அன்பு ஜெமோ,தினமலர் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்துவருகிறேன். உங்கள் கட்டுரைகளின் வழக்கமான செறிவை கொஞ்சம் குறைத்திருக்கிறீர்கள். ஆனால், பொருளடக்கத்தில் சற்றும் குறையாத சீரிய வரலாற்று நோக்கு, உலகப்பார்வை, முக்கியமாக மாற்றுக்கோணம். வாசிப்புப் பழக்கம் அதிகமில்லாமல் பொதுவாக அரசியல் பேசுபவர்களுக்கு, இக்கருத்துக்கள் சென்று சேர்வதே அரிதுதான். அந்தவகையில் உங்களுக்கும், தினமலருக்கும் நன்றி!
அமெரிக்க வலதுசாரி, இடதுசாரி கட்சிகளைப்பற்றியும் அவற்றின் பொருளாதார விளைவுகளையும் சொல்லியிருந்தீர்கள். சென்ற வருடம் அதைப்பற்றி வந்த ஒரு ஆர்வமூட்டும் ஆய்வுக்கட்டுரையின் சாரம் இங்கே (ஆலன் ப்ளைண்டர், மார்க் வாட்ஸன், பிரின்ஸ்டன் பல்கலை.)
கடந்த 70 வருடங்களின் பொருளாதார புள்ளிவிவரங்களின் படி, தாராளவாத ஜனயாகக்கட்சியின் ஆட்சியில் இரண்டு மடங்கு தனியார் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. பார்க்க படம்-1.
இது ஒரு வியப்பான முரண். சிறிய அரசாங்கத்தை விரும்பும் குடியரசுக்கட்சி அதற்கு நேரெதிர் விளைவுகளை உருவாக்குகிறது. இதற்கு முக்கியமான காரணம் நீங்கள் வேறொரு கட்டுரையில், சுதந்திர இந்தியாவின் முதன் 40 வருடங்களைப்பற்றி எழுதும்போது சொன்னதுதான். போர்களின் விளைவு.
ஒவ்வொருமுறை போர் நிகழும் போதும், தோற்கும் நாட்டுக்கு மட்டுமல்ல, வெல்லும் நாட்டுக்கும் ஏதோவொரு வகையில் அதேயளவு அடி விழுகிறது!
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்