கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2

 

​​​​அன்புடன் ஆசிரியருக்கு

இரண்டு  நாட்கள்  இவ்வளவு  சிறியதாகத் தெரிந்தது  இதுவே  முதன்முறை.  ஒரு சிறு இடையூறு  கூட  ஏற்படாவண்ணம்  திட்டங்களை  தெளிவாக  வகுத்து  சந்திப்பினை சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்கள்  அனைவரையும்  வியப்புடன்  வணங்குகிறேன்.

ஈரோடு  ஊட்டி  சந்திப்புகள் அளவு  இச்சந்திப்பு செறிவுடையதாக இருக்கவில்லையோ என்று  தொடக்கம்  முதலே  உறுத்தல்  இருந்து  கொண்டே  இருந்தது.  அது இரவில்  உறுதியாகிவிட்டது.  எப்படியாயினும்  உங்களை சந்தித்து இரு நாட்கள்  உடனிருந்து பேசிச்  சிரித்து சென்றதன் நிறைவின்  முன் இந்த  உறுத்தல்  சிறியதே. ஒரு பதிலினை  எதிர்பார்க்கும்  போது கேள்வியை மேற்கோள்களை சரியான  வார்த்தைகளில்  அமைக்க  வேண்டும்  என்பது பலமுறை  நீங்கள்  கூறியிருப்பது  தான்.  நேரிலும்  அதைச்  சொல்லும்படி வைத்துவிட்டேன். அதுவும்  நன்றுதான். இனி எச்சந்தர்ப்பத்திலும்  கூற்றினை  நான்  அர்த்தப்படுத்திக் கொண்டது  போல்  அலட்சியமாக  உரைக்க மாட்டேன் அல்லவா. எமோஷன் சென்டிமெண்ட்  குறித்து  துல்லியமாக வேறுபடுத்திக் கூறினீர்கள்.  வட்டார  வழக்குகளை கையாளும்  விதம்  குறித்துக் கூறியதும் ஒரு தெளிவினைக் கொடுத்தது. செறிவான  மொழிப் பயன்பாடே பிரதியை செம்மை கொள்ளச் செய்கிறது  எனப்  புரிந்து  கொண்டேன்.

எழுதி முடித்ததும்  “அத்துவானவெளியில்” பதிவினை  மீண்டும்  படிக்க  வேண்டும்.  நேற்று  நீங்கள்  கொடுத்த  உதாரணங்கள்  மற்றும்  விவரணைகளுடன் இணைத்து கவிதையை அணுகினால்  இதுவரை பல நேரங்களில்  எனக்கு  சாத்தியப்படாத உணர்வுபூர்வமான கவிதை  வாசிப்பு  சாத்தியமாகும்  என நம்புகிறேன். இரண்டாம் நாள் முதல்  நாளை விடப் பயனுடையதாகக் கழிந்தாலும் முதல்  நாளில்  டிராக்டரில் மலையேறியது(இறங்கியது என்றும்  சொல்லலாம்) மறக்க முடியாத  அனுபவம். அதிலும்  அனைவரும்  சூழ்ந்து  அமர்ந்திருக்க   நீங்கள் சொன்ன  கதை. கதை சொல்லத்  தொடங்கும்  போதே  லேசாக  இருட்டத் தொடங்கிவிட்டது. மூங்கிலில்  தெரியும்  மின்மினிகள் போல அடிவாரம்  ஆங்காங்கே  ஒளிவிடத் தொடங்கியிருந்தது. சொல்லி  முடிக்கும்  வரை சிறுவனாக  இருந்தேன். வேறு கவனமின்றி  முழுமையாக  கதைக்குள்  இருந்தேன். கதை முடிந்ததும்  அடிவாரத்தை பார்த்த போது  லேசாக  விசிறினால் தழல் எழுந்துவிடும் தீக்குழி போல்  கணன்று கொண்டிருந்தது.  நெஞ்சடைத்தது போன்ற  உணர்வு. இப்போது  மலையும் கதையும்  ஒன்றிணைந்து விட்டன.

சலிப்பூட்டும் அவசியமற்ற விஷயங்கள்  குறித்துக்  கேட்டிருந்தால் மன்னிக்க  வேண்டுகிறேன். ஏனெனில்  பிறர்  கேட்டதில்  அவ்வாறான விஷயங்களுக்காக  நான் மனதளவில்  மன்னிப்பு   கேட்டுக்  கொண்டே இருந்தேன். அனைத்திற்கும்  மேலாக  உங்களிடமும் கிருஷ்ணன்  அவர்களிடமும்  வெளிப்படும் நகைச்சுவை  உணர்வு  பிரமிக்கச் செய்கிறது. அடுத்தமுறை சந்திக்க  வருகையில்  நிறைய  அறிந்து  கொண்டு இன்னும்  அதிகமாக  சிரித்துவிட்டு  விடைபெறுவேன் என நினைக்கிறேன்.

 அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

அன்புள்ள ஜெ

கொல்லிமலைச் சந்திப்பு பிற சந்திப்புகளைப்போல இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளுடன் இருந்ததைப் பார்க்கமுடிகிறது. கொங்கலாயி அம்மன் கோயிலுக்குச் சென்றதும் மலையுச்சியில் இரவைக் கழித்ததும் வாசித்தபோது பொறாமையாகவும் வருத்தமாகவும் இருந்தது. பெண் என்பதனால் என்னால் சந்திப்புகளில் பங்கெடுக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. எவரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை. ஆனால் பிள்ளைகள் பெரிய பொறுப்பு. அதை உதறிவிட்டு எதையுமே திட்டமிடமுடியாது.  மனமும் கேட்காது. நாம் எவரிடமும் கேட்காவில்லை என்றாலும் நாம் சுதந்திரமாக இருப்பது எவருக்கும் பிடித்தமானது இல்லை என்பதுதான் உண்மை

இப்போதைக்கு கலந்துகொண்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். புகைப்படக்காரருக்கு நீங்கள் வழக்கம்போல ‘நன்றி’ சொல்லவில்லை

சித்ரா

1[கொங்கலாயி அம்மன் கோயிலுக்கான வழி]

அன்புள்ள சித்ரா,

புகைப்படங்கள் எடுத்தவர் காங்கோ மகேஷ். நல்ல மனிதர் பாவம். அவர் பெயரைச்சொல்லி படத்தையும் கொடுப்பது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். நல்ல புகைப்படங்களை ரசிப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வன்முறையில் அவர்கள் இறங்கலாம் அல்லவா? பொதுவாக அதனால்தான் நான் புகைப்பட கிரடிட் கொடுப்பதில்லை )))

மகேஷ் இந்தச்சந்திப்பின் முழுமையான ஒருங்கிணைப்பாளர். பங்கெடுப்பவர்கள் அனைவரையும் பலமுறை நேரில் அழைத்துப் பேசி, வழி சொல்லி, ஒருங்குதிரட்டி கொண்டுவந்து நிகழ்ச்சியை அமைத்தவர். நிகழ்ச்சி அவருடைய தனிப்பட்ட வெற்றிகளில் ஒன்று

ஜெ

காங்கோ மகேஷ்
காங்கோ மகேஷ்
முந்தைய கட்டுரைபுதிய வாசிப்புகளின் வாசலில்…
அடுத்த கட்டுரைநெல்லையில் பேசுகிறேன்