கடவுளின் காடு

11-basheer

சென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன்

நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் பெயரிட்டிருக்கும் காட்டுலாக்கள். ஜூன் ஜூலை மாதங்களில் தென்மேற்குப்பருவமழை பெய்யத்தொடங்கும்போது கேரளத்தில் மேற்குமலை உச்சிகளில் உள்ள ஊர்களுக்குச் சென்று சுற்றிப்பார்ப்போம். பீர்மேடு, வாகைமண், பறம்பிக்குளம், திருநெல்லி கூடவே கவி.

மழைகோட்டு அணிந்துசெல்வோம் .  நாள்முழுக்க கொட்டும் மழையிலேயே இருப்போம். உடம்பெங்கும் கடித்து ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் வாழ்வோம். இரவு எளிய விடுதிகளில் தங்குவோம். நான்குபக்கமும் அத்தனை மலைகளிலிருந்தும் அருவிகள் நூற்றுக்கணக்கில் கொட்டிக்கொண்டிருக்கும். மலைகளுக்கு வீரப்பற்கள் முளைத்ததுபோலிருக்கும்.

2009 ஜூலையில் முதல்முறையாக கவி சென்றோம். என் வாசகி எம்.ஏ.சுசீலாவின் மருமகன் பிரமோத் அப்போது கேரள காட்டிலாகா உயரதிகாரியாக இருந்தார். கேரளக்காடுகளை பாதுகாப்பதற்கான முக்கியமான பலநடவடிக்கைகளை எடுத்துப் புகழ்பெற்றவர் அவர். அவர் கவி சூழுலாமையத்திற்கு நாங்கள் செல்வதற்கான உதவிகளை வழங்கினார். அவர்தான் பஷீரை அழைக்கும்படி சொன்னார்

பஷீர் அப்போது அந்த மையத்தின் தலைவராக இருந்தார். கவி கேரளத்தின் சூழுலா [Eco-Tourism ] மையங்களில் ஒன்று.. இந்த சூழுலா என்னும் கருதுகோள் கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. காடுகளை சூழியல் புகலிடங்களாக அறிவிக்கும்போது அந்தக் காடுகளுக்குள் உள்ள ஊர்களை காலிசெய்ய வேண்டியிருக்கிறது. அந்த மக்களை இடம்பெயரச்செய்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு ஊர்சார்ந்த வேலைகள் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் காடுகளை நன்கறிவார்கள்.

ஆகவே அவர்களை வேலைக்கமர்த்திக்கொண்டு இந்த சூழுலா மையங்களை அமைத்தார்கள். இது அவர்களுக்கு நிலையான நல்ல வருமானத்தை உருவாக்குகிறது. அவர்கள் காட்டில் வேளாண்மை செய்வதும் விறகு பொறுக்குவதும் வேட்டையாடுவதும் தடுக்கப்படுவதனால் காடழிவும் நிகழ்வதில்லை. காட்டை அவர்களைக்கொண்டு கண்காணிப்பது எளிது.

கவி கேரளத்தில் உள்ள பெரியாறு புலிகள் புகலிடத்தினுள் அமைந்திருக்கிறது. ரான்னி வனக்கோட்டம், பத்தனம்திட்டா மாவட்டம். மதுரை வழியாகச் சென்றால் தேனி, கம்பம், குமுளி வழியாக மேலேறி வண்டிப்பெரியார் போவதற்கு மூன்றுகிலோமீட்டருக்கு முன்னதாகவே இடதுபக்கம் திரும்பினால் வள்ளக்கடவு என்ற ஊர். அங்கே வனக்காவலரிடம் முறைப்படி அனுமதிபெற்று காட்டுக்குள் புகுந்து கவி செல்லலாம்.

அங்கே காலை எட்டுமணிக்கு சாலையை திறக்கிறார்கள். ஒருநாளில் முப்பது வண்டிகளை மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள்.. அங்கிருந்து இருபக்கமும் அடர்ந்த காடுவழியாக பதினெட்டு கிலோமீட்டர் சென்றால் சாலையோரமாக கவி வருகிறது.

