«

»


Print this Post

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் கடிதங்கள்


அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா?  இலக்கியம் பற்றிய விவாதம் மிக சிறப்பானது.

இலக்கியம் வாழ்வின் வெற்றிபெறும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்பது முக்கியமானது.
நாம் உலகியலில் அடையும் வெற்றியின் உண்மைத்தன்மையை அறிய இலக்கியம் வழிகாட்டுகிறது எனலாம்.ஏனெனில் இலக்கியத் தொடர்புகள் இருந்தாலும் இல்லாவிடினும் வெற்றி பெறும் முயற்சிகள் தொடரும்.வெற்றி பெறும் உத்வேகமும் உழைப்பும் இலக்கியத்தினால் சரியாக வழிநடத்தப்படும் என்றே கருதுகிறேன்.நிச்சயமாக இலக்கியத்தினால் பண்படுத்தப்பட்டவரால் பணியிடத்தில் கும்பிடு போடுவதையும் போலியான பணிவையும் வெளிப்படுத்த இயலாது.இதனால் சில வாய்ப்புகளை இழப்பதாக முதலில் தோன்றும்.ஆனால் நம் திறனை பண்பட்ட பழக்கங்களை நிச்சயம் அறிந்து கொள்வார்கள்.எனவே வெற்றி, முன்னேற்றம் சரியாக கிடைக்கும் என்றே கருதுகிறேன்.கட்டுப்படுத்தப்பட்ட வேகம் என்றுமே உயர்வானதல்லவா?இலக்கியத்தினால் நிதானமானமுன்னேற்றத்தை நிறைவுடன் அடையலாம் என்று கருதுகிறேன்.

இலக்கியத்தை ஏன் குடும்பத்தில் அறிமுகப்படுத்துவதில்லை என்பது தனிமனித சுதந்திரத்தை இலக்கியவாதிகள் அதிகம் அளிப்பதாக இருக்கலாம்.எனது தந்தையின் மூலமே வாசிப்பு எனக்கு அறிமுகம்.எங்கள் வீட்டில் புத்தகங்கள் நிறைந்தே இருந்தது.ஆனால் என் உடன் பிறந்தவர்கள் யாரும் வணிக வாசிப்பைத் தாண்டி வரவில்லை.நான் மட்டுமே தீவிரவாசிப்பிற்குள் தேடி வந்தேன்.எனவே அவரவர் ஆர்வங்களும் இலக்கிய வாசிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இந்த இடத்தில் பெண்களின் வாசிப்பு பற்றி கூறலாம்.இணைய பயன்பாட்டின்மூலமே இப்பொழுது எங்களுக்கு வாசிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.   15 ஆண்டுகளுக்கு முன் நான் இலக்கிய புத்தகங்களைத் தேடி எப்படி பெறுவது என்று அறியாமல் தவித்திருக்கிறேன்.பெண்கள் யாரிடமும் ,இலக்கியம் புத்தகம்வாசிப்பு என்றெல்லாம் எளிதாக உதவிகளைப் பெற்றுவிட முடியாது என்பதே நிஜம்.புத்தகக் கண்காட்சி மட்டுமே அப்பொழுது எனக்கு ஓரளவு பயனாக இருந்தது.ஆனாலும் வாசிப்பின் ஈர்ப்பினால் என் தேடல் நிற்காமல் தொடர்ந்தது எனலாம்.எனவே இப்பொழுது பெண்களுக்கும் நிறைய வாசிக்கும் வாய்ப்புள்ளது எனலாம்.ஆர்வம் மட்டுமே தேவை.

 இலக்கியம் போதை என்பது ஓரளவிற்கு சரியே.ஆனால் அது நன்மையே தரும்.நுட்பமும் வேகமும் கொண்டவர் இலக்கியம் போன்று சரியான வழியில் செல்லவில்லை எனில் அவர்கள் மனங்கள் மிக மோசமானதவறுகளையே செய்யத் தூண்டும்.என் நண்பனொருவன் இலக்கிய வாசிப்பில்லையெனில் நான் பெரிய கி்ரிமினலாக இருந்திருப்பேன் என்பான்.இலக்கியம் சரியான மடைமாற்றம் என்றே நான் எண்ணுகிறேன்.வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் நீங்கள் கூறுவது போல புன்னகையுடன் நின்று ரசிக்கும் மனநிலையை ,பிறர் நடத்தும் உணர்ச்சிகர நாடகத்தன்மைகளை, கவனிக்கும் ஆற்றலை எனக்கு இலக்கியமே அளித்தது.விடுபட இயலா மயக்கமாக இருத்தாலும் அதுவே சரியான வழி என்று எண்ணுகிறேன்.வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள் கூட என்னுடன் பேசும்போது அதன் தாக்கத்தை அறிகிறார்கள் என்றே நான் உணர்கிறேன்.என்னுடன் பணியாற்றுபவர்கள்,    அதிகாரிகள் அனைவருக்குமே வாசிப்பு என்னை பிறரிடமிருந்து தனித்து காண்பிக்கிறது என்று நான் நிறைய வேளைகளில் அறிந்திருக்கிறேன்.நான்  உலக   இலக்கியம், பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கிறேன் என்றெல்லாம் எதுவுமே சொல்லாமலே நம் பேச்சு வேலை பக்குவம் இவற்றின் மூலம் தானாகவே தெரிகிறது என்பதே என் அனுபவம்.இது அவரவருக்கு மாறலாம்.ஆனால் ஒட்டு மொத்தமாக இலக்கியம் நம்மை உலகியல் வாழ்வில் சரியான வழியில் அழைத்துச் செல்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.

நன்றி
மோனிகா மாறன்

அன்புள்ள ஜெ,
 
வணக்கம்! தங்களின் இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல் வாசித்தேன். நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படிக்க வந்தபொழுது நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட சில ஐயங்கள் எனக்கு இருந்தன. ஆனால் தங்களின் மற்ற சில கட்டுரைகள் (உதாரணமாக நான்கு வேடங்கள்) படித்தபோது எனக்கு ஒரு தெளிவு பிறந்தது. பின்பு ஒரு பொருளை உருவாக்கும் பொழுது(product) என்னதான் வரவும் லாபமும் முதன்மையென்றாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்களிடத்தில் நாம் கொள்ளும் கண்ணோட்டம் [கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு 571]. இவ்வணிகம் மக்களின் (வாடிக்கையாளர், தொழிலாளிகள், கூட்டாளிகள்) விசையால் நகர்வது (It is people (customers, employees, partners) driven business. கண்ணோட்டம் மிக அவசியம். எனக்கு இலக்கியம் கண்டிப்பாக கண்ணோட்டம்தனை வளர்க்க ஏதுவாக உள்ளது. 
 
தங்களின் கட்டுரை எனக்கு இன்னும் அதிக தெளிவை அளித்தது. மிக்க நன்றி.
 
வாஞ்சையுடன்
ராஜேஷ்

1

உண்மையை சொல்லப்போகிறேன்,என் நண்பர்கள் மூலமாக தான் எனக்கு இலக்கியம் அறிமுகம் ஆனது. என்னை வாசிக்கத் தூண்டியவன் அவனே.அதுவரையில், தொழிலில் மட்டுமே என் நாட்டம் இருந்தது. என் தொழில் என்பது பதப்படுத்தும் காய்கனிகளை உற்பத்தி செய்வது அதை தொடர்ந்து சந்தைப்படுத்துவது. அதுவும் அதற்கான தொழில் நுட்பத்தை என் அருகாமையில் கிடைக்கும் உபகரணங்களை வைத்து புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது.  முதலில் என் தொழிலில் மட்டுமே என்னை ஈடுபடுத்தி வந்தேன். பிறகு நண்பர்களின் வாயிலாக தீவிர வாசிப்பில் இறங்கினேன், எழுத்தாளர்கள் பலர்  தன் இலக்கியத்திற்காக உங்களையும் சேர்த்து பல இடங்களுக்கு சிறு பிரயாணம் சென்று வருவது பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.. நாமும் இலக்கியவாதியாக ஆகவேண்டுமென்றால் பல இடங்களுக்கு சென்று வந்தால் தான் ஆக முடியும் அதுவும் இலக்கற்ற பயனத்தை மேற்கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று எண்ணி தொடர்ந்து சில இடங்களுக்கு சென்றும் வந்துளேன். என்னுடைய  இந்த செயல் உணர்வு என் தொழிலையும் பாதித்ததும் உண்டு. சிறு தொழில் என்பது ஒருவருடைய கண்காணிப்பிலேயே நடக்கும் தொழில் அதில் தொழில் செய்பவர் செய்யும் சிறு தவறுகள் கூட தேவையற்ற விழைவுகளை ஏற்படுத்தும், சிறு சிறு நஷ்டங்களுடன் மீண்டும் வந்துள்ளேன்.   என் செய்யும் செயலை நினைத்து சுய நகைப்புக்கு உள்ளானேன். இலக்கியத்திற்காக நான் தொழிலை தொலைத்தால் நிச்சயம் அது பைத்தியக்காரத்தனமாக எனக்குப்பட்டது. இரண்டை  (compartmentalize ) பிரித்து  செயல்பட்டால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டேன். உலகில் எத்தனையோ ஊர் சுற்றிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் நல்ல இலக்கியத்தை கொடுத்து விட்டா சென்றுள்ளார்கள்!. முதலில் என் தொழில்,நலம் மட்டும் குடும்பம், இரண்டாவதாக  இலக்கியத்தை வைத்துக்கொண்டேன். இன்று ஒரு எழுத்தாளனாகவும்,சிறு தொழிலதிபனாகவும் நான்….. கணையாழியில் சில கதைகளையும் எழுதியுள்ளேன்,  சில  மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்து வருகிறேன். ‘என் தொழில் எழுத்து’ என்று பலரை போல் என்னால் முழக்கமிட முடியாமல் போகலாம். உண்மையில் என் தொழிலிலும் ,இலக்கியத்திலும், வாழ்க்கையிலும் தொடர்ந்து ஒரு வித உன்னதத்தை தேடுகிறேன் என்பதை மட்டுமே என்னால் இப்போதைக்கு சொல்லமுடியும்.’

இப்படிக்கு

இரா.மீ.தீத்தாரப்பன்.( இராஜபாளையம்)

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/86124/