கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு மாத்ருபூமி இதழ் அவரை அழைத்துக்கொண்டது. விமர்சகராக அவரது இடம் உருவாகவில்லை. ஆனால் இதழியலில் அவர் ஒரு சாதனையாளர்
நாற்பதாண்டுக்கால இதழியல் வாழ்க்கை கே.சி.நாராயணனுக்கு உண்டு கௌமுதி பாலகிருஷ்ணனுக்கும், என்.வி.கிருஷ்ணவாரியருக்கும் எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் பின் மலையாள இலக்கியத்திற்கு அதிக பங்களிப்பாற்றிய இதழியலாளர் என்று கே.சி.நாராயணனை ஐயமில்லாமல் சொல்லிவிடலாம். ஓய்வுக்குப்பின்னரும் அவரை விட மனமில்லாமல் மலையாள மனோரமா தன் வெளியீடுகளுக்கான பொது ஆசிரியராக நீட்டிக்க வைத்திருக்கிறது
கே.சிக்கு இப்போது அறுபத்தைந்து வயது. நான் அவரைச் சந்திக்கையில் அவருக்கு முப்பத்தாறு. மாத்ருபூமி இதழின் துணையாசிரியராக இருந்தார். நான் காசர்கோட்டிலும் அவர் கோழிக்கோட்டிலும். நிகழ்ச்சிகளில் சந்திப்போம். வெடித்துச்சிரிக்கவைக்கும் உரையாடல்காரர். எதிர்மறை உளவியல் சற்றும் இல்லாதவர். இலக்கியம் குறித்து எப்போதுமே பேசிக்கொண்டிருப்பவர்.
மாதவிக்குட்டியின் [கமலா தாஸ்] மைந்தரும் பிரபல இதழாளருமான எம்.டி.நாலப்பாடு மலையாள இதழியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றவர். நாலப்பாட்டுக்கு நெருக்கமானவராக இருந்த கே.சி மாத்ருபூமி இதழின் நவீன வடிவை உருவாக்கியவர். மாத்ருபூமியின் உரிமை மாறியபோது எம்.டி.நாலப்பாடு வெளியேறினார். கே.சி கல்கத்தாவுக்கு செய்தியாளராகச் சென்றார்.
சென்னைக்கு அவர் மாத்ருபூமியின் செய்திப்பிரிவுத்தலைவராக வந்தார். நான் பாலக்கோட்டுக்கு மாற்றலாகிவந்தேன். சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸில் இருந்த அவரது அலுவலகமும் குடியிருப்பும் அன்று ஓர் இலக்கிய மையமாக இருந்தது. சகரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா , பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற இலக்கியவாதிகள் வந்துகொண்டே இருப்பார்கள். குடி, இலக்கியம் , மீன், அரசியல் என்று ஓர் இரவுபகல் இல்லாத உலகம்
நான் சென்னைசென்றால் கே.சியின் அலுவலகவீட்டில்தான் தங்குவது வழக்கம். தூங்கும்வரை இலக்கியம்பேசி பேசிய இடத்திலேயே காலைவிழித்து உடனே விட்ட புள்ளியிலிருந்து இலக்கியம் பேசுவோம். கே.சி. அங்கிருந்து மீண்டும் மாத்ருபூமிக்கு ஆசிரியராகச் செல்ல யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு காரணம்.
மீண்டும் மாத்ருபூமி ஆசிரியராகச் சென்ற கே.சி என்னை அதில் வாரம் ஒரு கட்டுரை எழுதும்படி சொன்னார். அவ்வாறுதான் நான் மலையாளத்தில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன் எம்.கங்காதரன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ஜயகேரளம் இதழில் சிலகட்டுரைகள் எழுதியிருந்தேன். மாத்ருபூமியில் கடிதங்கள் எழுதியிருந்தேன். மாதவிக்குட்டியின் சந்தனமரங்கள் கதை வெளிவந்தபோது நான் எழுதிய வாசகர்கடிதத்தை வாசித்துவிட்டு மாதவிக்குட்டி என்னை அழைத்துப் பேசினார். அவ்வாறுதான் அறிமுகம் உருவாகியது.
மாத்ருபூமியில் இருந்து கே.சி மலையாள மனோரமாவுக்குச் சென்றார். நானும் உடன் சென்று மலையாளமனோரமா குழுமத்தின் இலக்கிய இதழான பாஷாபோஷிணி இதழில் எழுதலானேன். நான் சொந்த வீடுகட்டி உச்சகட்ட கடனில் இருந்தபோது மலையாள மனோரமா தான் என்னை தேற்றி வெளியேகொண்டுவந்தது. பாஷாபோஷிணியில் நான் எழுதிய கட்டுரைகள் ‘நெடும்பாதையோரம் உறவிடங்கள் நூறுசிம்ஹாசனங்கள் என்னும் மூன்று நூல்களாக மலையாளத்தில் வெளிவந்துள்ளன
28 ஆம் தேதி காலை கே.சி நாகர்கோயில் வந்தார். நான் அன்று அதிகாலைதான் கொல்லிமலையிலிருந்து வந்தேன். தூங்காமல் வெண்முரசு ஒர் அத்தியாயம் எழுதிவிட்டு ரயில்நிலையம் சென்று அவரை அழைத்துவந்தேன். பார்த்ததுமே சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். நினைவுகளில் சிரிப்புகள்தான் அதிகமாக இருந்தன.