மது, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை தடுப்பதில் கேரள காட்டிலாகாத்துறை மிகமிகக் கராறாக இருந்தது. பிஸ்கெட் உறைகளைக்கூட பிய்த்து எடுத்துவிட்டுத்தான் செல்ல அனுமதித்தனர். எங்களுக்குப்பின்னால் வந்தவர்களிடம் ஒரு புட்டி மது இருந்தது. தடுத்துவிட்டார்கள்,

அவர்கள் சினம்கொண்டு வாதாடியபோது உறுதியாகவே மறுத்து திருப்பியனுப்பினார்கள். “எங்களுக்கு மேலதிகாரிகளைத்தெரியும்” என்று அவர்கள் சொன்னபோது ”பஷீர்சாரைத்தெரியுமா?” என்றார் காவலர். “தெரியாது” என்றார்கள். “அவரிடம் பேசிவிட்டுச் சொல்…போ” என்றார். பஷீர் பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறதே என நினைத்துக்கொண்டேன்’

காலை பத்துமணிக்கு காடு வெயிலில் பச்சைவெளியாக விரிந்து கிடந்தது. சீவிடுகளின் ரீங்காரத்தால் ஒன்றாக இணைக்கப்பட்ட பிரம்மாண்டமான மரங்களின், இலைதழைத்த செடிகளின், மரங்களை மூடிய கொடிகளின் , பாறைகளில் தொற்றிய பெரனிகளின், பல்லாயிரம் பறவைகளின், பலகோடிப் பூச்சிகளின் காடு. பச்சை அடர்ந்த காட்டுக்கு நடுவே இளம்பச்சை வெயில் தேங்கிக்கிடக்கும் சிறிய புல்வெளிகள். ஈரம் வழிந்த கரும்பாறைகளின் இடுக்குகளில் பச்சைப்புற்கள் படர்ந்தேறியிருந்தன. மலைவிளிம்புக்கு மேலே மேகங்கள் ஒளியுடன் பரவிய நீல வானம்.

காடு முதலில் உருவாக்கும் எண்ணம் தூய்மை என்ற ஒற்றைச் சொல்தான். அந்த சொல்லை பலவிதமாக நாம் விளக்கிக்கொண்டே செல்லமுடியும். நாமறியும் நகர, கிராம வாழ்க்கையை நம் ஆழ்மனம் தவிர்க்க முயன்றபடியே உள்ளது. சத்தம், புழுதி, சாக்கடை, கட்டிடங்களின் சாலைகளின் ஒழுங்கின்மை, வாகனங்களின் நெரிசல், மக்களின் பிதுங்கல். காடு சட்டென்று நம்மை அவற்றில் இருந்து விடுவிக்கிறது. ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும் ஓர் இடம் காடு. அதை நாம் உணரும்போதே அதைச் சுத்தம் என்று சொல்லிக்கொள்கிறோம். அசுத்தம் என்பது ஒரு நிலைபிறழ்வுதான்.

gavi-eco-toursim-kerala

கவி ஒரு நீர்த்தேக்கம். காட்டில் ஓடிய இரு காட்டாறுகளை நான்கு மலைகளுக்கு நடுவே மூன்று தடுப்பணைகள் கட்டி பெரிய ஏரியாக தேக்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் அந்த நீரை பிரம்மாண்டமான குழாய்கள் வழியாக எண்ணூறடி கீழே சபரி நீர்மின்சார நிலையத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த ஏரிக்கரையில்தான் கவி சூழுலா மையம் உள்ளது. அங்கே முப்பது பேர் வரை தங்க முடியும். அறுபது ஊழியர்கள் இருக்கிறார்கள்.

பஷீர் என்னை புன்னகையுடன் வரவேற்றார். உயரதிகாரி சொல்லி அனுப்பியவர் என்பதனால் ஒரு சின்ன இறுக்கம் இருந்தது. ஆனால் சிலநிமிடங்களிலேயே என்னை எழுத்தாளனாக அடையாளம் கண்டுகொண்டார். பஷீர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர். திரிச்சூரைச் சேர்ந்தவர். சச்சிதானந்தன், கெ.ஜி சங்கரப்பிள்ளை உள்ளிட்ட பல இலக்கியவாதிகளிடம் அறிமுகம் கொண்டவர். நான் மலையாளத்தில் எழுதிய அனைத்தையும் வாசித்திருந்தார்

மதிய உணவுக்கு பின்னர் ஒரு சிறிய கானுலா சென்றோம்.  கவி அட்டைகளால் ஆனது. மழைக்காலம் அட்டைகளின் கொண்டாட்டக்காலம். எங்களுக்கு கால்களை மூடும் காக்கி காலுறைகள் கொடுத்தார்கள். மழைக்கோட்டு கொண்டுசென்றிருந்தோம் கையில் உப்பு பொட்டலமும் வைத்திருந்தோம். சிறிய அட்டைகள் தொற்றி ஏறி துவண்டபோது உப்பைபோட்டோம். உப்பு அவற்றுன் உடல் நீரை உறிஞ்சுவதால் அமிலம் பட்டது போல துடித்து இறக்கும்.

