவ்வொன்றும் விதையே. இவன் அனைத்தும் முளைத்தெழும் சொல்பெற்றுள்ளான்.”

திகைத்து நின்ற இந்திரன் “நாம் என்ன செய்யமுடியும்? அவனை தடுக்காவிடில் நம் நகரம் அழியுமே?” என்றான். “அவன் குருதியுதிராமல் போர்புரிக!” என்றார் அமைச்சர். “அவன் உள்ளம் அச்சுறட்டும். அவ்வச்சத்தால் உடல் தளரட்டும். அக்கணம் வரை போரை கொண்டுசெல்க!”  இந்திரன் “ஆம்” என்றான். “நாற்களத்தில் இருவரும் உங்கள் அச்சத்தையும் ஆண்மையையும் வீரத்தையும் வெறுமையையும் காய்களாக்கி ஆடுவது இப்போர். வெல்லும் விழைவே வெல்லும் என்றறிக!”

மின்படையுடன் வெண்களிறுமேல் ஏறி படைமுகம் சென்றான் இந்திரன். ஆழியும் மழுவும்  வேலும் வில்லும் ஏந்திய தேவர்கள் திரண்டு அவனை பின்தொடர்ந்தனர். “அவன் குருதி உதிரலாகாது. புண்ணெழாது தாக்குங்கள். அவன் விழிகள் மயங்கட்டும். கால்கள் தளரட்டும்” என்று இந்திரன் தேவர்படைகளுக்கு ஆணையிட்டான். நகரெல்லையில் இருந்த சப்தமேருக்கள் என்னும் ஏழுபொன்மலைகளுக்குமேல் படைதிரண்டு தேவர்கள் நிற்க தென்திசையிலிருந்து கரிய ஒழுக்கென அசுரர் முகில்களின் மேல் ஏறி வான் கிழித்து அணுகினர்.

வாள்தூக்கி “ஏழுக போர்!” என்றான் இந்திரன். அரசனை வாழ்த்தி போர்க்குரலெழுப்பியபடி தேவர்படைகள் அசுரர்களை எதிர்கொண்டன. “எழுக போர்!” என்றான் ரக்தபீஜன். அசுரர்க்கரசனை வாழ்த்திய கரும்படைகள் களம்கண்டன. படைக்கலங்கள் பேரொலியுடன் மோதி பொறிசிதறின. போர்க்குரலும் இறப்புக்குரலும் எழுந்து சூழ்ந்தன. மண்ணில் கூடிநின்ற உயிர்கள் விண்ணில் எழுந்த மின்னொளியையும் இடியொலியையும் உலைத்துச் சுழன்ற புயலையும் கண்டனர்.

இந்திரன் சூழ்ந்திருந்த மலைகளை  மின்படையால் பிளந்தெடுத்து ரக்தபீஜன் மேல் வீசினான். விண்ணில் பால்நிற ஒளியைப்பெருக்கி அவன் கண்களை மயங்கச்செய்தான். திசைகளை திருப்பித்திருப்பி அமைத்து அவன் சித்தம் குழம்பச்செய்தான். தேவர்படைகளின் வல்லமைமுன் அசுரர் மடிந்தழிந்தனர். தன்குலத்தார் சிதறிக்கிடந்த களம்நடுவே ஒருகணமும் விழியோ, காலோ, எண்ணமோ பதறாமல் நின்று போரிட்டான் ரக்தபீஜன்.

அவன் தோள்களில் மறைந்த அசுரமூதாதையர் குடிவந்தனர். அவன் கூருகிர்களில் அவர்களின் அணையா பெருவஞ்சம் வந்தமைந்தது. அவன் கைகளை விரித்து அலறி குரலெழுப்பி இந்திரனை தன் எறிபடைகளால் தாக்கினான். அவற்றை உடல்வளைத்துத் தவிர்த்து ஒருகணமும் ஓயாது மின்படையைச் சுழற்றி பெருமலைகளை அள்ளி ரக்தபீஜன் மேல் எறிந்தான் இந்திரன். தேவர்கள் ஒவ்வொருவராக புண்பட்டுச்சரிந்தனர். அசுரர் தலையறுந்து அவர்கள்மேல் விழுந்து மூடினர். பின்னர் களத்தில் அவர்கள் இருவரும் எதிரெதிர் எஞ்சினர்.

