அந்த மாபெரும் வெள்ளம் – குறித்து…

images

அன்பு ஜெயமோகன்,

அந்த மாபெரும் வெள்ளம் குறித்து எழுத்தாளர்கள் என்றில்லை; எல்லோருக்குமே குறிப்பிட்ட பருவம் கடந்ததும் ஒரு சோர்வு வந்துவிடுகிறது. அச்சோர்வு மிக இயல்பானது என்பது என் புரிதல். ஆனால், அச்சோர்விலேயே அமிழ்ந்திருத்தல் என்பதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. சமீபமாய், முப்பதைக் கடந்த சிலரிடமே அச்சோர்வைக் காண்கிறேன். இது எதனால் ஏற்படுகிறது என்பது பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி தேவையில்லை. ”ஏதோ ஒன்றை நம்பிச்செயல்பட்டோம். அது நினைத்தபடியே நடக்கவில்லை அல்லது வேறுதிசையில் நகர்த்திச் சென்றுவிட்டது” எனும் உள்ளப்பொருமலே மனச்சோர்வுக்குக் காரணமாய் இருக்க முடியும். சிறுவயதிலிருந்து இலட்சியவாதத்தைச் சுட்டியே நாம் வளர்க்கப்படுகிறோம். பள்ளி, கல்லூரிகளில் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி என்பது மருந்துக்கும் இல்லை. இலட்சியவாதம் என்பது முழுக்க முழுக்க புறவயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவே பல ஆண்டுகளை நாம் பலிகொடுத்தாக வேண்டி இருக்கிறது.

இலட்சியவாதமே தவறு என்பதான தோற்றம் என் கருத்தில் தொனிக்கலாம். அதைக் கொண்டு இலட்சியவாதமே தவிர்க்கப்பட வேண்டியது அல்லது புறக்கணிக்கப்பட வேண்டியது என நான் சொல்வதாக அர்த்தம் கற்பித்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்கும், சமூகத்துக்குமான உறவை மையப்படுத்திய இலட்சியவாதம் எப்போதும் பயனுள்ளதே. உங்களைத் தவிர்த்து, சமூகத்தை மட்டுமே மையப்படுத்திய இலட்சியவாதம் ஒருபோதும் பயன்தராது. ”உதவி தேவைப்படுபவருக்கு நான் உதவுவேன். பிறர் உதவுகின்றனரா என்பதைப் பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை. அதாவது, அறத்தை நான் முடிந்தவரை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்பது நான் குறிப்பிடும் முதல்வகை இலட்சியவாதம். “உதவி தேவைப்படுபவருக்கு எல்லோரும் உதவியாக வேண்டும். அதாவது, அறத்தை எல்லோரும் கடைபிடித்தாக வேண்டும்” என்பது இரண்டாம்வகையான இலட்சியவாதம். இரண்டாம்வகையையே நாம் இலட்சியவாதம் என அடையாளப்படுத்துகிறோம். அதனாலேயே, சிக்கலிலும் மாட்டிக்கொள்கிறோம்.

இலட்சியவாதம் என்பது அறிவியல் மற்றும் கணித விதிகளைப் போல் நமக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ’நேர்மையாய் இருந்தால் வணிகத்தில் வெற்றி பெறலாம்’ என்பதான இலட்சியவாதக்கருத்தை எடுத்துக் கொள்வோம். முழுக்க நேர்மையாய்ச் செயல்படும் ஒருவன் வணிகத்தில் தோற்றுப்போவதும், அதற்கு எதிர்மாறான ஒருவன் வணிகத்தில் வெற்றி பெறுவதும் யதார்த்தத்தில் இருக்கிறது. அப்படியானால், நேர்மை எனும் இலட்சியவாதத்தை முழுக்கப் புறந்தள்ளிவிடலாமா என யோசிக்கும்போது.. இப்படியும் பார்த்தாக வேண்டி இருக்கிறது. முழுக்க நேர்மையைக் கடைபிடிக்கும் ஒருவன் வணிகத்தில் பெருவெற்றி பெறுவதும், நேர்மையைக் கடைபிடிக்காத ஒருவன் வணிகத்தில் படுதோல்வி அடைவதும் யதார்த்தத்தில் இல்லாமல் இல்லை. ஆக, இலட்சியவாதத்தின் தேவையை பெளதீக வாழ்வோடு பொருத்திப்பார்ப்பதிலிருந்து முதலில் விடுபட வேண்டும். இலட்சியவாதம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அறத்தை அல்லது இயல்புவாழ்வை நினைவூட்டவானதே தவிர, நாம் நினைப்பது போன்று இறுக்கமானதோ, குழப்பமானதோ கிடையாது. சமூக மாற்றம் என்பது தனிமனிதலிருந்துதான் துவங்க வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். அவ்வகையில், இலட்சியவாதம் ஒரு தனிமனிதனுக்கான தூண்டுதலாக மட்டுமே இருக்கும்வரை அது விரக்தி தராது. மாறாக, சமூகமாற்றம் என்பதான தளத்தில் அது முன்வைக்கப்படும்வரை சிக்கல்கள் எழுந்து கொண்டேதான் இருக்கும்; நமக்குள்ளும் மனச்சோர்வு நிரம்பியே தீரும்.