அன்று கவியில் மழை இல்லை. முந்தையநாள்கூட பெய்திருந்தது. நாங்கள் சென்றபோது வானம் வெளுத்து நீல வெளியாகக் கிடந்தது. காட்டுக்குள் நிலம் ஆவியாகி இலைகள் வியர்த்து நீர் சொட்டிக்கொண்டே இருந்தது. எங்கும் மௌனத்துள் ஒரு மெல்லிய ரகசியமாக நீரின் துளியொலி. கவி காடு முழுக்க வேய் எனப்படும் மென்மூங்கில்காடுகள். புல்லாங்குழல் செய்வதற்கான மூங்கில் இது. இலைகள் அகலமானவை, அரம்போல கூரிய விளிம்புள்ளவை.

யானைகள் முதுகு உரசிய மரங்கள் வழவழப்பாக நின்றன. யானைகள் தோண்டிய மண் குவிந்து கிடந்தது. யானைப்பிண்டங்கள் நீரில் கரைந்தும் கரையாமலும் கிடந்தன. எங்கும் யானையின் இருப்பு இருந்தது. காட்டுக்குள் இருக்கும் யானையின் அருவுருவமே இந்தியக்காடுகளை உயிருள்ளதாக்குகிறது.

மாலைவெயில் பெருகிக்கிடந்த புல்மேட்டை அடைந்து மூச்சுவிட்டோம். அங்கே நின்றபோது அஸ்தமனத்தில் பச்சை மலைகள் நீலம் கொண்டு அணைந்து மறைவதை காணமுடிந்தது. மெல்ல கீழிருந்து மூடுமேகம் வந்து திரையிட்டு எல்லாவற்றையும் மறைத்தது. களைத்துப்போய் திரும்பி வந்தோம். கால்களில் ஒரு சில அட்டைகள் இருந்தன. ஆரம்பத்தில் உருவாகும் மனச்சுளிப்பு விலகிய பின் அட்டைகளை நாம் அஞ்சவோ அருவருக்கவோ தேவையில்லை. விரல்களால் சுண்டிச் சுண்டி விட்டோம்.

பஷீர் வந்து ஒரு மலையுலாவுக்கு அழைத்தார். பஷீரின் ஜீப்பில் காட்டுக்குள் சென்றோம். சிறிய வனப்பாதை. இருட்டி விட்டிருந்தது. இருபக்கமும் காடு இருட்டுக்குள் நிறைந்து கிடந்தது. இரு இடங்களில் மரங்கள் சரிந்திருந்ததை வழிகாட்டிகள் வெட்டி அகற்றினர். ஒரு சிறிய தடுப்பணை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தோம். வரும்வழியில் நடுச்சாலையில் ஒரு மிளா [சாம்பார் டீர்] நின்றிருந்தது. ஒளிக்கு கண்கூட உடல்சிலிர்த்து அசையாமல் நின்றது. சிலகணங்கள் கழித்து விளக்கை அணைத்ததும் பாய்ந்தோடி மறைந்தது.

கவி வனவாழ்க்கை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதனால் கார் எனப்படும் காட்டெருதுகளும் யானைகளும் காட்டுப்பன்றிகளும் மிகுதி. ஒருமுறை சுற்றிவந்தாலே கூட்டம்கூட்டமாக காட்டெருதுகளைப்பார்க்க முடியும். அவற்றில் முகம்சிவந்தவை மட்டுமே ஆபத்தானவை. பருவம் வந்த ஆண்கள் அவை. பொதுவாக காட்டெருதுகள் மனிதர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை

ஆனால் யானைகள் அப்படி அல்ல. அவை மிகமிக நுட்பமானவை. மனிதர்களைவிட்டு விலகிச்செல்லவே அவை முயலும். ஆனால் அவற்றை எரிச்சலூட்டும் பலவிஷயங்கள் உண்டு. முக்கியமாக வாசனை. நாம் பயன்படுத்தும் செண்டுகள், ரசாயனப்பொருட்கள் அதன் எட்டடி நீளமான மாபெரும் மூக்கை தொந்தரவு செய்பவை. அடுத்தபடியாக ஒலிகள். அதன் முறக்காதுக்கு நம் சினிமாப்பாடல்களிலும் செல்பேசிகளிலும் உள்ளம் கூரிய ஒலிகள் மிகவும் படுத்துபவை. அத்துடன் நம் உடைகள் பளிச்சென்று வெயிலில் மின்னுவது அவற்றின் மிகச்சிறிய கண்களை உறுத்துவது

