கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2

இருவகை பகுத்தறிவு இயக்கங்கள்

நாராயணகுரு மரபில் வந்த சுவாமி சிதம்பர தீர்த்தா அவர்கள் அவரது குருவான நடராஜகுருவைப்பற்றி நினைவுகளை எழுதியிருக்கிறார். நடராஜகுருவின் வகுப்புகள், வேடிக்கைக்கதைகள் என மிகச்சுவாரசியமான ஒரு நூல் அது. அதில் சில இடங்கள் எனக்கு விசேஷமான ஆர்வத்தை உருவாக்கின. நாராயணகுருவுக்கும் நடராஜகுருவின் அப்பாவான டாக்டர் பல்புவுக்குமான கருத்துமோதல்கள்தான் அவை.

டாக்டர் பல்புவுக்கு நாராயண குருவின் அத்வைதத்தில் ஈடுபாடில்லை. சில தருணங்களில் அவர் அதை ‘அய்யர்களின் சிந்தனை’ என்று இகழ்ந்தும் சொல்கிறார். அதைப்பற்றி நாராயணகுரு சிறிது வருத்ததுடனும் கேலியுடனும் நடராஜகுருவிடம் பேசுகிறார். நாராயணகுருவுக்கு அறிவியல் சிந்தனை குறைவு என அடிக்கடிச் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் பல்பு.

ஒரு சந்தர்ப்பம். குருவும் டாக்டரும் வற்கலை ஆசிரம வளைப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ’இங்கே இத்தனைபேர் வருகிறார்களே, இந்த கழிப்பிடத்தின் மூத்திரத்தை முழுக்க அப்படியே பக்கத்து வயல்களுக்கு கொண்டுசென்றால் தேவையான நைட்ரஜன் கிடைக்குமே. இதைக்கூட செய்யாமல் இருக்கிறோம். இங்கேயும் ஆசாரம் இருக்கத்தான் செய்கிறது, அறிவியல்நோக்கு இல்லை’ என்கிறார் பல்பு.

நாராயணகுரு ‘அப்படி விடக்கூடாது. அந்த வழக்கம் இல்லை. அதற்கு காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்’ என்கிறார். டாக்டர் பல்பு கடுமையாக வாதிடுகிறார். நாராயணகுரு அருகே நின்றிருந்த நடராஜகுருவை திரும்பி பார்க்கிறார். அப்போது அவர் நிலவியல் கற்ற முனைவர் நடராஜன்தான். நடராஜ குரு மென்மையாக ‘சிறுநீரை நேரடியாக விளைநிலத்தில் விடமுடியாது. தெவையில்லாத பாக்டீரியாக்கள் உருவாகலாம். தேவையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வழியாக நைட்ரஜன் வந்தால் மட்டுமே நிலம் ஆரோக்கியமாக இருக்கும்’என்றார். நன்றியுடன் நாராயணகுரு புன்னகை செய்தார்.

நான் இங்கே மூன்று தரப்புகளைக் காண்கிறேன். ஒன்று இந்திய மரபில் வேரூன்றியது, நாராயண குரு. இன்னொன்று மேலைமரபில் வேரூன்றியது , டாக்டர் பல்பு. இரண்டும் இரு முரணாற்றல்களாக முயங்கி ஒரு மத-சமூக சீர்திருத்த இயக்கமாக ஆகின்றன. அதன் விளைவாக உருவாகிறது மூன்றாவது தரப்பு, நடராஜகுரு. அது இந்திய சிந்தனையின் சாராம்சத்தை மேலைச்சிந்தனையின் சாராம்சத்துடன் இணைத்து புதிய ஒன்றை உருவாக்க முனைகிறது. ஆம்,நடராஜகுருவின் வாழ்க்கைச்சாதனையே அதுதான்.