கே.சி மலையாள நகைச்சுவையாசிரியர் வி.கே.என்னின் ரசிகர். விகெஎன் நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். [எம்.கிருஷ்ணன்நாயர் பேரறிஞர். ஷேக்ஸ்பியரின் சரியான உச்சரிப்பு மில்டன் என்பதுதான் என்று சொல்கிறார்] அக்கால இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தோம். எழுபதுகளில் பம்மன் என்னும் எழுத்தாளர் பிரபலம். அவரது சட்டக்காரி, வஷளன் போன்ற நாவல்கள் இன்பக்கிளுகிளுப்புடன் வாசிக்கப்பட்டவை.
வஷளன் என்றால் கேடுகெட்டவன் என்று பொருள். ”அன்றைக்கு என் மாமா வஷளன் என்பவன் எழுதிய பம்மன் என்னும் நாவல் என்று சொல்வார்” என்றார் கே.சி. நான் கோவையில் என் நண்பர் பாலசந்திரன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பம்மனைப்பற்றிச் சொன்னேன். அருகே இருந்த பெரியவர் “நான்தான் பம்மன்” என தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
மாலை ஒரு அற்புதமான கோடைமழை. நாகர்கோயிலே பெருகி வழிந்தது. ஓட்டுநரை வரச்சொல்லியிருந்தேன். ஈரம் சொட்ட வந்தார். காரில் சுசீந்திரம் சென்றோம். கிட்டத்தட்ட படகில் போகும் அனுபவம். ஆனால் கன்யாகுமரியில் மழையே இல்லை. முகில்மூட்டம் இருந்தது. குளிர்காற்று. கடலைநோக்கியபடி அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம்
மறுநாள் செல்வேந்திரனை வரச்சொல்லியிருந்தேன். என் ஆதர்ச இதழாளரை செல்வா சந்திக்கவேண்டும் என்று விரும்பினேன். [அப்படியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போமே என்றுதான்] காலையில் ஒரு நடை சென்றுவரும்போது செல்வா வந்திருந்தார்.
காரில் எங்கள் குலதெய்வமான மேலாங்கோட்டு அம்மன் ஆலயத்திற்குச் சென்றோம். அங்கே ஓரு பூசாரி பெண்ணாக சேலையணிந்து தலைமுழுக்க பூச்சூடி நின்று குறிசொல்லிக்கொண்டிருந்தார். “அம்மை இருக்கேன் , பாத்துக்கிடுதேன், ஒண்ணும் பயப்படாதே. நல்லாயிரும் கேட்டையா?” என்பதே பெரும்பாலான அருள்வாக்கு. கட்டணம் ஐம்பது ரூபாய். ஒருபெண் நூறுரூபாயுடன் தயங்க “குடு. மிச்சம்தாறேன். அம்மன் திருடமாட்டேன். எனக்கு அம்பதுதான் காணிக்கை” என்று சொல்லி மேலாங்கோட்டு இசக்கி காசை வாங்கிக்கொண்டு மிச்சம் கொடுத்தாள்
பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றோம். இருளும் ஒளியும் ஊடாடும் அரண்மனையில் சிரித்துப்பேசிக்கொண்டு சுற்றிவந்தோம். இலக்கியம் மீண்டும் இலக்கியம். கே.சி ஓர் இலக்கிய அடிப்படைவாதி. ஆற்றூர் ரவிவர்மாவிடமிருந்து கற்றது அது. அரசியலில் ஆர்வமும் நிலைபாடும் இல்லை. அழகியலே இலக்கியம் என்று எண்ணுபவர்.
மதியம் தக்கலையில் சாப்பிட்டுவிட்டு வீடுதிரும்பினோம். கே.சிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆறரைக்கு ரயில். மூன்றரைக்கு அவர் கிளம்பிச்சென்றார். மிக உற்சாகமான இரண்டுநாட்கள். மீண்டும் இளமைக்குச் சென்று திரும்பினேன். இளமை என்பது கனவுகளால், அதைநோக்கி எழும் பெரும் உயிராற்றலால் ஆனது. இன்னமும் அவை அவ்வாறே எஞ்சுகின்றன என இருவருமே கண்டுகொண்டநாட்கள்