கவியில் யானைகளைப் பார்க்கப்போகும்போது இவையனைத்தையும் சொல்லித்தான் அனுப்புகிறார்கள். ஒவ்வொரு குழுவுடனும் ஓரிரு காவலர்கள் வருவார்கள். அவர்கள் கெஞ்சிக்கொண்டே இருப்பார்கள், குப்பைபோடாதீர்கள், செல்பேசிகளை ஒலிக்கவிடாதீர்கள், காமிரா மின்னல்கள் தேவையில்லை, கூச்சலிடாதீர்கள். ஆனால் நம் சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா என்றாலே ரகளைசெய்வதும் அத்துமீறுவதும்தான். அப்படித்தான் சினிமாக்கள் அவர்களுடைய கதாநாயகர்களைக் காட்டியிருக்கின்றன

பஷீர் அதில் மிகமிகக் கறாரானவர். யாராக இருந்தாலும் பிடித்து உட்காரச்செய்து திருப்பி அனுப்பிவிடுவார். “இங்கே வரும் கும்பல் குடித்துவிட்டு புட்டிகளை காட்டில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். யானைகளின் கால்கள் மென்மையானவை . அவற்றின் எடைகாரணமாக அவை அந்த புட்டிகளை மிதித்தால் ஆழமாக உள்ளே சென்றுவிடும். சிலநாட்களில் கால் அழுகி யானை நகரமுடியாமலாகும். மரத்தில் சாய்ந்து நின்று உயிர்விடும்” பஷீர் சொன்னார்

அப்படி சில யானைகள் இறப்பதை கண்டபின்னர்தான் பஷீர் கடுமையானவராக ஆனார். எந்த சமரசத்திற்கும் ஒப்புக்கொள்வதில்லை. விதி என்றால் விதிதான். அவரை ஒன்றும் செய்யமுடியாது, ஏனென்றால் இடமாற்றம்செய்வதென்றால் கவியை விட காடு வேறில்லை. அவர் இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் ஊருக்குச் செல்வது. அங்கே ஒரே ஒரு மலையுச்சியில்தான் செல்பேசி அலைகள் கிடைக்கும்.

யானைகளைப்பற்றி பஷீர் சொல்லிக்கொண்டே வந்தார். “தன் உறவினர் இறந்ததைக் கண்ட யானை மனிதர்கள் மேல் வஞ்சம் கொண்டிருக்கும். பலசமயம் சாலைக்கு வந்து மனிதர்களை அது துரத்தும். மனிதர்களுக்கு யானைமேல் மதிப்பில்லை. காட்டின்மேல் மதிப்பில்லை. ஏனென்றால் உண்மையில் அவர்களுக்கு அல்லா மேல் மதிப்பில்லை”

பஷீர் சொன்னதகவல்களின் அடிப்படையில் நான் யானைடாக்டர் என்னும் கதையை எழுதினேன். பீர்புட்டிகள் யானைகளுக்கு எமனாவதைப்பற்றிய கதை. சூழியல் அமைப்புகளால் இதுவரை அரைலட்சம் பிரதிகள் வரை அச்சிட்டு இலவசமாக அளிக்கப்பட்ட கதை அது. ஓர் எழுத்தாளனாக நான் பஷீருக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டேன்.

பஷீர் ஓய்வுபெற்று திரிச்சூருக்குச் சென்றுவிட்டார். அதன்பின்னர்தான் கவியில் அந்த மரணங்கள். வட இந்தியப்பயணிகள், அதிகாரிகளும்கூட. அவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள். பஷீர் போல உறுதியான அதிகாரிகள் இல்லையேல் அப்படித்தான் நடக்கும்.

சென்ற நவம்பர் 24, 2015 ல் திரிச்சூரில் ஒரு இலக்கியநிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். பஷீர் என்னைப்பார்க்க வந்திருந்தார். நாங்கள் இரவு கனக்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம். கவியில் நடந்ததைப்பற்றிச் சொன்னேன் “நீங்கள் அதிகாரி, அரசியல்வாதி, தொழிலதிபர். சரி, ஆனால் யானை அதற்கும் மேலே. அது கடவுளின் பிரதிநிதி அல்லவா?” என்றார் பஷீர்.

 

படங்கள்

 

முந்தைய கட்டுரைதேர்தல் கண்காணிப்பு
அடுத்த கட்டுரைதினமலர் – 15