ஆயிரம் விழிகளையும் அவன்மேல் நட்டு எண்ணம் குவித்தான் இந்திரன். ‘இவன் அசுரன். என் அச்சமே இவன் முதற்படைக்கலம். அதை நான் இவனுக்களிக்கப்போவதில்லை. இவன் வெறும் அசுரன். வென்று மேலெழும் வல்லமை இவர்களுக்குண்டு. குவிந்து கூர்பெறும் வஞ்சமும் இவர்களுக்குண்டு. சோர்ந்து பின்னடையாத துணிவும் இவர்களுக்குரியதே. ஆனால் இறுதியில் இவர்கள் தோற்றாகவேண்டும். அதுவே விண்சமைத்து மண்படைத்து முரண் அமைத்து வினையாடும் தெய்வங்களின் ஆணை’ என்று தன்னுள் எழுந்த சொற்களால் தனக்கு ஆணையிட்டான். கைகள் போர்தொடுக்கையில் உள்ளம் சொல்கோத்தது. ‘இவனை அஞ்சமாட்டேன். என் முன் இவன் பெருக விடமாட்டேன். இவன் ஒருவன் மட்டுமே. என் ஆயிரம் விழிகளுக்கு முன் எழுந்த ஓருடல் மட்டுமே…’

தன் உள்ளத்தை தானே நோக்கிக்கொண்டிருந்தபோது எங்கோ ஒரு மெல்லிய விழைவு முளைப்பதை அவன் கண்டான். ஒரு துளி குருதி நிலம்தொடுமென்றால் என்ன நிகழும்? அது என் அச்சம் மட்டும்தானா? அவ்வெண்ணம் எழுந்ததுமே அது எத்தனை வல்லமைகொண்டது என உணர்ந்து அவன் திடுக்கிட்டான். அதன்மேல் தன் உளச்சொற்கள் அனைத்தையும் அள்ளிப்போட்டு மூடினான். அவற்றை உண்டு பெருத்து அது எழுந்தது.

என்ன நிகழும்? அது தன் எளிய அச்சமென்றால் வென்றாலும் இழிவுசூடியவன் ஆவேனல்லவா? அச்சமறுக்க உறுதிகொண்டவன் இவ்வச்சத்தை மட்டும் ஏன் அகத்தே பேணிக்கொள்கிறேன்? ஒருதுளி குருதி. அசுரனின் சொற்கொடையின் கதை உண்மை என்றால்கூட எழுபவன் பிறிதொருவன் மட்டுமே அல்லவா? அவன் உள்ளத்தில் எழுந்த ஆயிரம் நூல்வலர் மறுக்கமுடியாமையை சமைத்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு முன் அவன் விரும்பித் தோற்றான். மிகமெல்லியவை எத்தனை வல்லமைகொண்டவை! மறைந்து நின்று மன்றாடுபவை போல் வெல்லமுடியாதவை உண்டா என்ன?

அவன் அதை எண்ணினானா என அவன் அறிவதற்குள்ளாகவே அவன் கையிலிருந்த மின்படைக்கலம் சென்று ரக்தபீஜனின் தோளைச் சீவி மீண்டது. குருதி எழுந்து மண்ணில் விழுந்ததை இந்திரன் நோக்கினான். இருகைகளிலும் கூருகிர்கள் எழ அலறியபடி அங்கே எழுந்த பிறிதொரு ரக்தபீஜனைக்கண்டு அவன் உள்ளமர்ந்த சிறுவன் உவகைகொண்டு கூவியபடி எழுந்தான். “இதோ நான் என்னை கடந்தேன். இதோ செய்யலாகாததை செய்தேன். இதோ நான்.”