தனிமனித அளவிலும் இலட்சியவாதம் ஓரளவே பயன்தரும். எதிர்கொள்ளும் சூழலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இலட்சியவாதத்தின் மீதான் பிடிப்பு குறையலாம் அல்லது அதிகமாகலாம். இரண்டையுமே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம்தான் அப்படி இருக்கத் தயங்குபவர்கள் ஆயிற்றே? உடனே, இலட்சியவாதமே சிறந்தது என்றோ அல்லது இலட்சியவாதமே போலியானது என்றோ முழக்கமிட்டுக்கொண்டு அதற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு மனநிலைக்குச் சென்றுவிடுகிறோம். இலட்சியவாத வலுக்கட்டாய ஆதரவு நிலையில் உள்ளவர்களே இன்று கட்சிகளையும், அமைப்புகளையும் நடத்துகின்றனர். இலட்சியவாத வலுக்கட்டாய எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களே இன்று ஆன்மீக யோகா மையங்களை நடத்துகின்றனர். இரண்டுமே இரு விளிம்புகள். சமூகத்துக்கு இரண்டையும் உள்ளடக்கியதாகவும், இரண்டில் இருந்தும் தள்ளி நின்று காணக்கூடியதாகவுமான மும்முனைகளும் அவசியம். இரண்டு குழுக்களாலுமே அது சாத்தியப்படப்போவதில்லை.

இப்போது படைப்பூக்கம் குறைந்துவிட்டதாகச் சொல்லும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன். படைப்பூக்கம் என்பதை ‘இலட்சியவாத ஊக்கம்’ என்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் வரை ஒரு எழுத்தாளருக்கு மனச்சோர்வு என்பது நிச்சயம் வந்தே தீரும். படைப்பூக்கம் எனும் வார்த்தைக்குப் பதிலாக் இயல்பூக்கம் எனும் வார்த்தையே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.  இயல்பூக்கம் இருக்கும்வரை ஒருவருக்கு நிச்சயம் மனச்சோர்வு வராது. அப்படியான மனச்சோர்வு எழும்பொழுதுகளையும் இயல்பூக்கம் கரைத்துச் சென்றுவிடும். எழுதுவதுதான் படைப்பூக்கத்தின் அடையாளம் எனும் பார்வையே தவறு என்பது என் சிந்தனை. சில நேரங்களில் எழுதாமல் இருப்பதும் படைப்பூக்கமே என நான் கருதுகிறேன். அதனால், எழுத்தை இயல்பாக அல்லது படைப்பூக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும் நிரந்தரச் சோர்வுக்கு ஆளாவதில்லை; அவ்வப்போது வரும் தற்காலிகச் சோர்வையும் அவர் சலித்துக் கொள்வதில்லை.

எளிய உதாரணம் ஒன்றைச் சொல்லலாம் எனப்பார்க்கிறேன். நடராச வடிவத்தில் தெரிவது நடராசனா, நடனமா எனக் கேள்வியை எழுப்பினால் மூன்றுவிதமான முதன்மைப்பதில்கள் கிடைக்கும். நடராசன் என ஒரு பதில்; நடனம் என ஒரு பதில். நடராசன் ஆடும் நடனம் என மற்றொரு பதில். இதில் ஒன்றுதான் சரி எனச் சொல்லி அதிலேயே விடாப்பிடியாய் நின்று சோர்வடைவது இலட்சியவாதம். ’மூன்றுமே பொருந்துகிறது என்பதோடு அதனுடனான அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்’ என்பதான யதார்த்தத்தைப் புரிந்து வைத்திருப்பதே ஆறாவது அறிவின் இயல்பூக்கம். அவ்வூக்கம் கொண்டவனை பெளதீக மனச்சோர்வு அவ்வளவாய் பாதிக்காது என்பது என் தீர்மானம். எவ்வளவு வயதாயினும் அவ்வியல்பூக்கம் ஒருவனை நிச்சயம் உற்சாகத்தில் வைத்திருக்கும். ”அளியில் விளைந்ததோர் ஆனந்தத்தேனை” என்பான் அருணகிரி. நீர்த்துப்போகாத ஆனந்தத்தேன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நாம்தான் கண்டுகொள்வதே இல்லை.

முருகவேலன்,

கோபிசெட்டிப்பாளையம்.

 

முந்தைய கட்டுரைசாக்தம், ஊட்டி குருகுலம்
அடுத்த கட்டுரைநான்கு அடிப்படை பேசுபொருட்கள்…