தினமலர் கடிதங்கள்

 

Tamil_News_large_1481446

அன்புமிக்க ஜெ,

’ஜனநாயக சோதனை சாலையில் பேச்சுரிமை எதுவரை?’ (http://election.dinamalar.com/detail.php?id=5476) என்ற கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. அக்கட்டுரையில் தாங்கள் மலேசியா பற்றி கூறியவை அனைத்தும் தவறான தகவல்கள். அல்லது உங்களுக்கு அத்தகவல்கள் யாரோ ஒருவர் மூலம் தவறாகவே வழங்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் தமிழக, இலங்கை புலம்பெயர் எழுத்தாளர்களை அழைத்துக்கொண்டு நாடு முழுவதுமே பயணம் செய்துள்ளேன். மிக அண்மையில் ‘கபாலி’ திரைப்பட பணியாக இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவர் குழுவினர் சிலரை அழைத்துக்கொண்டு கோலாலம்பூர் பெருநகரத்தில் எனக்கே அதிகம் அறிமுகமில்லாத இருண்ட பகுதிகளுக்குள் சென்று வந்தேன். எந்தச் சிக்கலும்  இல்லை. யாரும் தமிழக நண்பர்களைச் சோதிக்கவில்லை. தோட்டங்களின் அனுபவங்கள் வேறானவை. தமிழகத்திலிருந்து தோட்டத்தை அறிய வந்துள்ளார்கள் என்றதும் அன்போடு வீட்டில் அமர்த்தி உபசரித்தனர். கொஞ்ச நேரம்தான் மக்களிடம் குறுகுறுத்தபார்வை. பின்னர் மாங்காய் பறித்து உண்ணக்கொடுக்கும் அளவு தோட்ட மக்கள் நட்பாகிவிடுவர். கொஞ்ச நேரத்தில் இயக்குனரே மரத்தில் நாவல்பழத்தைப் பறித்துண்ணும் அளவுக்கு அந்நியோன்யம். இதே நெருக்கத்தை நான் தமிழக கிராமங்களில் பார்த்ததுண்டு. எங்கோ எப்போதோ விடுபட்ட உரையாடலைத் தொடர்வதுபோல இருந்தது அங்குள்ளவர்கள் பேச்சு. நகரத்து இறுக்கம் நுழையாத எல்லா இடங்களிலும் நீங்கள் சொல்லும் நட்புணர்வு தேசங்கள் பேதமின்றி நிலைத்திருப்பதாகவே கருதுகிறேன். அது தமிழகத்துக்கு மட்டுமானதல்ல.

மலேசியாவில் பல சமயங்களில் நானே நெடுஞ்சாலைகளைத் தவிர்த்துவிட்டு பயணித்ததுண்டு. கிடைப்பதற்கு அறிய மலாய் பலகாரங்கள் அவ்வாறான ஏதாவது கம்பத்துச்சாலையில் கடக்கும்போது தட்டுப்படலாம் என்பதால் மெதுவாகவே ஊர்ந்து செல்வேன். பகாங் எனும் பெரும் வனம் சூழந்த மாநிலத்தை நானும் தயாஜியும் பழைய சாலைவழியாகவே கடந்து சென்ற அனுபவம் உண்டு. எனது கார் பதிவு அட்டை சிலாங்கூர் மாநிலத்தினுடையது. பகாங்கில் ஒரு இடத்தில் கூட நிறுத்தப்பட்டதில்லை. தமிழகத்திலிருந்து இங்கு வந்து மாப்பிள்ளையாகி இருக்கும் மொழிப்பெயர்ப்பாளர் ஶ்ரீதர்ரங்கராஜ் அவர்களை அழைத்துக்கொண்டு தீவுகளுக்கும் மலைகளுக்கும் வெவ்வேறு மாநிலங்களுக்கும் பயணித்ததுண்டு. ஒரு சிக்கலும் இல்லை. யாரும் கேள்வி எழுப்புவதும் இல்லை. அவர் தன் கடப்பிதழை யாருக்கும் காட்டியதும் இல்லை.

ஜெ, நீங்கள் சொன்ன தகவல்கள் இரு சூழலில் நடக்க சாத்தியம் உண்டு. ஒன்றாவது, நீங்கள் சென்ற வாகனம் பக்கத்து நாட்டு (சிங்கை, தாய்லாந்து) வாகனமாக இருக்கலாம். அல்லது அது அரசாங்கத்தின் (ஒருமுறை நீங்கள் துணையமைச்சர் சரவணன் அழைப்பின் பேரில் வந்துள்ளீர்கள்) வாகனமாக இருக்கலாம். அவற்றிற்கு ஏதேனும் சட்டரீதியான சிக்கல்கள் இருக்க வாய்ப்புண்டு. மற்றபடி கட்டுரையில் நீங்கள் கொடுத்துள்ள காட்சிக்கும் எதார்த்தத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ம நவீன்

 

அன்புள்ள நவீன்

உங்கள் கருத்தைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் எப்போதும் என் நேரடி அனுபவத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். இது எனக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது.

ஜெ

 

அன்புள்ள ஜெ

உங்கள் ஆக்கங்களை வழக்கம் போல் படித்து வருகிறேன். ஒன்று சொல்லத் தோன்றியது.  நான் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியின் ரசிகை.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஜேம்ஸ்
வசந்தனும் நன்றாக நடத்திக் கொண்டு வருகின்றார். ஆங்கிலமே சிறந்த மொழி
என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நடை பெற்று
வரும் போற்றுதலுக்குரிய நிகழ்ச்சி.

கடந்த 27-3-16 அன்று இரண்டாவது முறையாக ஒளி பரப்ப
ஆரம்பித்திருக்கின்றார்கள். ஒரு ஆசிரியர் ஒரு மாணவர் ஒரு குழுவில் இடம்
பிடித்து ஆடும்படியான ஆட்டம்.

சுவாரஸ்மாக இருக்கின்றதே என்று நினைத்தேன். மாணவ மாணவியர் அளவிற்கு ஆசிரியர்கள் ஈடு கொடுப்பார்களா என்று
அறிய ஆவலாக இருந்தேன்.

ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் வேகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.
மேலும் ஆசிரியர் மாணவர் உறவு தற்காலத்தில் எப்படி இருக்கிறது என்று
அறிந்து கொள்ளவும் ஆர்வமாய் இருந்தேன்.

நான் கடந்த 25 வருடங்களாக சிட்னி வாசி. இங்கு படிப்பிக்கும் முறை
ஒரளவிற்குத் தெரியும். சுதந்திரமான கல்வி முறை. மாணவர்கள் கேட்டும்
படித்தும் விவாதித்தும் அறிவை வளர்த்து கொள்வார்கள்.

நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. இறுதிச் சுற்றில் 90 விநாடிகளில் அதிக பட்ச சொற்களை கண்டு பிடிக்க வேண்டும்.இப்போது மாணவர் குறிப்பு கொடுக்க ஆசிரியர் சரியான சொற்களை கண்டு பிடிக்க வேண்டும்.

கண்டு பிடிக்கப் பட வேண்டிய சொல். “ தேர்தல்””அந்த ஆசிரியர் ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் தடுமாற்றமாகத் தான் பதில்
அளித்து வந்தார். தப்பொன்றுமில்லை. குறிப்பிற்குப் பின்னர் தட்டு
தடுமாறித் தான் பதில் அளித்தார்.

“தேர்தல்”வார்த்தைக்கு மாணவர் கொடுத்த முதல் குறிப்பு “இலவசம்உடனே ஆசிரியர் தடுமாறாமல்“தேர்தல்”என்றாரே பார்க்க வேண்டும்.ஆடிப் போய்விட்டேன். மீண்டும் நிகழ்ச்ச்சியை பின்னோக்கிப் பார்த்தேன்.

உண்மை தான். ஒரே குறிப்பில் பிளந்து விட்டார் ஆசிரியர்..இலவசம் என்றால் தேர்தல் என்றே விளங்கப்பட்டுள்ளது.தமிழக அரசும், தமிழினத் தலைவர்களும், ஆசிரியப் பெருமக்களும் தலை குனியண்டிய தருணம் இது. எனக்கு மிகுந்த அவமானமாகவும் அருவருப்பாகவும் தோன்றியது.

இதை கவனித்து களை எடுக்கப் போவது யார்?இது மிகப் பெரிய களை என்றாவது யாராவது உணர்ந்தார்களா?என்ன நடக்கின்றது சமூகத்தில்.
வளரும் இளம் சமுதாயத்திற்கு எதைத் தந்திருக்கிறோம்?

நான் ஒன்றும் பழைமைவாதி இல்லை. தரமான கல்வி எல்லா குழந்தைகளுக்கும்
கிடைக்க வேண்டும் என்று ஆசைப் படும் ஒரு தாய். ஒரு பெண்மணி. ஒரு நல்ல
குடிமகள்.நல்ல கல்வியை கொடுக்காத அரசாங்கம் எதற்கு நமக்கு?

நீங்கள் நினைக்கலாம். என்ன நீ சிட்னியில் உட்கார்ந்து கொண்டு இப்படி
பேசுகின்றாயே என்று.நெஞ்சு பொறுக்குதில்லையே இவற்றைப் பார்க்கும் போது. என் செய்வேன்.

என் ஆசிரியர் திருமதி ராஜாமணி அம்மையார் என் நினைவிற்கு வந்தார். அரசு
பள்ளியிலேயே நான் பயின்றேன். சிறப்பான ஆசிரியர்கள் எங்களுக்கு சிறப்பாக
படிப்பித்திருக்கின்றார்கள். படிப்பித்தலை புனிதமாக கருதிய அந்த ஆசிரிய
சமூகம் திரும்பக் கிடைக்குமா இளம் தலைமுறையினருக்கு??

நான் யோசித்துப் பார்த்தேன்!! நான் என்ன குறிப்புகள் கொடுத்திருப்பேன்
அல்லது எதிர் பார்த்திருப்பேன்?சிந்தனைக்கு வந்த சொற்கள்: வாக்குரிமை, ஒட்டு, ஜனநாயகம்…நான் நினைப்பது தவறா? ஒன்றும் புரியவில்லை.

கவலையுடன்

மாலா

 

முந்தைய கட்டுரைகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு -கோவை