ஆம், அது உண்மை. அவன் பெருகுபவன். இதோ நான் இருவரையும் வெல்லவிருக்கிறேன். தன் ஆயிரம் விழிகளை இருபகுதிகளாகப் பிரித்து இருவரையும் நோக்கி நின்று இந்திரன் போரிட்டான். இருபக்கங்களிலும் நின்று கைகளை விரித்து படைகளை ஏவியபடி ரக்தபீஜன் எதிர்கொண்டான். இதோ இருவர். என் கை படைத்தவன் இவன். இந்திரன் அப்போது அறிந்தான், மீண்டுமொருவனை உருவாக்காது அமையாது தன் உள்ளம் என. இவன் என் ஆக்கம். என் கையால் ஆயிரம் அசுரர்களை உருவாக்க என்னால் முடியும். அவர்களை அழித்து முன்செல்லும் வல்லமையும் எனக்குண்டு. இந்த ஆடலை நடத்தாமலிருக்க என்னால் முடியாது. தொடங்கிய எவராலும் இதை நிறுத்த இயலாது. தொடங்காமலிருக்கவே எவராலும் இயலாது. தெய்வங்களாலும்!

அவன் வாள் பட்டு உதிர்ந்த துளிகளில் இருந்து ரக்தபீஜர்கள் எழுந்தனர். அவர்கள் பெருகப்பெருக இந்திரன் உள்ளத்தில் களிப்பும் அச்சமும் வளர்ந்தது. அச்சமே களிப்பாவதன் முடிவற்ற மாயம். ஆட்டிவைக்கும் தெய்வங்களின் சூழ்ச்சி. ‘நிறுத்திக்கொள்! இதுவே எல்லை, போதும்’ என அவன் உள்ளத்தின் ஆழம் பதறி குரலெழுப்பியதை அவன் அயலான் என கேட்டுக்கொண்டிருந்தான். ‘இன்னும் ஒரு துளி. இதோ இந்தத் துளியுடன் முடிப்பேன். மேலும் ஒரு சிறு துளி’ என அவன் விழைவுள்ளம் முன் சென்றபடியே இருந்தது.

ஒரு தருணத்தில் நிழலெழுந்து சூழ்ந்ததுபோல தன்னைச்சுற்றி பலநூறு ரக்தபீஜர்களை அவன் கண்டான். ஆயிரம் விழிகளுக்குமுன் பல்லாயிரம் உருவம் கொண்டான் ரக்தபீஜன். அச்சம்கொண்டு மெய்சிலிர்த்து கைசோர்ந்தபோது ஒரு தினவுபோல மேலும் ரக்தபீஜர்கள் எழட்டும் என்னும் விழைவு அவனில் ஊறியது. குருதிவழிய தசையைக் கிழித்து உடலை பிடுங்கி வீசுவதுபோன்ற பேருவகை அவனை சொக்கச்செய்தது. அவன் பதறி நோக்கி நின்றிருக்க அவனில் பிறிதொருவன் எழுந்து சிரித்தான். அவன் கையிலிருந்த வாளும் மின்படையும் ரக்தபீஜன் உடலில் புண்பெருக்கி அசுரர்களை விரித்துப் பரப்பிக்கொண்டிருந்தன.

பின்பு அவன் தன்னை உணர்ந்தபோது பெரும்படையெனச் சூழ்ந்து இருளாகி வான்நிறைத்து இடியோசை பெருக்கி நின்றிருந்த பல்லாயிரம் ரக்தபீஜர்களை கண்டான். அவன் ஆயிரம் விழிகளும் அச்சத்தால் விழித்தன. இந்திரன் எனும் ஆணவம் முறியும் ஒலியை அவன் கேட்டான். மறுகணம் தன் மின்படையை வீசிவிட்டு ஐராவதத்திலிருந்து பாய்ந்து இறங்கி ஒரு சிட்டுக்குருவியென்றாகி சிறகடித்து திரும்பிப் பறந்தான்.

அவனை பிடிக்க வந்த கூருகிர்களின் காட்டில் வளைந்து நெளிந்து விரைந்தான். துரத்திய இருள்பெருக்கிலிருந்து தப்பி கூவியபடி அகன்று வானத்தின் அறியா இருள்மடிப்புகளுக்குள் சென்று மறைந்தான். அவனுக்குப்பின்னால் ரக்தபீஜர்களின் பெருக்கு பேரொலியுடன் அமராவதியை சூழ்ந்துகொள்வதை உணர்ந்தான். ரக்தபீஜர்களின் அலை வந்தறைந்து நகர கோபுரங்கள் சரிந்தன. மரங்கள் குடைசரிந்தன. முனிவரும் தேவகன்னியரும் எழுப்பிய அலறல் அவனை தொடர்ந்து வந்தது.

