கொல்லிமலைச் சந்திப்பு -1

கொல்லிமலைக்கு ஒருநாள் முன்னதாகவே செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொல்லிமலைப்பகுதிக்கு நான் சென்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நாகர்கோயிலில் இருந்து 24 அன்று மாலை ரயிலில் கிளம்பி மறுநாள் மூன்று மணிக்கு நாமக்கல்லில் இறங்கினேன். ரயில்நிலையத்திற்கு நாமக்கல் நண்பர்கள் வரதராஜனும் வாசுவும் மகேஷ் [காங்கோ] வும் வந்திருந்தனர். அஜிதன் கடலூர் சென்றுவிட்டு அங்கிருந்து நேரடியாக வந்திருந்தான்.

1

அருகே விடுதியில் அறை. கீழே பனானா லீஃப் என்னும் ஓட்டல். நான் இரவில் கொஞ்சம் கலைந்த துயிலில் தான் வந்தேன். சீர்காழிகோவிந்தராஜன் பாடலை அழைப்பு ஓசையாக வைத்திருப்பவர்களுக்கு ரயிலில் தனிப்பெட்டிகள் அளிக்கலாம் என்பது என் எண்ணம். அரைத்தூக்கத்தில் அருகே ஒருவரின் செல்பேசி ‘வினாயகனே’ என்று கதறியது. சற்று நேரம் கழித்து இன்னொன்று ‘அபிராமீ’ என்று அதலபாதாளத்தில் விழுவதுபோல அலறியது.

சீர்காழி ரோலர்கோஸ்டர் பாடகர். ஆரோகணத்தில் சுழன்று ஏறி அவரோகணத்தில் நடுங்கியபடி விழுகிறார். சீர்காழியை ஏன் தமிழகத்தின் தேசிய உடைமை ஆக்கக்கூடாது? தேசிய உடைமையாக்கப்பட்ட நூல்களை போலவே அவரும் எவராலும் பொருட்படுத்தப்படாமல் ஆக வாய்ப்புள்ளதே. நாட்டுக்கு நல்லது அல்லவா?

காலை எட்டரைமணிக்கு தூங்கி எழுந்தபோதே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் ராம்குமாரும் விஜயராகவனும் வந்தனர். அனைவரும் காரில் சென்று நாமக்கல் நரசிம்மரை பார்த்தோம். நடை பூட்டும் நேரம். அவசரமாகப் பூசை நடந்துகொண்டிருந்தது. பேருருவம் கொண்ட நரசிம்மர் குடைவரைக்கோயிலின் உள்ளே புடைப்புச்சிற்பமாக அமர்ந்திருந்தார். பக்கவாட்டில் உலகளந்தபெருமாளும் , வராகமூர்த்தியும் திரிவிக்ரமரும் செதுக்கப்பட்டுள்ளனர். பல்லவர் காலத்துக் குடைவரைக் கலையின் உச்சம். மகேந்திரவர்மப்பல்லவனால் ஏழாம்நூற்றாண்டில் அமைக்கப்பட்டது

முந்தைய முறை பெருமாள் முருகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவருடன் அங்கே சென்று தரிசனம் செய்த்து. அதன்பின்னர் யாரோ சில மூடர்கள் நரசிம்மர் மற்றும் சுற்றிலும் உள்ள பெருமாள் சிலைகள் அனைத்திலும் வெள்ளைபெயிண்டில் கண்டபடி நாமம் சார்த்தியிருந்தனர். பெருமாளின் உதடுகளுக்கு சிவப்பு பெயின்ட். உடல் முழுக்க கரிய பெயிண்ட். மானுட அற்பத்தனத்தின் உச்சம்.

மூலச்சிலைகளுக்கு இவ்வகையில் எந்த ஒப்பனையும் செய்யக்கூடாது என்பதும், ஒவ்வொரு அலங்காரமும் மாலைக்குள் அகற்றப்பட்டு அதிகாலையில் நிர்மால்ய பூசை செய்யப்படவேண்டும் என்பதும்தான் ஆகம நெறி. சாதிவிஷயங்களில் , கோயில் உரிமை விஷயங்களில் ஆகமத்துக்காகப் பாய்ந்துவரும் நம்மூர் அர்ச்சகர்கள் பிற எதிலும் ஆகமங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

உண்மையில் கொஞ்சமேனும் படிப்போ, அறிவோ கொண்டவர்கள் இங்கே அர்ச்சகர்களாக வருவதுமில்லை. அனைத்துவகையிலும் அடித்தளத்தில் நிற்கும் எளிய ஆத்மாக்களே அர்ச்சகர்கள். அவர்கள் செய்வதே பூசை. சொல்வதே புராணம். அவர்கள் உடல்மொழியில் உள்ள அசட்டுத்தனமும் அக்கறையின்மையும் குரலில் உள்ள அதட்டலும் மிகவும் மனவிலக்கத்தை அளிக்கின்றன. இங்கே இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை. மடங்களில் கூட மடையர்களே அமர்ந்திருக்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து கேரள ஆலயங்களுக்கு பக்தர்கள் படையெடுப்பதற்குக் காரணம் அங்கே முறையாகவும் ஈடுபாட்டுடனும் செய்யப்படும் பூசைமுறைகள்தான் என பலமுறை பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே பூசைமுறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் வலுவானவை. பக்தர்களும் அதில் கண்டிப்பானவர்கள். அங்குள்ள அர்ச்சகர்கள் நல்ல சம்பளம் வாங்கும் அரசூழியர்கள் என்பதும் இன்னொரு காரணம்.