இந்தியப் பகுத்தறிவு இயக்கத்தை இதேபோல இரு கருத்தியல் சரடுகளாக பிரித்துக்கொள்வது உதவிகரமானது. ஐரோப்பாவைப்போலவே இந்திய சிந்தனைமரபிலும் விரிவானதோர் ஆன்மீக மறுப்பு இயக்கம் உண்டு. இவற்றில் சார்வாகத்தை நாத்திகம் என்றும், சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் ஆகியவற்றை பொருள்முதல்வாத சிந்தனைகள் என்றும் சொல்லலாம். இவற்றில் சாங்கியத்தின் பல அடிப்படைகளை ஏற்றுக்கொண்ட தேரவாத பௌத்தமும் பொருள்முதல்வாத அடிப்படை கொண்டதே. இந்த இந்திய சிந்தனை மரபில் இருந்து மட்டுமே முளைத்துவந்த ஜடவாதம்/நாத்திகவாதம் எப்போதுமே இங்கே இருந்துவந்தது

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தமிழ்ச்சித்தர் மரபில் ஒரு பகுதி ஜடவாத/நாத்திகச்சார்பு கொண்டதாக இருந்தது. அவர்களிடமிருந்து ஜடவாதத்தைப் பெற்றுக்கொண்ட சித்தவைத்தியர்கள், ரசவாதிகள் தமிழகத்தில் இருந்தனர். ஆனால் தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டில் உச்சம் கொண்டு ஆயிரம் வருடம் கோலோச்சிய பக்தி இயக்கம் நாத்திகம் மற்றும் ஜடவாதத்தை வெறுத்து ஒதுக்கியதனால் இச்சிந்தனைகளுக்கு சமூக அங்கீகாரம் இருக்கவில்லை. அவை தனிநபர் சிந்தனைகளாக அந்தரங்கமாக புழங்கிவந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நாத்திகச்சிந்தனைகள் புதுப்பிறப்பு எடுத்தன. அவற்றுக்கான சமூகத்தேவை ஒன்று உருவானது. உலகமெங்கும் இருந்ததுபோல இங்கும் நிலப்பிரபுத்துவம் மதக்கருத்தியலால் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆதிக்கசிந்தனைகள் அனைத்துக்குமே மதம்சார்ந்த விளக்கம் இருந்தது. நிலப்பிரபுத்துவத்தால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களில் சிலர் உரிமைகளை உணர்ந்தபோது மதக்கருத்துக்களை உடைத்தாகவேண்டுமென்று நினைதார்கள். நாத்திகவாதம் விடுதலைக்கான கருவியாக உருப்பெற்றது இவ்வாறுதான்.

இவ்வாறு நாத்திகவாதம் எழுந்துவந்தபோது மரபில் இருந்த நாத்திகவாதத்தை மீட்டெடுக்கும் சிந்தனையாளர்கள் உருவானார்கள். தமிழக நாத்திகவாதத்தின் முன்னோடி என்றும் முக்கியமான முதல்சிந்தனையாளர் என்றும் சொல்லத்தக்கவர் பண்டித அயோத்திதாசர். [1845- 1932] காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பிரம்மஞானசங்கத்துடன் தொடர்புகொண்டிருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சுதந்திர சிந்தனையாளராக மாறினார்.

தமிழ்பௌத்தம் என்ற கருத்தியலை அயோத்திதாசர் முன்வைத்தார். அவரது கூற்றுப்படி இந்தியாவில் இரு கருத்தியல் இயக்கங்கள் உள்ளன. ஒன்று பிராமண மதம் அல்லது இந்துமதம். அது சுரண்டல் தன்மை கொண்டது. ஆதிக்க மதம். அதுதான் சுரண்டலாதிக்கத்தை உருவாக்கும் நோக்குடன் வழிபாடுகளையும் கடவுள்நம்பிக்கையையும் வேரூன்றச்செய்தது. அதற்கு எதிரானது பௌத்தம். அது நாத்திகச்சிந்தனை. விடுவிக்கும் தன்மை கொண்டது.

தமிழகத்தில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்தது. பின்னர் அதை பிராமணமதம் மன்னர்களை கவர்ந்து அவர்களை பயன்படுத்தி அழித்தது. அதன் விளைவாக பௌத்தர்கள் நிலம் பிடுங்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதியினராக ஆனார்கள். இன்று பௌத்தத்தை மீட்டு அதனைக்கொண்டு பிராமணமதத்தை வென்றால்மட்டுமே சுரண்டலில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபட முடியும். அவர்கள் இந்துக்கள் அல்ல, பூர்வ பௌத்தர்கள். அவர்களின் நூலே திருக்குறள். அதன் உண்மையான பெயர் திரிக்குறள். அதையும் பிற பௌத்த நூல்களையும் பிராமணமதம் கைப்பற்றிக்கொண்டது. அவற்றை மீட்க வேண்டும்– இதுவே அயோத்திதாசரின் சிந்தனைகள்.

அயோத்திதாசரின் நாத்திகசிந்தனைகளின் நீட்சி என்று ஈவெராவைச்[ 1879 – 1973] சொல்லலாம். ஈவேரா அவர்களை கருத்தியல்ரீதியாக வகுத்துக்கொள்வது இன்று சிக்கலாக உள்ளது. அவர் பேசியவை ஐரோப்பிய நாத்திகவாதக்கருத்துக்களை. ஆனால் அவர் அவற்றைக் கற்றவர் அல்ல. ஐரோப்பிய தத்துவ அறிமுகம் கொண்டவர் அல்ல அவர். அயோத்திதாசரைப்போல இந்திய தத்துவமரபை கற்றவரும் அல்ல. அவரது நாத்திகம் என்பது தமிழ்ச்சூழலில் இருந்து இயல்பாக உருவான ஒரு சிந்தனை. அதை ஒருவகை நாட்டார் சிந்தனை என்றுகூடச் சொல்லலாம். பொதுவிவேகம் சார்ந்தது அது.

இந்துமதசிந்தனை என்பது பிராமணிய சிந்தனை என்றும் அது கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டது என்றும் அதற்கு எதிரான பொருள்முதல்வாதமே விடுதலை சக்தி என்றும் ஈவேரா எண்ணினார். இந்துமதம் என்பது ஒரு சுரண்டல் அமைப்பை கட்டிக்காக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்களின் தொகை. அதை முழுமையாக நிராகரித்தாகவேண்டும் என்றார். மனிதன் தன்னுடைய நடத்தைக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதுவே அறம் என்றும் பலசொற்களில் வலியுறுத்திய இவெரா ஐரோப்பிய சுதந்திர இச்சை கோட்பாட்டாளர்களின் பலவரிகளை தானும் சொல்லியிருக்கிறார்

ஈவேராவின் கொள்கை நாத்திம் என வரையறை செய்யப்படத்தக்கது . அடிப்படையில் அது எதிர்மறையானது. விமர்சனத்தன்மையே அதன் உயிராற்றல். பொருள்முதல்வாதக் கோட்பாடுகளையோ, பகுத்தறிவுவாதத்தின் தத்துவதளங்களையோ ஈவெரா முன்வைக்கவில்லை. ஆகவே ஈவேராவை இந்திய நாத்திகத்தை முன்வைத்தவராகவே கொள்ளலாம்.தமிழக நாத்திக இயக்கம் சுயமரியாதை இயக்கமாகவும் [1925] பின்னர் திராவிடர்கழகமாகவும் [1944] மாறி வளர்ந்து திராவிட முன்னேற்ற கழகமாக அரசியல் அமைப்பாக ஆனது.

இதேபோல இந்தியவேர் கொண்ட நாத்திகம் கேரளத்திலும் இருந்தது. நாராயணகுருவின் சீடர்களில் பலரிடம் அந்த நோக்கு இருந்தது. குமாரன் ஆசானையே இந்திய வழிவந்த நாத்திகர் எனலாம் என்று எனக்குப் படுகிறது. சி.வி.குஞ்ஞுராமனையும் இந்திய வழிவந்த நாத்திகர் என்பேன். ஆனால் மிகச்சிறந்த உதாரணம் ’சகோதரன்’ அய்யப்பன். உறுதியான நாத்திகரான அவர் நாராயணகுருவால் அவரது முதற்சீடராகவும் கருதப்பட்டார் என்பதில் ஆச்சரியமேதும் இல்லை.

நாராயணகுருவின் சிந்தனைகளில் இருந்த ஆன்மீக அம்சத்தை உறுதியாக மறுத்து தொடர்ந்து குருவின் எதிர்நிலையாக விவாதித்து வந்தார் அய்யப்பன். இந்திய மரபில் உள்ள நாத்திக தரிசனக்கூறுகளை விரிவாக முன்வைத்து வந்தார். சாதிமறுப்பு இறைமறுப்பு மரபுஎதிர்ப்பு ஆகியவற்றை கேரளத்தில் இயக்கமாக முன்னெடுத்த முதல் சிந்தனையாளர் என அவரை சொல்லலாம்.

நாராயணகுருகுலத்தில் கடுமையான சைவப்பழக்கமே நிலவியது. சைவ உணவுக்காக வாதிட்டவர் நாராயணகுரு. ஆனால் சகோதரன் அய்யப்பனுக்காக அசைவம் சமைக்க பக்கத்து ஓட்டலில் சொல்லி ஏற்பாடுசெய்வாராம். ‘மீனில்லாமல் அவன் எப்படி சாப்பிடுவான்?’ என்றார் என நடராஜகுரு குறிப்பிடுகிறார். ஆனால் வாழ்நாளின் கடைசியில் தன் பேரியக்கங்களை அய்யப்பன் தன் வாரிசாக அமர்ந்து நடத்தவேண்டுமென குரு ஆசைப்பட்டார். அதை நாம் பி.கெ.பாலகிருஷ்ணனின் நாராயணகுரு என்ற நூலில் காணலாம். திருவிக எப்படி ஈவெராவை ஏற்றுக்கொண்டாரோ அதே நோக்குதான். இது இந்தியாமுழுக்க நடந்துள்ளது

இந்த இந்தியநாத்திகப் போக்குக்கு இணையாக, இதற்கு ஊக்கமளிப்பதாக, இதனுடன் முரண்பட்டு விவாதிப்பதாக இருந்தது ஐரோப்பிய பாதிப்புள்ள நாத்திகம். தமிழகத்தின் அதற்கு பல முன்னோடிகள். வெ.சாமிநாதசர்மா, ப.ராமசாமி என. ஆனால் முதற்பெருங்குரல் என்று சி.என்.அண்ணாத்துரையையே சொல்லவேண்டும். நெடுங்காலம் ஈவேராவுடன் முரண்பட்டு விவாதித்துக்கொண்டு இணைந்து செயல்பட்டார் அண்ணாத்துரை. ஈவேராவின் இயக்கத்தை ஐரோப்பியநாத்திகவாதக் கொள்கையைக் கொண்டதாக மாற்றியவர் அவரே. ஐரோப்பியச் சொல்லான ரேஷனாலிட்டி என்பதை பகுத்தறிவு என்று தமிழாக்கம் செய்ததும் அவரே. இன்றும் தமிழ் அறிவுலகின் மிகப்பிரபலமான சொல் அதுதான்.

அண்ணாத்துரை ஈவெராவின் முழுமையான நாத்திகத்தில் இருந்து விலகி ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வரியை நோக்கி வந்ததை நாம் வரலாற்றின் கண்டோம். கிட்டத்தட்ட சகோதரன் அய்யப்பனின் நிலைபாட்டில் இருந்து நாராயணகுருவின் நிலைப்பாட்டை நோக்கி வருவதைப்போல! ஆச்சரியம்தான் இல்லையா?

ஈவேராவிடமிருந்து விலகி அண்ணாத்துரை தனி இயக்கம் கண்டார். அதற்கான தனிப்பட்ட காரணங்கள் பல இருந்தாலும் அடிப்படைக்காரணம் ஜனநாயகம் என்று சொல்லலாம். அண்ணாத்துரை ஐரோப்பியப் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். அதை ஜனநாயக விழுமியங்களில் இருந்து பிரிக்கவே முடியாது. ஆனால் ஈவெரா பழைய மரபைச்சேர்ந்தவர். அதில் ஜனநாயகத்துக்கு பெரிய இடமில்லை. ஈவெராவின் இயக்கம் வெகுஜன அதரவு கொண்டதாக ஆகமுடியாமைக்கும் அதுவே காரணம். தமிழ்நாட்டு நாத்திக சிந்தனைகள் வெகுஜனத்தன்மை பெற முழுமுதல் காரணம் அண்ணாத்துரைதான்.

கேரளத்தில் ஐரோப்பிய பகுத்தறிவுவாதம் எம்.சி.ஜோசப் [1887 – 1981] என்ற நாத்திகரால் தொடங்கப்பட்டது. சகோதரன் அய்யப்பனின் நெருக்கமான சகாவாக இருந்தவர். சகோதரன் அய்யப்பன் நடத்திய யுக்திவாதி என்ற இதழை அவருக்குப்பின் நடத்தினார். கேரள யுக்திவாதி சங்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்தார். பதினைந்து நூல்களை எழுதியிருக்கிறார். அவருக்குப்பின் அவ்வமைப்பை பவனன் நடத்தினார்.

இலங்கையைச் சேர்ந்த ஆபிரகாம் கோவூரின் [1898 – 1978] பாதிப்பினால் கேரளத்தில் பகுத்தறிவுவாதம் மேலும் வலுப்பெற்றது. இலங்கையில் வாழ்ந்து அதிகமும் ஆங்கிலத்தில் எழுதினாலும் கோவூர் மலையாளி என்பதனால் அவரது பாதிப்பு அதிகமும் கேரளத்தில்தான். அவரது மாணவர் என்றே கூறத்தக்க ஜோசஃப் இடமறுகு [1934 – 2006] கேரளத்தில் ஐரோப்பியப் பகுத்தறிவுவாதத்தின் குரலாக அரைநூற்றாண்டுக்காலம் ஒலித்துவந்தார். இந்திய யுக்திவாதி சங்கம் என்ற அமைப்பையும் தேராளி என்ற இதழையும் அவர் நடத்தினார்.

மேலே சொன்னதுபோல இவ்விரு போக்குகள் நடுவே ஒரு ஒரு முரணியக்கவிளைவு [சமன்வயம்] ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா? பெரிதாக ஏதும் சொல்லமுடியவில்லை. அது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனாலும் எம்.கோவிந்தனை [1919-1989] நான் இந்திய- ஐரோப்பிய பகுத்தறிவுவாதங்களின் ஆக்கபூர்வமான உரையாடலின் பிறந்த குழந்தை என்று சொல்வேன்


நாத்திகவாதத்தின் கொடை என்ன?

ஐம்பதாண்டுகளுக்கு முன் நாகர்கோயிலில் நடந்ததாகச் சொல்வார்கள் இந்நிகழ்ச்சியை. அன்று ஈவேராவின் நாத்திக இயக்கத்தின் பிரச்சாரகராக விளங்கிய சி.பி.இளங்கோ என்ற பேச்சாளர் நாகராஜா கோயில் முன்னால் நின்று கடவுளை கடுமையாக தாக்கிப்பேசிக்கொண்டிருந்தபோது உள்ளூர் பெரியவர் ஒருவர் எழுந்து ‘உன் அப்பாவுக்கு நீ பிறந்தாய் என்பதை உன் அம்மா சொல்லித்தானே நீ ஏற்றுக்கொண்டாய்? பெரியவர்கள் சொல்வது பிரமாணம்தான். ஆகவே பெரியவர்கள் கடவுள் உண்டு என்று சொன்னதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்’ என்றார்

இளங்கோ ‘என் அம்மாவின் கற்பு காரணமாக நான் பிறக்கவில்லை. அவள் பாலுறவுகொண்டாள் என்பதனால்தான் பிறந்தேன். அதற்கு ஆதாரம் நானேதான். நாந்தான் எனக்கு ஆதாரம்’ என்று சொன்னாராம். ’அடப்பாவி சொந்த அப்பனையே மறுக்கிறாயா?’ என்று பெரியவர் குற்றம் சாட்டியபோது ’மளிகைகக்டையையே மறுத்துவிட்டேன். அஞ்சறைப்பெட்டியைப்பற்றி என்ன பேச்சு?’ என்றாராம் இளங்கோ.

அந்த வாதம் எப்படியானாலும் அந்த சுயபிரக்ஞையே நாத்திக இயக்கம் சிந்தனைத்தளத்தில் அளித்த கொடை எனலாம். நாத்திக இயக்கம் முதலில் கடவுளை மறுக்கிறது. மறுப்பதற்கான கருவிதான் பகுத்தறிவு. பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கங்களால் ஆனது. அந்த புறவயத்தன்மை என்பது அடிப்படையில் புலன்சார்ந்தது. புலன்கள் அதை அறிபவனைச் சார்ந்தவை. ஆகவே நான் என்பதே பகுத்தறிவின் மையம். என் புலன்களால் அவற்றில் இருந்து நான் உருவாக்கிக்கொண்ட தர்க்கத்தால் நான் இந்த பிரபஞ்சத்தை அறிய முடியும். அப்படி அறிவதே என் பிரபஞ்சம் என்பதே பகுத்தறிவு என்பது.

தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதுவான சிந்தனைத்தளம் எப்படி இருந்திருக்கும்? சாதி மற்றும் பொருளாதாரத்தின் மேல் படிநிலைகளில் இருந்த மக்களிடையே கல்வியும் பாரம்பரியமும் இருந்தன. அதன் விளைவாக சிந்தனையும் இலக்கியமும் கலைகளும் அவர்களிடம் இருந்தன. அங்கே தனிமனிதன் என்ற கருத்து இருந்தது. அது இந்தியஞானமரபின் சிறப்பான கருத்துருவகமான ஆத்மன் என்ற வடிவில் இருந்தது. ஆத்மனின் முழுமை அல்லது மீட்புக்கான யோகமும் தியானமும் பயிலப்பட்டன. அதைப்பற்றிய தத்துவங்களும் இலக்கியங்களும் இருந்தன. இவற்றைப்பற்றிப் பேசும் சைவசித்தாந்தமும் ராமானுஜரை குருவாகக் கொண்ட வைணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்தன.

அவற்றின் கீழ்ப்படிகளில் உள்ள மக்களைப்பொறுத்தவரை இரு நிலைகளில் இருந்தார்கள். மிகத்தாழ்ந்த படிகளில் மக்கள் பழங்குடிமனநிலையில் அல்லது அரைப்பழங்குடி மனநிலைகளில் வாழ்ந்தார்கள். குலதெய்வ வழிபாடு அல்லது சிறுதெய்வ வழிபாடு மட்டுமே இருந்தது. அவர்களில் நவீனசிந்தனைகளால் வகுக்கப்படும் தனிமனிதன் என்ற உருவகம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.

அதற்குமேல் உள்ள படிநிலைகளில் இருந்தவர்கள் சைவம் வைணவம் ஆகிய பெருமதத்தாலும் சாதியாசாரங்களாலும் தொகுக்கப்பட்டு உறுதியான சமூகக் கட்டமைப்புடன் இருந்தார்கள். தன் தனித்தன்மையை முழுக்கமுழுக்க குடும்பம்,சாதி,மதம் ஆகிய அமைப்புகளுக்கு விட்டுக்கொடுத்து அதன் பகுதியாக வாழ்ந்தனர். அதன் பாதுகாப்பையும் வசதிகளையும் அனுபவித்தனர். நான் முதலில் சுட்டிக்காட்டியது இத்தகைய ஒரு குடும்பத்தை. அதிலிருந்த ஒருவருக்கு சுயம் என்பதை இங்கே நாத்திக இயக்கம் உருவாக்கியளித்தது.

அந்த அமைப்புக்குள் வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு அது நான் என்ற உணர்ச்சியை கொடுக்கிறது. பழைய சிந்தனைகளின் சொற்றொடரில் சொல்லப்போனால் அவன் சுயத்தை கண்டடைகிறான். புதிய பின்நவீனத்துவ சிந்தனைகளின் சொற்றொடரில் சொல்லப்போனால் நான் என்ற கருத்துக் கட்டுமானத்தை மொழிவழியாக உருவாக்கி அவனுக்கு அளித்தது பகுத்தறிவு இயக்கம்.

அந்த நானை அது கீழ்க்கண்டவாறு வரையறுத்தது. ‘நான் என்பது என்னுடைய புலன்வழி அறிதல்களின் தொகை. புலன்வழி அறிதல்களின் ஒட்டுமொத்தத்தால் ஆன தர்க்கம்தான் உலகை அறிவதற்கான வழி. அந்த தர்க்கத்தை முன்வைத்து உலகை அறியும் பிரக்ஞைதான் நான். நான் அங்கீகரிக்கும் ஒன்றே என் சிந்தனையாக இருக்க முடியும். என்னுடைய சிந்தனைகளே நான்’ சி.பி. இளங்கோ மேடையில் சொன்னது இதைத்தான்.

பகுத்தறிவு இயக்கத்தின் கொடை என்பது இதுவே. அது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் அதன் மன அமைப்புக்குள் கட்டுண்டு சுயமில்லாதிருந்த பல லட்சம் இளைஞர்களுக்கு அவர்களின் ஆளிமை என்ற தனித்துவத்தை உருவாக்கி அளித்தது. அதன் வழியாக ஜனநாயகப்பண்புகளை நோக்கி அவர்களை கொண்டு சென்றது. அவ்வகையில் தமிழகச் சிந்தனையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு குறிப்பாக ஈவெரா சி.என்.அண்ணாத்துரை ஆகியோரின் கொடை முக்கியமானதேடாகும்

[மேலும்]

முந்தைய கட்டுரைதஞ்சைத் தரிசனம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்