[ 9 ]

இருளில் ஒரு கரிக்குருவியென்றாகி ஒளிந்த இந்திரன் இன்மையென்றாகி வெறுமொரு எண்ணமென தன்னை உணர்ந்து பறந்து அகன்றான். ஒவ்வொரு தொலைவுக்கும் அவன் எண்ணி எண்ணி சிறுத்தபடியே சென்றான். ஏழு இருளடுக்குகளுக்கு அப்பால் சென்றபோது அவன் ஒரு சிறு கரும்பூச்சியாக மாறிவிட்டிருந்தான். சிறகுகளின் ரீங்காரமென்று மட்டுமே எஞ்சினான். தன் இசையால் அவ்விருள் வழியில் ஓர் இசைமீட்டலெனச் சென்ற நாரதரை எதிர்கொண்டான். கண்ணீருடன் சென்று அவர் கால்களைப் பணிந்து “இசைப்படிவரே, என் அரசும் கொடியும் குலமும் அசுரனால் கைப்பற்றப்பட்டன. நான் என் அச்சத்தாலும் இழிவாலும் துரத்தப்படுகிறேன். என்னை காத்தருள்க!” என்றான்.

“நிகழ்வன நிரைவகுத்துவிட்டன அரசே” என்றார் நாரதர். “அஞ்சற்க! அலகின்மை அன்னை என எழும் தருணம் கனிந்துள்ளது. அவளை எண்ணி தவமிருங்கள். அவள் நிகழ்க!” என்றார். அவரிடமிருந்து தேவியின் ஒலிவடிவமான ஸ்ரீம் என்னும் நுண்சொல்லை இந்திரன் பெற்றான். அதை தன்னுள் நிரப்பினான். உள்ளும் புறமும் அவ்வொலியே நிறைய அவன் முற்றழிந்தான். அச்சொல் மட்டுமே என எஞ்சினான். அதன் ஒளியிலிருந்து மீண்டும் எழுந்தபோது தன் உடல் சுடர்விடுவதை கண்டான். தன் ஒளியை ஏற்று சூழ்ந்திருந்த இருள்முகில்கள் பருவடிவம் கொள்வதை அறிந்தான். அவற்றில் எதிரொளித்துத் தெரிந்த தன்னுரு முலைமாறா குழந்தையுடையதாக இருக்கக்கண்டு “அன்னையே!” என வீரிட்டான். அவ்வொலி கைக்குழந்தையின் அழுகையென ஒலித்தது. அவன் பாய்ந்தெழ முயல திருந்தா அசைவுகளுடன் குழவியுடல் ததும்பியது.

அவ்வொலி கேட்டு எழுந்த எதிர்வினை என அருகே மெல்லிய கொஞ்சல்குரல் ஒன்று கேட்டது. பொருளிலா சொல்கொண்ட அன்பின் மெல்லொலி. அவன் தலைதிருப்பி நோக்கி உளம் மலர்ந்து புன்னகைத்தான். கைகளை விரித்தபடி ‘தா தா’ என்று தாவினான். அவனருகே குனிந்த ஒளிகொண்ட பெண்முகம் கண்கனிய இதழ்விரிய சிரித்து “என்ன? என்னவேண்டும் என் அரசனுக்கு?” என்றது. “ம்மா ம்மா” என்று அவன் எம்பினான். அவள் அவனை அள்ளி எடுத்து தன் மென்முலைகளுக்குமேல் அணைத்துக்கொண்டாள். கண்கள் சொக்கி புதைந்து அவன் முனகினான். தன்னைமறந்து துயிலத் தொடங்கினான். அவன் தலையின் புன்மயிரை வருடியபடி அன்னை அவனை மடியிலமர்த்தி தாலோலமாடினாள்.

அவன் துயிலுக்குள் அவள் குரலில் எழுந்த தாலாட்டை கேட்டுக்கொண்டிருந்தான். ஏழுலகென புடவியென இயல்பவை அனைத்தையும் அவனுக்கென அள்ளிக்கொடுப்பதாக சொன்னாள் அன்னை. அவனை முனிபவரை எல்லாம் அவள் தண்டிப்பதாக கூறினாள். அவன் அன்னையே அன்னையே என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவள் இருமுலைகளின் கருங்காம்புகளை அன்றி பிறிதெவற்றையும் அவன் விழையவில்லை. அவள் அவனை அணைத்து முலைமொட்டுகளை இதழிலமைத்தாள். இனிய அமுதை கடைவாய் நுரைத்துவழிய அவன் உண்டான். கால்விரல் சுழித்து, கைகள் சுருட்டி ஆட்டி மெல்ல முனகியபடி அச்சுவையிலாடி அரைத்துயிலில் இருந்தான். பின்பு விழித்துக்கொண்டு அண்ணாந்து அவள் புன்னகையையும் விழியொளியையும் கண்டு சிரித்தான்.

ஊற்றறியாத துயர் அவனுள் எழ அவன் முகம் சுளித்து அழத்தொடங்கினான். அன்னை அவனை அருகே தூக்கி “என்ன? என்ன வேண்டும் என் செல்லத்திற்கு? ஏன் இந்தக் கண்ணீர்?” என்றாள். “யாரடித்தார் சொல்லி அழு. என் கண்ணே. எவர் முனிந்தார் சொல்லி அழு” என்றாள். அவன் சிற்றிதழ்கள் கோணலாயின. அவள் மடி அவன் விழிநீரால் நனைந்தது. அவன் சொன்ன ஒற்றைச்சொல்லில் இருந்து அன்னை அனைத்தையும் உணர்ந்தாள். அவள் உடலில் எட்டு கைகள் படைக்கலங்கள் கொண்டு எழுந்தன. அவள் செம்பொன்னிறப் பட்டாடையின் முந்தானை உறுமும் சிம்மம் என முகம்கொண்டு உடல்கொண்டு எழுந்தது. அவள் விழிகளின் சினம் சிவந்து கனன்றது. வெறிகொண்டு எழுந்து சிம்மம் மேல் அமர்ந்தாள். “செல்க!” என்று ஆணையிட்டாள்.

சிம்மம் மீதேறி அன்னை அமராவதிமேல் போருக்கெழுந்தாள். அப்போரை பார்க்க தேவர்கள் விழிகள் விரித்து வான்வெளியில் நிறைந்தனர். மூன்று முதற்தெய்வங்களும் புன்னகையுடன் எழுந்து வந்தனர். தவத்தில் மூழ்கிய யோகியர் அதை தங்கள் சித்தப்போராக அறிந்தனர். மண்ணில் கவிஞர் அதை புல்லிலும் புழுவிலும் புள்ளிலும் எங்கும் நிகழ்ந்த சமர் எனக் கண்டனர். சொல்லிலும் கல்லிலும் அதை பொறித்தனர் கலைஞர்.

 [ 10   ]

அமராவதியில் ரக்தபீஜன் அரசமாளிகையில் இந்திரனை வென்ற பெருஞ்சினம் உடலெங்கும் ததும்ப நிலையழிந்திருந்தான். விஸ்வகர்மன் அமைத்த பொன்மாளிகையின் அறைகள் தோறும் முட்டிமோதினான். உப்பரிகைகளில் நின்று பிளிறினான். நகரத்தெருக்களில் அலைந்தான். தளர்ந்து சற்றே அமர்ந்து கண்ணயர்கையில் தன்னைத்திறந்து வெளியேறி தன்னைச்சூழும் பல்லாயிரம் ரக்தபீஜர்களை கண்டான். விழித்துக்கொண்டு நீள்மூச்சுடன் சூழலை உணர்ந்து ஒரு கணம் வெறுமையில் அமர்ந்தான். உடனே உள்ளே எழுந்த பெருஞ்சினத்தால் கைகளை நிலத்தில் ஓங்கி அறைந்து அலறியபடி எழுந்தான். எதிர்வந்தவர்களை எல்லாம் கூர்நகங்களால் கிழித்தபடி கொந்தளித்து சுற்றிவந்தான். மீண்டும் களைத்து விழுந்து உள்ளம் மயங்கும்போது நிழல்கள் எழுவதுபோல ஓசையின்றி தன்னை வந்துசூழ்ந்த ரக்தபீஜர்களின் உருவங்களை கண்டான். கூச்சலிட்டபடி எழுந்து கைவிரித்து நின்று அவற்றை எதிர்கொண்டான்.

