ஒருங்கிணைவின் வளையம்

 

Belavaadi[பிரசாத் பரத்வாஜ், காங்கோ மகேஷ், மது]

கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள ஆலயங்களில் முதன்மையானவை பேலூர் , ஹளபீடு இரண்டும்தான். அவை கோயில்களே அல்ல, கல்லில் செதுக்கப்பட்ட நகைகள். சிற்பங்களையே வைத்து கட்டப்பட்டவை

அவற்றிலிருந்து பெலவாடி ஆலயம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே ஆலயத்துக்கு வெளியே சிற்பங்களே இல்லை. ஆனால் அங்குள்ள முகமண்டபம் ஒரு பெரும் கலைச்சாதனை. கல்யாணிச்சாளுக்கியர் காலம் முதல் உருவாகி வந்த ஓர் ஆலய அமைப்பு தட்டுகளையும் குடங்களையும் மேலே மேலே அடுக்கி வைத்ததுபோன்ற அமைப்புள்ள தூண்கள். அத்தகைய தூண்களுக்குமேல் தாமரை மலரைக் கவிழ்த்து வைத்ததுபோல உட்குடைவான கூரை இருக்கும். தூண்கள் நன்கு தீட்டப்பட்டு கண்ணாடிபோல அவை ஒளிவிடும். ஹொய்ச்சாள கோயில் மண்டபங்களை மட்டுமே ஒருவன் வாழ்நாள் முழுக்கப் பார்க்கலாம்.

ஹொய்ச்சாளபாணி மண்டபத் தூண்களின் மிகச்சிறந்த வடிவம் பெலவாடி ஆலயத்தின் முகப்பில்தான் உள்ளது. நான்குபக்கமும் திறந்த சாளரங்கள் தூண்களில் வளைந்து வளைந்து தெரிய நாம் ஒரு மண்டபத்தைப்பார்க்கிறோமா அல்லது குளிர்ந்த தடாகத்தைப் பார்க்கிறோமா என்ற வியப்பு ஏற்பட்டது. மெய்மறந்தவர்களாக அந்த மண்டபத்திலேயே சுற்றிவந்தோம். தூண்களில் பட்ட காற்றே குளிராக இருந்தது

கடையப்பட்டு உலோகத்தை விட மின்னும் அளவுக்கு ஆக்கப்பட்ட இத்தூண்கள்  கரிய சுடர்கள் போல நின்று கொண்டிருந்தன. எத்தனை. கருமையின் இருளின் ஒளி. ஒரு கணத்தில் அத்தனை கரிய வளைவுகளிலும் மண்டபத்தின் திறப்புகள் வெவ்வேறு சிறிய ஓவியங்களாக தெரிவதைக் கண்டேன். ஒரு மாபெரும் யாழ் என மனம் எழுச்சிகொண்டது. அம்மண்டபம் ஒரு தளிர் என்று மீண்டும் பொங்கியது.. ஒவ்வொரு தூணும் ஒரு பனித்துளியென ஒருகணம் தோன்றியது. ஒரு கருமுத்து என பிறிதொரு கணம் தோன்றியது.

மண்டபத்தின் அடிப்பக்கங்களில் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி நிற்பது போல யானைகள் சரமாக கோர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் விளிம்புகள் எல்லாம் சாய்ந்து அமரும் இருக்கைகள் மூன்று அடுக்குகளாகச் செல்லும் அமைப்பு கொண்டது இவ்வாலயம் முதல் பகுதியில் கண்ணைப் பறிக்கும் கருங்கல் தூண்களின் மண்டபம். இரண்டாவது பகுதியில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களுடன் பூச்செண்டுகள் போல அமைந்த தூண்களால் ஆன இரண்டாவது மண்டபம். அதன்பின்னர். கருவறை.

 

கருவறையில் வீர நாராயணர் சிலை நின்ற கோலத்தில் உள்ளது . ஹொய்ச்சாள கோயில்கள் திரிகுடாச்சலம் என்னும் அமைப்புள்ளவை. மூன்றுகருவறைகள் ஒரே மண்டபத்தை நோக்கி அமைந்திருக்கும். பெலவாடியின் மூன்று கருவறைகளிலும் உள்ள வீரநாராயணர், கோபால கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர் மூன்று சிலைகளும்தான் பயணத்தில் நாங்கள் பார்த்தவற்றிலேயே பேரழகு மிக்கவை என்று சொல்லலாம்.

கன்னங்கரிய பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள். வணங்கும் நமது பிம்பம் பெருமாளின் கன்னங்களில் பிரதிபலிக்கும். மூக்குவளைவும் நெற்றியுமெல்லாம் சிறிய சுடர்களாகத் தெரியும். கல்லில் சருமத்தின் உயிர். நடன அசைவின் ஒரு தருணம். கிருஷ்ணனின் கைகளின் குழைவை கால்கெண்டைச்சதையின் பிதுங்கலை பார்த்துப்பார்த்து தாகம் அடங்காது

கி.பி.1200ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளர் ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மைந்தனின் காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த ஆலயம். நாங்கள் செல்லும்போது பக்தர்கள் என எவருமே இல்லை. ஒரு பழைமையான அக்ரஹாரத்தின் நடுவே சென்றகாலத்தில் நிற்பதுபோலத் தெரிந்தது

நாங்கள் வந்ததை அறிந்து அருகே வீட்டில் இருந்து பூசாரி ஓடிவந்தார். அழகான இளைஞர். மூன்று கருவறைகளுக்கும் அழைத்துச்சென்று தெய்வ உருவங்களைக் காட்டினார். நரசிம்மருக்கு மட்டும் அர்ச்சனைசெய்து தீபமும் மலரும் அளித்தார். “சொல்லணுமா?” என்றார். “ஆம், ஆனால் தமிழில் சொல்லவேண்டும்” என்றேன். “என்கு கொஞ்ஞ்சம் தமிழ் தெரியும்” என ஆரம்பித்து சொல்லத்தொடங்கினார்

வழக்கமாக அர்ச்சகர்கள் சொல்வதுபோல வெறும்புராணங்களாக இல்லை அவர் சொன்னது. ஆலயத்தின் வரலாறு. கோயிலின் சிற்ப அமைப்பு. மூலச்சிலைகளின் தனித்துவம். அவரை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. பெயர் பிரசாந்த் பரத்வாஜ். சம்ஸ்கிருதம் கற்று விசிஷ்டாத்வைதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆலயம் கர்நாடக அரசின் பொறுப்பில் என்றாலும் நிர்வாகம் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தது என்றார்

சிருங்கேரி மடம் அப்பகுதியிலுள்ள பல இடிந்த ஆலயங்களை பேணி வருகிறது என்றார் பிரசாந்த். பல ஆலயங்களுக்கு பக்தர்களும் இல்லை, சுற்றி வீடுகளும் இல்லை. சிருங்கேரிமடம் இல்லையேல் அந்த ஆலயங்கள் முழுமையாகவே கைவிடப்பட்டிருக்கும் என்றார். வைகானச ஆகப்படி பூசை நடக்கும் வைணவ ஆலயம் அது,

நான் அவருக்கு பணம் கொடுத்தபோது ஒரு நோட்டை எடுத்து “எனக்கு போதுமான அளவு சம்பளம் உண்டு. மேலும் இது முக்கியமான கோயிலாகையால் நிறையபேர் வருவதுண்டு. கொஞ்சநாளுக்கு முன்னால் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூட வந்திருந்தார். ஆனால் இப்பகுதியின் பெரும்பாலான ஆலயங்களில் பூசைசெய்பவர்களுக்கு சாப்பாட்டுக்கு தேவையான அளவுக்குக் கூட வருமானம் இல்லை. நீங்கள் அவர்களுக்காகக் கொடுக்கலாமே” என்றார்.

எங்களுடன் வந்த ஒருவருக்கு ஐயம். சிருங்கேரி மடம் சங்கர மடம் அல்லவா? சைவர்கள் ஏன் வைணவத்தை பேணவேண்டும்? நான் அதற்கு சற்று விளக்கமாகவே பதில் சொன்னேன். சங்கர மடங்கள் ஆதிசங்கரரின் மரபைச் சேர்ந்தவை. எட்டாம்நூற்றாண்டில் சங்கரர் பிறந்தபோது பௌத்தத்தின் ஆதிக்கம் இந்தியா முழுக்க இருந்தது. தத்துவதளத்தில் பௌத்தத்தின் பல கேள்விகளுக்கு வேதாந்த மரபில் பதில் இல்லாமலிருந்தது

மேலும் அன்று இந்துமதம் ஒருங்கிணைந்ததாக இருக்கவில்லை. சங்கரர் சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், சௌரம் ,கௌமாரம் என்னும் ஆறு இந்துமதப்பிரிவுகளையும் தத்துவார்த்தமாக ஒன்றாக்கினார். அதன் மையத்தில் வேதாந்தத்தை அமைத்தார். அதைக்கொண்டு நூற்றெட்டு விவாதசபைகளில் அவர் பௌத்தர்களை வென்றார். ஆகவே அவர் சர்வக்ஞர் என்று புகழ்பெற்றார்.

பின்னர் பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்தியாமேல் ஆப்கானிய சுல்தான்கள் படைஎடுத்து வந்தனர். ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இந்துமத அமைப்புகள் சிதறின. சங்கர மரபைச்சேர்ந்த சிருங்கேரி மடத்தின் தலைவரான வித்யாரண்யர் ஆறுமதங்களின் பூசாரிக்குலங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றை அமைப்பாக ஆக்கினார். ஆறுமதங்களையும் பின்பற்றிய அரசர்களை ஒன்றாக இணைத்து அவர்களை ஹரிஹரர் புக்கர் என்னும் இரு அரசர்களின் தலைமையில் அணிவகுக்கச்செய்தார். அவர்கள் விஜயநகரம் என்னும் அரசை உருவாக்கினர்.

நானூறாண்டுக்காலம் தென்னிந்தியாவில் இந்துமதத்தையும் ஆலயங்களையும் காப்பாற்றியது விஜயநகரம்தான். விஜயநகரத்தின் ஆன்மீகமான வழிகாட்டியாக இருந்தது சிருங்கேரி மடம். அக்காலத்தில் ஆலயங்களெல்லாம் சிருங்கேரி மடத்தின் பொறுப்புக்கு வந்தன. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பெரும் பஞ்சங்களிலும் சிருங்கேரிமடம் ஆலயங்களை பாதுகாத்தது .பெலவாடி பதிமூன்றாம் நூற்றாண்டில் மாலிக் காபூரால் உடைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் நாயக்கர்களால் கட்டப்பட்டது.

பிரசாந்த் எங்களை உள்ளே அழைத்துச்சென்று மூலவரைக் காட்டினார். இருகைகளிலும் சங்கும் சக்கரமும் ஏந்தி பெருமாள் நின்றிருந்தார். முன்னாலிருந்த கை அருள்புரிமுத்திரை கொண்டது என்று நான் நினைத்திருந்தேன். ”இல்லை நன்றாகப்பாருங்கள், சிங்கத்தின் நகங்கள்போல கைவிரல்கள் நீண்டு உள்ளன. இதற்கு வியாஹ்ர முத்திரை என்று பெயர். சிங்கமுத்திரை. ஆகவேதான் இவர் வீரநாராயணர்” என்றார் பிரசாந்த்

நான் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு பெருமாளை பார்த்ததே இல்லை. பிரசாந்த் புன்னகையுடன் “ஆதிசங்கரர் பௌத்தர்களை வாதத்தில் தோற்கடித்தார் அல்லவா?” என்றார் “ஆம்” என்றேன். “இதோபாருங்கள், பெருமாளின் தலையைச் சுற்றியுள்ள பிரபா வலையத்தில் பத்து அவதாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மச்சம், கூர்மம், வராகம்,நரசிம்மம், வாமனன், ராமன், பலராமன்,கிருஷ்ணன், பத்தாவதாக கல்கி. ஒன்பதாவது அவதாரம் என்னவென்று பார்த்தீகளா?”

நான் வியந்து நின்றுவிட்டேன். அது புத்தர். “புத்தரா?” என்றேன். “ஆம், புத்தரேதான். அவரையும் பெருமாளின் அவதாரமாக நினைத்திருக்கிறார்கள்.” என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. “ஞானத்தில் எதிரிகள் இல்லை. எதிர்த்தரப்பு மட்டுமே உண்டு. ஞானம் முழுமையடையும்போது எல்லா தரப்புகளும் ஒன்றேயாகிவிடும்” என்றார் பிரசாந்த்

நான் கிளம்பும்போது கேட்டேன். “பிரசாந்த் நீங்கள் ஏன் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகக் கூடாது?” அவர் சிரித்து “ஆம், எல்லாரும் கேட்பதுண்டு. இந்தச்சின்ன ஊரைவிட்டுச்சென்று பத்துமடங்கு சம்பளத்தில் ஏன் பேராசிரியராக வேலைசெய்யக்கூடாது என்று. இதைவிட குறைவான வருமானத்தில் என் முன்னோர் இந்தக்கோயிலை ஒருவேளைகூட பூசை நின்றுபோகாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். இப்போது எனக்கு என்ன குறை?”

 

முந்தைய கட்டுரைஅர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்