நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் – கடிதங்கள்

NTA

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களின் சிவாஜி,எம்ஜியார் குறித்த பதிவின் வழி தங்களின் இணையதளத்தை வந்தடைந்தவர்களில் ஒருவன். அதன் பின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் புத்தகம் படித்தேன். அது இலக்கிய அறிமுகம் தேவைப்படும் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமான புத்தகமாக எனக்குத் தோன்றியது. எனது நண்பன் ஒருவன் கல்கி, சாண்டில்யன் கதைகளை வெறியோடு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நவீன தமிழிலக்கிய அறிமுகம் புத்தகத்தை பரிசளித்தேன். அவன் அதன் சில பக்கங்களைப் படித்துவிட்டு அதன் மொழி நடை கடினமாக உள்ளது எனவே அதைப் படிக்காமல் தற்போது கடல் புறா படிப்பதாகச் சொன்னான்.ஒரு இலக்கிய அறிமுகப் புத்தகம் சாதாரண வாசகனைச் சென்றடைய வேண்டுமென்றால் அது அவன் வாசிக்கும் எளிய மொழியில் இருப்பின் அவனுக்கு அது படிக்க இலகுவாக இருக்குமென்று தோன்றுகிறது. நாளடைவில் அவன் தனது வாசிப்பை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் எல்லா மொழிநடையையும் வாசிக்கக் கூடியவனாக ஆவான் என்று நினைக்கிறேன். இந்த எண்ணம் சரியா தவறா? உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்

இரா.பாலாஜி

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு வழியாகத்தான் நான் நவீன இலக்கியத்திற்குள்ளேயே வந்தேன். வெண்முரசு வாசிக்க வாசிக்க இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. அடுத்த கட்ட நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒரு தப்பான தொடக்கம் என்பதை உணர்ந்தேன். பல நூல்கள் செறிவே இல்லாமல் வெறும் கதையாகவோ வெறும் அனுபவமாகவோதான் இருந்தன.

நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய எனக்கு உதவியது உங்கள் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம். ஒரு பட்டியல் மட்டுமல்ல அது. சுருக்கமான மதிப்பீடுகளும் கொண்டது. முழுமையாகவே தமிழில் வாசிக்கத்தக்க இலக்கியத்தை அது தொகுத்து அளித்துவிட்டது. பல்கலைகளில் பாடமாக வைக்கத்தக்க நூல் என்று தயங்காமல் சொல்வேன்

அதன் பின்னிணைப்பாக உள்ள கலைச்சொற்கள், இலக்கியக்கொள்கைகள் அறிமுகம், இலக்கியநூல்களின் விரிவான பட்டியல் முக்கியமானது. அதில் மொழியாக்க நூல்களும், வணிக இலக்கியநூல்களும்கூட பட்டியலிடப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமானது

கடுமையான உழைப்பு என்று சொல்லமாட்டேன். அது உங்களுக்கு எளிதானது. ஒரு பெரிய ஆசிரியரின் நூல் அது. மாணவனாக என் நன்றி

செந்தில்வேல்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9
அடுத்த கட்டுரைதேர்தல் கண்காணிப்பு