தினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்

Tamil_News_large_1481446

வயிற்றை பற்றி பேசுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது விரக்தி தான் வருகிறது. இன்று தமிழ் நாட்டில் பெயரளவில் அதை பேசுவது ராம்தாஸ்கள் தான். அடிக்கடி கேள்விப்படுவதே நலத்திட்ட பார்வையில் லஞ்சம் தான். அதுவும் தாணுலிங்க நாடார் சொன்ன தலைக்கு ஒன்ணு ஓட்டுக்கு தான்.

ஆனால் அதுவே இன்று பொருளாதார பார்வையை சுத்தமாக அகற்றி விட்டது. விழைவு 2.5 லட்சம் கடன். இன்றைக்கும் அரசியல் ,சினிமா தரும் பொழுதுபோக்கை சுவாரஸ்யத்தை பொருளாதார பேச்சு உரையாடல்கள் தருவதில்லை. அதுவே பொருளாதார விழிப்புணர்வை தர தவறி விட்டது.

ஒரு சமூகத்தை திட்டமிட்டு சுரண்டி பாழ்படுத்தி சில பத்து வருடங்கள் ஆயிற்று. மீண்டு வர பேச மட்டும் செய்தால் போதாது. இயங்க வேண்டும். இந்த சிந்தனையே வேள்வி ஆக வேண்டும். பண்பாடு காக்க முனைவதாக இன்று வந்த சீமான் வரை தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் தேவை என்னவோ பொருளாதார சிந்தனை மற்றும் நிர்வாக திறமை தான்.

இருப்பினும் அமர்த்தியா சென் போன்றவர்கள் நல திட்டங்கள் அதன் அளவில் நல்லது என்கிறார்கள். நலம் ,வளம் சார்ந்த எண்ணம் கொண்ட தலைவர்கள் இன்றைய சூழலில் உருவாக மிக கடுமையான சவால் இருக்கிறது. காலம் காலமாக அந்தந்த கால கட்டத்தில் தேவையான அனைத்தும் நடந்தே வந்துள்ளது. இப்போதும் அதே நம்பிக்கை தான்.

நடராஜன்

***

இன்று தினமலர் நாளிதழில் வெளியான வயிற்றைப் பற்றி பேசுங்கள் கட்டுரை மிக அருமை. அரசாங்கத்தினை தேர்ந்தெடுக்க பண்பாட்டு கூறுகளை புறந்தள்ளி பொருளாதார கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து என்னைப் போன்ற வாசகர்களுக்கு வெகுவாக சென்றடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பாராட்டுக்கள் ஐயா.

மேலும் இதேபோன்ற கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் வாசகன்.

பொ.செந்தில்குமார்
நத்தம்.

***

ஜனநாயக சோதனை சாலையில் என்கின்ற தலைப்பில் எழுதப்படும் தொடரில் எட்டாம் பாகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். நான் வேலூரைச்சார்ந்தவன். அங்கு வெளிவரும் தினமலரில் உங்களின் தேசிய திறனாய்வுக்கட்டுரைகள் பிரசுரிக்கப்படுவதில்லை. இன்று சென்னை வந்தேன், படித்தேன். எவ்வளவு சுமையான பொருளாதாரத்தையும் தேசியத்தையும், நாட்டின் சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரம் என நச்சுகளை கக்கும் அறிவு ஜீவகளைப்பற்றியும், இரண்டு ஐந்தாண்டுகளில் சுதந்திரத்திற்கு பிறகு காணப்பட்ட அதிவேக வளா்ச்சி பின்தங்கிப்போனதை இந்தளவு ஆராய்ந்து எழுதியிருப்பார்களா என யோசிக்க வைத்துள்ளது உங்களின் அற்புதமான கருத்துக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

தொ.ச.சுகுமாறன்.,

வேலூா்.9.

***

அன்பு ஜெ,

ஏன் கத்துகிறார்கள்? படித்த போது ஏனோ மத போதகர்கள் தான் கண் முன் வந்தார்கள். “அனைத்துப் பிரச்னைகளுக்கும் வேறு எவரோதான் காரணம் என்று சொல்லவேண்டும்.” – இப்படி தான் சாத்தான் உருவானதோ.

“வெறும் உணர்ச்சியை வெளிப்படுத்துபவர் நம்மை மோசடி செய்கிறார்.” – இதை எந்த காலத்திலும் பெரும்பான்மை சமூகம் ஏற்று கொள்ளாதே?.

எங்களிடம் உண்மை இருக்கிறது என்று கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, கைகளை பலவாறு அசைத்து, திரும்ப திரும்ப சொல்லும் முறை தானே மத போதகர்களின் வழி. அதற்கு தானே அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

ராஜ்குமார்

முந்தைய கட்டுரைதினமலர் – 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்? கடிதங்கள்-1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3