தினமலர் – 9:ஊழலின் அடித்தளம்

Tamil_News_large_1481446

ஜெ

ஊழலில் அடித்தளம் என்னும் கட்டுரை ஒரு பெரிய திறப்பு. இந்தக்கோணத்தில் நான் சிந்தித்ததே இல்லை. ஊழல் என்பது இன்றைய தேர்தல்- ஜனநாயக முறையின் அடிப்படையாக உள்ள ஒன்று என்ற எண்ணமே இருந்தது. நீங்கள் சொல்வதை வாசிக்கும்போது அதற்கு ஆதாரம் ஏதுமே தேவையில்லை, அது அப்படித்தானே இருக்கமுடியும் என்ற எண்ணம் வருகிறது. யோசிக்கும்போது என் குடும்பத்திலேயே இரண்டு தலைமுறைக்கு முன்னால் அரசுப்பணியில் சாதாரண தாசில்தார்களக இருந்தவர்கள் எல்லாம் இன்றைய கணக்கில் பெரும் கோடீஸ்வரர்கள் என்று தெரிகிறது.

ஒரு சப்கலெக்டர் என் குடும்பத்தில் உண்டு. அவர் வேலைக்காலத்தில் நூறு ஏக்கர் தோட்டம் சென்னையிலும் கும்பகோணத்திலும் முப்பது வீடுகள் சம்பாதித்து விட்டுவிட்டுப்போனார். வெள்ளையருக்கு ஆதரவாக அவ்வளவுபெரிய ஒரு அமைப்பு உருவாவதற்கு ஊழல்தான் காரணம். ஆனால் ஊழலை இன்றைய அரசியல்வாதிகள் கொண்டுவந்தார்கள் என நாம் நினைக்கிறோம்

எஸ். தசரத ராமன்

***

ஜெ

இன்றைய தினமலர் கட்டுரை ஒரு திறவு கோல். உலக அளவில் இருக்கும் அரசியல் புரிகிறது. இராணுவ செலவு மற்றும் அதன் பின் உள்ள ஊழல் மிக பெரியது. அது ஒரு கூட்டு கொள்ளை. பொதுவாக இராணுவம் பற்றி யாரும் குறை கூறுவது இல்லை. மீறி பேசினால் துரோகி முத்திரை விழுந்து விடும்.

தமிழ் நாட்டில் இன விரோதி அடையாளம் சகஜம். கட்டுமான பணியில் கல்லா கட்டும் வாய்ப்புள்ள பணிகளே நடைபெறுகிறது. வளம்பெறும் பணிகள் சில மட்டுமே நடக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அணைகள், சாலைகள் ,கல்வி சாலைகள் குறிப்பாக IIM, IIT போன்றவை பிறகு அரசாங்கத்தின் சார்பில் பெரிய அளவில் ஆக்கம் பெறவில்லை நேரு காலத்திற்கு பின்.

JNU மற்றும் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் எப்போதும் பல மாநில மாணவர்களை உள்ளடக்கியது. அங்கே இடதுசாரி கொள்கைகள் சுலபமாக மாணவர்களை கவர செய்வது உண்டு. அந்த பிரச்சனை பெரிதாக்கி கையை சுட்டுக் கொண்டது மத்தியில் ஆள்பவர்கள் தான்.

இடதுசாரிகளுக்கு சதித்திட்டம் என்பது போல வலதுக்கு என தேசவிரோதி பட்டமளிப்பது கைவந்த கலை. நீங்கள் குறிப்பிட்ட ஐந்தாம் படை வாசம் இல்லாத ஒரு கவுன்சிலரை கூட நான் கடப்பதில்லை.ஒரு தலைமை வரும். என் காலத்தில். இயற்கை தன் ஆடையை காலத்திற்கு ஏற்ப மாற்றும் சக்தி மிக்கது.

நடராஜன்

***

அன்புள்ள ஜெ,

ஜனநாயக சோதனை சாலையை தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகத்தில் இந்த சமயம் ஒரு எழுச்சி கட்டுரை  எழுதுவது கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றதை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

ஏழாம் பகுதியில் “அமெரிக்க அரசியலைப் பார்த்தால் எப்போதெல்லாம் பொருளியல் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வரும். கடுமையான நடவடிக்கைகள் வழியாகப் பொருளாதார வளர்ச்சி உருவாக்கப்படும். பொருளாதார நிலைமை சரியானதும் இடதுசாரிப் பொருளியல் நோக்குக் கொண்ட தாராளவாத ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும். கருவூலத்தில் உள்ள செல்வம் மக்கள்நலப் பணிகளுக்காகச் செலவிடப்படும். ஒருநாட்டில் இவ்விரு தரப்புகளுமே சமமான வலிமையுடன் இருக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்துக்கு நல்லது.” என்று சொல்லி இருக்கிறீர்கள்.

எனக்கு இதில் பொருளாதார நெருக்கடி நடந்த காலத்தை பற்றி மாற்று கருத்து உள்ளது. கடந்த 100 ஆண்டுகள் அமெரிக்க பொருளாதரத்தை எடுத்து பார்த்தால் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் குடியரசு கட்சியின் ஆட்சியிலேயே நடந்துள்ளது.அது சரி செய்யப்பட்டது தொடர்ந்து வந்த ஜனநாயக கட்சியின் ஆட்சியில்.

1920-33 great depression குடியரசு கட்சியின் ஆட்சியில் 1933 45- சரி செய்யப்பட்டது பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் ரூஸ்வெல்ட் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள், அமெரிக்கா எங்கும் மிகப்பெரிய நெடுஞ்சாலைகள், நீர்தேக்கங்கள் அவர் காலத்திலேயே கட்டப்பட்டது. முடிந்த அளவு அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடாமல் இருக்க வைக்க முயற்சி செய்தார்.

அதன் பிறகு பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அமெரிக்க போர்களின் போதே நடந்துள்ளது அப்போதெல்லாம் குடியரசு கட்சியே பெரும்பாலும் ஆட்சியில் இருந்துள்ளது. (வியட்நாம் போர் ஆரம்பிக்க பட்டது தவிர )

கடந்த 50 வருடங்களில் நடந்த அனைத்து நெருக்கடிகளும் குடியரசு கட்சியின் ஆட்சியிலேயே நடந்துள்ளது.அதை தொடர்ந்து வரும் ஜனநாயக கட்சியின் பொருளாதார கொள்கையும் இடதுசாரி என்று கொள்ள முடியாது. குடியரசு கட்சிக்கு இடது, ஆனால் பொதுவாக பார்த்தால் right of center economic policies என்று சொல்லலாம்.

ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் போது கருவூலத்தில் உள்ள செல்வம் மக்கள்நலப் பணிகளுக்காகச் செலவிடப்படும் ஆனால் அது போர்கள் ஏற்படுத்தும் செலவை விட குறைவாகவே இருக்கும்.

என்றும் அன்புடன்

பாலசுப்ரமணியம்

நியூ ஜெர்சி

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

9-ஊழலின் அடித்தளம்

8-யாருடைய கூலி பெறுகிறார்கள்?

7-வயிற்றைப்பற்றிப்பேசுங்கள்

6-ஏன் கத்துகிறார்கள்?

5-பேச்சுரிமை எதுவரை?

4-ஜனநாயகம் எதற்காக?

3-குற்றவாளிகள் யார்?

2-தனிமனிதனின் அடையாளக்கொடி

1-ஜனநாயக ஒழுக்கம்

முந்தைய கட்டுரைஅந்த மாபெரும் வெள்ளம்…
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4