வரலாற்றாய்வின் வீழ்ச்சி

1

 

பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் டி.டி.கோசாம்பியின் வழிவந்த இடதுசாரி வரலாற்றாய்வாளர். வரலாற்றை பொருளியல் முரணியக்க அடிப்படையில் பார்ப்பவர். இந்திய வரலாற்றாய்வில் குறிப்பிடும்படியான பங்களிப்பை ஆற்றியவர்கள் இம்மரபினர்.

நாம் இந்தியவரலாற்றின் புதிர்கள் என நினைத்திருந்த பலவற்றை தெளிவுபடுத்தியவர்கள். வரலாற்றை தகவல்களின் குவியலாகவோ , பழம்பெருமையாகவோ நோக்காமல் ஒரு சமூகப்பரிணாமமாக நோக்க நமக்குக் கற்றுத்தந்தவர்கள். இந்திய சிந்தனை அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது

இர்ஃபான் ஹபீப் அவர்களை நான் பல தருணங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். மத்தியகாலகட்டத்தின் பொருளியல் வரலாற்றுப் பரிணாமத்தைப்பற்றி மிக அசலான அவதானிப்புகளை முன்வைத்தவர் ஹபீப். இந்தியாவிற்கு முன்னோடியான ஒரு மக்கள் வரலாற்றை எழுத முற்பட்டவர்.

தி ஹிந்து நாளிதழில் அவர் அளித்த பேட்டியில் பாரதமாதா என்னும் உருவகம் ஐரோப்பியரின் தேசத்தாய் என்னும் உருவகத்தின் நகல் வடிவம் என்றும், நாட்டையோ மண்ணையோ அன்னை எனக் கருதும் வழக்கம் இந்தியாவில் இருக்கவில்லை என்றும் வாசித்தபோது துணுக்குற்றேன். என்னைப்போன்ற ஒரு எளிய வரலாற்று – இலக்கிய வாசகனுக்கே அசட்டுத்தனத்தின் உச்சம் என்று மட்டுமே அக்கூற்றை மதிப்பிட முடியும்

இயற்கைச் சக்திகளை, நிலத்தை, நாட்டை மண்ணை அன்னையாக மதிப்பிடுவதென்பது இந்திய சிந்தனைமுறையில் உள்ள அடிப்படையான போக்கு. அரசனுக்கு பத்தினியாகவும், மகளாகவும் மக்களுக்கு அன்னையாகவும்தான் மகாபாரதம் எப்போதும் நாட்டை மதிப்பிடுகிறது. பிருது மன்னனிடமிருந்தே இப்பூமிக்கு பிருத்வி என்னும் பெயர் அமைந்தது. சும்மா யோசிக்கையில் எனக்கு நூற்றுக்கணக்கான வரிகள் நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதைச் சொல்லி நிரூபிப்பது எல்லாம் ஒரு அறிவுலகப் பணியே அல்ல. பிள்ளைவிளையாட்டு.

ஹபீப் பேட்டி – தி ஹிந்து

ஜடாயு அவரது இணையப்பக்கத்தில் இதை எழுதியிருக்கிறார்

பாரதமாதா என்று தேசத்தைத் தாயாக உருவகித்து வணங்கும் மரபு நாம் ஐரோப்பியர்களிடம் இருந்து கடன் வாங்கியது” என்று ஒரு கருத்தை வரலாற்றாசிரியர் என்ற பெயரில் உலாவும் இடதுசாரி இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.. “முன்பு பாரதம் என்ற நிலப்பகுதி பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆனால் மனித உருவில் தாயாக, தந்தையாக அதை சித்தரிப்பது பழங்காலத்திலோ இடைக்காலத்திலோ இந்தியாவில் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது முற்றிலும் அபத்தமான, ஆதாரமற்ற கருத்து. பூமியை, நிலத்தை, மண்ணை, ராஜ்யத்தை, தேசத்தை பண்டைக்காலம் முதலே பெண்ணாக, தாயாக, திருமகளாக, அரசியாகத் தான் இந்துப் பண்பாடு கூறிவந்திருக்கிறது. ராஷ்ட்ரீ, ராஜ்யஸ்ரீ போன்ற பதங்கள் வேதத்திலேயே உண்டு. மேலும், சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்திலேயே பூமியையும், நதிகளையும் பெண்பாலில் தான் குறிப்பிடுவார்கள்.

“இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) – அதர்வ வேதம்.

“.. நிலமென்னும் நல்லாள் நகும்” – திருவள்ளுவர்.

“கடலை ஆடையாக உடுத்து, மலைகளை மார்பகங்களாக ஏந்தியவளே, விஷ்ணுபத்னி, உன்மீது கால்வைத்து நடக்கும் என்னைப் பொறுத்து அருள்வாய்” – பூமி ஸ்துதி.

“பெற்ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விடவும் மேலானவை” (ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி) – வால்மீகி ராமாயணத்தின் சில பிரதிகளில் ராமன் கூற்றாக வரும் சுலோகம்.

இந்த நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் விளைவாகத் தான், “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் உள்ளத்தில் கவிதையாக எழுந்தது. தாய்ப் பாசத்தையும் தாய்நாட்டுப் பற்றையும் இணைக்கும் பண்பாட்டு இழை ஏற்கனவே இங்கு ஆழமாக வேரூன்றி இருப்பதால் தான், அந்தப் பாடலும் அது உருவாக்கிய உணர்வுகளும் தீச்சுடர் போல இந்தியா முழுவதும் பரவின. தாகூர் முதல் பாரதி வரை அனைத்து மொழிகளின் மகாகவிகளும் அந்த தேசிய நாதத்தை எதிரொலித்தனர்.

வங்க ஓவியர்கள் பாரதமாதாவை தேவி உருவில் படமாக வரைந்தது 1905க்குப் பிறகாக இருக்கலாம். “பிரித்தானியா” ஓவியம் அதற்கு முன் வரையப் பட்டிருந்திருக்கலாம். அதை வைத்து இந்தக் கருத்தாக்கமே ஐரோப்பியர்களிடமிருந்து பெற்றது என்று சொல்வது மிக மோசமான திரிபுவாதம்.

நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் அடிநாதமான இந்த விஷயத்தைக் கூட ஐரோப்பியாவிலிருந்து கடன் வாங்கியது என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஹபீப். ஒரு தீவிர நேருவிய மார்க்சியரிடம் இந்தக் கபடமும், தேசவிரோத உணர்வும், வரலாற்றை வெட்கமில்லாமல் திரிக்கும் போக்கும் இல்லாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம்.

https://www.facebook.com/jataayu.blore?fref=ts

எப்படி இதை ஒரு பொதுமேடையில் இர்ஃபான் ஹபீபால் சொல்லமுடிகிறது?  பண்டைய இந்தியவியலில்  வாசிப்புள்ள அவருக்கு உள்ளூரத் தெரியாதா என்ன?

இன்று இது ஓர் அரசியல் நிலைப்பாடாகவே கொள்ளப்படும். இதை ஏற்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஹஃபீப் என்ன சொன்னாலும் ஏற்பார்கள். ஆகவே எதிர்ப்பவர்களை அரசியல் மறுதரப்பாக சித்தரிக்கமுடியும். உண்மை என்ன என்ற கேள்வியே எழாது

இதையொட்டி எந்த விவாதம் எங்கு நிகழ்ந்தாலும் ஹபீபின் கூற்றுக்கு ஆதாரமுண்டா என்னும் வினாவே எழாது. அவரது அரசியலுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்னும் அடிப்படையிலேயே தரப்புக்கள் இருக்கும். அறிவுத்தளத்தில் ஹபீப்  ‘முற்போக்கு’ என்பதனால் அவருக்கு ஆதரவே இருக்குமென அவர் அறிந்திருக்கிறார்.

ஹபீப் முன்பு இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் பொறுப்பிலிருந்தபோது அறிவியலாளராக அல்லாமல் அரசியல்வாதியாகச் செயல்பட முடிவெடுத்தவர். ‘காவி அரசியலுக்கு’ எதிராக வரலாற்றாய்வை கையாளவேண்டுமென வாதிட்டவர்.

அது அவரது அரசியல். ஆனால் அதை தன் ஆய்வுக்கான முன்நோக்கமெனக் கொள்ளும்போது ,ஆய்வு என்பது அரசியல்செயல்பாடாக மட்டுமே அணுகப்படும்போது எதுவும் சாத்தியமே என்றாகிறது. ஹபீபின் உச்சகட்ட வீழ்ச்சி இது.

அவரது வாசகனாக அந்த வீழ்ச்சி என்னை வருந்தவைக்கிறது இனிமேல் இந்தியாவில் நடுநிலையான , புறவயமான வரலாற்றாய்வே சாத்தியமில்லையோ என்றும் இரு தரப்பாகப்பிரிந்து தெருச்சண்டையிடுவதே வரலாற்றாய்வாக அமையுமோ என்றும் தோன்றும்போது அவ்வருத்தம் அதிகரிக்கிறது

 

 

முந்தைய கட்டுரைகொல்லிமலை சந்திப்பு 2
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்