பாவை ரக்தபீஜர்கள் சினமற்றவர்களாக இருந்தனர். அவர்களின் விழிகள் அவன்மேல் பதிந்திருக்க உகிர் கூர்ந்த கைகளை விரித்து செஞ்சடைப்பிடரி சிலிர்க்க சற்றே தலைதாழ்த்தி குருதிவாய் திறந்து வெண்பற்களைக் காட்டி உறுமியபடி அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்கள் மேல் பாய்ந்து அறைந்து கிழிக்கத் தொடங்கினான். அவனை அவர்களின் உகிர்கள் கிழிக்க அப்புண்களின் குருதியிலிருந்து அவர்கள் மேலும் மேலும் பெருகினர். தன்குருதியில் அவன் கால்வழுக்கி விழுந்தான். அவ்விழுக்கில் புழுவென நீந்தித் திளைத்து எழுந்தான். மீண்டும் சறுக்கிவிழுந்தான். அவன் உடல்மேல் கவிந்த அவர்கள் பெரும்பசியுடன் உறுமியபடி அவன் ஊனைக்கிழித்து உண்டனர். ஒருவரோடொருவர் முண்டி மோதி ஊனை பிடுங்கினர். சீறி கைதூக்கி ஊனுக்காக பூசலிட்டனர். அவன் நெஞ்சக்குலைபிடுங்கிய ரக்தபீஜன் ஒருவன் இளித்தபடி அதில் வழிந்த ஊனை நக்கினான்.

அஞ்சி எழுந்து அவன் ஓடி அரண்மனை உப்பரிகைக்கு வந்தபோது நகரெங்கும் நிறைந்திருந்த எக்காள ஒலியை கேட்டான். நூறாயிரம் முரசுகளின் ஓசை. எவருடைய போர்முரசு அது என்று அவன் செவிகூர்ந்தான். “அமைச்சரே! எவர் கொண்டுவரும் படை அது?” என்று கூவினான். இறங்கி ஓடி அரண்மனைக் கூடத்திற்கு வந்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஏவலரும் காவலருமெல்லாம் கண்ணயர்ந்திருப்பதையே கண்டான். அவர்களை உதைத்தும் உலுக்கியும் எழுப்ப முயன்றான். இன்னிசை கேட்டு முகம் மலர்ந்தவர்களாக அவர்கள் துயின்றனர். அன்னை தாலாட்டில் மயங்கிய மகவுகள் போல. செய்வதறியாது அவன் அரண்மனையிலிருந்து இறங்கி முற்றத்திற்கு ஓடினான். அங்கும் அனைவரும் துயின்றுகொண்டிருந்தனர். அந்நகரில் அவனன்றி எவரும் விழித்திருக்கவில்லை.

திரும்பி தன் அறைக்கு வந்த ரக்தபீஜன் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு போருக்கு கிளம்பினான். அவனுக்கென அமைக்கப்பட்ட நூற்றெட்டு வெண்புரவிகள் கொண்ட வெள்ளித்தேர் கொட்டிலில் சித்தமாக இருந்தது. அதில் ஏறிக்கொண்டு அவன் போருக்கு கிளம்பினான். அவன் பாதைக்குக் குறுக்காக கரியகுருவி ஒன்று கூவியபடி இடமிருந்து வலமாக பறந்தது. தீயநிமித்தம் கண்டு அவன் ஒருகணம் கடிவாளத்தை இழுத்தான். பொன்னிறச்சிறகுள்ள குருவி ஒன்று வலமிருந்து இடமாக பறந்தது. நன்னிமித்தம் கண்டு முகம் மலர்ந்து அவன் படைக்களம் சென்றான்.

தொலைவிலேயே இளஞ்சூரியன் எழுந்ததுபோல வானத்தில் செவ்வொளி எழுந்திருப்பதை அவன் கண்டான். “செல்க! செல்க!” என்று அவன் தன் புரவிகளை விரையச்செய்தான். “இதோ இதோ” என ஏன் தன் உள்ளம் துள்ளுகிறது என்று அவன் அறியவில்லை.

முந்தைய கட்டுரைதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்
அடுத்த கட்டுரைகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள்