அர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்

1

ஜெ ,

கோவில் அர்ச்சகர்களைப் பற்றிய உங்கள் கோபம் நியாயமானதே ,

ஆனால் வீட்டின் உருப்படாத பிள்ளை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கப்படுவது போலத்தானே தமிழக கோவில் அர்ச்சர்களும் அந்த பணிக்கு வருகின்றனர்?

அவர்களின் இன்றைய நிலைக்கு அவர்களா காரணம் , கேரள அர்ச்சகர்கள் எல்லாம் “பட்டரில் பெட்டனில்லை” என கம்பீரமாகத்தான் இருக்கிறார்கள் :)

ஆனால் எதையும் போராடிப்பெறும் ஜனநாயக வலிமையின்மையும்் ,  ஒதுங்கிப்போகும் தன்மையும் சமூகத்தின் கடைக்கோடி ஆட்களாக ஆக்கிவிட்டது ,

ஆனாலும் அவர்கள்தானே இன்றைக்கும் ஆலயங்களை அழியாமல் காக்கிறார்கள் ? இதைகுறித்து அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் ஆகலாமா விவாதத்தின்போது நீங்கள் முன்வைத்த கருத்துக்களை அவசியம் எழுதக்கோருகிறேன் .

இங்கனம்

கோவிலகளை கட்டிய பரம்பரையில் இருந்து :)

அரங்கா

 

 

32

போஜராஜனின் சபையில் யார் சிறந்த கவிஞர் என்ற பொட்டு வந்தது. தீர்ப்பு சொல்ல காமாக்‌ஷி தேவியே அழைக்கப்பட்டாள். தேவியோ, தண்டியும், பவபூதியுமே சிறந்த கவிஞர் என்று தீர்ப்பு சொன்னாள். ஆத்திரமடைந்த காளிதாசன், ‘அப்ப நான் யாரடி?’ என்று கேட்டான். அதற்கு தேவி, அமைதியாக ‘நான்தான் நீ, நீதான் நான்’ என்றாள். இது ஶ்ரீ மூக பஞ்சஸதீக்குப்பின் கூறப்படும் கதை.

பாரத மாதாவிடம் ஒவ்வொரு இந்தியனும் ‘அப்ப நான் யாரடி?’ என்று கேட்கலாம். பாரத மாதாவும் சொல்வாள் – ‘நான்தான் நீ, நீதான் நான்

ஸ்ரீதர் திருச்செந்துறை

 

அன்புள்ள ஜெ

சரித்திரத்தைப்பற்றிய உங்கள் கட்டுரை முக்கியமானது. இன்று நடப்பது சரித்திர ஆய்வுகளே அல்ல. மூன்றுவகைச் சரித்திர ஆராய்ச்சிகளே இன்றைக்கு நடக்கின்றன. முதல்வகை சாதி சரித்திரம். எந்த வகையான ஆதாரங்களும் இல்லாமல் சரித்திரத்தை விளக்கி சாதிமேன்மை பேசுகிறார்ர்கள். விவாதமே கிடையாது. பேசினால் அடிதான். போலிச்சரித்திரம். பொல்லிச்சரித்திரபுருஷர்கள் உருவாகிறார்கள். இன்னொன்று முற்போக்குச் சரித்திரம். இந்தியாவின் பாரம்பரியம் ஒட்டுமொத்தமாகவே சாதிவெறியும் பிற்போக்கும்தான், எல்லாமே ஐரோப்பாவிலிருந்து கடன்வாங்கியது என்பதுதான் இது. அதற்காக எதையும் திருத்துவார்கள். மூன்றாவது , வேதகாலத்திலேயே ராக்கெட் இருந்தது, வேதகால ரிஷிகளுக்கு புரோஸ்ட்ரேட் ஆப்பரேஷன் செய்யப்பட்டது என்பது மாதிரியான ஆராய்ச்சிகள்

உண்மயான ஆராய்ச்சிகள் உண்டு. அவற்றுக்கு நாளிதழ்களிலே இடம் கிடைக்காது

ஸ்ரீனிவாசன் வரதராஜன்

 

ஜெ

அர்ச்சகர்களின் தரம் பற்றியும் நம் ஆலயங்கள் பேணப்படுவதைப்பற்றியும் நீங்கள் எழுதியது உண்மை. பலகாலமாகவே எழுதிவருகிறீர்கள்.சிறந்த முறையில் பணியாற்றும் அர்ச்சகர்களைப்பற்றி நெகிழ்ந்தும் பாராட்டியும் எழுதியிருப்பதனால் இப்படி எழுதும் தகுதியும் உங்களுக்கு உண்டு. அதற்கான காரணமும் சொல்லிவிட்டீர்கள். அர்ச்சகர்களுக்குப் போதிய சம்பளம் இல்லை. மிகக்குறைந்த சம்பளத்துக்கு தகுதியானவர்கள் வருவதில்லை. ஆனால் அர்ச்சகர்களுக்கு சம்பளம்கொடுக்க அரசிடம் பணம் வேண்டுமே. ஆலயச்சொத்துக்கள் அழிந்துவிட்ட நிலையில் என்னதான் வழி?

முருகதாஸ் ராமசாமி

 

அன்புள்ள முருகதாஸ்

கேரள ஆலயங்களில் அர்ச்சகர்கள் இடைநிலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் பெறுகிறார்கள். ஆலயத்தில் அதிகாரிகளுக்கு முதல்நிலை சம்பளம் கொடுக்கப்படும்போது அர்ச்சகர்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது?

கேரளத்தின் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான பணம் சபரிமலையிலிருந்தே வந்துவிடும் என்கிறார்கள்.பழனியும் திருச்செந்தூரும் சீரங்கமும் அளிக்கும் பணம் \போதும் அத்தனை அர்ச்சகர்களுக்கும் உயரதிகாரிகளுக்கு நிகரான சம்பளம் அளிக்க

ஆலயங்களைச் சுரண்டுவது மக்கள் மட்டும் அல்ல, முதன்மையாக அரசு. ஒரு மதச்சார்பர்ற அரசு ஆலயச்சொத்துக்களை, காணிக்கைகளை திருடி கஜானாவை நிரப்பி அவற்றை பராமரிக்காமல் கைவிடுவது அராஜகம், வேறொன்றும் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22
அடுத்த கட்டுரைஒருங்கிணைவின் வளையம்