அருகே உள்ள புகழிமலை [புகளூர்] என்னும் ஊரிலுள்ள சமணக்குகைகளைப் பார்க்கச்சென்றோம். புகழிமலை இன்று முருகன்கோயிலாக உள்ளது. நாங்கள் செல்லும்போது நடைமூடிவிட்டனர். படி ஏறிச்செல்லும் வழியில் பக்கவாட்டில் திரும்பிச்சென்றால் மலைவிளிம்பினூடாக நடந்து புகளூர் சமணப்படுக்கைகளை அடையலாம். மலைமேல் செருப்பு போட்டுச் செல்லக்கூடாது. மதியவெயில் கால்களை சுட்டது. குதித்துக் குதித்துச் சென்றோம்.

இரும்பு வாசல் பூட்டப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு காவலரை அழைத்துத் திறக்கச் சொன்னோம். அதற்குள் மலையிடுக்கு வழியாக பாதிப்பேர் அப்பக்கம் சென்றுவிட்டோம். மலைவிளிம்பில் நடக்க இப்போது இரும்புவேலியின் காவல் உள்ளது. அக்காலத்தில் ஆபத்தான பாதையாக இருந்திருக்கவேண்டும்.

06122010(013)06122010(014)

இரண்டு குகைகள். சமணர்கள் தேர்ந்தெடுக்கும் உயரமற்ற பாறையிடுக்குகள் அவை. உள்ளே சமணப்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இவை சங்க காலத்தையவை. கிபி இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தவை என்பது ஆய்வாளர்களின் ஊகம்

இங்கே பிராமி லிபியில் தமிழில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்தன. வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் உள்ளன. இவை சேரமன்னர்கள் சமணத்துறவிகளுக்கு செய்து அளித்த படுக்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் மிகச்சிலவே உள்ளன. சங்கமன்னர்களின் கல்வெட்டுக்கள் அரிதினும் அரிதானவை. ஆகவேதான் புகளூரின் சங்ககாலத்து தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் ஆய்வாளர்களுக்கு மிகமுக்கியமானவையாக உள்ளன.

மதியம் நண்பர் காங்கோ மகேஷ் அவர்களின் இல்லத்திற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றோம். அவரது வீடு பேக்கர் பாணி கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட அழகிய கட்டுமானம். உணவுக்குப்பின் இரு கார்களில் கொல்லிமலைக்குச் சென்றோம்

நண்பர் வாசுவின் பண்ணை கொல்லிமலை செல்லும் வழியில் உள்ளது. அங்கே அவரது தம்பி தங்கி குறுமிளகு விவசாயம் செய்கிறார். ஓர் அழகிய விருந்தினர் இல்லம் உள்ளது. அதுதான் சந்திப்புக்கான இடம். நாங்கள் செல்லும்போது மாலையாகி விட்டது. வாசு அங்குள்ள நவரம்பழம் என்னும் மலைவாழைப்பழம் ஒரு குலை கொண்டுவைத்தார். சாப்பிட்டு டீ குடித்தபின் தோட்டத்திற்குள்ளேயே சென்று உச்சியில் இருந்த பாறைமுகடை அடைந்தோம்.

அங்கிருந்து சுற்றிலும் விரிந்திருந்த கொல்லிமலை அடுக்குகளைப் பார்த்தோம். மயில்கள் அகவிக்கொண்டிருந்தன. மலைப்பகுதிகளுக்குரிய மெல்லிய பச்சிலைவாசனையுடன் காற்று. குளிரத்தொடங்கியது .விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழுந்துவந்தன. வானம் ஒளிமிக்க பரப்பாக மாறியது

ஒன்பது மணிக்கு நிலவெழும்வரை அங்கேதான் இருந்தோம். விடுதிக்குத் திரும்பிவந்ததுமே படுத்துவிட்டேன். முந்தையநாள் ரயிலில் சரிவரத் தூங்காததனால் நான் படுத்ததுமே என்னை இழந்தேன்

[மேலும்]

புகளூர் கல்வெட்டுகள்

புகளூர் கல்வெட்டுக்கள் – பத்ரி சேஷாத்ரி

 

முந்தைய கட்டுரைநேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு
அடுத்த கட்டுரைதினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை